Monday, September 21, 2009

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.


நண்பன் மருதமூரான் பள்ளிப் பயின்றதொரு காலம் தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பையேற்பதனால் எனக்கும் என்னுடைய பள்ளிக்காலத்தை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி மருதமூரான்.

நான் எனது ஆரம்பக்கல்வியை என்னுடைய ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். தென்புலோலியூரில் பிறந்து பல்வேறு துறைகளில் சிறந்து விழங்குபவர்கள் பலரை உருவாக்கி விட்டு ஆரவாரமின்றி தன் சேவையை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடசாலை. சின்ன வயசு... வாழ்க்கையின் பாரங்களை உணராத, கவலையை அறியாத வயசில் துள்ளித் திரிந்தோம்.அவ்வப்போது வானத்தைப் பார்த்து விட்டு மேசைக்குக் கீழ் பதுங்கியதும் அந்நேரங்களில் எல்லோருமே வீறிட்டுக் கத்தி அம்மாவையோ அப்பாவையோ இல்லை ஆண்டவனையோ துணைக்கு அழைத்ததும் நினைவிலிருக்கு.

ஆசிரியர்கள் பற்றி எழுதுவதாயின் எத்தனை பேரை எழுதுவதென்று ஒரு சிக்கல். எனக்கு கல்வி கற்பித்தவர்கள் ஒருபுறம் அதே நேரம் நான் கல்வி கற்காவிட்டாலும் நெருங்கிப் பழகியவர்கள் பலர்.  என்னுடைய முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர்களும், வாழ்ந்து காட்டி எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். (நான் படித்த காலத்துக்குப் பின்னர் புற்றளையில் கற்பித்த பலரும் இதற்குள் அடக்கம்) அதை விட எனக்கு கற்பித்தவர்கள் எனும்போது தனியார் கலாசாலைகளில் கற்பித்தவர்களும் அடங்குகிறார்கள். இவர்களை எல்லோரையும் எழுதுவதென்றால் பதிவு
நீளமாகுவது மட்டுமில்லை. நேரமும் போதாது. எனவே பாடசாலைகளில் எனக்கு கற்பித்தவர்களில் சிலரை மட்டும் நினைவு கூருகிறேன்.


புற்றளையில் கற்பித்த இராஜேஷ்வரி, சதாசிவம், ஈஷ்வரி, திலகவதி, கெளரி, கமலாம்பாள், ரஞ்சினி, சகுந்தலா என்ற ஆசிரியைகளும் சம்பந்தர், சண்முகநாதன் என்ற ஆசிரியர்களும் நினைவிலிருக்கிறார்கள். என்னடா இவன் எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கிறானே எண்டு யோசிக்க வேண்டாம். இவர்களில் பெரும்பாலானோர் என்னூரவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் என்னுறவினர்கள். அஞ்சாம் ஆண்டு முடிந்ததும் எல்லாரும் ஹாட்லிக் கல்லூரிக்குப் போறாங்களே நானும் போனால் என்ன (அந்த நேரம் இதைத்தவிர வேறெந்தக் காரணமும் என்னிடம் இருக்கவில்லை : அம்மா அப்பாவின் ஆசை என்றும் சொல்லலாம்) என்ற நினைப்போடு ஹாட்லிக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.

