Sunday, April 01, 2012

ஊருக்குப் போனன்...


தாய்மடி என்னும் இந்த வலைத்தளத்தை நான் ஆரம்பித்து இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் நான் வலைப்பதிவு எழுதுவதற்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். ஆரம்ப காலங்களில் அடிக்கடி எழுதி வந்தாலும் பின்னர் சோம்பல் காரணமாக எப்போதாவது எழுதி வந்தேன். அண்மைய நாட்களில் பதிவுகள் எதனையும் எழுதவில்லை. நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவிக்கும் முகமாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களால் வெளியிடப்பட்ட சஞ்சிகளில் ஒன்றான சங்கமம் 2008 இல் இடம்பெற்ற என்னுடைய ஆக்கமொன்றை இங்கே பதிவிடுகிறேன்.

நன்றி
தனஞ்சி.




ஊருக்குப் போனன்…

ஊருக்கு புறப்படுவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னரே தமிழர் தலைநகர நண்பர்களின் உதவியுடன் கப்பலுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டோம். அவர்களின் வீடுகளிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பெரிய எடுப்பில் பயணத்தை மேற்கொண்டோம். ஐந்து மணிக்கு பல்கலைக்கழகம் முடிந்ததும் தங்குமிடம் வந்த பின்னர் திடீரென முடிவெடுத்து வீடுகளுக்குச் சொல்லாமலே இரவு ஒன்பது மணிக்கு வாகனமேறி, மதியம் ஒரு மணியளவில் வீடுகளுக்கு போய்ச் சேர்ந்து, குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காலங்களையும் நான் எண்ணாமலில்லை. தங்குமிடத்தில் இருவர் ஊருக்குப் போகிறார்களென்றால் மற்றவர் நிச்சயமாக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம். அந்தளவுக்கு அலுப்படிச்சு ஊர் நினைப்புகளைச் சொல்லி உசுப்பேத்தி ஒரு மாதிரி அவரையும் ஊருக்குப் புறப்படும் வழி பண்ணிவிடுவோம். இப்போது புறப்படவேணும் எண்டு நினைத்தால் எத்தனை ஆயத்தங்கள்.. அப்பாடா..

தமிழர் தலைநகரத்து நண்பர்களின் சிறந்த வரவேற்போடும் உபசரிப்போடும் நான் முதன்முதல் அந்நகரத்தில் காலடி எடுத்து வைத்தேன். தலை நிமிர்ந்து நடக்கவேண்டிய தலைநகரத்து மக்கள் அடுத்த பரிசோதனை நிலையம் எங்கே என்று பார்ப்பதற்காய் தலையை நிமிர்த்துகிறார்கள். ஐம்பது மீற்றர்களுக்கு ஒரு முறை நாங்கள் வழிமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதைப் பார்க்கும் போது அந்த அரணிலும் இந்த அரணிலும் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் கோபமோ என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கத்தின் பாரம்பரியமான காலம் தாழ்த்தி நிகழ்வுகளை நடத்தல் எங்களின் கப்பல் பயணத்திலும் நடந்தது. ஒரு நாள் கப்பல் தாமதமானது நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கன்னியாவுக்கு காலை ஆறு மணிக்கு வாகன சகிதம் எங்களால் முன்னெடுக்கப்பட்ட பயண நடவடிக்கை கேவலம் இரண்டு மரக்குற்றிகளால் வழிமறிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறும் முயற்சி பயனளிக்காததால், அங்குள்ளவர்களுடன் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடி, எங்களுக்கான சாதக பாதக தன்மை பற்றி சிந்தித்துக் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அடுத்த முயற்சி முற்பகல் ஒன்பது மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்து, சிறந்த வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட்ட பயணம் வெற்றி இலக்கை அடைந்தது. ஏழு கிணறுகளிலும் குளிப்பதில் நம்மவர்கள் காட்டிய அவசரத்தில் வெற்றிக்களிப்பு மட்டுமல்ல கொழும்பில் காணப்படும் தண்ணீர்ப் பஞ்சமும் வெளிப்படையாகவே தெரிந்தது. தொடர்ந்து கோணேச்சரர் கோவிலுக்கு, அமைதியான இயற்கைச் சூழலையும் மான் மயில்களையும் ரசித்த படியே சென்றடைந்தோம். பழைய ஐதீகக்கதைகளை சொல்லிய படியே இரட்டைப் பாறைகளுக்கிடையே கல்லெறிந்ததையும் மறக்க முடியாது. இயற்கையாய் அமைந்த ஆலய சூழலில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியமை மனதுக்கு இதமாய் இருந்தது. எம்மை நன்கு உபசிரித்த நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் விடைபெற்று கப்பலுக்கு புறப்பட்டோம். கப்பலில் நாங்கள் ஏறிவிட்டோம். ஆனாலும் இன்னும் புறப்படவில்லை. எப்பாடா இது வெளிக்கிடும் என்று சலிப்பு மேலோங்கியபோது என் எண்ணங்கள் பழைய நிகழ்வுகளில் இதே போன்ற சந்தர்ப்பங்களை நாடியது.

