Tuesday, December 01, 2009

உபயம்...

கல்லூரி வாழ்க்கையில மறக்க முடியாத நாட்களில நாடகம் பழகிய (பழகப் போறன் எண்டு வீட்டில சொல்லிக் கொண்ட) நாட்கள் மறக்கமுடியாதவை. நாடக வாழ்க்கை வாழ்ந்தம் எண்டும் சொல்லலாம். ஏனெண்டா பல நாடகங்களை, நாடக நெறியாளர்களாகிய ஆசிரியர் வீடுகளுக்குப் போய்த்தான் பழகியிருக்கிறம்.  சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தனியார் வகுப்புகளுக்கும் முழுக்குப் போட்டுக் கொண்டு வீட்டில நாடகம் பழகப் போறன் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிடுறது. குறுக்கு வழி குச்சொழுங்கை எண்டு இல்லாத ஒண்டையும் உருவாக்கிக் கொண்டு சைக்கிள் நுழையாத இடங்களுக்குள்ளாலயும் சைக்கிளை விட்டுக் கொண்டு போறது. ஆசிரியர்களின் வீடுகளுக்குப் போகேக்க என்னவோ தனித்தனியாத்தான் போவம். முடிஞ்சு வரேக்க ஒரு பெரிய பட்டாளமே வரும். இரகுவரன் ஆசிரியரினதும் சத்தியசீலன் ஆசிரியரினதும் வீடுகளுக்கு சென்று நாடகம் பழகினாலும் சீலன் ஆசிரியரிடம் ஆங்கில நாடகம் பழகிப் போட்டு வரேக்க இருக்கிற ஆர்ப்பாட்டம் மாதிரி மற்றது இருக்கிறேல்ல. பெரும்பாலும் ஆங்கில நாடகம் பழகிறது ஒரே வகுப்பு மாணவர்கள் தான். அப்ப வீதியில போகேக்க பம்பலைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ...

 வீதியில வரேக்க ஒருத்தன்ர சைக்கிள் கைப்பிடியில மற்றவன் கையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிள் ஓடுறதில ஒரு சுகம் இருக்குப் பாருங்கோ. அது தனி அலாதியானது. என்னதான் காவல்துறை சட்டம் எண்டு சொன்னாலும் எனக்கு இப்பிடி சைக்கிள் ஓடி வாறதில ஒரு சந்தோசம். ஒரே வகுப்புப் பொடியள் எண்டா நக்கல் நையாண்டிகளுக்கும் இடைக்கிட ‘கூ’ அடிச்சுக் கத்திக் கொண்டு போறதுக்கும் குறைவிருக்காது. அதுவும் கொஞ்சம் இருட்டெண்டா காணும். சத்தத்தைப் பற்றி பேசவும் வேணுமோ? வீதியால போறாக்கள் ஏன் வாகனங்கள் கூட எங்களை விலத்தித்தான் போக வேணும் எண்ட நினைப்பில வீதி முழுக்க எங்கட ஆட்சிதான். எத்தினை பேர் பேசிக் கொண்டும் எங்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டும் போயிருப்பினம். அதெல்லாம் எங்களுக்கு உறைச்சால்தானே. அதெல்லாம் இப்ப சிங்கள மொழியில திட்டு வாங்கேக்க பயன்படுதெண்டதில ஒரு திருப்திதான், வேறென்னத்தைச் சொல்ல...

நானும் கல்லூரி காலத்திலிருந்தான நண்பனும் பதிவருமான கிருத்திகனும் நாடகம் பழகப் போன பொடியள்ல ரண்டு பேர். (இதையும் வாசிங்கோ) முடிஞ்சு வரேக்க எங்கட எல்லாற்ற சைக்கிளும் நிப்பாட்டப் படும் இடம் சுதாஸ் (பெயர் சரியென்று நினைக்கிறன்) ஐஸ்கிறீம் கடை. எங்களுக்கு என்ன விதமான ஐஸ்கிறீம் வேணுமெண்டு கடைக்காரனுக்கே தெரியும். ஆக்கள் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். கடைக்காரனுக்கு நாங்கள் சொல்ல முன்னமே ஐஸ்கிறீம் போட்டுக் கொண்டு வந்திடுவான். அது முடிய பொடியளுக்கு பீடாவும் தேவையெண்டும் தெரியும். என்னத்தைத் தான் சொன்னாலும் எங்கட நாடகக் குழுவில ஆர் காசு குடுக்கிறதெண்ட பிரச்சினை இருந்ததில்லை. எல்லாருமே குடுப்பாங்கள் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சுப் போடாதேங்கோ... முதல் ரண்டு நாள் கீத்தின்ர உபயம். மூண்டாவது நாள் ஆரோ ஒருத்தன் தான் குடுக்கிறன் எண்டு சொன்னான். அந்த நேரம் பாத்து எங்கட குழுவில இருந்த தோசை எண்டொருத்தன் சொன்னான் பாருங்கோ ‘நீ காசு குடுத்தா கீத்துக்குப் பிடிக்காது. அவன், தான் தான் குடுக்க வேணுமெண்டு சொல்றவன்” (எப்பிடித்தான் இப்பிடியான வசனங்களை கண்டு பிடிக்கிறாங்களோ???) இதுக்குப் பிறகு கீத் வாய் திறக்கேலுமோ? ஐஸ்கிறீம் குடிச்ச எல்லா நாளும் கீத்தின்ர உபயம் தான். உண்மையைச் சொல்லோணுமெண்டா முகம் சுழிக்காம நண்பர்களுக்கு வாங்கிக் குடுக்கிறதெண்டா அவன் தான். அதை விட இன்னுமொரு உண்மை, மற்றாக்களின்ர உபயத்தில சாப்பிடிற மாதிரி திருப்தி சொந்தக் காசில சாப்பிடேக்க வாறேல்ல. உதென்ன உது... லவ்லி கூல்பாரோட ஒப்பிடேக்க இதெல்லாம் ஒரு லந்தைப் பழம் (அதாங்க ஜுஜுபி) எண்டு கீத் சொல்ல வாறது புரியுது. இருந்தாலும் இதையும் மறக்கேலுமோ?

Saturday, November 21, 2009

மிச்சக் காசு

எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய் கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர் நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.

கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது. நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப் போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.

இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும் கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான் குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.

ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

Sunday, November 08, 2009

பெற்றோரும் கல்வி முறையும்

கல்வி முறை என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப் படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.

எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான் எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப் போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப் பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.

பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன் நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).

இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக இருக்கும்.  அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள் விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை.

Thursday, October 29, 2009

கணக்கு_09

நான் என்னுடைய தம்பியின் தற்போதைய வயதை ஆண்டு மாதங்களில் சொன்னேன். ஆனால் வயதைப் பதிந்தவரோ நான் சொன்ன ஆண்டை மாதங்களாகவும் மாதத்தை ஆண்டுகளாகவும் பதிந்து விட்டார். இப்போது தம்பியின் வயது உண்மை வயதின் 5/8 மடங்காக இருந்தது எனின், தம்பியின் உண்மையான வயது என்ன? 