யாவருமே அறிந்திருக்கும் ஹாட்லிக் கல்லூரியைப் பற்றி நான் இங்கு விவரிக்கவில்லை. அரிவரியைப் புற்றளை மகா வித்தியாலயம் தொடக்கி விட உச்சத்தைத் தொடுமளவுக்கு மிச்சத்தைச் சொல்லித்தந்தது ஹாட்லிக் கல்லூரி. புதிய மாணவர்கள் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், கல்லூரிக்கேயுரிய சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என என்னுடைய கல்வியுலகம் விரிந்தது. எப்பிடித் தான் கட்டுப்பாடு போட்டாலும் அதனை உடைத்தெறிந்து மதில் பாய்ந்து இடைநேரத்தில் ஓடும் திறமையும் எம்மவர்களிடம் காணப்பட்டது. நான் படித்த காலங்களில் கல்லூரியின் வாசலில் இருந்து இரு நூறு மீற்றர் தொலைவிலுள்ள விசேட நுழைவாயிலிருந்து கல்லூரியின் வாசலையடைய ஏறக்குறைய அரைமணித்தியாலம் எடுக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு நாம் அனைவரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் பாணுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் நிற்போம் (அவ்வளவு ஆர்வக் கோளாறுகள் நாங்கள்). படிக்கிறதுக்குரிய பாடப்புத்தகங்கள் கொப்பிகள் எல்லாம் சரியாக கொண்டு வந்திருக்கிறோமோ எனப் பார்ப்பது மட்டுமில்லை  உடுப்புகள் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறமோ என உடம்பெல்லாம் தடவிப் பார்த்த பின்னர் தான் (தேவைப்பட்டால் கழற்றிகாட்டிய பின்னர்தான்) நாம் கல்லூரிக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவோம் (அவர்களுக்கு எம்மில் அவ்வளவு அக்கறை...). கல்லூரியின் மைதானத்துக்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேர காலத்துக்குள் சகல விளையாட்டு நிகழ்வையும் பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்கள் - பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட எவருமே உள் நுழைய முடியாத கோட்டையாக எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் விளங்கியது.

கல்லூரியில் கற்ற காலங்களில் ஒரே வகுப்பு மாணவர்களிடையே நிறைந்த ஒற்றுமை காணப்பட்டது. ஊர்களுக்கிடையே துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவோம். சின்னச் சின்னச் சண்டைகளும் வருவதுண்டு. ஆனாலும் என்ன நடந்தாலும் அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும்போது எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாகப் பழகுவோம். ஊர்ப் பாகுபாடு பார்த்து சண்டை பிடித்ததோ அல்லது ஒரு ஊர்க்கரர் வீறாப்புக் கதைத்து மற்ற ஊர்க்காரரின் முனேற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதோ இல்லை. கல்லூரியின் பின்னரான என்னுடைய வாழ்வில் கண்டு வெறுப்படைந்த விடயங்களில் இதுவும் ஒன்று. எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய கல்லூரி அண்ணன்மார்களுக்கு கொடுத்த தலையிடிகளும் ஆசிரிய ஆசிரியைகளுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து மறைவில் நக்கலடித்ததும் நினைவிலிருக்கிறது. பொது வேலைகள் (மேடை ஆயத்தப்படுத்தல்...) என்ற சாக்கில் வகுப்பில் பாட நேரங்களுக்கு நிற்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதும் ஞாபகமிருக்கு.

