Friday, October 04, 2013

அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்

எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள் எண்டதுதான். பத்திரிகையில ஒரு விளம்பரம் அஞ்சாம் ஆண்டு சித்தியடைஞ்ச ஒருவருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு அணியிற மாதிரி ஒரு தொப்பியும் அதற்குரிய ஒரு உடுப்பும் போட்டு உறவினர்களால வாழ்த்து விளம்பரம் போடப்பட்டிருந்தது.

தனிப்பட்ட விளம்பரம் போடுறது அவரவர் உரிமை, அதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன்.  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் வறிய மாணவர்கள் மட்டுமே மாதாந்த உதவி கிடைக்கும். பலருக்கு கிடைப்பதில்லை. இதனை எந்தவொரு பெற்றோரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சித்தியடையாத மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பார்கள். இதுவே பல பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக அமைவதுமுண்டு.  இதில சித்தியடையாவிட்டால் வாழ்க்கையே தொலைஞ்சு போகுமெண்ட பிழையான எண்ணம் மாணவர்கள் மத்தியில விதைக்கப் படுகிறது.

சுயமாக கற்றலை இன்னும் உணராத வயதிலுள்ள மாணவர்களுக்கு கல்வி மேல் வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். கல்விக்கு முக்கியம் குடுக்கப்படலாம் தான் அதுக்காக அதில்லையெண்டால் எதுவுமேயில்லை எண்ட மாயை உருவாக்கப்படக்கூடாது. அதுவும் சிறு வயதிலேயே... 

பெற்றோர்களே, உறவினர்களே அஞ்சாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்தளவுக்கு பெரிசாக்கி விளம்பரம் பண்ணுவதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குறைந்த புள்ளியெடுத்தவர்களை ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கையும் மற்றவர்களின் மேல் வெறுப்பு, பொறாமை காழ்ப்புணர்ச்சிகள் வளர்வதையும் ஊக்குவிக்காதீர்கள். இந்த பெறுபேற்றை வைத்து நான் படிப்பதற்கு பொருத்தமற்றவன் என எந்தவொரு மாணவனோ அல்லது எனது பிள்ளை படிப்பதற்கு லாயக்கில்லாதவன் என எந்தவொரு பெற்றோரும் முடிவெடுப்பார்களாயின் அதுவே அவர்களது வாழ்க்கையின் அழிவின் ஆரம்பமாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. 

- தனஞ்சி

Thursday, July 18, 2013

யாழ் பொறியியல் பீடமும் எங்கட சனத்தின்ர கதையும்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது ஆரம்பிப்பது நல்லதா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முற்றுப் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒருவர் இது சம்பந்தமாக விவாதித்ததை கேட்டு அதிர்ந்து போனேன்.

“எங்கட பொடியளின்ர படிப்பை பாழாக்குறதுக்குத் தானே தொடங்குறீங்கள். எங்க தொடங்கப் போறீங்கள்? கிளிநொச்சியில வெறும் காணி தானே இருக்கு. ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. அதுக்குள்ள கொண்டு போய் இஞ்சினியர் பொடியளைப் பாழாக்கப் போறியள். அவங்கள் படிச்சு முடிச்சு வெளியேற 8 வருசம் செல்லப் போகுது. இவங்கள் வெளியேறேக்க அவனோட மற்ற கம்பசுக்குப் படிக்கப் போனவங்கள் வேலைக்கு போய் 4 வருசம் அனுபவம் எடுத்திடுவாங்கள். எங்கட பொடியளை நீங்களே கெடுத்துக் குட்டிச் சுவராக்குங்கோ... உங்களுக்கென்ன சும்மா இருக்க சம்பளம் வரும்தானே... உங்கட பாட்டை நீங்கள் பாத்துக் கொள்ளுவீங்கள். படிக்க வாற பொடியளைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை? எங்கட படிப்பை அழிக்கிறதுதானே அவங்கட நோக்கம். அதுக்கு நீங்களும் துணை போங்கோ... எங்கட தமிழ் சனம் அழிஞ்சது உங்களை மாரியானாக்களால தானே...