Sunday, October 25, 2009

கல்வி முறை

இலங்கையில் கல்வி முறையைப் பற்றி அதிலுள்ள பல நல்ல விடயங்களைப் பற்றி அதிகமாக நான் இங்கு எழுதப்போவதில்லை. ஏனெனில் அதைனைப் பற்றி எல்லோருமே அறிவார்கள். ஆனால் கல்விமுறை பற்றி எனக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். எமது கல்வி முறை இலவசக் கல்வி முறை. உண்மையில் மிகவும் புகழ்ந்து பாராட்டக்கூடிய மிகச்சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறிய வளர்முக நாடாக இருந்து கொண்டு கல்வியை இலவசமாக கட்டாயக் கல்வி மூலம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக செய்ததன் மூலம் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. அதை விட ஏழை பணக்காரன் வேறு பாடின்றி அனைவருமே அடிப்படைக் கல்வியறிவையேனும் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த விடயத்தில் எமது கல்வி முறையை நிச்சயமாகப் புகழ வேண்டும்.

ஆனாலும் இந்தக் கல்வி முறை எமது சமுதாயத்தில் எழுப்பும் சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். கட்டாயக் கல்விமுறை எம்மீது திணிக்கும் சிக்கல்களைப் பற்றியே சொல்கிறேன். கட்டாயக்கல்வி முறையானது எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்னிடத்தில் உங்களுக்குத் தேவையான எல்லா விடயங்களும் இருக்கின்றன என்பதைப் போன்றதொரு மாயையுடன் அனைவரையும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்குகிறது. படிக்கும் காலங்களில் அனைவரும் பள்ளிக்கூடத்தை மட்டும் நம்பியே தன்னுடைய எதிர்காலக் கனவுகளில் இறங்குகிறோம். படித்து ஏதேனும் சிறந்ததொரு வேலையெடுத்து பணம் உழைப்பதே பலரின் எதிர்காலக்கனவுகளின் இறுதி வடிவம். அதற்குரிய கல்வியறிவைப் பள்ளிக்கூடம் தரும் என்றே நம்புகிறோம். இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி முறை எம்மை இந்நம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ஆனால் பாடசாலை வாழ்க்கையில் அரசாங்கப் பரீட்சைகள் மூன்று நடைபெறுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதரண தரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சை ஆகிய மூன்றும் ஆகும். இதில் சா/த மற்றும் உ/த பரீட்சைகள் மாணவர்கள் தொடர்ந்து இலவசக் கற்கை நெறியைத் தொடர்வதோ இல்லையோ என்பதைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. இப்பரீட்சைகளின் பெறுபேறுகளால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள் எல்லாத்தையும் இழந்த, வாழ்க்கையைத் தொலைத்ததைப் போன்று உணர்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடம் தமக்கொரு வாழ்க்கையை அதாவது தொழில்வாய்ப்பைத் தேடக்கூடிய அறிவைத் தரும் என்ற நம்பிக்கையில், பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதைத் தவிர வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய கல்வியைப் பெறாமல் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ வாழ்ந்து விடுகிறார்கள். பின்னர் தாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை கற்றதை வைத்துக் கொண்டு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத நிலை உருவாகியிருப்பதையும் இவர்கள் உணரும்போது ஒரு இந்த வெறுமை நிலை தோன்றுகிறது.

ஆனால் தொடர்ந்து உயர் கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி இலவசக் கல்வியை முடித்துக் கொண்டவுடனேயே வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் அவர்கள் இந்தளவுக்கு வெறுமை நிலையை உணர்வதில்லை. ஆனால் தொடர்ந்து இலவசக் கல்வி முறையைப் பெற முடியாதவர்களின் நிலை கவலைக்கிடமாகிறது.  தொடர்ந்து படிக்க முடியாமல் போனது ஒரு புறம் இது நாள் வரை கற்றதை வைத்துக் கொண்டு உடனடியாக ஒரு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத சூழ்நிலை மறுபுறம் அவர்களில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த எமது கல்வி முறை அவர்களில் மட்டுமல்ல பெற்றோர்களிடத்திலும் எம் சமுதாயத்திலும் பலமான தாக்கங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கல்விமுறையை எம் சமுதாயம் எப்பிடி எதிர் கொள்கின்றது என்பதில் எனது கருத்துக்களைப் பிரதிபலித்து பிறிதொரு பதிவிடுவேன்.

எமது கல்வி முறை பற்றி என்னுடைய கருத்து என்னவெனில் இடை நிறுத்தப்படும் மாணவகளுக்கு தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்காமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிது காலம், வேலை வாய்ப்பைத் தேடித் தரக் கூடிய இலவசக் கல்வியை வழங்கலாம். பல்கலைக் கழக படிப்புகள் இட்டுச் செல்லாத தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அடிப்படை அறிவு தேவைப் படுகின்ற தொழில் பயிற்சிகளையும் அதற்கான நுட்பங்களையும் கற்பிக்கலாம். இதன் மூலம் தொழில் வாய்ப்புகளைத் தேடக் கூடிய இலவச அறிவை இடை விலக்கப்படும் மாணவர்கள் பெறுவதோடு தாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரமாட்டார்கள். வாழ்க்கையில் அவர்களும் தொழில்வாய்ப்பைத் தேடிக் கொள்வார்கள். அவர்களைச் சார்ந்த பெற்றோர்களும் சமுதாயத்தினரும் அவர்கள் மீதான நெருக்குதலைக் குறைப்பதற்கும் அவர்களும் சிறந்த தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது எனது எண்ணம்.

Wednesday, October 21, 2009

தனி சுகம்

நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும் இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.

சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப் போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.

மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது. பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம்.  மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும் எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.  பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள் சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.
 மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச் சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும் வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான் அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு துடிக்குது.

Sunday, October 18, 2009

அந்த இன்னும் ஒன்று...

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.

பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது.  ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.

நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.  அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.  இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.

அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.

Monday, October 05, 2009

தலையிழந்த, நான் வைத்த பனையே..

நான் உனக்கு கொள்ளி வைப்பேன் என்றா இத்தனை நாளும் நான் வரும் வரை காத்திருந்தாய்? உனக்குக் கொள்ளி வைக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் வைத்து, நான் பார்க்க வளர்ந்த மரம் நீ... உனக்கு எப்பிடி நான் கொள்ளி வைப்பேன்? யாருக்குத் தெரியும் உன் வாழ்வு இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுமென்று... நீ செழிப்புற்று வளர்ந்த போதெல்லாம் சந்தோசப்பட்டேன். உன்னுடலில் ஏறி ஓடியாடி விளையாடியிருக்கிறேன். நீ முளைத்தெழுந்த மண்ணில் புழுதி படப் புரண்டு குதூகலித்திருக்கிறேன். உன்னிடமிருந்து நான் உச்சப் பயனையும் பெற்றுக் கொண்டேன். இன்றோ நீ தலையிழந்து அழகிழந்து உன்னை அரவணைப்பாரையிழந்து கூனிக் குறுகி நிற்கிறாய். யார் யாரோ எல்லோரும் உன்மேல் கைவைத்துச் செல்கின்றனர். வெட்கித் தலை குனிந்து வேதனையில் துடிப்பதைக் காண்கிறேன்.  

