Thursday, October 29, 2009

கணக்கு_09

நான் என்னுடைய தம்பியின் தற்போதைய வயதை ஆண்டு மாதங்களில் சொன்னேன். ஆனால் வயதைப் பதிந்தவரோ நான் சொன்ன ஆண்டை மாதங்களாகவும் மாதத்தை ஆண்டுகளாகவும் பதிந்து விட்டார். இப்போது தம்பியின் வயது உண்மை வயதின் 5/8 மடங்காக இருந்தது எனின், தம்பியின் உண்மையான வயது என்ன? 

Sunday, October 25, 2009

கல்வி முறை

இலங்கையில் கல்வி முறையைப் பற்றி அதிலுள்ள பல நல்ல விடயங்களைப் பற்றி அதிகமாக நான் இங்கு எழுதப்போவதில்லை. ஏனெனில் அதைனைப் பற்றி எல்லோருமே அறிவார்கள். ஆனால் கல்விமுறை பற்றி எனக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். எமது கல்வி முறை இலவசக் கல்வி முறை. உண்மையில் மிகவும் புகழ்ந்து பாராட்டக்கூடிய மிகச்சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறிய வளர்முக நாடாக இருந்து கொண்டு கல்வியை இலவசமாக கட்டாயக் கல்வி மூலம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக செய்ததன் மூலம் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. அதை விட ஏழை பணக்காரன் வேறு பாடின்றி அனைவருமே அடிப்படைக் கல்வியறிவையேனும் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த விடயத்தில் எமது கல்வி முறையை நிச்சயமாகப் புகழ வேண்டும்.

ஆனாலும் இந்தக் கல்வி முறை எமது சமுதாயத்தில் எழுப்பும் சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். கட்டாயக் கல்விமுறை எம்மீது திணிக்கும் சிக்கல்களைப் பற்றியே சொல்கிறேன். கட்டாயக்கல்வி முறையானது எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்னிடத்தில் உங்களுக்குத் தேவையான எல்லா விடயங்களும் இருக்கின்றன என்பதைப் போன்றதொரு மாயையுடன் அனைவரையும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்குகிறது. படிக்கும் காலங்களில் அனைவரும் பள்ளிக்கூடத்தை மட்டும் நம்பியே தன்னுடைய எதிர்காலக் கனவுகளில் இறங்குகிறோம். படித்து ஏதேனும் சிறந்ததொரு வேலையெடுத்து பணம் உழைப்பதே பலரின் எதிர்காலக்கனவுகளின் இறுதி வடிவம். அதற்குரிய கல்வியறிவைப் பள்ளிக்கூடம் தரும் என்றே நம்புகிறோம். இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி முறை எம்மை இந்நம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ஆனால் பாடசாலை வாழ்க்கையில் அரசாங்கப் பரீட்சைகள் மூன்று நடைபெறுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதரண தரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சை ஆகிய மூன்றும் ஆகும். இதில் சா/த மற்றும் உ/த பரீட்சைகள் மாணவர்கள் தொடர்ந்து இலவசக் கற்கை நெறியைத் தொடர்வதோ இல்லையோ என்பதைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. இப்பரீட்சைகளின் பெறுபேறுகளால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள் எல்லாத்தையும் இழந்த, வாழ்க்கையைத் தொலைத்ததைப் போன்று உணர்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடம் தமக்கொரு வாழ்க்கையை அதாவது தொழில்வாய்ப்பைத் தேடக்கூடிய அறிவைத் தரும் என்ற நம்பிக்கையில், பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதைத் தவிர வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய கல்வியைப் பெறாமல் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ வாழ்ந்து விடுகிறார்கள். பின்னர் தாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை கற்றதை வைத்துக் கொண்டு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத நிலை உருவாகியிருப்பதையும் இவர்கள் உணரும்போது ஒரு இந்த வெறுமை நிலை தோன்றுகிறது.

ஆனால் தொடர்ந்து உயர் கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி இலவசக் கல்வியை முடித்துக் கொண்டவுடனேயே வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் அவர்கள் இந்தளவுக்கு வெறுமை நிலையை உணர்வதில்லை. ஆனால் தொடர்ந்து இலவசக் கல்வி முறையைப் பெற முடியாதவர்களின் நிலை கவலைக்கிடமாகிறது.  தொடர்ந்து படிக்க முடியாமல் போனது ஒரு புறம் இது நாள் வரை கற்றதை வைத்துக் கொண்டு உடனடியாக ஒரு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத சூழ்நிலை மறுபுறம் அவர்களில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த எமது கல்வி முறை அவர்களில் மட்டுமல்ல பெற்றோர்களிடத்திலும் எம் சமுதாயத்திலும் பலமான தாக்கங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கல்விமுறையை எம் சமுதாயம் எப்பிடி எதிர் கொள்கின்றது என்பதில் எனது கருத்துக்களைப் பிரதிபலித்து பிறிதொரு பதிவிடுவேன்.