ஹாட்லியில் எனக்குக் கற்பித்தவர்கள் பலர். எட்டாம் தரத்தில் ஒரு தவணையில் நன்கு ஆசிரியர்கள் கணிதம் படிப்பித்தார்கள் என்றால் நம்பவா முடிகிறது. தவநேசன், துரைராசா, சத்தியசீலன் ஆகிய ஆசிரியர்கள் நீண்டகாலமாக எங்களுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருந்து வழி நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள் ஆறுமுகம், யாதவானந்தன் கணித ஆசிரியர்கள் பாலேந்திரா ஜெயகோபால், மரியதாஸ் விஞ்ஞான ஆசிரியர்கள் இரகுவரன் பரணிதரன் ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர். இவர்களில் மரியதாஸ் அடிக்கு மட்டுமில்லை கணிதக் ‘குறுக்குவழி’ செயன்முறைக்கும் பெயர் பெற்றவர். ஜெயகோபால் ஆசிரியரின் “x=y, y=z, எனவே x=z இதைச்சொல்லிப்போட்டு ஒரு மாணவனை எழுப்பி உனக்கு என்ன விளங்கினது எண்டு கேட்டா அவன் சொன்னான் ஆசிரியரே நான் உங்களை நேசிக்கிறேன் நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் எனவே...” என்ற மேடைப்பேச்சின் இடையில் சொன்ன நகைச்சுவை பிரபல்யமானது. (மு.கு. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்). உயர்தரத்தில் வகுப்பாசிரியர் ரஜேஸ்கந்தன் மற்றும் செல்வமலர் ஆசிரியை (நான் கற்ற காலத்தில் கற்பித்த, தற்போதும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஆசிரியையாக விளங்குகிறார்) சிவகுமார் ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றேன். சீலன் ஆசிரியரிடமும் ரகுவரன் ஆசிரியரிடம் நாடகம் பழகியதும் அந்தச் சந்தர்ப்பங்களில் சமூகம் மீது பல கோணங்களிலிருந்தான பார்வையையும் நடைமுறை யதார்த்தம் மிக்க வாழ்க்கை என்னவென்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் அடி வாங்கிய சந்தர்ப்பங்களுக்கும் குறைவில்லை. புற்றளை மகா வித்தியாலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தாமதித்து சென்றதனால் அதிபர் ஜோஷுவா அவர்களிடம் அடி வாங்கி அழுதது இன்றும் நினைவிலிருக்கு.அவ்வப்போது தேவாரம் பாடமாக்காவிடில் திருநீறு பூசி பொட்டு வைக்கவிடில் நவம் ஆசிரியரிடம் வாங்கிய அடி. எல்லாத்துக்கும் மேலாக ஆங்கில ஆசிரியர் சீலன் அவர்களிடம் வாங்கிய அடி. ஹாட்லி மைதானத்தில் எமது கல்லூரிக்கும் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு கல்லூரிக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் எமது வகுப்பு மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர். எனக்கு போட்டியைப் பார்க்கவேணும் என்ற எண்ணம். ஒரு ஆசிரியர் அனுமதித்தால் மட்டுமே மைதானத்துக்குள் நுழைய முடியும். கற்பிக்க வந்த சீலன் ஆசிரியரிடம் எம்முடைய வகுப்பை மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினேன். இரண்டு மூன்று முறை மறுத்தார். தொடர்ந்தும் தொல்லை கொடுத்தேன். முன்னுக்கு வந்து கைகளை உயர்த்தி கரும்பலகையில் வை என்றார். அவ்வளவுதான் நினைவிருக்கிறது. முழங்காலுக்கு கீழே விழுந்த அடியால் கால்கள் விறைத்து விட்டன. இந்த அதிரடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உயர்தரப் பரீட்சையின் பின்னர் ஒருமுறை கல்லூரிக்கு சென்றபோது தான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது என்னிடம் அடிவாங்கியவன் இன்று நல்லாயிருக்கிறான் என்றதும் நினைவிலிருக்கு.

பள்ளிக்காலங்கள் இனித் திரும்பி வரா எனத் தெரிந்த போதும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது மனசு.

இத்தொடர் விளையாட்டுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீட்கும்படி நான் அழைப்பது :


நிமல்
கிருத்திகன்
கார்த்தி
மதுவதனன்


Sunday, September 13, 2009

நீந்தப் பழக்கினாங்கள்

எங்களூரின்ர நடுவில இருக்கிற பிள்ளையார் கோவிலோடு இணைந்ததாக பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கேணி ஒண்டு இருக்குது. கோடை காலங்களில் தண்ணி வத்திப் போனாலும் மாரி காலத்தில தண்ணி நிறைஞ்சிடும். இதுதான் எங்கட பொடியளின்ர நீச்சல் குளம். மாரி காலத்தில மழை பெய்து நிலம் ஈரமாக கிடக்கிறதால மைதானங்களில விளையாட முடியாது. அந்தக் காலங்களில பள்ளிக்கூடமும் விடுமுறை விட்டுடுவாங்கள். வேற பொழுது போக்கும் இல்லை. அப்ப நீச்சலடிக்கிறதுதான் ஒரே பொழுது போக்கு. செயற்கை நீச்சல்தடாகங்கள் மாதிரி இல்லை. கேணிக்குள்ள தண்ணி மட்டம் ஒரே அளவாகத்தானிருக்கும். ஆளை விட ரெண்டு மூணு மடங்காகவும் இருக்கும். அதனால நீச்சலடிக்கப் பழகிறது ரொம்பக் கஸ்டம். இருந்தாலும் எங்கட ஊர்ப் பொடியளில பெரும்பாலானாக்களுக்கு நீந்தத் தெரியும். ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு வயசு வர வகுப்புப் பொடியளா சேர்ந்து போய் பழகுவோம். நீச்சலடிக்கத் தெரிந்த அண்ணாமார் பழக்கியும் விடுவினம்.