வங்கக்கடலில் மட்டுமல்ல கடல்கடந்து பசுபிக் அத்திலாந்திக் என ஏழு கடல்களையும் இணைத்து உருவான புயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உன்னைத் தாக்கிய போது நீ என்ன பாடு பட்டிருப்பாய்? தன்னந்தனியே எழுந்து நின்று எது வந்தபோதும் எதிர்கொள்வேன் என்ற துணிவோடு எதிர்த்தாயே...  பசளையையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டு நான் உன்னிடமிருந்து விலகி இன்னுமொரு இடத்தில் வாழ்ந்தேனே... அவை மட்டும் உனக்குப் போதாது, நான் உன்னோடு கூட இருப்பதைப்போல வலிமை பிறிதொன்றும் இல்லை என்பதை அன்று நான் ஏன் உணரவில்லை? ஒரு வேளை அன்று உன்னோடு நான் இருந்திருந்தால் ஒன்றில் இருவருமே தலையையிழந்திருப்போம், இல்லை நீயாவது இன்று தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாய். இன்றும் கூட உனக்காக எதுவும் செய்ய முடையாதபடி வெறுமனே உன்னைப் பார்த்த படி கடக்கிறேன்... நீ சுமந்த, நான் என் கைப்பட எழுதிய என் தமிழ் வாசகங்கள் எல்லாம் வடிவம் மாறியிருக்கே... நான் சிறு கத்தி கொண்டு உன்னுடலில் செதுக்கிய வடிவங்களெல்லாம் சிதைந்து போச்சே... நீ முழைத்த நிலத்தருகே விழித்தெழுமென்று நம்பி நான் நட்டு வைத்த விதைகளுக்குப் பதில் வேறு விதைகள் தூவப்பட்டிருக்கே...  வெள்ளை நிறக்கறையான்கள் உன்னைத் துளைத்தெடுத்து புத்து அமைப்பதைக் காண்கிறேன். குளவிகள் மண்ணினால் உயர்ந்த மேடமைத்து சிங்கத்து குகை அமைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. ஒப்புக்கேனும் ஏன் என்று கேட்க முடியாத ஈனமான நிலையில் நான்...

இன்று நான் என் ஆசையைச் சொல்லி வைக்கிறேன்... சிதையில் நான் கிடக்கும்போது என் நெஞ்சின்மேல் உன் உடல்தான் வைக்கப்பட வேண்டும். நான் செய்த அற்ப விடயங்களை எண்ணி எண்ணி என் நெஞ்சு விம்மிப் புடைக்கும் ஒவ்வொரு கணமும் நீ என்னைத் துளைக்கும் கேள்விகளைக் கேட்டு என் நெஞ்சை அழுத்த வேண்டும். அப்போதாவது எனது நெஞ்சு, தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி உருகி உருகித் தீயோடு சங்கமிக்கட்டும். நீ முழைத்தெழுந்த மண்ணிலேயே என் சாம்பலும் விதைக்கப்பட வேண்டும். ஏனெனில் சில வேளை நான் கூட நாளை உனக்கருகே இன்னுமொரு பனையாக முளைத்தெழலாம்.


Monday, September 21, 2009

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.


நண்பன் மருதமூரான் பள்ளிப் பயின்றதொரு காலம் தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பையேற்பதனால் எனக்கும் என்னுடைய பள்ளிக்காலத்தை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி மருதமூரான்.

நான் எனது ஆரம்பக்கல்வியை என்னுடைய ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். தென்புலோலியூரில் பிறந்து பல்வேறு துறைகளில் சிறந்து விழங்குபவர்கள் பலரை உருவாக்கி விட்டு ஆரவாரமின்றி தன் சேவையை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடசாலை. சின்ன வயசு... வாழ்க்கையின் பாரங்களை உணராத, கவலையை அறியாத வயசில் துள்ளித் திரிந்தோம்.அவ்வப்போது வானத்தைப் பார்த்து விட்டு மேசைக்குக் கீழ் பதுங்கியதும் அந்நேரங்களில் எல்லோருமே வீறிட்டுக் கத்தி அம்மாவையோ அப்பாவையோ இல்லை ஆண்டவனையோ துணைக்கு அழைத்ததும் நினைவிலிருக்கு.

ஆசிரியர்கள் பற்றி எழுதுவதாயின் எத்தனை பேரை எழுதுவதென்று ஒரு சிக்கல். எனக்கு கல்வி கற்பித்தவர்கள் ஒருபுறம் அதே நேரம் நான் கல்வி கற்காவிட்டாலும் நெருங்கிப் பழகியவர்கள் பலர்.  என்னுடைய முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர்களும், வாழ்ந்து காட்டி எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். (நான் படித்த காலத்துக்குப் பின்னர் புற்றளையில் கற்பித்த பலரும் இதற்குள் அடக்கம்) அதை விட எனக்கு கற்பித்தவர்கள் எனும்போது தனியார் கலாசாலைகளில் கற்பித்தவர்களும் அடங்குகிறார்கள். இவர்களை எல்லோரையும் எழுதுவதென்றால் பதிவு
நீளமாகுவது மட்டுமில்லை. நேரமும் போதாது. எனவே பாடசாலைகளில் எனக்கு கற்பித்தவர்களில் சிலரை மட்டும் நினைவு கூருகிறேன்.


புற்றளையில் கற்பித்த இராஜேஷ்வரி, சதாசிவம், ஈஷ்வரி, திலகவதி, கெளரி, கமலாம்பாள், ரஞ்சினி, சகுந்தலா என்ற ஆசிரியைகளும் சம்பந்தர், சண்முகநாதன் என்ற ஆசிரியர்களும் நினைவிலிருக்கிறார்கள். என்னடா இவன் எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கிறானே எண்டு யோசிக்க வேண்டாம். இவர்களில் பெரும்பாலானோர் என்னூரவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் என்னுறவினர்கள். அஞ்சாம் ஆண்டு முடிந்ததும் எல்லாரும் ஹாட்லிக் கல்லூரிக்குப் போறாங்களே நானும் போனால் என்ன (அந்த நேரம் இதைத்தவிர வேறெந்தக் காரணமும் என்னிடம் இருக்கவில்லை : அம்மா அப்பாவின் ஆசை என்றும் சொல்லலாம்) என்ற நினைப்போடு ஹாட்லிக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.