ஏ - 9 வீதி திறந்திருந்த அந்த காலங்களில் கொழும்பிலிருந்து இரவு ஒன்பது மணியளவில் வெளிக்கிடும் வாகனங்கள் அடுத்தநாள் காலை நாலு மணி முதல் ஐந்து மணிக்குமிடையில் தாண்டிக்குளத்தில் பாதை திறப்பதற்காக தரித்து நிற்கும். பாதை காலை ஆறரைக்கு திறக்கும் வரை வாகனத்தை விட்டிறங்கி சுற்றிப்பார்ப்போம். விடுமுறை நாட்களில் காணப்படும் பெரிய வாகன வரிசையில் எங்களுக்கு தெரிந்தவர்களை கண்டுபிடித்து கதைப்பதில் ஒரு அலாதிப்பிரியம். ஆரார் ஊருக்கு போகிறார்கள் என்பதைக் கண்டறிந்து விடுவோம். முகத்தை கழுவிக்கொண்டு தேத்தண்ணி குடிக்கத் தேத்தண்ணிக் கடைக்குப் போனால் அங்கு சூரியன் வானொலி பெரிதாக ஒலிக்கும். "தங்கச் சூரியனே பொங்கும் எரிமலையே" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேத்தண்ணி குடிச்சதாக ஞாபகம். குடிச்சுட்டு வெளிக்கிட நேரம் சரியா இருக்கும். உடன நாங்கள் வந்த வாகனத்தில் இருந்து இறங்கி ஆக முதல் நிற்கும் வாகனத்துக்கு போவம். கொஞ்சக் காசு கூடக் குடுத்தாலும் முதலாவதாக வீட்ட போகவேணும் எண்ட போட்டியால ஓட்டம் தான். வேகமா விண்ணப்பப் படிவங்கள் நிரப்ப வேணும் எண்டதுக்காகவே எங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கங்களை மனப்பாடம் பண்ணியதையும், நாங்கள் கம்பஸ் எண்டு பெருமையடிச்சு சலுகைகள் பெற்றுக்கொண்டு மற்றையவர்களை விடவும் முன்னுக்கு போகவும் பின்னிற்பதில்லை. இப்ப கப்பல் மெதுவாக ஆட்டம் கண்டது. கப்பல் வெளிக்கிட்டதை உணரக்கூடியதாக இருந்தது.