கேணி பிரதான வீதிக்குப் பக்கத்தில இருக்கிறதால அதால போய் வாற பொடியங்கள் எல்லாரும் பெரும்பாலும் அவிடத்தில நிண்டு ஒருக்கால் கேணிக்குள்ள என்ன நடக்குது எண்டு பாத்திட்டுத்தான் போவம். நல்லா நீந்தத் தெரிஞ்ச அண்ணாமார் பெல்டி அடிச்சு சாகசமெல்லாம் காட்டுவினம். பக்கத்தில இருக்கிற மகிழ மரத்தால ஏறிப் போய் ஓட்டுக்கு மேல இருந்து பெல்டி அடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள குதிக்கிறதைப் பார்த்தா எங்களைச் சுண்டியிழுக்கும். சின்ன அடையாளம் கட்டின கல்லொண்டை கேணக்குள்ள எறிஞ்சு போட்டு போட்டிக்கு சுழியோடிப்போய் எடுப்பினம். கேணிக்குள்ள கீஸ் பெட்டி (அடிச்சுப் பிடிச்சு) விளையாடுவினம். பாக்க ஆசையா இருக்கும். முழு நீச்சல் திறமையையும் காட்டி நீந்துவினம். அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்கு, பெரிதான வீதியால போய் வாற பொம்பிளைப் பிள்ளைகளின்ர கடைக்கண் பார்வையை திருப்பிறது. உந்த விஷயத்தில சிலபேர் சாகசம் காட்டியே ‘அருள்’ பெற்றிருக்கினம்.
அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினை முடிஞ்ச கொஞ்ச நாளில என்ர நண்பன் ஒருத்தனுக்கு அவன்ர அண்ணன்மார்களில் இருவர் பழக்கிய நீச்சல்தான் இண்டைக்கும் என்ர கண்ணுக்குள்ள நிக்குது. தனியார் கலாசாலையில் படிச்சிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தன். வழக்கம்போல கேணியடிக்குக் கிட்ட வந்து பிரதான பாதையிலேந்து விலத்தி துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டுவந்து அளவாக் கட்டப்பட்ட கேணி தூணில காலை வச்சுக் கொண்டு வேலியாகப் போடப்பட்ட இரும்பு வேல் கம்பிகளில கையைப் பிடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள எட்டிப் பாத்தன். ஏங்கிப் போனன்.

கேணியின்ர ரண்டு கரையிலயும் அவன்ர ரண்டு அண்ணன்மார்களும் நிக்கீனம். கேணியின்ர நடுவில இடுப்பில ஒல்லியைக் (பயன்தரத் தவறிய தேங்காய்)  கட்டிக் கொண்டு அவன் ‘காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ நான் சாகப் போறன், காப்பாத்துங்கோ’ எண்டு கத்திக் கொண்டிருந்தான். கைகால்களை அடிச்சு நீந்தின படி கத்திக் கொண்டிருந்தான். வேறை ஆக்களும் கேணுக்குள்ள நீந்திக் கொண்டிருந்தவை. ஆனா ஒருத்தரும் இவனைக் காப்பாத்த வரேல்ல. தட்டுத் தடுமாறி நீந்தி ஒரு கரைக்கு இவன் போனால் அந்தக் கரையில நிக்கிற அண்ணா குழறக் குழற இவனைப் பிடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விடுவார். மீண்டும் கத்திக் கத்தியே மற்றக் கரையை நோக்கி நீந்துவான். சத்தத்தைக் கேட்ட பாதையால போன அவன்ர அம்மப்பா எட்டிப்பாத்தார். அவனோ ‘அம்மப்பா காப்பாத்துங்கோ, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன்.’ எண்டு கத்திக் கொண்டு கைகால்களால் நீச்சலடிச்சுக் கொண்டிருந்தான். ஆனா அண்ணன்மார்களோ விடுவதா இல்லை. அவன் கத்துறதப் பாத்தா உண்மையிலேயே ஆள் முடிஞ்சிடுமோ எண்டு எனக்குள்ள ஒரு பயம். அண்ணன்மாரும் மனிசரோ எண்டு திட்டிக் கொண்டன்.