பொறியியல் பீடம் ஆரம்பிக்கிறது நல்லதோ கூடாதோ எண்ட விவாதம் காலாவதியாகி விட்டது. ’என்னாது காந்தி செத்துட்டாரா?’  என்று இப்போது கேட்பதைப் போன்றது. எனக்குத் தெரிந்து 1974ம் ஆண்டிலிருந்து பொறியியல் பீடம் ஆரம்பிப்பது பற்றிய முன்னெடுப்புகளும் விவாதங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன.    நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ அரசாங்கம் பொறியியல் பீடத்தை ஆரம்பித்தே தீரும். நான் விரிவிரையாளனாக சேருறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகுது. பொறியியல் பீடம் தொடங்குவது நல்லதோ இல்லையோ எண்ட விவாதத்தை இப்ப கதைக்கிறது பொருத்தமில்லாத விசயம், இது பலருக்கு ஏன் விளங்குதில்லை?

பொறியியல் பீட கட்டட திட்ட வரைவு


பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொள்கிறது. ஆரம்பிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனை நானும் நீயும் வாக்குவாதப் பட்டோ, அறிக்கை விட்டோ நிறுத்த முடியாது எண்ட நிலைக்கு வந்து விட்டது. இப்ப நாங்கள் பார்க்க வேண்டியது, ஆரம்பிக்கப் பட இருக்கிற பொறியியல் பீடத்தை எப்பிடி முன்னிலைக்கு கொண்டு வருவது? அதுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனை நாங்கள் செய்கிறோமா என்பது தான்.

வெறும் காணியைத் தந்து கட்டிடம் கட்டித் தரலாம், வசதிகள் செய்து தரலாம் இப்ப நீங்கள் பொறியியல் பீடத்தை தொடங்குங்கோ எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது எண்டால், படிக்க வாற பிள்ளைகளை எப்பிடி பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்?, அவர்களுக்கு எங்களால் முடிந்தளவு சிறப்பான கற்கை நெறிகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்ன?, எப்பிடி அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பதை அல்லது அது சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பெறும் சிறந்த வழிமுறைகளை கையாளுவதை விடுத்து, இப்பவும் பொறியியல் பீடம் தொடங்குவது பிழை எண்டு விவாதித்துக் கொண்டிருக்க முடியுமோ? ஏன் எங்கட சமூகம் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்துக்குத் தேவையான விடயங்களைச் சிந்திக்காமல் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக் கொண்டிருக்கிறது எண்டு இன்னும் எனக்கு விளங்கவில்லை.

பொறியல்பீடம் ஆரம்பிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. முறையான கற்பித்தலை முதல் ஓரிரு வருடங்களுக்கு வழங்க முடியாத நிலை இருக்கிறது என்பதும் அதனை நானோ நீயோ கதைப்பதனால் நீக்கிவிட முடியாது என்பதும் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவாக தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சினை பிரச்சினை என்று ஒதுங்கி நிக்காமல் தெளிவாகத் தெரிந்த பிரச்சினையை துணிச்சலோடு எதிர்கொள்ளுவோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை நம்பி வரும் மாணவர்களுக்கு எங்களால் முடிந்ததை அனைத்து தரப்பினரது உதவிகளோடும் முன்னெடுப்போம். அதற்கு ஏன் எங்கட சமூகம் ஒண்டு சேர்ந்து உதவி செய்ய முன்வரக்கூடாது?

நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது. நான் விரிவுரையாளனாகிறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்கள் பாதிக்க்கப் படத்தான் போகிறார்கள். இவ்வளவும் வெளிப்படை உண்மைகள். இதை சொல்லிக் காட்டுவதற்கு ஒருவரும் தேவை இல்லை. இப்போது நாங்கள் சிந்திக்க வேண்டியது, கதைக்க வேண்டியது, மாணவர்களுக்கேற்படப் போகும் பாதிப்புகளை எப்பிடி குறைக்கலாம்? பாதிக்கப்படப் போகிற மாணவர்களை எப்பிடி பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும்?  பொறியல்பீடத்தை எவ்வாறு முன்னிலைக்கு கொண்டு வரலாம்? இதை ஏன் இன்னும் எங்கள் சமூகம் (அனைவரையும் இங்கே குறிக்கவில்லை) புரிந்து கொள்ளவில்லை? ஏன் இன்னமும் பழைய, தற்காலத்திற்கு பொருந்தாத, செல்லாத கதைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறது?