எமது கல்வி முறை பற்றி என்னுடைய கருத்து என்னவெனில் இடை நிறுத்தப்படும் மாணவகளுக்கு தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்காமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிது காலம், வேலை வாய்ப்பைத் தேடித் தரக் கூடிய இலவசக் கல்வியை வழங்கலாம். பல்கலைக் கழக படிப்புகள் இட்டுச் செல்லாத தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அடிப்படை அறிவு தேவைப் படுகின்ற தொழில் பயிற்சிகளையும் அதற்கான நுட்பங்களையும் கற்பிக்கலாம். இதன் மூலம் தொழில் வாய்ப்புகளைத் தேடக் கூடிய இலவச அறிவை இடை விலக்கப்படும் மாணவர்கள் பெறுவதோடு தாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரமாட்டார்கள். வாழ்க்கையில் அவர்களும் தொழில்வாய்ப்பைத் தேடிக் கொள்வார்கள். அவர்களைச் சார்ந்த பெற்றோர்களும் சமுதாயத்தினரும் அவர்கள் மீதான நெருக்குதலைக் குறைப்பதற்கும் அவர்களும் சிறந்த தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது எனது எண்ணம்.

Wednesday, October 21, 2009

தனி சுகம்

நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும் இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.

சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப் போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.

மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது. பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம்.  மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும் எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.  பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள் சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.




 மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச் சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும் வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான் அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு துடிக்குது.

Sunday, October 18, 2009

அந்த இன்னும் ஒன்று...

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.

பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது.  ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.

நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.  அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.  இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.

அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.

Monday, October 05, 2009

தலையிழந்த, நான் வைத்த பனையே..

நான் உனக்கு கொள்ளி வைப்பேன் என்றா இத்தனை நாளும் நான் வரும் வரை காத்திருந்தாய்? உனக்குக் கொள்ளி வைக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் வைத்து, நான் பார்க்க வளர்ந்த மரம் நீ... உனக்கு எப்பிடி நான் கொள்ளி வைப்பேன்? யாருக்குத் தெரியும் உன் வாழ்வு இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுமென்று... நீ செழிப்புற்று வளர்ந்த போதெல்லாம் சந்தோசப்பட்டேன். உன்னுடலில் ஏறி ஓடியாடி விளையாடியிருக்கிறேன். நீ முளைத்தெழுந்த மண்ணில் புழுதி படப் புரண்டு குதூகலித்திருக்கிறேன். உன்னிடமிருந்து நான் உச்சப் பயனையும் பெற்றுக் கொண்டேன். இன்றோ நீ தலையிழந்து அழகிழந்து உன்னை அரவணைப்பாரையிழந்து கூனிக் குறுகி நிற்கிறாய். யார் யாரோ எல்லோரும் உன்மேல் கைவைத்துச் செல்கின்றனர். வெட்கித் தலை குனிந்து வேதனையில் துடிப்பதைக் காண்கிறேன்.  

வங்கக்கடலில் மட்டுமல்ல கடல்கடந்து பசுபிக் அத்திலாந்திக் என ஏழு கடல்களையும் இணைத்து உருவான புயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உன்னைத் தாக்கிய போது நீ என்ன பாடு பட்டிருப்பாய்? தன்னந்தனியே எழுந்து நின்று எது வந்தபோதும் எதிர்கொள்வேன் என்ற துணிவோடு எதிர்த்தாயே...  பசளையையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டு நான் உன்னிடமிருந்து விலகி இன்னுமொரு இடத்தில் வாழ்ந்தேனே... அவை மட்டும் உனக்குப் போதாது, நான் உன்னோடு கூட இருப்பதைப்போல வலிமை பிறிதொன்றும் இல்லை என்பதை அன்று நான் ஏன் உணரவில்லை? ஒரு வேளை அன்று உன்னோடு நான் இருந்திருந்தால் ஒன்றில் இருவருமே தலையையிழந்திருப்போம், இல்லை நீயாவது இன்று தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாய். இன்றும் கூட உனக்காக எதுவும் செய்ய முடையாதபடி வெறுமனே உன்னைப் பார்த்த படி கடக்கிறேன்... நீ சுமந்த, நான் என் கைப்பட எழுதிய என் தமிழ் வாசகங்கள் எல்லாம் வடிவம் மாறியிருக்கே... நான் சிறு கத்தி கொண்டு உன்னுடலில் செதுக்கிய வடிவங்களெல்லாம் சிதைந்து போச்சே... நீ முழைத்த நிலத்தருகே விழித்தெழுமென்று நம்பி நான் நட்டு வைத்த விதைகளுக்குப் பதில் வேறு விதைகள் தூவப்பட்டிருக்கே...  வெள்ளை நிறக்கறையான்கள் உன்னைத் துளைத்தெடுத்து புத்து அமைப்பதைக் காண்கிறேன். குளவிகள் மண்ணினால் உயர்ந்த மேடமைத்து சிங்கத்து குகை அமைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. ஒப்புக்கேனும் ஏன் என்று கேட்க முடியாத ஈனமான நிலையில் நான்...

இன்று நான் என் ஆசையைச் சொல்லி வைக்கிறேன்... சிதையில் நான் கிடக்கும்போது என் நெஞ்சின்மேல் உன் உடல்தான் வைக்கப்பட வேண்டும். நான் செய்த அற்ப விடயங்களை எண்ணி எண்ணி என் நெஞ்சு விம்மிப் புடைக்கும் ஒவ்வொரு கணமும் நீ என்னைத் துளைக்கும் கேள்விகளைக் கேட்டு என் நெஞ்சை அழுத்த வேண்டும். அப்போதாவது எனது நெஞ்சு, தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி உருகி உருகித் தீயோடு சங்கமிக்கட்டும். நீ முழைத்தெழுந்த மண்ணிலேயே என் சாம்பலும் விதைக்கப்பட வேண்டும். ஏனெனில் சில வேளை நான் கூட நாளை உனக்கருகே இன்னுமொரு பனையாக முளைத்தெழலாம்.