ஆனா அவர்களுக்கிருந்த துணிவு என்னண்டா அவன்ர இடுப்பில ஒல்லி கட்டியிருக்கிறதால லேசில தாழ மாட்டான். அடுத்தது அவர்கள் ரண்டு பேரும் நீச்சல்ல புலி. அதை விட பக்கத்தில நீந்திக் கொண்டிருக்கிற மற்றப் பொடியளும் இவன் தாழுறான் எண்டா காப்பாத்தத் தயார் நிலையிலேயே எப்பவும் இருப்பாங்கள். அதனால இவன் தாழுறதைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. ஆனா இவன் நல்லாத் தண்ணி குடிச்சிட்டான். நீந்தப் பழகிற எல்லாருக்குமே வாற அடிப்படைப் பிரச்சினையே இதுதான். இருந்தாலும் அந்த ஒரே நாள் கத்தலோடையே அவன் நீந்தப் பழகீட்டான். எங்கட வகுப்பிலேயே முதன் முதல் நீந்தப் பழகி எங்களுக்கு சாகசம் காட்டினவன் அவனேதான்.

அண்மையில கொழும்பில ஒரு நீச்சல் குளத்தில எங்கட ஊருக்குப் பக்கத்தூரில இருக்கிற என்னை விட வயசு கூடின அண்ணாவைச் சந்திக்கேக்க சொன்னார், ‘என்னதான் இருந்தாலும் உங்கட ஊர்க் கேணிக்குள்ள குளிக்கிற மாரி வருமேடா.’ அந்தளவுக்கு எங்கட ஊர்க் கேணி சுத்து வட்டாரத்தில பிரபலமானது. பலருக்கு நீச்சல் பழக்கினதும் எங்கட ஊர்க் கேணிதான்.Thursday, September 10, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

Sunday, September 06, 2009

கால்பந்து விளையாடுவம்

வீரபத்திரர் கோவில் காணிக்குள்ள விளையாடுறதைப் பற்றித்தான் சொல்லப் போறன். இண்டைக்கு இதைச் சொல்லுறதில ஒரு விடயம் என்னண்டா அந்த வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் இண்டைக்கு நடக்குது. வீரபத்திரர் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு திறந்த காணி இருக்குது. அந்தக் காணிக்குள்ளாலதான் கோவிலுக்கு போவதற்கான பாதைகளில் ஒன்றும் போகுது. அந்தத் திறந்த வெளிக்காணிக்குள்ள தான் நாங்கள் கால்பந்து விளையாடுவம். சிலவேளைகளில் துடுப்பாட்டமும் பேணியும் பந்தும் விளையாடியிருக்கிறம்.  
அந்தக் காணிக்கு கிட்டிய தூரத்தில் குடிமனைகள் இல்லாததால் சத்தம் போட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் பந்து பக்கத்து காணிக்குள்ளையோ கோவிலுக்குள்ளையோ போனால்தான் பிரச்சினை. பக்கத்துக் காணிக்குள்ள பெரிய புளியமரங்கள் இருக்கு. அதுகள்ளேருந்து விழும் புளியம்பழங்களைப் பொறுக்கி காணி உரிமையாளர் விக்கிறதால காணிக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய வேலி. அதனால பந்து அதுக்குள்ள போனா எடுக்கிறது வலு கஷ்டம். அதைவிட அதுக்குள்ள பந்தெடுக்கப் போகேக்குள்ள காணிக்காரர் நிண்டா துலைஞ்சுது. கத்திச் சத்தம் போடுவார். அவ்ற்ற கையில பிடிபட்டா போச்சு. அவரட்ட மட்டுமில்லை வீட்டிலையும் தோலுரிப்புத்தான். இது போக, கோவிலுக்குள்ள பந்து போனால் வாசற்கதவு பூட்டியிருக்கிறதால மதிலேறி விழுந்துதான் போக வேணும். வீரபத்திரர் எல்லோ, சும்மாவோ? ஆர் மதிலேறி விழுறது எண்டதில பிரச்சினை.
அதை விட வீரபத்திரர் கோவிலின் நிர்வாகி வீரகத்தி ஐயா எண்டு ஒருத்தர் இருந்தார் (தற்சமயம் எம்முடன் இல்லை).அவர் அந்தக்காலத்தில நல்லா வயசு போய் பொல்லுப் பிடிச்சுக் கொண்டுதான் நடப்பார். அவருக்கு நாங்கள் அந்தக் காணிக்குள்ள விளையாடுவது பிடிக்காது. ஏனெண்டா அந்தக் காணிக்குள்ள போட்டிருக்கிற பனம்பாத்தி முதல் வேலிக் கதியால்கள் வரை அனைத்தையும் உழக்கிக் கொண்டுதான் நாங்கள் விளையாடுவம். அதை விட பந்தடிச்சு கோவில் ஓடுகள் உடைப்பது முதல் போட்டிக்கு ஆர் கனதூரம் கல்லெறியிறதெண்டு தொடங்கி குறிதவறி ஓட்டுக்கு மேல விழுந்து ஓடு உடையிறது வரை அனைத்தையும் கன கச்சிதமாக நாங்கள் செய்து முடிப்பம். அதனால அவருக்கு நாங்கள் விளையாடுறது பிடிக்கிறதில்லை. அவற்ற பக்கமும் நியாயம்தான். எத்தினை தரம் எத்தினை ஓடெண்டு மாத்துறது. ஆனால் அவர் தான் எங்களுக்கு பெரிய வில்லனே. 
நாங்கள் வழமையா அஞ்சரைக்கு தனியார் கலாசாலை முடிஞ்சுதான் விளையாடப் போவம். அவர் கிட்டத்தட்ட ஆறரையளவில கோவிலுக்கு விளக்கேத்த அந்தப் பாதையால வருவார். அவர் தூரத்தில வரேக்கயே எங்களைக் கண்டாரெண்டா பொல்லைத் தூக்கிக் காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வருவார். அவர் வர்ரதுக்குள்ள காணி காலியாயிடும். அவரவர் தங்கட கொப்பிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு சைக்கிளையும் (துவிச்சக்கர வண்டி) எடுத்துக் கொண்டு ஓடுவம். அவரின்ர கண்ணில என்னையெல்லாம் அடையாளம் தெரிஞ்சா அந்தோ கதிதான். ஆக்கள் மூலமா தகவல் சொல்லியெண்டாலும் எங்கட வீட்டுக்கு கதை வந்திடும். அவ்வளவுதான், பிறகு நடக்கும் அர்ச்சனைகளைப் பற்றிச் சொல்ல வரேல்ல. ஒவ்வொரு திக்குத் திக்காக ஓடுற நாங்கள் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் ஒளிச்சு நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம். மேலும் விளையாடக்கூடிய சாதக பாதக நிலைகளை ஆராஞ்சு அவர் போன பிறகு மீண்டும் விளையாடுவம். விளையாட்டில அந்தளவுக்கு ஊறிப்போய் விடுவம். அதை விட இப்பிடியான சிக்கல்களை எதிர்கொண்டு விளையாடுறதில ஒரு ருசியுருக்குப் பாருங்கோ. அனுபவிக்கக் குடுத்து வைக்கோணும். 

Saturday, September 05, 2009

பட்டத சொல்லுறன்

பட்டத சொல்லுறன் பகுதியூடாக நான் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்ந்தவற்றை, நிகழ்பவற்றை என்னுடைய பார்வையினூடாகச் சொல்லலாம் என முயற்சிக்கிறேன். இவற்றில் நான் அனுபவப் பட்டதும் மனதில் பட்டதும் அடங்கும்.

 ‘அறுப்பான் வந்திட்டான்.. குடிச்சிட்டு வந்து அந்த அப்பாவிப் பிள்ளையைப் போட்டுப் படுத்திற பாடு.... சனியன் அழிஞ்சு போகானாம்.. ஒரு உழைப்பில்ல..மச்சான்மாற்ற காசில குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு போகுது’

பாட்டித் திட்டித் தீர்க்கவும் பக்கத்து வீட்டுப் படலையோட துவிச்சக்கர வண்டி ஒண்டு மோதிச் சத்தம் கேக்கவும் சரியா இருந்திச்சு. தொடர்ந்து சில கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். கதவுகள் சாளரங்களுக்கு அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. சின்னப் பிள்ளைகள் பயத்தினால் சத்தம் போட்டுக் கத்தும் சத்தம் கேட்டது. மனிசருக்கு அடி விழும் சத்தம்.
‘விடுங்கோப்பா.. இஞ்ச... அடியாதேங்கோப்பா’ என பக்கத்து வீட்டு அக்கா கத்தும் சத்தம்.
 ‘அடிச்சுப் போட்டான் போல கிடக்கு... அக்காவையும் பொடியளையும் போட்டுப் படுத்திற பாடு’ என் பங்குக்கும் பாட்டியோடு சேர்ந்து ஆமாம் போட்டேன்.
 கொஞ்ச நேரத்தில் எல்லாமே அடங்கிப் போனது.

அடுத்த நாள் பின்னேரம் பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்கு வந்திருந்தா. பாட்டி கதையைத் தொடக்கினா. நான் அறையொன்றுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
‘நேற்றுக் கடுமையான அடியோ’
‘இல்லை  ராசாத்தியக்கா... அது ஒண்டுமில்லை.. இஞ்சையும் கேட்டதே...’
 ‘என்ன சமாளிக்கப் பாக்கிறாய்.. நல்ல அடிபோல கிடக்கு’
‘சீ... அப்பிடி ஒண்டுமில்லை’ அக்கா கூனிக் குறுகி நெளிவதை அவவின் சொற்கள் எனக்கு உணர்த்தின.
‘இஞ்ச பிள்ள நான் ஒண்டு சொல்லட்டே உந்தக் குடிகாரனோட ஏன் நீ குடும்பம் நடத்துறாய். ஒரு உழைப்புமில்லை.கொண்ணன்மார் தானே காசு அனுப்பிறாங்கள். பேசாமல் அவனைத் துரத்திவிடு... அப்பத்தான் அவனும் திருந்துவான் பிள்ளைகளுக்கும் பிரச்சினை இல்லை. நீ இவனால படுற பாடு போதும்’

 ‘இல்லை ராசாத்தியக்கா... அவர் இரவில குடிச்சுட்டு வந்து சத்தம் போடுறது உண்மைதான். ஆனால் பகலில பொறுப்பா இருக்கிறார். வேலைக்குப் போகாட்டிலும் அவர் வீட்டு வேலை செய்யுறதில எனக்கு ஒத்தாசையா இருக்கிறார். பிள்ளையளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக் கொண்டு போறது முதல் அவர்களின் உடுப்புத் தோய்க்கிறது வரை எல்லாத்தையும் இவர்தானே செய்யுறார். எங்கட சந்தோசத்துக்காகத்தான் பகல் முழுக்க கஷ்டப்படுறார். இரவில அவற்ற சந்தோசத்துக்காக கொஞ்சம் குடிச்சா என்ன? எங்களுக்காக இவ்வளவு செய்யுறவருக்காக இதைக் கூட எங்களால பொறுத்துக் கொள்ள முடியாதோ?’
எனக்கு கன்னத்தில அறைஞ்சதப் போல ஒரு உணர்வு. ஒரே ஒரு நிகழ்வை வைத்து அவன் நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிக்க நான் யார்?

பி.கு. இந்நிகழ்வு குடிப்பதற்கு ஒரு அங்கீகாரமாக அமையாது.