- தனஞ்சி.

Sunday, June 16, 2013

தாய்மடி தேடி..

இன்னும் நினைவிருக்கு...
ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓர் நாள் பின்னேரம்..
நான் ஏதோ ஒரு குழப்படி செய்து விட்டேன்.
நான் குழப்படி செய்யுறதெண்டது புதினமில்லையே...
இப்பிலிப்பில் தடி முறித்து சுழறச் சுழற அடிச்சீங்கள்
கால்கள் முழுவதும் தழம்புகள்...
வலி தாங்க முடியாமல் நான் அழுதேன்
ஓடிப் போய் கட்டிலில் படுத்தபடி அழுதேன்...

அரவணைக்க வந்தீர்கள்.
தழம்புகளுக்கு வாயால் ஊதி ஒத்தடம் கொடுத்தீர்கள்
நோகுதோ எண்டு கேட்டு பதறினீர்கள்...
நான் அடிச்சது உன்னைத் திருத்தத் தான்...
வேற ஒண்டுக்குமில்லை எண்டு என்னிடம் மண்டாடினீர்கள்
என்னைத் தேற்றுவதற்காய் மாம்பழங்கள் வெட்டித் தந்தீர்கள்...
அன்று முழுவதும் எனக்குப் பக்கத்திலேயே இருந்து
என்னைப் பார்த்து பார்த்து மனம் வெந்தீர்கள்
நோகுதோ நோகுதோ எண்டு எத்தினை முறை கேட்டீர்கள் எண்டு
எனக்கு ஞாபகம் இல்லை..

அடிச்சது வலிச்சதை விட நீங்கள் அழுதது தான் வலிச்சது
என்னுடைய வலியை விட நான் அன்பு வைத்திருப்பவர்கள்
என்னால் வேதனைப் படுவதைத்தான் என்னால்
தாங்கிக் கொள்ள் முடியவில்லை..
அன்றுதான் நான் திடமாய் முடிவெடுத்தேன்
என்னுடைய வலி எவரையும் காயப்படுத்தக் கூடாது.
எனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதனை முயன்றளவு
அன்பானவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது

ஆனாலும் உங்களிடம் நான் எப்போதும் தோற்றுவிடுகிறேன்
என்னதான் நான் ஒழிக்க முயன்றாலும் கண்டு பிடித்துவிடுவீர்கள்
கொஞ்ச நாளைக்கு முதல் கூட, என்ன முகம்
வாடிக் கிடக்குது எண்டு கேட்டீர்கள்
எங்க தான் உந்த வித்தையை கற்றுக் கொண்டீர்களோ...
ஆறுதல் தேடி உங்களை நாடி ஓடி வருகிறேன்.

- தனஞ்சி

Sunday, May 12, 2013

இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்.


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளாந்த செயற்பாடுகளை இன்னும் இன்னும் சுலபமாக்குகிறது, வேகமாக்குகிறது என்றாலும் மனித உணர்வுகளை, உறவுகளை கொன்று புதைக்கிறது.

மெய்நிகர் நண்பர்கள் (virtual friends) 
முகப்புப் புத்தகம், கூகிள் பிளஸ் என்பவற்றின் வளர்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை, எங்களோடு நீண்ட நாள் தொலைந்து போனவர்களை இணைப்பதற்கு பயன்பட்டாலும், நட்பு என்ற மனித உணர்வை மழுங்கடிக்கவே செய்கிறது. ஆரென்று முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட என் நண்பர்கள். 