யாவருமே அறிந்திருக்கும் ஹாட்லிக் கல்லூரியைப் பற்றி நான் இங்கு விவரிக்கவில்லை. அரிவரியைப் புற்றளை மகா வித்தியாலயம் தொடக்கி விட உச்சத்தைத் தொடுமளவுக்கு மிச்சத்தைச் சொல்லித்தந்தது ஹாட்லிக் கல்லூரி. புதிய மாணவர்கள் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், கல்லூரிக்கேயுரிய சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என என்னுடைய கல்வியுலகம் விரிந்தது. எப்பிடித் தான் கட்டுப்பாடு போட்டாலும் அதனை உடைத்தெறிந்து மதில் பாய்ந்து இடைநேரத்தில் ஓடும் திறமையும் எம்மவர்களிடம் காணப்பட்டது. நான் படித்த காலங்களில் கல்லூரியின் வாசலில் இருந்து இரு நூறு மீற்றர் தொலைவிலுள்ள விசேட நுழைவாயிலிருந்து கல்லூரியின் வாசலையடைய ஏறக்குறைய அரைமணித்தியாலம் எடுக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு நாம் அனைவரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் பாணுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் நிற்போம் (அவ்வளவு ஆர்வக் கோளாறுகள் நாங்கள்). படிக்கிறதுக்குரிய பாடப்புத்தகங்கள் கொப்பிகள் எல்லாம் சரியாக கொண்டு வந்திருக்கிறோமோ எனப் பார்ப்பது மட்டுமில்லை  உடுப்புகள் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறமோ என உடம்பெல்லாம் தடவிப் பார்த்த பின்னர் தான் (தேவைப்பட்டால் கழற்றிகாட்டிய பின்னர்தான்) நாம் கல்லூரிக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவோம் (அவர்களுக்கு எம்மில் அவ்வளவு அக்கறை...). கல்லூரியின் மைதானத்துக்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேர காலத்துக்குள் சகல விளையாட்டு நிகழ்வையும் பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்கள் - பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட எவருமே உள் நுழைய முடியாத கோட்டையாக எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் விளங்கியது.

கல்லூரியில் கற்ற காலங்களில் ஒரே வகுப்பு மாணவர்களிடையே நிறைந்த ஒற்றுமை காணப்பட்டது. ஊர்களுக்கிடையே துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவோம். சின்னச் சின்னச் சண்டைகளும் வருவதுண்டு. ஆனாலும் என்ன நடந்தாலும் அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும்போது எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாகப் பழகுவோம். ஊர்ப் பாகுபாடு பார்த்து சண்டை பிடித்ததோ அல்லது ஒரு ஊர்க்கரர் வீறாப்புக் கதைத்து மற்ற ஊர்க்காரரின் முனேற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதோ இல்லை. கல்லூரியின் பின்னரான என்னுடைய வாழ்வில் கண்டு வெறுப்படைந்த விடயங்களில் இதுவும் ஒன்று. எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய கல்லூரி அண்ணன்மார்களுக்கு கொடுத்த தலையிடிகளும் ஆசிரிய ஆசிரியைகளுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து மறைவில் நக்கலடித்ததும் நினைவிலிருக்கிறது. பொது வேலைகள் (மேடை ஆயத்தப்படுத்தல்...) என்ற சாக்கில் வகுப்பில் பாட நேரங்களுக்கு நிற்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதும் ஞாபகமிருக்கு.

ஹாட்லியில் எனக்குக் கற்பித்தவர்கள் பலர். எட்டாம் தரத்தில் ஒரு தவணையில் நன்கு ஆசிரியர்கள் கணிதம் படிப்பித்தார்கள் என்றால் நம்பவா முடிகிறது. தவநேசன், துரைராசா, சத்தியசீலன் ஆகிய ஆசிரியர்கள் நீண்டகாலமாக எங்களுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருந்து வழி நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள் ஆறுமுகம், யாதவானந்தன் கணித ஆசிரியர்கள் பாலேந்திரா ஜெயகோபால், மரியதாஸ் விஞ்ஞான ஆசிரியர்கள் இரகுவரன் பரணிதரன் ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர். இவர்களில் மரியதாஸ் அடிக்கு மட்டுமில்லை கணிதக் ‘குறுக்குவழி’ செயன்முறைக்கும் பெயர் பெற்றவர். ஜெயகோபால் ஆசிரியரின் “x=y, y=z, எனவே x=z இதைச்சொல்லிப்போட்டு ஒரு மாணவனை எழுப்பி உனக்கு என்ன விளங்கினது எண்டு கேட்டா அவன் சொன்னான் ஆசிரியரே நான் உங்களை நேசிக்கிறேன் நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் எனவே...” என்ற மேடைப்பேச்சின் இடையில் சொன்ன நகைச்சுவை பிரபல்யமானது. (மு.கு. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்). உயர்தரத்தில் வகுப்பாசிரியர் ரஜேஸ்கந்தன் மற்றும் செல்வமலர் ஆசிரியை (நான் கற்ற காலத்தில் கற்பித்த, தற்போதும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஆசிரியையாக விளங்குகிறார்) சிவகுமார் ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றேன். சீலன் ஆசிரியரிடமும் ரகுவரன் ஆசிரியரிடம் நாடகம் பழகியதும் அந்தச் சந்தர்ப்பங்களில் சமூகம் மீது பல கோணங்களிலிருந்தான பார்வையையும் நடைமுறை யதார்த்தம் மிக்க வாழ்க்கை என்னவென்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் அடி வாங்கிய சந்தர்ப்பங்களுக்கும் குறைவில்லை. புற்றளை மகா வித்தியாலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தாமதித்து சென்றதனால் அதிபர் ஜோஷுவா அவர்களிடம் அடி வாங்கி அழுதது இன்றும் நினைவிலிருக்கு.அவ்வப்போது தேவாரம் பாடமாக்காவிடில் திருநீறு பூசி பொட்டு வைக்கவிடில் நவம் ஆசிரியரிடம் வாங்கிய அடி. எல்லாத்துக்கும் மேலாக ஆங்கில ஆசிரியர் சீலன் அவர்களிடம் வாங்கிய அடி. ஹாட்லி மைதானத்தில் எமது கல்லூரிக்கும் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு கல்லூரிக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் எமது வகுப்பு மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர். எனக்கு போட்டியைப் பார்க்கவேணும் என்ற எண்ணம். ஒரு ஆசிரியர் அனுமதித்தால் மட்டுமே மைதானத்துக்குள் நுழைய முடியும். கற்பிக்க வந்த சீலன் ஆசிரியரிடம் எம்முடைய வகுப்பை மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினேன். இரண்டு மூன்று முறை மறுத்தார். தொடர்ந்தும் தொல்லை கொடுத்தேன். முன்னுக்கு வந்து கைகளை உயர்த்தி கரும்பலகையில் வை என்றார். அவ்வளவுதான் நினைவிருக்கிறது. முழங்காலுக்கு கீழே விழுந்த அடியால் கால்கள் விறைத்து விட்டன. இந்த அதிரடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உயர்தரப் பரீட்சையின் பின்னர் ஒருமுறை கல்லூரிக்கு சென்றபோது தான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது என்னிடம் அடிவாங்கியவன் இன்று நல்லாயிருக்கிறான் என்றதும் நினைவிலிருக்கு.

பள்ளிக்காலங்கள் இனித் திரும்பி வரா எனத் தெரிந்த போதும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது மனசு.

இத்தொடர் விளையாட்டுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீட்கும்படி நான் அழைப்பது :


நிமல்
கிருத்திகன்
கார்த்தி
மதுவதனன்


Sunday, September 13, 2009

நீந்தப் பழக்கினாங்கள்

எங்களூரின்ர நடுவில இருக்கிற பிள்ளையார் கோவிலோடு இணைந்ததாக பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கேணி ஒண்டு இருக்குது. கோடை காலங்களில் தண்ணி வத்திப் போனாலும் மாரி காலத்தில தண்ணி நிறைஞ்சிடும். இதுதான் எங்கட பொடியளின்ர நீச்சல் குளம். மாரி காலத்தில மழை பெய்து நிலம் ஈரமாக கிடக்கிறதால மைதானங்களில விளையாட முடியாது. அந்தக் காலங்களில பள்ளிக்கூடமும் விடுமுறை விட்டுடுவாங்கள். வேற பொழுது போக்கும் இல்லை. அப்ப நீச்சலடிக்கிறதுதான் ஒரே பொழுது போக்கு. செயற்கை நீச்சல்தடாகங்கள் மாதிரி இல்லை. கேணிக்குள்ள தண்ணி மட்டம் ஒரே அளவாகத்தானிருக்கும். ஆளை விட ரெண்டு மூணு மடங்காகவும் இருக்கும். அதனால நீச்சலடிக்கப் பழகிறது ரொம்பக் கஸ்டம். இருந்தாலும் எங்கட ஊர்ப் பொடியளில பெரும்பாலானாக்களுக்கு நீந்தத் தெரியும். ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு வயசு வர வகுப்புப் பொடியளா சேர்ந்து போய் பழகுவோம். நீச்சலடிக்கத் தெரிந்த அண்ணாமார் பழக்கியும் விடுவினம்.

கேணி பிரதான வீதிக்குப் பக்கத்தில இருக்கிறதால அதால போய் வாற பொடியங்கள் எல்லாரும் பெரும்பாலும் அவிடத்தில நிண்டு ஒருக்கால் கேணிக்குள்ள என்ன நடக்குது எண்டு பாத்திட்டுத்தான் போவம். நல்லா நீந்தத் தெரிஞ்ச அண்ணாமார் பெல்டி அடிச்சு சாகசமெல்லாம் காட்டுவினம். பக்கத்தில இருக்கிற மகிழ மரத்தால ஏறிப் போய் ஓட்டுக்கு மேல இருந்து பெல்டி அடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள குதிக்கிறதைப் பார்த்தா எங்களைச் சுண்டியிழுக்கும். சின்ன அடையாளம் கட்டின கல்லொண்டை கேணக்குள்ள எறிஞ்சு போட்டு போட்டிக்கு சுழியோடிப்போய் எடுப்பினம். கேணிக்குள்ள கீஸ் பெட்டி (அடிச்சுப் பிடிச்சு) விளையாடுவினம். பாக்க ஆசையா இருக்கும். முழு நீச்சல் திறமையையும் காட்டி நீந்துவினம். அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்கு, பெரிதான வீதியால போய் வாற பொம்பிளைப் பிள்ளைகளின்ர கடைக்கண் பார்வையை திருப்பிறது. உந்த விஷயத்தில சிலபேர் சாகசம் காட்டியே ‘அருள்’ பெற்றிருக்கினம்.
அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினை முடிஞ்ச கொஞ்ச நாளில என்ர நண்பன் ஒருத்தனுக்கு அவன்ர அண்ணன்மார்களில் இருவர் பழக்கிய நீச்சல்தான் இண்டைக்கும் என்ர கண்ணுக்குள்ள நிக்குது. தனியார் கலாசாலையில் படிச்சிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தன். வழக்கம்போல கேணியடிக்குக் கிட்ட வந்து பிரதான பாதையிலேந்து விலத்தி துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டுவந்து அளவாக் கட்டப்பட்ட கேணி தூணில காலை வச்சுக் கொண்டு வேலியாகப் போடப்பட்ட இரும்பு வேல் கம்பிகளில கையைப் பிடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள எட்டிப் பாத்தன். ஏங்கிப் போனன்.

கேணியின்ர ரண்டு கரையிலயும் அவன்ர ரண்டு அண்ணன்மார்களும் நிக்கீனம். கேணியின்ர நடுவில இடுப்பில ஒல்லியைக் (பயன்தரத் தவறிய தேங்காய்)  கட்டிக் கொண்டு அவன் ‘காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ நான் சாகப் போறன், காப்பாத்துங்கோ’ எண்டு கத்திக் கொண்டிருந்தான். கைகால்களை அடிச்சு நீந்தின படி கத்திக் கொண்டிருந்தான். வேறை ஆக்களும் கேணுக்குள்ள நீந்திக் கொண்டிருந்தவை. ஆனா ஒருத்தரும் இவனைக் காப்பாத்த வரேல்ல. தட்டுத் தடுமாறி நீந்தி ஒரு கரைக்கு இவன் போனால் அந்தக் கரையில நிக்கிற அண்ணா குழறக் குழற இவனைப் பிடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விடுவார். மீண்டும் கத்திக் கத்தியே மற்றக் கரையை நோக்கி நீந்துவான். சத்தத்தைக் கேட்ட பாதையால போன அவன்ர அம்மப்பா எட்டிப்பாத்தார். அவனோ ‘அம்மப்பா காப்பாத்துங்கோ, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன்.’ எண்டு கத்திக் கொண்டு கைகால்களால் நீச்சலடிச்சுக் கொண்டிருந்தான். ஆனா அண்ணன்மார்களோ விடுவதா இல்லை. அவன் கத்துறதப் பாத்தா உண்மையிலேயே ஆள் முடிஞ்சிடுமோ எண்டு எனக்குள்ள ஒரு பயம். அண்ணன்மாரும் மனிசரோ எண்டு திட்டிக் கொண்டன்.

ஆனா அவர்களுக்கிருந்த துணிவு என்னண்டா அவன்ர இடுப்பில ஒல்லி கட்டியிருக்கிறதால லேசில தாழ மாட்டான். அடுத்தது அவர்கள் ரண்டு பேரும் நீச்சல்ல புலி. அதை விட பக்கத்தில நீந்திக் கொண்டிருக்கிற மற்றப் பொடியளும் இவன் தாழுறான் எண்டா காப்பாத்தத் தயார் நிலையிலேயே எப்பவும் இருப்பாங்கள். அதனால இவன் தாழுறதைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. ஆனா இவன் நல்லாத் தண்ணி குடிச்சிட்டான். நீந்தப் பழகிற எல்லாருக்குமே வாற அடிப்படைப் பிரச்சினையே இதுதான். இருந்தாலும் அந்த ஒரே நாள் கத்தலோடையே அவன் நீந்தப் பழகீட்டான். எங்கட வகுப்பிலேயே முதன் முதல் நீந்தப் பழகி எங்களுக்கு சாகசம் காட்டினவன் அவனேதான்.

அண்மையில கொழும்பில ஒரு நீச்சல் குளத்தில எங்கட ஊருக்குப் பக்கத்தூரில இருக்கிற என்னை விட வயசு கூடின அண்ணாவைச் சந்திக்கேக்க சொன்னார், ‘என்னதான் இருந்தாலும் உங்கட ஊர்க் கேணிக்குள்ள குளிக்கிற மாரி வருமேடா.’ அந்தளவுக்கு எங்கட ஊர்க் கேணி சுத்து வட்டாரத்தில பிரபலமானது. பலருக்கு நீச்சல் பழக்கினதும் எங்கட ஊர்க் கேணிதான்.Thursday, September 10, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

Sunday, September 06, 2009

கால்பந்து விளையாடுவம்

வீரபத்திரர் கோவில் காணிக்குள்ள விளையாடுறதைப் பற்றித்தான் சொல்லப் போறன். இண்டைக்கு இதைச் சொல்லுறதில ஒரு விடயம் என்னண்டா அந்த வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் இண்டைக்கு நடக்குது. வீரபத்திரர் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு திறந்த காணி இருக்குது. அந்தக் காணிக்குள்ளாலதான் கோவிலுக்கு போவதற்கான பாதைகளில் ஒன்றும் போகுது. அந்தத் திறந்த வெளிக்காணிக்குள்ள தான் நாங்கள் கால்பந்து விளையாடுவம். சிலவேளைகளில் துடுப்பாட்டமும் பேணியும் பந்தும் விளையாடியிருக்கிறம்.  
அந்தக் காணிக்கு கிட்டிய தூரத்தில் குடிமனைகள் இல்லாததால் சத்தம் போட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் பந்து பக்கத்து காணிக்குள்ளையோ கோவிலுக்குள்ளையோ போனால்தான் பிரச்சினை. பக்கத்துக் காணிக்குள்ள பெரிய புளியமரங்கள் இருக்கு. அதுகள்ளேருந்து விழும் புளியம்பழங்களைப் பொறுக்கி காணி உரிமையாளர் விக்கிறதால காணிக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய வேலி. அதனால பந்து அதுக்குள்ள போனா எடுக்கிறது வலு கஷ்டம். அதைவிட அதுக்குள்ள பந்தெடுக்கப் போகேக்குள்ள காணிக்காரர் நிண்டா துலைஞ்சுது. கத்திச் சத்தம் போடுவார். அவ்ற்ற கையில பிடிபட்டா போச்சு. அவரட்ட மட்டுமில்லை வீட்டிலையும் தோலுரிப்புத்தான். இது போக, கோவிலுக்குள்ள பந்து போனால் வாசற்கதவு பூட்டியிருக்கிறதால மதிலேறி விழுந்துதான் போக வேணும். வீரபத்திரர் எல்லோ, சும்மாவோ? ஆர் மதிலேறி விழுறது எண்டதில பிரச்சினை.
அதை விட வீரபத்திரர் கோவிலின் நிர்வாகி வீரகத்தி ஐயா எண்டு ஒருத்தர் இருந்தார் (தற்சமயம் எம்முடன் இல்லை).அவர் அந்தக்காலத்தில நல்லா வயசு போய் பொல்லுப் பிடிச்சுக் கொண்டுதான் நடப்பார். அவருக்கு நாங்கள் அந்தக் காணிக்குள்ள விளையாடுவது பிடிக்காது. ஏனெண்டா அந்தக் காணிக்குள்ள போட்டிருக்கிற பனம்பாத்தி முதல் வேலிக் கதியால்கள் வரை அனைத்தையும் உழக்கிக் கொண்டுதான் நாங்கள் விளையாடுவம். அதை விட பந்தடிச்சு கோவில் ஓடுகள் உடைப்பது முதல் போட்டிக்கு ஆர் கனதூரம் கல்லெறியிறதெண்டு தொடங்கி குறிதவறி ஓட்டுக்கு மேல விழுந்து ஓடு உடையிறது வரை அனைத்தையும் கன கச்சிதமாக நாங்கள் செய்து முடிப்பம். அதனால அவருக்கு நாங்கள் விளையாடுறது பிடிக்கிறதில்லை. அவற்ற பக்கமும் நியாயம்தான். எத்தினை தரம் எத்தினை ஓடெண்டு மாத்துறது. ஆனால் அவர் தான் எங்களுக்கு பெரிய வில்லனே. 
நாங்கள் வழமையா அஞ்சரைக்கு தனியார் கலாசாலை முடிஞ்சுதான் விளையாடப் போவம். அவர் கிட்டத்தட்ட ஆறரையளவில கோவிலுக்கு விளக்கேத்த அந்தப் பாதையால வருவார். அவர் தூரத்தில வரேக்கயே எங்களைக் கண்டாரெண்டா பொல்லைத் தூக்கிக் காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வருவார். அவர் வர்ரதுக்குள்ள காணி காலியாயிடும். அவரவர் தங்கட கொப்பிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு சைக்கிளையும் (துவிச்சக்கர வண்டி) எடுத்துக் கொண்டு ஓடுவம். அவரின்ர கண்ணில என்னையெல்லாம் அடையாளம் தெரிஞ்சா அந்தோ கதிதான். ஆக்கள் மூலமா தகவல் சொல்லியெண்டாலும் எங்கட வீட்டுக்கு கதை வந்திடும். அவ்வளவுதான், பிறகு நடக்கும் அர்ச்சனைகளைப் பற்றிச் சொல்ல வரேல்ல. ஒவ்வொரு திக்குத் திக்காக ஓடுற நாங்கள் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் ஒளிச்சு நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம். மேலும் விளையாடக்கூடிய சாதக பாதக நிலைகளை ஆராஞ்சு அவர் போன பிறகு மீண்டும் விளையாடுவம். விளையாட்டில அந்தளவுக்கு ஊறிப்போய் விடுவம். அதை விட இப்பிடியான சிக்கல்களை எதிர்கொண்டு விளையாடுறதில ஒரு ருசியுருக்குப் பாருங்கோ. அனுபவிக்கக் குடுத்து வைக்கோணும். 

Saturday, September 05, 2009

பட்டத சொல்லுறன்

பட்டத சொல்லுறன் பகுதியூடாக நான் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்ந்தவற்றை, நிகழ்பவற்றை என்னுடைய பார்வையினூடாகச் சொல்லலாம் என முயற்சிக்கிறேன். இவற்றில் நான் அனுபவப் பட்டதும் மனதில் பட்டதும் அடங்கும்.

 ‘அறுப்பான் வந்திட்டான்.. குடிச்சிட்டு வந்து அந்த அப்பாவிப் பிள்ளையைப் போட்டுப் படுத்திற பாடு.... சனியன் அழிஞ்சு போகானாம்.. ஒரு உழைப்பில்ல..மச்சான்மாற்ற காசில குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு போகுது’

பாட்டித் திட்டித் தீர்க்கவும் பக்கத்து வீட்டுப் படலையோட துவிச்சக்கர வண்டி ஒண்டு மோதிச் சத்தம் கேக்கவும் சரியா இருந்திச்சு. தொடர்ந்து சில கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். கதவுகள் சாளரங்களுக்கு அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. சின்னப் பிள்ளைகள் பயத்தினால் சத்தம் போட்டுக் கத்தும் சத்தம் கேட்டது. மனிசருக்கு அடி விழும் சத்தம்.
‘விடுங்கோப்பா.. இஞ்ச... அடியாதேங்கோப்பா’ என பக்கத்து வீட்டு அக்கா கத்தும் சத்தம்.
 ‘அடிச்சுப் போட்டான் போல கிடக்கு... அக்காவையும் பொடியளையும் போட்டுப் படுத்திற பாடு’ என் பங்குக்கும் பாட்டியோடு சேர்ந்து ஆமாம் போட்டேன்.
 கொஞ்ச நேரத்தில் எல்லாமே அடங்கிப் போனது.

அடுத்த நாள் பின்னேரம் பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்கு வந்திருந்தா. பாட்டி கதையைத் தொடக்கினா. நான் அறையொன்றுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
‘நேற்றுக் கடுமையான அடியோ’
‘இல்லை  ராசாத்தியக்கா... அது ஒண்டுமில்லை.. இஞ்சையும் கேட்டதே...’
 ‘என்ன சமாளிக்கப் பாக்கிறாய்.. நல்ல அடிபோல கிடக்கு’
‘சீ... அப்பிடி ஒண்டுமில்லை’ அக்கா கூனிக் குறுகி நெளிவதை அவவின் சொற்கள் எனக்கு உணர்த்தின.
‘இஞ்ச பிள்ள நான் ஒண்டு சொல்லட்டே உந்தக் குடிகாரனோட ஏன் நீ குடும்பம் நடத்துறாய். ஒரு உழைப்புமில்லை.கொண்ணன்மார் தானே காசு அனுப்பிறாங்கள். பேசாமல் அவனைத் துரத்திவிடு... அப்பத்தான் அவனும் திருந்துவான் பிள்ளைகளுக்கும் பிரச்சினை இல்லை. நீ இவனால படுற பாடு போதும்’

 ‘இல்லை ராசாத்தியக்கா... அவர் இரவில குடிச்சுட்டு வந்து சத்தம் போடுறது உண்மைதான். ஆனால் பகலில பொறுப்பா இருக்கிறார். வேலைக்குப் போகாட்டிலும் அவர் வீட்டு வேலை செய்யுறதில எனக்கு ஒத்தாசையா இருக்கிறார். பிள்ளையளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக் கொண்டு போறது முதல் அவர்களின் உடுப்புத் தோய்க்கிறது வரை எல்லாத்தையும் இவர்தானே செய்யுறார். எங்கட சந்தோசத்துக்காகத்தான் பகல் முழுக்க கஷ்டப்படுறார். இரவில அவற்ற சந்தோசத்துக்காக கொஞ்சம் குடிச்சா என்ன? எங்களுக்காக இவ்வளவு செய்யுறவருக்காக இதைக் கூட எங்களால பொறுத்துக் கொள்ள முடியாதோ?’
எனக்கு கன்னத்தில அறைஞ்சதப் போல ஒரு உணர்வு. ஒரே ஒரு நிகழ்வை வைத்து அவன் நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிக்க நான் யார்?

பி.கு. இந்நிகழ்வு குடிப்பதற்கு ஒரு அங்கீகாரமாக அமையாது.

Sunday, August 30, 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு அஞ்சலோட்டத்தின் கோல் இப்போது என்வசம்.ஓடுவமோ வேண்டாமோ, ஓடினால் வெல்லுறது சந்தேகம் தான். இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில்  பங்குபற்றுதல்தான் முக்கியம். வெற்றி தோல்வியல்ல (என்னைப் போல ஏலாவாளியள் சொல்லுற சாட்டு) என்பதற்காகவும் என்னிடமிருந்து கோலைப் பெற்று மறுகரையில் ஓடுவதற்கு தயாராகக் காத்திருக்கின்ற நண்பர்களுக்காகவும் நான் ஓட வேண்டிய நிலை. மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியண்ணாவால் தொடரப்பட்டு கீத்தினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது. பள்ளிக்காலத்தில் கீத்தும் நானும் ஒரே இல்லமாக இருந்தாலும் என்னிடம் ஒரு நாளும் கீத் அஞ்சலோட்டக் கோலைக் கொண்டு வந்து தந்ததில்லை. (நான் அஞ்சலோட்டம் ஓடினால்தானே என்னிடம் கோலைத் தாறதுக்கு) 
வலைப்பதிவில மாட்டுப்பட்டுப் போனன். இது என்னுடைய இருபத்தைந்தாவது பதிவு (எதிர்பாராத நிகழ்வு). இதில் என்னைப் பதிவுலகிற்கு அழைத்து வந்தவர்களை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சந்தோசமே.

விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

முதன்முதல் வலைப்பதிவுகளைப் பற்றியும் தன்னுடைய வலைப்பதிவைப் பற்றியும் என்னுடன் கலந்துரையாடி என்னையும் எழுதச் சொல்லிக் கேட்டவன் விமலாதித்தன். (அவனுடைய வலைப்பதிவு  முகவரியைத் தொலைத்தது சோகக்கதை). அப்போது நான் எழுதும் எண்ணம் துளியும் கொண்டிருக்கவில்லை. மூஞ்சிப் புத்தகத்தில (face book) ஆதிரை அண்ணா வலைப்பதிவுகளின் இணைப்புகளைக் கொடுப்பார். தன்னுடையது மட்டுமன்றி சிறந்த வலைப்பதிவுகளையும் இணைப்பார். அதேபோல மூஞ்சிப் புத்தகத்தில் எனக்கு நண்பர்களாக இருக்கின்ற கீத், சுபானு, நிமல், பனையூரான், பிரவீன் மற்றும் விமலாதித்தன் ஆகியோரும் இணைப்புக் கொடுத்திருப்பார்கள். அவற்றை மட்டும் வாசிப்பேன். தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு சோம்பேறி (பால்குடி தானே).