கப்பல் தரை காணாத்தூரம் செல்லும் வரை மேல் தளத்தில் இருந்தபடி கரையில் தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடியும், கப்பல் கடலை கிழிக்கும் விதத்தினையும், ஆனாலும் கப்பலை முத்தமிடும் அலைகளையும் ரசித்தபடியே சென்றேன். நள்ளிரவு வேளையில் மெதுவாகப்பசி கண்டது. வாய்க்கு ஏதாவது கிடைக்குமா எனப் பார்க்க கீழ்த்தளத்துக்கு போனேன். என்னோட வந்த எல்லோரும் நல்ல நித்திரையில் இருந்தார்கள். அதிலொருத்தன் கப்பல் இயந்திர சத்ததை விடப் பெரிய சத்தமாக குறட்டை விட்டதை மறக்கவா முடியும். ஒவ்வொருத்தனின் பைகளுக்குள்ளும் கையை விட்டேன். ஒருமாதிரி இரண்டு அப்பிள் பழம் அகப்பட்டது. அதுவும் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே எனக்குள் சமர்ப்பணமாகியது. (என்ன பிரச்சனையெண்டால் நான்தான் அந்த அப்பிளை சுட்டதெண்டு இதுவரை ஒருத்தனுக்கும் தெரியாது. இதை அவங்கள் வாசிச்சாங்களெண்டால் பிரச்சனை பெரிசானாலும் பெரிசாகலாம்.) காலை வேளையில் கப்பல் தரை தட்டுது தட்டுது என்றால் எங்கே கரையைத் தொட்டது. நீண்ட நேரப் பயண வெறுப்பின் உச்சம் எங்களுடைய வார்த்தைகளிலும் தெரிந்தது. ஆனாலும் தரை தட்டிவிட்டோம் எண்ட உற்சாகம் மேலாகவே காணப்பட்டது.

அன்று இரவோடிரவகவே உயிரையும் பணயம் வைத்து வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தோம். பயண சலிப்பை வண்டியினுள் ஒலித்த பாடல் மறக்கச்செய்தது. அங்கு தனியார் வண்டிகளில் பயணிக்கும் போது ஒலிக்கும் பாடல்களின் தெரிவே வித்தியாசமானது. அவை பயணத்துக்கு தனி சுகம் சேர்ப்பவை. மெல்லிய சோகம் இழையோடும் நல்ல அர்த்தமுள்ளஇ சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்ற பாடல்களைக் கேட்ட படியே பயணம் செய்யும் போது பயணத்திலுள்ள சலிப்பு முதல் வீட்டுப் பிரச்சனை வரை அனைத்தையும் மறந்து பயணம் செய்வது அமைதியானது. எங்கிருந்து தான் இப்படிப் பொருத்தமான பாடல்களை தேடிப்பிடிப்பார்களோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. பிற்காலத்தில் அரசாங்கப் போக்குவரத்து வாகனங்களிலும் மக்களைக் கவர்வதற்காக அதே தெரிவுப் பாடல்களை ஒலிக்க விட்டதிலிருந்து நம்மவர்களை அத்தகைய பாடல்கள் எந்தளவுக்குக் கவர்ந்துள்ளது என்பதை உணரலாம். ஏன் எங்களுடைய கணணிகளில் கூட அத்தகைய தெரிவுகளென ஒரு தொகுதி பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மறக்கவா முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் மரங்களால் சூழப்பட்ட எமது வீடுகளையும், எம்மைக் கண்டதும் துள்ளிக் குதித்து சொந்தம் கொண்டாடிச் சந்தோசமாக வரவேற்கும் செல்லப்பிராணிகளையும், பூத்துக்குலுங்கி நறுமணத்தைப் பரப்பியபடியே அழகைத்தரும் பூமரங்களையும், தேவையறிந்து ஓடிவந்து தோள் கொடுக்கும் அயலவர்களின் அரவணைப்பையும், அமைதியான சூழலில் எம்மையெல்லாம் காத்து நிற்கும் தெய்வ சந்நிதானங்களையும், மிதிவண்டிகளில் உலாவரும் சின்னஞ்சிறார்களையும், ஊருக்கே சோறு போடும் உழவர்களையும், கண நேரம் ஓய்வெடுக்காது உழைப்பால் சிவந்த கைகளையும், கலாசாரம் பேணும் பொருத்தமான குடும்பப்பாங்கை கண்முன் காட்டும் உடைகளை அணிந்தவர்களையும், யார் வந்து எதிர்த்தாலும் கட்டிக்காக்கப்படும் விழுமியங்களையும், பறையுடனான காவடிகளையும், உடுக்குடனான கரகங்களையும், என்றும் மறவாத யாவரையும் உபசரித்து விருந்துண்ணக் கொடுக்கும் பழக்கங்களையும், ஒருவேளை உணவில்லையெனினும் மானத்தோடு மனிதத்தையும் இழக்காத மனிதர்களையும் பார்க்கும் போது நிச்சமாக சொல்லுகிறேன் அது தான் சொர்க்கம்.

மகிழ மரச் சோலையிலே இருக்கை போல் வடிவமைந்த கல்லிலே படுத்திருந்தபடி ஊர்க்கதைகள் உலகக் கதைகள் குடும்பச் சண்டைகள் சமகால அரசியல் மற்றும் காதல் விவகாரங்களை அலசுவதில் கிடைக்கும் தனி சுகம் வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்பப்ப கோயிலில் நடக்கும் பூசை அபிஷேகங்களில் கிடைக்கும் சோறு, “கோட்டா” மோதகங்களைப் பகிர்ந்துண்டபடியே இன்பமாய், ஒற்றுமையாய் ஒரே குடும்பம்போல மடத்தில் கூடிக்குலவியதை மறக்கவா முடியும்? மிதி வண்டிகளில் கடந்து செல்லும் நம்ம ஊரிளம் பெண்கள் முதலில் என்னை வித்தியாசமாகப் பார்த்தாலும் அடையாளம் கண்டு கொண்டதும் வழமையான பாணியில் கடைக்கண் பார்வையுடனும் தலைகுனிந்த வெட்கப் புன்னகையுடனும் கடந்து சென்றார்கள். பூங்காவனத்து மணலிலிருந்தபடியே கடந்து செல்லும் பெண்களுக்கு அடித்த நக்கல்களையும் நையாண்டிகளையும் மறந்திருக்க மாட்டார்கள்தானே. ஊரில் நடக்கும் கல்யாணவீடு முதல் செத்தவீடு அந்தியேட்டி வரை அனைத்து வைபவங்களுக்கும் இளைஞர்கள் சார்பில் பங்குபற்றி தேவையறிந்து உதவி செய்வதையும் சிறப்பாக சபை நடத்தி ஒற்றுமையாய் உணவுண்டு மகிழ்வதையும் நான் மறக்கவில்லை.

ஆனாலும் பழைய சந்தோசங்கள் போல இம்முறை இருக்கவில்லை. எந்நேரமும் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டே நகைச்சுவையுடன் கதைத்து விளையாடி மகிழ்ந்த சகோதரர்கள் வீட்டிலில்லை. எல்லா வயதினரும் உலா வந்த வீதிகளில் வயது முதிர்ந்தவர்களும் சின்னஞ்சிறார்களுமே வலம் வருகிறார்கள். என் வயதையொத்த இளைஞர்கள், என்னுடன் படித்த நண்பர்களைக் காண முடியவில்லை. பழைய காலப் பள்ளி வாழ்க்கையை மீட்டிப்பார்க்கத் தோழர்களில்லை. சிறுவயதினர் என்னை “அண்ணா”என அழைக்கும்போது பெருமையாயிருந்தாலும் “டேய்” எனக் கூப்பிட்டு என்னை ஆட்டுவிக்கும் அன்புக் கட்டளைகள் இல்லாதது கவலையைத் தருகிறது. ஒரு காலத்தில் நாங்கள் ஓடி விளையாடிய நண்பர்களின் வீடுகள் நிழல் தரு மரங்களின் இலைகளாலும் செடி கொடிகளாலும் நிரம்பிப் பாழடைந்து கிடக்கிறது. வீடுகளை அழகு படுத்த இளையவர்கள் இல்லாதது ஒவ்வொரு வீடுகளிலும் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவர்களின் மனங்களிலே எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. நாளை விடியும்போது நானிருப்பேனா என்ற சந்தேகத்துடன்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லை. படிப்பதற்குகந்த நேரங்கள் தவிர்ந்த நேரங்களில்தான் மின்சாரம் கிடைக்கிறது. கைத்தொலைபேசி சமிக்ஞைகளோ நானுமிருக்கிறேனென அமாவாசைக்கொருமுறை தோன்றி மறையும்.

விசிலடித்ததும் தங்கள் வாகனத்தை விட்டிறங்கி யாவரும் நின்ற இடத்திலேயே குறைந்தது இரண்டு மணி நேரமாவது நிற்க வேண்டிய “பாதை மறிப்பு” நம்மவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தினுள் திட்டமிட்டு எதனையும் செய்ய முடிவதில்லை. மச்சான் ஒருத்தியும் மாட்டுறாளில்லையெண்டால் பேசாமல் பாதைமறிப்பில் போய் நில். பக்கத்தில நிக்கிறவளிட்டை பேச்சுக்குடு. பாதை மறிப்பு முடிய நீங்கள் ரெண்டு பேரும் புதுச்சோடிகள் தான்டா. அந்தளவுக்கு கதைக்கிறதுக்கு நேரமும் கிடைக்கும் அதைவிட அவளுக்கும் வேற பொழுது போக்குமிருக்காது. நீ ஆட்டையைப்போட்டு விசயத்தை வெண்டிடலாமெண்டு நண்பர்கள் நகைச்சுவையாய் சொல்லுவார்கள். பாதை மறிப்பு விவகாரத்தால் உயர்தரப் பரீட்சை எழுதமுடியாமற் போன சந்தர்ப்பங்களும் கல்யாண வீடுகள் காலம் தப்பி நடந்த சந்தர்ப்பங்களுமுண்டு.

இத்தனையுமிருந்தென்ன, எந்தத் தடைகள் வந்தாலும் ஒவ்வொரு முறை வீழுகின்ற போதும் எழுந்து நிற்கும் வல்லமை படைத்தவர்கள் நம்மவர்கள். வீழ்வது அவமானமல்ல, ஒவ்வொரு முறை வீழும்போதும் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கிறோம் என்பதுதான் பெருமை. எத்தனை வழிகளில், யூத்தமென்ற போர்வையில் எம்மை அடக்க முயன்றாலும், அழிக்க முயன்றாலும் சாம்பலிலிருந்தும் எழுந்து நிற்கும் பீனிக்ஸ் பறவைகள் நம்மவர்கள். எத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தாலும் தளர்ந்து விடாது வளைந்து கொடுத்து அன்றாட வாழ்வை நடாத்துபவர்களும் அவர்களே. இதற்குச் சீதனம் என்ற போர்வையில் எம்மவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்துக் கட்டிக்காத்த பணமும் பொருளுமே காரணமென்றால் அது மிகையாகாது. இல்லையேல் நம்மவர்கள் பட்டினிச் சாவால் துடித்துச் சாவடைந்திருப்பார்கள். தமிழனென்றொரு இனம் நம்மூரில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கும்.

பெற்றோலுக்குப் பதிலாய் மண்ணெண்ணெயில் வாகனமோட்டியவர்களுக்கு, மிதிவண்டியைச் சுற்றி மட்டைப்பந்துப் போட்டி பார்த்தவர்களுக்கு, சுண்ணாம்பினால் கட்டிடிடம் கட்டியவர்களுக்கு, குண்டும் குழியுமான திருத்த முடியாத வீதிகளிலும் இலாவகமாக வாகனமோட்டக் கற்றுக் கொண்டவர்களுக்கு, ஆகாயத்தில் பறப்பது முதல் ஆழ்கடலினாழத்தில் பயணிப்பது வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, ஏன் பல்குழல் குண்டுகளின் மேலுறைகளையே பூச்சாடியாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, குண்டுச்சத்தங்களுக்கும் குழல்களினதிர்வுகளுக்குமிடையேயும் வாழ்ந்தவர்களுக்கு, செங்குருதியுறைந்த மண்மேலே நடக்கப் பழகிய நம்மவர்களுக்கு வாழவா கற்றுக் கொடுக்க வேண்டும்? தன்மானத்தோடும் சுய உரிமை காக்கும் அதிகாரத்தோடும் வாழுவோமென்ற வெறி இருக்கும் வரை, எம்மால் முடியுமென்ற நம்பிக்கையிருக்கும்வரை  எதையுமெதிர்கொள்ளும் வீரமிருக்கும்வரை தமிழன் வாழ்வும் நிலைத்திருக்கும். வரலாற்றில் தடம் பதிக்கும்.


ச. தனஞ்ஜெயன்
மட்டம் 03