நான் இண்டைக்கு படம் போட்டால் அல்லது நிலையை எழுதினாலோ (status update) பகிர்ந்து கொண்டாலோ (share) அதுக்கு அவன்/ அவள் வந்து விருப்பம் (like) தெரிவிப்பான்/ள். நாளைக்கு அவன்/ள் படம் போட்டாலோ அல்லது நிலையை மேம்படுத்தினாலோ பகிர்ந்து கொண்டாலோ நான் அதுக்கு விருப்பம் தெரிவிப்பேன். அல்லது கொஞ்சம் மேல போய் ஏதாவது கருத்து (comment) தெரிவிப்பேன். மாறி மாறி எங்களுக்கிடையில் இது ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்தினடிப்படையில் இப்பிடி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவு தான்... அதுக்கு பெயர் நாங்கள் இருவரும் நண்பர்கள்.

ஒரு சிலர் மற்றவர்களை பொறாமைப் பட வைப்பதற்காகவே படங்களைத் தரவேற்றுவார்கள். நிலையை மேம்படுத்துவார்கள். உண்மையான அவர்களின் மன நிலையோ அல்லது சூழ்நிலையோ அவை பிரதிபலிப்பதில்லை. அப்பிடி மற்றவன் போட்டுட்டான் எண்டதுக்காகவே நானும் படம் போட்டு அவனுக்கு என்னாலையும் செய்ய முடியும் எண்டு காட்டோணும், அவன் வாங்கின விருப்பங்களின் எண்ணிக்கையளவு நானும் வாங்க வேணுமெண்டு நானும் அப்பிடியே செய்யுறது. 

அவன் ஒண்டு செய்தால் அதுக்கு ஒரு படி மேல போய் நானும் செய்து காட்ட வேணுமெண்டு செய்யுறது. உண்மையிலே அது எனக்கு தேவையா, எனக்கு பயனுள்ளதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே நான் சந்தோசமா இருக்கிறேன் எண்டு மற்றவனுக்கு காட்ட வேணும் எண்டதுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிறேனா, நான் எனக்கு எது பிடிக்கும்: எது சந்தோசத்தை தரும் என்று தீர்மானித்து அதன் படி வாழ்கிறேனா என்று சிந்திப்பதில்லை. இவை எங்களையெல்லாம் ஒரு பொறாமை மனப்பாங்குக்கும், மற்றவர்களுக்கு படம் காட்டும் மன நிலைக்கும், மனித உணர்வுகளை மதிப்பதை குழி தோண்டிப் புதைக்கும் மன நிலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.நண்பனுக்கு ஒரு உதவி எண்டால் நேரடியாக சென்று என்ன வேணுமெண்டு கேட்டு செய்த நட்பு காணாமலே போகிறது. உரிமையோட உதவி கேட்க முடிந்த உதவி செய்ய முடிந்த காலத்தை நினைச்சுப் பாக்க மட்டும் தான் முடிகிறது. மச்சான் நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு அவன் உதடுகள் சொன்னாலும் அவன்ர முகத்தை பார்த்து அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பும் இருந்தது. மன பாரங்களை ஒரு நண்பனுக்கு எதிரே இருந்து சொல்லச் சொல்ல அவன் அதற்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருந்த கவலை எல்லாத்தையும் போக்கின காலம் வாராமலே போய்விடுமோ? 

முந்தியெல்லாம் நண்பனின் பிறந்த நாள் என்றால் வீடு தேடிப் போய் கொண்டாடுவோம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். இண்டைக்கு முகப்புப் புத்தகத்தில பிறந்த நாள் வாழ்த்து ஒண்டு போட்டால் போதும். அவனுடன் எங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டோம் எண்ட திருப்தி எங்களுக்குள் ஏற்பட்டுக் கொள்கிறது. வெளியிடங்களிலிருந்து ஒருத்தன் நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருந்தால் அவனை நேரில போய் சந்திச்சு அவனோட எங்கட நேரத்தை செலவழிச்சு உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளுவோம். இணடைக்கு அவன் வந்து நிக்கிறானம் எண்டால் ஓ.. முகப்புப் புத்தகத்தில பாத்தனான்... அவ்வளவுதான்... நேரில போக வேணும், சந்திக்க வேணும், சுகம் விசாரிக்க வேணும், நட்பை, உணர்வுகளை பகிர வேணும் எண்ட எண்ணம் தோன்றுவதில்லை.

மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை.  மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது. 


- தனஞ்சி.

Saturday, April 13, 2013

கிணத்தில தண்ணியள்ளி..


பள்ளிக்கூடம் படிச்சுக் கொண்டிருந்த பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் கிணத்தில தண்ணியண்ணிக் குளிச்சம். நாங்கள் சகோதரர் உறவுமுறையுள்ள (ஒரே வளவுக்குள் மூன்று வீடுகள்) அஞ்சு பேர் ஒரே கிணத்தில குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போகோணும். அத விட வேலைக்குப் போற மூண்டு பேரும் குளிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருநாளும் எல்லாரும் குளிப்பம். 

எங்களுக்கிடையில் இருந்த ஒப்பந்தம் என்னண்டால் ஆர் முதல் கிணத்தடிக்குப் போகினமோ அவரே முதலாவதாகக் குளிக்கும் உரிமை உடையவர். குளிக்கும் உரிமையுடையவர் விரும்பினால் ஒத்துமாறல் அடிப்படையில் மாறிக் கொள்ளலாம். 

கிணத்தடியில் இடம்பிடிக்கிறதுக்கு சகோதரங்களுக்கிடையில் போட்டி. ஒரே நேரம் கிணத்தடியை நோக்கி ரண்டு பேர் வெளிக்கிட்டால் ஓடிப் போய் இடம் பிடிப்பம். ஓட்டப் போட்டி எண்டு வந்திட்டால் பெரும்பாலும் தங்கச்சிமார் என்னட்ட தோக்க வேண்டி வந்துடும். ஓடிப் போய் இடம் பிடிச்சிட்டு அவளைப் பாத்து “நான் தானே முதலாவது” எண்டு சொல்லி அவளை வம்புச் சண்டைக்கு இழுக்கிறதில ஒரு சந்தோசம்.  சிலவேளை எதிர்த்து வாதாடுவாள். சிலவேளை சின்னண்ணா என்னை முன்னுக்கு விடுங்கோ எண்டு கெஞ்சுவாள். கொஞ்ச நேரம் வம்பிழுப்பன். பிறகு அவளை முன்னுக்கு விட்டுடுவன். ஒருமுறை சண்டை உச்சக்கட்டத்துக்கு போய் இரு வீட்டுப் பெரியாக்களும் வந்து சமரசம் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இப்ப அதே கிணறு இருக்கு. கிணத்தில குளிக்க ஆக்களில்லை. வயசு ஏறினதாலயும் மின்சாரம் வந்து வீட்டுக்குள்ளையே குளியலறை வந்ததாலையும் போட்டி இல்லை. கிணத்தில கையால தண்ணியள்ளிக் குளிக்கும்போது சொந்தக் கையால உழைச்சுச் சாப்பிடும் போது தோன்றும் பெருமிதம் தோன்றும். மூடிய அறைக்குள் நின்று கொண்டு குளிக்கும் போது ஏற்படாத சுதந்திரம், சந்தோசம் இயற்கையை ரசித்தபடி கிணத்தில குளிக்கும்போது ஏற்படுகிறது. கிணத்த படத்தில காட்டி இதுதான் கிணறு எண்டு பிள்ளையளுக்கு சொல்லிக் குடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

- தனஞ்சி.

  

Friday, February 08, 2013

வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.


விதியா என்று சிந்திக்கத் தலைப்பட்டாலும்
மனம் கலங்கி சிந்தனை சிதற மாட்டேன்.
தன்னம்பிக்கை என் தாரக மந்திரம்.
எல்லாம் வெல்லலாம். என்னால் முடியும்.

எத்தடை வரினும் எதிர் கொள்வேன்.
தோல்விகள் தொடர்ந்தாலும் தளரமாட்டேன்.
விளைவுகள் எதனையும் ஏற்றுக் கொள்வேன்.
வலிகளோடு வாழப் பழகிக் கொண்டேன்.

- தனஞ்சி.