Saturday, November 21, 2009

மிச்சக் காசு

எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய் கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர் நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.

கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது. நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப் போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.

இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும் கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான் குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.

ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

Sunday, November 08, 2009

பெற்றோரும் கல்வி முறையும்

கல்வி முறை என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப் படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.

எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான் எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப் போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப் பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.

பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன் நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).

இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக இருக்கும்.  அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள் விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை.