Saturday, April 25, 2009

பிறந்தது முதலாய்...(1)

தாயின் கருவறைக்குள் நான் கருக்கொண்ட நாள் முதலாய் உணர்ந்ததெல்லாம் குண்டுகளின் அதிர்வுகளும் கேட்டதெல்லாம் மரண வீட்டு அழுகுரல்களுமே. பிறக்கும்போது கூட நான் வெடியோசையின் அதிர்வினாலேயே வெளித் தள்ளப்பட்டேன். பிறந்தவுடன் என் தாயின் கதறல்கள் எனக்கு கேட்க முன்னரே வெடியோசைகள் என் காதை கனமாக்கின.

ஆசையாய் என்னை முதன்முதல் அணைத்து முத்தமிட்ட தாயின் இதழ்களில் ஈரமில்லை. பயத்தால் இதழ்களும் உதறுவதை உணர்ந்தேன். நான் என் கண்களால் முதன்முதலாய் கண்ட நிறம் சிவப்பு. வைத்திய சாலையில் இரத்தம் தோய்ந்த உடைகளுடன் நடமாடும் மனிதர்களையே என் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்திருக்கிறேன்.

வைத்தியசாலைக்குள்ளும் துப்பாக்கி சுடும் என்பதை தாய்ப்பால் குடிக்கும் போதே கண்டு கொண்டேன். தாலாட்டுப் பாட்டு என் காதுகளுக்கு இனிக்கவில்லை. அழுகுரல்களும் வேதனையில் துடிக்கும் எம்மவர்களின் முனகல்களுமே என் தேசிய கீதமானது.

பட்டாசு கொளுத்திப் பார்க்க ஆசைப்பட்டதேயில்லை. துப்பாக்கி வெடியோசையின் கனமே போதுமென்று நான் நினைத்து விட்டேன். அதன் கோர விளைவுகளையும் பார்த்துப் பழகி விட்டேன். இரவு நேரங்களில் ‘குறுக்காஸ்’ என்று சொல்லி, வேளைக்கு குப்பி விளக்கையணைத்து விட்டு குப்புறப் படுக்கவும் பழகிக் கொண்டேன். பேய் என்று பேய்க்காட்டினால் கூட பயப்படாத நான் ‘குறுக்காஸ்’ பெயரைக் கேட்டு அலறினேன்.

இரவில் நாய்கள் பலமாகக் குரைக்கும் வேளைகளில் உணர்வறியா வயதில் அழக்கூட என் தாய் என்னை அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தி ‘சத்தம் போடாதே பிடிச்சுக் கொண்டு போடுவாங்கள்’ என்றாள். அன்றே நான் அழுவதற்கான சுதந்திரத்தையும் இழந்து விட்டேன். அன்று நான் பலமாக அழுதிருந்தால் எனக்கும் குடும்பத்துக்கும் இன்று இருபதாம் நினைவஞ்சலி செய்திருக்கலாம்.

பின்பக்க வேலி பாய்ந்து பயத்துடன் உயிருக்காக ஓடுவதை என் அப்பாவின் கைகளில் கைக்குழந்தையாக இருக்கும்போதே கற்றுக் கொண்டேன். இந்த வேலியால் விழுந்து இந்த ஒழுங்கையைப் பிடித்து அந்த வீதியை இந்த இடத்தில ஊடறுத்தால் ‘அவங்களட்ட’ பிடிபடாமல் இந்த இடத்துக்கு செல்லாலாம் என்று சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டேன். அதனாலோ என்னவோ என்னுடைய பிரதேசத்தின் சந்து பொந்துகள் எல்லாம் மனப்பாடமாகி விட்டன.

ஏணையின் இதத்தை நான் உணர முன்னரே பதுங்கு குழியின் சூழல் பழகிக்கொண்டது. ஏணை கட்டி தாலாட்டுப் பாட ஆசைப்பட்ட தாத்தாக்களும் பாட்டிமாரும் பதுங்கு குழிக்குள் தம் காலிடுக்குகளில் வைத்து தாலாட்டினர். அண்ணாந்து நிலா காட்டி சோறூட்டிய என் உறவுகள் வானத்திலே குண்டு வீச்சு விமானங்களைக் காட்டவும் மறக்கவில்லை. சீ ப்ளேன், புக்காரா, சகடை என்ற பெயர்களையும் மறக்காமல் எனக்கு ஊட்டி விட்டார்கள். காலப்போக்கில் தொலைவில் வரும் சத்தத்தைக் கேட்டே இது இந்த விமானம் தான் என்று சொல்லுமளவுக்கு நான் பாண்டித்தியம் பெற்று விட்டேன்.

அது மட்டுமா விமானங்கள் போடும் குண்டுகளின் எண்ணிக்கையை ஒன்று இரண்டு என்று சொல்லிச் சொல்லி எண்ணி எண்ணியே நான் ஆரம்பக் கணிதம் படித்துக் கொண்டேன். குண்டு வெடிக்கும் ஓசையைக் கொண்டே குண்டு விழுந்த இடத்தையும் தூரத்தையும் அனுமானிக்கும் திறமையையும் பெற்றுக் கொண்டேன். ஆசையாய்ப் பட்டம் பறக்க விடும்போது கூட வானில் மழை வருமோ எனப் பார்ப்பதில்லை. குண்டு போட வருகிறதா எனத்தான் பார்ப்பதுண்டு.

எங்கோ வெடியோசை கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படுக்கவும் ஓடிப்போய் பதுங்கு குழிக்குள் தஞ்சமடையவும் பழகிக் கொண்டேன். ‘ஆமி பொடியள்’ விளையாட்டு ஓடி விளையாட இனிமையாய்த் தெரிந்தது. விளையாடும் போது கூட இடை நடுவில் கைவிட்டு பதுங்கு குழிகளை நாடியோடுவதால் அந்த விளையாட்டுகளில் கூட முடிவு இல்லாமல் போய் விட்டது.

மண்வெட்டியையும் கோடரியையும் பாவிக்கும் விதத்தை பதுங்குகுழிகள் அமைப்பதற்கு பயன்படுத்துவதைப் பார்த்தே பழகிக்கொண்டேன். மனிதர்களுக்குப் பயந்து ஒழித்து வாழும் விலங்குகளுக்குப் போட்டியாக அவற்றைப் போலவே பதுங்கி வாழப் பழகிக்கொண்டோம். நாம் பதுங்கிய இடத்திலிருக்கும் பாம்பு பூரான் பூச்சிகளுடன் சில வேளைகளில் சண்டை போடுவதும் உண்டு. அவற்றிடம் கடி வாங்கி வைத்தியம் பெற்றதுமுண்டு. பதுங்கு குழிக்குள்ளே சிறு மாடம் அமைத்து நெருப்புப் பெட்டியையும் கடவுள் படங்களையும் வைத்து கடவுளிடம் என் உயிரை காக்கும் படி மன்றாடப் பழகிக்கொண்டேன்.

பழுதடைந்த துவிச்சக்கர வண்டியை ஓடவும் பழகிக்கொண்டேன். கற்களினாலும் மணலினாலும் அமையப் பெற்ற வீதிகளில் பாதையமைத்து ஓடும் வழியைக் கற்றேன். கிடைத்ததை உச்சப்பயன்பாட்டில் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டேன். மழைகாலங்களில் நிரம்பியிருக்கும் வெள்ளத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என்ற என்னுடைய கணிப்புத்திறன் துவிச்சக்கர வண்டிப் பயணங்களில் பிழையாகிப் போனதும் உண்டு. வாகனங்களில் சீரான பராமரிப்பின்மையால் எழும் உராய்வு ஒலியின் வித்தியாசத்தை வைத்துக் கொண்டே இன்னார் எங்கட வீட்டு ஒழுங்கையால் செல்கிறார் என சரியாகச் சொல்லவும் தெரிந்து கொண்டேன்.

மண்ணெண்ணைக் குப்பி விளக்கில் படிக்கவும் கண்ணயர்ந்து தூங்கும்போது அது என் மேல் விழுந்து தீப்பிடிக்காமல் இருப்பதற்காக உடலை வருத்தி ஆடாமல் அசையாமல் படுக்கவும் பழகிக் கொண்டேன். குப்பி விளக்கில் மண்ணெண்ணையை மிச்சம் பிடிக்கும் உத்திகளையும் அதனால் எம் பிரதேசங்களில் தோன்றிய ‘புதிய தொழில்நுட்பங்களையும்’ இலகுவாக தெரிந்து கொண்டேன். மண்ணெண்ணையில் ஓடும் மோட்டார் வாகனங்களையும், சிறு துளி பெற்றோல் விட்டு சிறு குழாய் ஒன்றினூடு ஊதி, மனிதர்களால் தள்ளி ஆரம்பிக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டேன். அவை அப்படித்தான் ஓடும் எனத் தவறாக எண்ணியும் கொண்டேன்.

அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழும்பி ஓடிச் சென்று அரை இறாத்தல் பாணுக்காக மணிக்கணக்கில் வரிசையில் தவம் கிடக்கவும் பழகிக்கொண்டேன். அதனாலோ என்னவோ இன்று எங்கும் வரிசை எதிலும் வரிசை.அனைத்திலும் வரிசையாய் நின்றாலும் வெற்றி கிடைப்பதென்பது மிகவும் அரிது. இன்று ஊருக்கு போவதற்கு விமானம் பதிவு செய்வதற்கு (நான் இலங்கையில்தான் இருக்கிறேன், இலங்கையில்தான் என் ஊரும் இருக்கிறது) பெரிய வரிசை. வாசலில் நிற்பவனிடம் வாங்கும் பேச்சுக்கள்... எத்தனையோ நாட்களில் ஏமாற்றம்... எல்லாமே பிறந்ததிலிருந்து பழகிப்போன விடயங்கள். இது எனக்கு மட்டுமே சபிக்கப்பட்டதொன்றல்ல. என் இனத்துக்கே சபிக்கப்பட்டது.

ஆரம்பப் பள்ளி சென்ற காலங்களில் பாடப்புத்தகத்தில் படிப்பித்தது நினைவில் இல்லை. ஆனால் வெடிச்சத்தம் எங்க கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படு என்று விளக்கத்துடன் சொல்லித்தந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. வானில் இரைச்சல் கேட்டால் போதும் பரீட்சை மண்டபமாக இருந்தாலும் எழுந்தோடிப் போய் பாடசாலைகளில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமடைவோம். கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அழுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி பாடசாலைக்கு வருவார்கள். அதிபர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் இடை நடுவில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வீடு செல்வதைத் தடுப்பதில்லை, நாகர்கோவில் பாடசாலை அனுபவத்தினால் போலும்.

அறியும் பருவம் வந்ததும் எனக்கு பதுங்கு குழிக்குள் பதுங்குவதற்கு பயம். என்னுடைய கெட்ட காலத்துக்கெண்டு குண்டு அதிர்வில பதுங்கு குழியை மூடப் பயன்படுத்திய தென்னங்குத்தியோ பனங்குத்தியோ எனக்கு மேல் விழுந்து விட்டால் அல்லது மண் தூர்ந்து பதுங்கு குழிக்குள்ளேயே என் மூச்சு அடங்கி விட்டால்... அதனால் பதுங்கு குழிக்குள் எனக்கு இறங்குவதற்கு பயம்.

அந்த பயமும் எனக்கு கன காலம் நீடிக்கவில்லை. எனது வீட்டுக்கு மிக அருகில் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் பதுங்கு குழி மீதிருந்த எல்லாப் பயமும் போய்விட்டது. முதலாவதுடன் முடிந்து விட்டது இரண்டாவதுடன் முடிந்து விட்டது என்று எண்ணிய நான் மூன்றாவது குண்டு விழுந்ததுதான் தாமதம் குண்டு வீச்சின் அகோரம் தாங்காது பதுங்கு குழியில் தஞ்சமடைந்தேன். வான்தாக்குதல் முடிந்து நீண்ட நேரமாகியும் பதுங்கியேயிருந்தேன். அந்த வான் தாக்குதலை இன்னும் நினைவில் வைத்திருக்க இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அந்த ஏழு குண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகியதோ ஏதுமறியாமல் நின்று கொண்டிருந்த ஒரு புளிய மரம். பாவம் அதுவும் தமிழர் தேசத்தில் பிறந்ததால் வேதனைகளை அனுபத்தது. வட்டிழந்த பனைகளும் தலையிழந்த தென்னைகளும் அந்தக் கொடுமைகளின் சாட்சியாக இன்றும் நிற்கின்றன.

-----மிகுதி அடுத்த பதிவில் தொடரும்...

பிறந்தது முதலாய்...(2)

நெருங்கிய உறவினர் ஒருவர் நாட்டை மீட்டெடுக்க புறப்பட்ட வேகத்திலேயே அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்க வேண்டிய நிலை. கணிதம் போதித்த என் இன்னுமொரு உறவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அறியாது வழமைபோல பாடசாலை சென்றார். செல்லும் வழியில் சன்னங்கள் அவரின் உடல் துளைக்க நடு வீதியில் துடி துடித்தார். யாருமே உதவவில்லை. வீட்டை விட்டு வெளி வரப் பயந்ததால் அனைவரும் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கொள்ள, அவரின் உயிர் பிரிந்தது. அந்தச் சின்ன வயசிலேயே எனக்கு ஆயுதங்களைக் காட்டித் தொட்டுப் பார்க்கத் தந்த பக்கத்து வீட்டு அண்ணா மூக்கில் பஞ்சடைந்து படுத்திருப்பதைப் பார்த்து அழுதேன். மரண வீடுகளில் ஓலமிட்டு அழும்குரல்களின் வேதனைகளை, உடலை உறைய வைக்கும், உயிரைப் பிழிந்தெடுக்கும், உணர்வை கொதிக்க வைக்கும் நிகழ்வுகளை அன்றே உணரத்தொடங்கினேன்.

ஊரவர், உறவுகள் கூடி ஒப்பாரி வைத்தாலும் மாண்டவர் மீளார் என விளங்கிக் கொண்டேன். உயிரின் மதிப்பை உணராத தேசத்தில், மனிதம் என்பதன் வாசனையே இல்லாத, மரணம் மலிந்த பூமியில் நான் பிறந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பேய் பிசாசுகளின் மீதான பயத்தை தூக்கியெறிந்தேன்.

ஊர் விட்டு ஊர் தாண்டி என் உயிரை காக்க ஓடவும் பழகிக் கொண்டேன். கையில் ஒரு பொதியுடன் பெயர் அறியாத் தேசம் நோக்கி தொடுவானம் தொடும் வரை நடக்கவும் பழகிக்கொண்டேன். வெறுமையை தெரிந்து கொண்டேன்.

நள்ளிரவு வேளை எம் தாய்த் தேசம் உறக்கத்திலிருந்த வேளை இடம்பெயர்ந்தார்கள். ஒருவரா இருவரா பட்டணத்திலிருந்த அனைவருமே கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எங்கோ கால் போன போக்கில் நடந்தார்கள். குடும்பத்து அங்கத்தவர்களை எண்ணிப்பார்த்துக் கொண்டுதான் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். போகப் போக எண்ணிக்கை குறையத்தொடங்கியது. குடும்பத்தினரை தவற விட்டுக் கொண்டே நடந்தார்கள். வழி நெடுகிலும் தவறவிட்ட தம் உறவுகளை பெயர் சொல்லிக் கூவும் குடும்பத் தலைவர்கள் தான் அதிகம். எம்மனைவரின் நெஞ்சங்களும் ஊமையாய் அழுது கொண்டு நடக்கும்போது, வானமும் தன் பங்குக்கு கொட்டித் தீர்த்தது. குறுகிய ஒற்றையடிப் பாலத்தைக் கடப்பதற்கு அத்தனை பேரும் பட்ட பாடு சொல்ல முடியாதது. குழந்தைகளின் அழுகுரல்களும் வயது முதிர்ந்தவர்களின் இயலாமையின் முனகல்களும் எதிரொலித்த வண்ணமே இருந்தது.

எம்மினத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமே(?) இடப்பெயர்வு. இன்று வரை இடப்பெயர்வு நிற்கவுமில்லை. படும் துயரங்களும் ஓயவில்லை. இத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்தவன் உலகிலேயே ஈழத்தமிழன் தான் என்றால் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.

படை எடுத்து வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள். அவர்கள் வந்துதான் என் வீட்டில் மின்சாரம் எரிந்தது. சந்தோசப்பட்டேன். கூடவே எமக்கென விஷேட ஒளிபரப்பும் நிகழ்ந்தது. அதில் நள்ளிரவை அண்மித்த நேரங்களில் ஆங்கிலப் படங்களுக்கும் குறைவேயில்லை. ‘சாமிப்பட’ இறுவட்டுக்களின் அறிமுகமும் கூடவே அவற்றை களவாக பார்வையிடும் இளசுகளுக்கும் குறைவேயில்லை. எங்களை அறியாமலே ஆசை காட்டி எங்களின் கல்வி மீதான நாட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை நாங்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. தற்போது இறுதிப் பதின்ம வயதுகளிலிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்? எல்லாமே சுடலை ஞானம்தான்.

சமாதனம் என்று சொல்லி என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு வன்னி மயிலின் அழகு பார்க்கப் புறப்பட்டேன். இயற்கையின் எழில் நிறைந்த வேளாண்மை விளைவிக்கும் வயல் வெளியினூடு பயணிப்பதில் ஒரு சந்தோசம். முடிவில்லா வெளியில் தனிமையில் நின்று இயற்கையை வியப்பதில் கிடைப்பது இன்னுமொரு சந்தோசம். அப்பாவியான கள்ளங்கபடமில்லா, தலைவனைத் தெய்வமாகக் கொண்ட குடும்பங்களுடன் அளவளாவுவதில் இன்னுமொரு சந்தோசம். இப்படியும் என் தேசத்தில் இருக்கிறது என எனக்குக் காட்டியது சமாதான காலம். எம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்பதைக் கட்டியம் கூறியது அழிவடைந்து விட்டதாக அனைவராலும் ஏளனம் செய்யப்பட்ட கிளிநொச்சி. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த வேகம், அனைத்து கட்டுமானங்களுடனும் எந்த ஒரு நாட்டு அரசாங்கமும் வெட்கித்தலை குனியுமளவிற்கு கட்டியெழுப்பபட்ட ஒரு தேசம் இன்று எங்கே போய் விட்டது? உலகமே கண்வைத்து பொறாமை கொண்டதனால்தானே இந்த நிலைமை. அவர்கள் நம்மை ஒரு போதும் முன்னேறவே விடமாட்டார்கள்.

இன்று வன்னிப் பகுதிகளில் நிகழும் மனிதப் பேரவலத்தை கேட்டபோதும் காணொளிகளில் பார்த்தபோதும் ஏதுமே செய்யமுடியா நிலையில் நடைப்பிணமாகவே இருக்கிறேன். ஆகக்குறைந்தது ஒரு எதிர்ப்பையோ எதிர்க்குரலையோ சாத்வீக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ வெளிப்படுத்த முடியாத நிலை. காரணம் காணாமல் போதல்களும் கடத்தல்களும் கொலைகளுமே. என்னிடம் போதியளவு என்னை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இருந்த போதும் ஒவ்வொரு சந்தியிலும் நிற்பவர்களைக் கடக்கும்போதும் கடவுளை மன்றாட வேண்டிய நிலை. ‘இன்றைக்கு பிடிக்க வேண்டிய எண்ணிக்கைக்கு ஒரு ஆள் குறையுது நீதான் அகப்பட்டாய். வா வந்து ஒரு நாள் உள்ளுக்குள் இருந்திட்டுப் போ’ என்று எனக்கும் சொல்லும் நிலை எனக்கு வரக்கூடாதுதானே.

உலகமே கை விட்டு நாங்களும் மனிதர்கள்தான் புவி வாழ் உயிரினம்தான் எனக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இந்த நிலையில் புலம்பெயர் எம்மவர்களின் செயற்பாடுகளும் தமிழக மக்களின் ஆதரவுக் குரல்களுமே சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சேவல் கூவிப் பொழுது விடியாது என்ற இருந்த நிலை இப்போது சற்று மாறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. எல்லாமே நம்பிக்கைதானே...

‘தக்கன பிழைக்கும்’ என்ற கருத்து இன்று எனக்கு கசக்கிறது. ஏனெனில் தக்கன என்ற வரையறைக்குள் என் இனம் இல்லையென்பதை தற்கால நிகழ்வுகளை வைத்து என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அதைவிட, என் தாய் மொழியில் அதிகம் பாவிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு விளங்காமல் இருக்கும் பதங்கள் என்றால் சுதந்திரம், பயங்கரவாதம், மனிதாபிமான யுத்தம். இச்சொற்கள் உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லையோ அல்லது அவை தற்காலத்தில் பாவிக்கப்படும் சந்தர்ப்பங்களோடு அச்சொற்கள் பற்றி நான் விளங்கிக் கொண்ட கருத்து ஒத்துப்போகவில்லையோ எனக்குத் தெரியவில்லை...

Thursday, April 16, 2009

கணக்கு_02

குளம் ஒன்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. உங்களிடம் 11 லீட்டர் குடமும் 5 லீட்டர் குடமும் தரப்பட்டுள்ளது. இவையிரண்டையும் மட்டும் பயன்படுத்தி 9 லீட்டர் தண்ணீரை எவ்வாறு எடுக்கலாம்?

Wednesday, April 15, 2009

தமிழன் என்பவன்

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. மிகவும் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்ட, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, ஏறக்குறைய எட்டுக் கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி தமிழ் மொழி. ஆத்திசூடி, திருக்குறள் முதலான அரிய பல நூல்களை உலகத்தாருக்கு அள்ளிக் கொடுத்ததும் இந்தத் தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை தொடர்ந்து விவரிக்காமல் நான் இங்கு பகிர முயற்சிக்கும் விடயம் ‘யார் தமிழன்?’ என்பதாகும்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்புகள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களுடைய வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள். இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் உண்டு என யாவரும் அறிவீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் தமிழர் முஸ்லீம் என்ற பிரிவுகள் தவறானவை. இவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஏனெனில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்.

அப்படியானால் இந்த முஸ்லீம்கள் யார்? அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்பது போல கிறீஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் கிறீஸ்தவர்கள் எனப்படுவது போல இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் எனப்படுவர். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பராகில் அவர்களும் தமிழர்களே. என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியாவில் இலங்கையில் உள்ளது போன்று தமிழ் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இல்லை. யாவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் இந்து முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘ஒஸ்கார் தமிழன்’ என்றுதான் ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டுகிறார்களே தவிர ‘ஒஸ்கார் முஸ்லீம்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. இதே போல கலாநிதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆனால் தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்ற பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவே விரும்புகிறார்கள்.

ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை முஸ்லீம் என்று வேறொரு இனமாகவே காட்ட முனைகிறார்கள். அதே நேரம் மற்ற மதங்களைப் பின்பற்றுகின்ற தமிழர்கள், முஸ்லீம்களும் தமிழர்களே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தப் பாகுபாடுகள் எப்படித் தோற்றம் பெற்றவையாக இருக்கலாம்? எனது கருத்துப்படி பெரும்பாலும் அரசியல் வாதிகளின் அரசியல் நலனுக்காகவே இந்தப் பிரிவு தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்புகிறேன். அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பிளவு விரிவடைந்ததாகக் கூட இருக்கலாம். எது நடந்திருந்தாலும் எல்லோரும் தமிழர்களே என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

புகையிரதப் பயணம் ஒன்றின் போது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் (முஸ்லீம் அடங்கலாக) எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பல கிராமங்களினூடாக (இந்துக்கள் முஸ்லீம்கள் வசித்த) துவிச்சக்கர வண்டியோடி திறந்த வெளியொன்றிலே எல்லோரும் ஒன்று சேர இருந்து சினிமாப் படங்கள் பார்த்ததையும், ஒன்று சேர்ந்து கோவில் நிகழ்வுகளில் பங்குபற்றியதையும் எல்லோருமாகச் சேர்ந்து போட்டியாகப் பிறை பார்ப்பதையும் நினைவு கூர்ந்து அது ஒரு பொற்காலம் என்றார்.

அரசியல்வாதிகளே இன்றைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. இன்றைய கிழக்கின் நிலை என்னவெனில் முஸ்லிம் கிராமங்களுக்குள் சுதந்திரமாக இந்துக்களோ கிறீஸ்தவர்களோ நுழைய முடியவில்லை. அதுபோல மறுதலையாக முஸ்லீம்கள் மற்றக் கிராமங்களுக்குள் நுழைய முடிவதில்லை.

இன்றைய காலத்தின் தேவை என்னவெனில் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமை. அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ கிறீஸ்தவர்களோ என்பதல்ல. இன்றைய யதார்த்தத்தை சிந்தித்தால் தமிழர்களுக்கிடையிலான பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஒரு பகுதியினரை இன்னுமொரு பகுதியினருக்கெதிராகத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களை நாங்களே அடித்துக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவித்து தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையை இனி வரும் காலங்களில் நிறையவே எதிர்பார்க்கலாம். தமிழர் அனைவரினதும் தாகம் ஒன்றாக இருந்த போதும் இன்றைய அரசியல்வாதிகள் எமக்கிடையே குழப்பங்களை உண்டு பண்ணி திசைதிருப்பி விடுகிறார்கள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாத, தமிழர்களுக்கிடையிலேயே புரிந்துணர்வு இல்லாத நாங்கள் எங்களை நாங்களே அடித்துக் கொள்கிறோம்.

இதற்கு நாம் மத ரீதியாக வேறு பட்டாலும் தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. எமக்கிடையிலான முரண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டியவையல்ல. இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிற மதத்தவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் எமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்போம். அதுவே நாளைய சந்ததியினருக்கு நல்லதை விட்டுச் செல்ல வழி வகுக்கும். இல்லையேல் எமக்கிடையே சண்டைகளை வளர்த்துக் கொண்டு பழியையும் பாவத்தையுமே விட்டுச் செல்வோம். சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நித்தம் நித்தம் பயந்து பயந்து எம்முறவுகளே எம்மை சாகடிப்பார்களோ என்று வாழ்வது முட்டாள்தனம். நேருக்கு நேரே பேசுவதன் மூலமும் விட்டுக் கொடுப்பின் மூலமும் எங்களுக்கிடையிலான கசப்புணர்வைக் களைந்து விட்டு ஒன்று சேர்வதே சரியானதாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.

மணிரத்தினத்தின் பம்பாய் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின்(?) வரிகளில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனமிங்கே பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

Monday, April 13, 2009

கணக்கு விடுறான்

பேச்சுத் தமிழில் ‘கணக்கு விடுறான்’ என்பதன் பொருள் ஏமாற்றுகிறான் என்பதாகும். ஆனால் நான் உங்களை ஏமாற்றாமல் சிந்திக்க வைக்க விளைகிறேன்.

கணக்கு விடுறான் என்ற இந்தப் பகுதியினூடு சிந்திக்க வைக்கக் கூடிய நுணுக்கங்களுடனான ஆனால் அடிப்படை கணித அறிவுடன் விடை காணக்கூடிய கணிதப் புதிர்களைத் தரலாம் என்று இருக்கிறேன். இந்தப் பகுதியினூடு உங்களை சிந்திக்க வைப்பதே எனது நோக்கம். பொழுது போகாத நேரங்களில் இவை பயன்படலாம். அல்லது மற்றவர்களை கேள்வி கேட்டு மடக்கவும் பயன்படும். விடை அறிந்தவர்கள் விளக்கத்துடன் பின்னூட்டல் மூலம் இணைத்து விட்டீர்களானால் சிறப்பாக இருக்கும்.

கணக்கு_01


விருந்தாளி ஒருவர் ஒரு வீட்டிலுள்ள பிள்ளைகளின் வயதுகளை அறிய விரும்பினார். வீட்டிலுள்ளவர் விருந்தாளியின் அறிவைச் சோதிக்க விரும்பினார். இருவருக்குமிடையில் நடந்த பின்வரும் உரையாடலை கவனித்து பிள்ளைகளின் வயதுகளைக் காண்க.


விருந்தாளி : உங்கள் பிள்ளைகளின் வயதுகளைச் சொல்லுங்கள்.

வீட்டிலுள்ளவர் : எனது மூன்று பிள்ளைகளின் வயதுகளின் பெருக்கங்கள் 36 ஆகும். அத்துடன் அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை முன் வீட்டு சாளரங்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும். (வயதுகள் முழு எண்களிலாகும்)
(விருந்தாளி சாளரங்களை எண்ணிய பின்னர்)

விருந்தாளி : நீங்கள் தந்த தரவு போதாது.

வீட்டிலுள்ளவர் : எனது மூத்த பிள்ளைக்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது.

விருந்தாளி : ஆ... கண்டு பிடித்து விட்டேன்... உங்கள் பிள்ளைகளின் வயதுகள்.....???

Wednesday, April 08, 2009

மெல்லத் தமிழ்...

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதியார் எழுதிச் சென்றார். அவரின் இந்த வரிகளைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஒவ்வொருத்தரின் பார்வையில் ஒவ்வொரு விதமாக இந்த வரிகள் தென்பட்டன. தமிழின் அழகும் இதுதானே... இணைப்பதன் மூலமோ பிரிப்பதன் மூலமோ வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கும் திறன் வாய்ந்தது எம் தமிழ்.

முதலாவதாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்து, மெது மெதுவாக தமிழ் மொழியானது அழிந்து போகும் என்பதாகும். இங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் ‘அப்படியானால் தமிழர்களின் நிலை என்ன?’ என்பதாகும். தமிழர்களும் அழிந்து போவார்கள்தானே அதிலென்ன சந்தேகம்? என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் தமிழர்களாலேயே தமிழ் மொழி அழிக்கப் படலாம் என்பதை பாரதியார் முன்கூட்டியே உணர்ந்திருப்பாரோ? அதாவது தமிழர்கள் தாங்களாகவே அந்நிய நாகரிக மோகத்திற்கு ஆட்பட்டு அந்நிய மொழியை பேசி, தமிழனாலேயே தமிழ் மொழி அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சி பாரதியார் மேற்சொன்னவாறு பாடினாரோ என்று கூடச் சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் இன்றைய சமகால நிலை அதனைத்தான் எடுத்துக் கூறுகின்றது.

அடுத்ததாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கருத்து மெதுவாக தமிழ் இனி அச்சாகும் என்பதை சேர்த்து சொன்னால் இனிச்சாகும் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அதாவது இனி வரும் காலங்களில் தமிழ் மொழி ஆக்கங்கள் அதிகமாக உருவாக்கபட்டும் பழந்தமிழ் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டும் அச்சுக் கூடங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்பதையே பாரதியார் தனது காலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். இன்று தமிழ் மொழி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளதைப் போல என்கிறார்கள்.

அதே கூற்றுக்கு இன்னுமொரு கருத்தும் கூறப்படுகிறது. மெல்ல - வாயால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கத் தமிழ் மொழியானது மிகவும் இனிமையானதாக மாறும் என்பதாகும். வெல்லங்களை வாயினில் போட்டு அரைக்கும்போது மென்மேலும் இனிமையாவதைப் போல. பாரதியாரின் கூற்றுக்கு என்னைக் கவர்ந்த கருத்தும் இதுவே. இப்பிடித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இன்றைய யதார்த்தத்தை நோக்கும்போது உண்மை அதுவில்லையெனத் தோன்றுகிறது. கசப்பானதுதான் ஆனாலும் அதுதான் உண்மை.

அதாவது முதலாவதாக விவரிக்கப்பட்ட கருத்தே இன்றைய நிலைக்குப் பொருத்தமானதாகும் என்பது எனது கருத்து. தமிழருக்கு என்றொரு நாடு இல்லை என்பதை விட தமிழர்களைக் காப்பதற்கு உலகின் எந்த ஒரு இனமுமே முன்வரவில்லை என்ற இன்றைய நிலையை சிந்திக்கும்போது தமிழினம் அழிக்கப்படுவது எதிர்பார்க்கக்கூடியதொன்றாகிறது. ஈழத்திலே தமிழினப் படுகொலைகள் நடந்தேறுகின்றதைப் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடங்கள் எல்லாவற்றிலும் தெளிவாக எடுத்து இயம்பியும் உடனடியாக உதவி செய்ய, படுகொலையைத் தடுத்து நிறுத்த எவருமே முன்வரவில்லை. புலத்திலுள்ளவர்கள் தெருத்தெருவாக ஒவ்வொரு இடமும், தாம் யாரைத் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ யாருக்காக தம் உடலை வருத்தி உழைப்பை வழங்குகிறார்களோ அவர்களிடம் உதவி கேட்கிறார்கள். உடனடியாக எவரும் எமது கவலையைப் போக்க முன்வரவில்லை. அழிந்து போன பின் அழுது கண்ணீர் விட்டு என்ன பயன்? அதற்காக நாம் சோர்ந்து விடாது ஒன்று சேர்ந்து வென்றெடுப்பதுதான் வழி என்பது வேறு விடயம்.

ஒரு பக்கம் தமிழர்களைக் காக்க மற்றவர்கள் முன்னிற்கவில்லை என்றால் மறுபக்கம் தமிழர்களாலேயே தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு அழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழனுக்குத் தமிழனால்தான் அழிவென்பது எழுதி வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பாக இருப்பது எம்மினத்தின் இன்னுமொரு சாபக்கேடு. முன்னைய தமிழர் வரலாற்றை எடுத்து நோக்குவோமானால் கூட வீரம், செல்வம், காதல் என்றெல்லாம் பெருமையாகப் பேசுவோம். ஆனால் ஒற்றுமையாக சேர்ந்து சாதித்த விடயங்கள் என்பவை அரிதே. எல்லா வரலாற்றுக் கதைகளிலும் தமிழனுக்கு தமிழனே வில்லனாவான். இந்த மனப்போக்கை மாற்றவே முடியாதா? பொறாமையும், தான் மட்டுமே முன்னுக்கு வர வேண்டும், தானே தலைமை தாங்க வேண்டுமென்ற மனப்பாங்கும், தனக்கு மட்டுமே எல்லாம் உரித்துடையது என்ற எண்ணமும் இருக்கும் வரை இந்த மனப்போக்கு மாறாதது.

இன்றைய அந்நிய நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் தமிழ் மொழியை தமிழர்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்களுக்கிடையில் உரையாடுவதற்கே வெளிப் பகட்டுக்காக அந்நிய மொழிகளில் உரையாடுகிறார்கள். எங்களுக்கு அந்த மொழியும் தெரியும் என்று பந்தா வேறு. ஆங்கிலம் படிக்கத்தான் வேண்டும். ஆங்கிலேயனுடன் சவால் விடக்கூடிய நிலைக்கு கற்கத்தான் வேண்டும் நான் மறுக்கவில்லை. ஆங்கில மொழியில் ஆங்கிலேயனுடன் போட்டி போட்டு வெல்ல வேண்டும். அப்போதுதான் எங்களுடைய திறமைகள் வெளிக் கொணரப்படும். ஆனால் எம்மினத்துக்கிடையில் உரையாடுவதற்கு எதற்கு அந்நிய மொழி? இசைப்புயல் ரஹ்மான் உலக மேடையிலேயே தமிழில் பேசினார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் நமது வீட்டிலேயே தமிழில் கதைக்கிறோம் இல்லையே, பிறகு எப்படி தமிழ் மொழி அழியாது காக்கப்படும்? இன்று சின்னப் பிள்ளைகளுக்கு பெற்றோர் ‘இந்த மாமாவுக்கு “ருவிங்கிள் ருவிங்கிள்..” பாடிக் காட்டுங்கோ’ என்று சொல்கிறார்களே தவிர “நிலா நிலா ஓடி வா” பாடிக் காட்டுங்கோ என்று சொல்வதில்லை என்ற என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் தான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறான சின்னச்சின்ன அன்றாட விடயங்களில் தமிழை மறந்து விட்டு மேடையில் அலங்காரத்துக்காக பேசினால் மட்டும் தமிழ் காக்கப்பட்டு விடாது. நாம் ஒவ்வொருவரும் தமிழில்தான் கதைப்போம் என்று நிச்சயமான முடிவெடுத்து செயற்படுத்துவோமானால் தமிழுக்கு தமிழர்களால் ஏற்படும் அழிவைத் தடுக்கலாம். இது பெரிய விடயமேயில்லை. ஆனால் ஏன் இதனை செயற்படுத்துகிறோம் இல்லை என்பது எனக்கு விளங்கவில்லை.

Friday, April 03, 2009

கருத்துக்களம்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமையிருக்கிறது. அதற்காக விடயத்துக்குப் பொருத்தமில்லாத கருத்துக்களை கூறுவது நல்லதல்ல. குறித்த ஒரு விடயம் சம்பந்தமான கருத்துக்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகளுடன் மனிதாபிமான அடிப்படையிலும் மாற்றமடையக் கூடியவை.


இதுதான் இறுதியானதும் உறுதியானதுமான கருத்து என்று எதையுமே சொல்ல முடியாது. பல பக்கங்களிலிருந்து பல தரப்புகளிடமிருந்து வேறு வேறு கருத்துக்கள் வெளிப்படலாம். ஆனாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான கருத்துக்கள் இல்லாமலுமில்லை. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக விவாதித்துக் கொண்டு செல்லும்போது சில பொதுவான விடயங்களில் விவாதிப்பவர்களிடையே இணக்கப்பாடு எட்டப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணக்கம் காணப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்ற கருத்துக்களை விவாதிப்பவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.


ஆனால் இன்றோ பலர் அப்படியில்லை. உதாரணமாகதமிழை வளர்ப்போம் என வாய் கிழிய கத்துபவரே அந்நிய மொழியிலேயே தமிழர்களுடன் உரையாடுவார். ஊருக்குத்தானே உபதேசம் உனக்கில்லை என்ற தொனியிலான விடயங்கள் நிச்சயமாகத் தவிர்க்கப் பட வேண்டியவை.


அதை விட மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கின்ற மனப்பாங்கு எம்மிடம் இல்லவேயில்லை என்றால் கூட மிகையாகாது என்றுதான் தோன்றுகிறது. நான் சொன்னதுதான் சரி என்று ஒற்றைக்காலில் நிற்பவர்கள் பலர். அதிலும் கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் தான் கூறியது தவறான கருத்து என்று கூறியவரே உணரும் நிலை வந்தாலும் நிலமையை மழுப்பிச் சமாளிப்பாரே தவிர மற்றவர் கருத்துக்களை மருந்துக்கும் ஏற்கமாட்டார். இந்நிலை நிச்சயமாக தவிர்க்கப் பட வேண்டியது. ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை சிறு வயது முதலே வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அம்மனப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும்.


கருத்துக்களம்என்னும் பகுதியினூடாக நான் கற்ற, அனுபவம் மூலம் பெற்ற, அவதானித்த, நண்பர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை எழுதலாம் என்றிருக்கிறேன். இந்தப் பகுதியில் நான் எனது கருத்துக்களையே சொல்ல இருக்கிறேன். அவை பெரும்பாலும் எங்கிருந்தோ பெறப்பட்டவையாக இருக்கும். ஆனால் என்னைக் கவர்ந்தவையாகவோ என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவோ இருப்பதனால் எழுதுகிறேன்.


இங்கு கூறும் கருத்துக்களிலிருந்து நான் ஏதோ விதிவிலக்கானவனென்றோ நான் இவற்றுடன் சம்பந்தப்படாதவன் என்றோ நான் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரியென்ற தோரணையிலோ நான் எழுத முனையவில்லை. இந்தப் பகுதியின் மூலமாக என்னுடைய எதிர்பார்ப்பு என்னவெனில் இப்பகுதியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும். விடயத்துக்குப் பொருத்தமில்லாக் கருத்துக்கள், குறிப்பிட்ட தனி நபரையோ தனிக் குழுவையோ பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.


அது மட்டுமில்லாமல் சொல்லப்படும், மற்றவர்களால் பின்னூட்டப்படும் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தயவுசெய்து அதனைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். வாசிப்பதோடு நின்று விடாதீர்கள். நிச்சயமாக இதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். வாழ்வை வளமாக்கலாம்.

Wednesday, April 01, 2009

தாய் மடி...

என்னைத் தாலாட்ட மட்டும்

தாய்மடி என்னைத் தாங்கவில்லை...

நிலாக்காட்டி சோறூட்டவும்

பல நீதிக்கதைகள் சொல்லவும்

உடலழுக்கு நீக்க நீராட்டவும்

துடுக்கடக்கி என்னைச் சீராட்டவும்

பிழை சுட்டி வழி காட்டவும்

திறன் ஊட்டி பாராட்டவும்

தாய்மடி என்னைத் தாங்கியது.


என் கண்ணீரால் நிரம்பியதும்

உண்டான காயங்களையாற்றியதும்

பயம் வரும்போதெல்லாம்

ஓடிப்போய் கட்டியணைப்பதும்

சோகத்தின் போது முகம்

குப்புற விழுந்து அழுவதும்

வீரம் பேசி வம்பளந்து விட்டு

பிரச்சினையின்போது தஞ்சமடைதுவும்

ஓடியாடி விளையாடி குழப்படி செய்வதும்

இந்தத் தாய்மடியில்தான்...


எதுக்கும் அஞ்சாது நான் எதையும் செய்யக்

காரணமும் தாய்மடி என்னைக் காப்பதால்தான்...

என் தாய்மடி தான் தங்க ஓரிடமின்றி தாய்மண்ணுக்கே

சோதனை வரும்போது வேதனையை யாரிடம் சொல்லும்?

வறிய நிலையறியாது வளர்த்த தாயைப் பிரிய மனமின்றி

பிரித்த வலியை எம்மினத்தின் தீராத சாபம் என்பதோ?

தவழ்ந்து விழுந்தெழுந்து நடை பழகி முத்தமிட்ட எம்மண்ணின்

மடியில் நித்திரை கொள்ளத் துடிப்பவர் எண்ணம் பிழையானதோ?

வணக்கம்... வருக!

“ தாய்மடி” என்கின்ற எனது வலைப்பூவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.

தாயின் மடிக்காக ஏங்கும் உள்ளங்களுக்காகவும் தாயின் அரவணைப்பிற்காக வாடும், தாய்மண்ணைப் பிரிந்து வாழும் உறவுகளுக்காகவும் இந்த வலைப்பூவைச் சமர்ப்பிக்கிறேன்.

எல்லாரும் வலைப்பூக்களில் தங்களின் பதிவையிடும்போது எனக்கும் ஒரு ஆசை. பால்குடியின் நப்பாசை, “நானும் ஒண்டு எழுதினா என்ன?” அதுக்காகவே இந்த வலைப்பூவை எழுத ஆசைப்படுகிறேன். இந்த வலைப்பூவை வாசிப்பவர்களே! என்னையும் உங்களில் ஒருத்தனாக ஏற்றுக்கொண்டு நான் விடும் தவறுகளை பால்குடிப் பிள்ளையென்று நினைத்து மறக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த வலைப்பூவில் நான் இதுவரை வாசித்தறிந்தவை கேட்டறிந்தவை பட்டறிந்தவற்றைக் கொண்டு என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். எழுதும்போது சில கருத்துக்களை பிறரிடமிருந்து ‘சுட்டு’ கூட எழுதுவேன். தயவு செய்து கண்டுகொள்ளாதீர்கள். இது என்னுடைய ஆக்கங்களையும் சுமந்து வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
நன்றி