இவர்களின் பதிவுகளால் கவரப்பட்டு நானும் ஒண்டு தொடங்கினா என்ன எண்டு நினைத்தேன். அந்த நினைப்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல்.(சுபானு என்னுடைய பயணக்கட்டுரை ஒன்றை வெளியிடுவது பற்றி கதைத்தபோது தோன்றிய நப்பாசை). ஆனாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தால் மிக அண்மையிலேயே ஆரம்பிக்க முடிந்தது. ஆரம்பித்தாலும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை- பதிவர் சந்திப்பு நடக்கும் வரை.
அண்ணன் ஆதிரையின் தொலைபேசி அழைப்புக்கு நானும் வாறன் என்று பதில் சொல்லி சந்திப்பு ஏற்பாடுகள் பற்றி கதைக்க ஒன்று கூடினோம்.  நீண்டகாலமாக பதிவுலகை ஆண்டு வரும் வந்தியத்தேவன் அண்ணாவையும் பதிவால் மட்டுமல்ல கு்ரலாலும் அனைவரையும் கவர்ந்த லோஷன் அண்ணாவையும் சதீஷையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் முதற்சந்திப்பிலேயே முன்பின் தெரிந்தவர்கள் போல என்னுடன் பழகிக்கொண்டார்கள். பிறகென்ன பதிவர் சந்திப்பில பலரைச் சந்தித்தேன். எல்லோருமே இயல்பாகப் பழகினார்கள். எண்ணிக்கையைப் பார்த்து நான் வியந்து போனேன். தொடர்ந்து முடிந்தளவு எழுதலாம் என நினைக்கிறேன். இருந்தாலும் என்னுடைய பதிவுகள் பெரும்பாலும் நினைவு மீட்டல்களாகவோ அல்லது எமது சமூகம் சார்ந்தவையாகத்தான் இருக்கும். (வந்தியண்ணா தான் நொந்த கதையைச் சொன்ன பின்னரும் நான் மாறுவதாக இல்லை). எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று சொல்வதைவிட கிடைக்கும் நேரத்தில் பெரும்பகுதியை நண்பர்களுடன் கூடி அரட்டையடிப்பதிலேயே செலவிடுகிறேன் (இதற்காகவே செந்தில் குடும்பத்தார் வீட்டின் ஒரு பகுதியையும் வெள்ளவத்தைக் கடற்கரை ஒரு பகுதியையும் ஒதுக்கித் தந்தது வேறு விடயம்). இனி வரும் காலங்களில் நிறைய பதிவிடலாம் என்றே நம்புகிறேன்.

எனக்கு வலைப்பதிவு ஆரம்பிப்பதில் பெருமளவு சிக்கல் இருக்கவில்லை. ஆதிரை அண்ணாவின் ஆலோசனைகளுடனும் (என்னுடைய வலைப்பூவின் முதல் கருத்துரையும் அவருடையதே) சுபானு நிமலின் ஆலோசனைகளுடனும் இலகுவில் ஆரம்பிக்க முடிந்தது. நான் தட்டச்ச NHM Writer இன் Phonetic முறையைப் பயன்படுத்தி வருகிறேன்(விமலாதித்தனின் அறிமுகத்தினால்). தமிழ் எழுத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதால் வேகமாகத் தட்டச்சு செய்ய இம்முறை பயன்படுவதாகக் கருதுகிறேன்.

என்னுடைய அழைப்புகள்.

அதிகம் எழுதாத என்னை பதிவுலகின் அனுபவம் மிக்க கீத் நட்புடன் அழைத்திருப்பது என்னை ஊக்குவிப்பதற்க்காக என்றே நான் கருதுகிறேன். அதே போல நானும் என்னுடைய நண்பர்களை அழைப்பதன் மூலம் அவர்களை மேலும் எழுதத் தூண்டலாம் என்றே நம்புகிறேன். அதனால் எல்லோர் மத்தியிலும் பிரபல்யமான பெரியவர்களை (நண்பர்கள் பிரவீன், நிமல் உட்பட) அழைக்கவில்லை (அனைவரும் என்கருத்தை புரிந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன்). 

விமலாதித்தன்: முதன் முதல் வலைப்பதிவைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியவன். நிறையப் புத்தகங்கள் வாசித்தறிந்தவன். சிறந்த விவாதப் பேச்சாளனும் கூட. ஊரில் என் பக்கத்து வீட்டுக்காரன்.  தவிர்க்க முடியாத, தமிழனுக்கேயுரித்தான போர்ச்சூழ்நிலையால் நாம் சின்னஞ்சிறு வயது முதலே பிரிந்திருந்தாலும் இன்றும் எம்முடன் உறவு கொண்டாடுபவன். இந்தச் சந்தர்ப்பத்தில் மூஞ்சிப்புத்தகத்தில் இவன் பிரசுரிக்கும் தொடர்கதைகளை வலைப்பதிவிலும் பிரசுரிக்க வேண்டும் என நட்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

பனையூரான் : இவன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். தற்போது அவன் வசிக்கும் சூழல் தமிழுக்குப் பொருத்தமற்றதாக இருப்பினும் தமிழிலில் எழுதி தமிழை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புள்ளவன். எனக்கு திரட்டிகள் பற்றிய ஆலோசனை தந்தவன்.

சுபானு: இவனைப்பற்றி என்னைவிட வலைப்பதிவர்களுக்கு நன்றாகத் தெரியும். பதிவுலகில் பிரபல்யமானவன். இவனும் என்னுடன் படித்தவன். ஊஞ்சல் கட்டி அனைவரையும் ஆட வைத்துக்கொண்டிருப்பவன். சில வேளைகளில் தூதும் விடுகிறான். படிக்கும் காலங்களில் இவனுடன் இடைக்கிடை கருத்து மோதல்களில் ஈடுபட்டதும் உண்டு. எல்லோரினதும் செல்லப்பிள்ளை இவன்.

யசீர் நிஷார்தீன்
: குட்டிச் சுட்டிப் பயல். நானெல்லாம் கணனியைக் கண்டது பதினாறு வயதில- அதுவும் யாழ் பல்கலைக்கழக கண்காட்சியில. பாவிக்கத் தொடங்கியது உயர்தரத்துக்குப் பிறகு. ஆனால் ஆறாம் தரத்திலேயே வலைப்பதிவை மேற்கொள்வதனால் என்னைக் கவர்ந்த இந்த சிறுவனை, பால்குடி நான் அழைக்கிறேன்.

அப்பாடா ஒரு மாதிரி அஞ்சல் கோலை கை மாற்றியாயிற்று.எங்கே உங்கள் கதையை எழுதத் தொடங்குங்கள்.Saturday, August 29, 2009

தண்டனை

அப்ப நான் ஏழாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தனான் எண்டு நினைக்கிறன். பள்ளிக்கூட தவணைச் சோதினைக்கு இன்னும் ஒரு கிழமையே இருந்தது. பின்னேரம் தனியார் கல்வி நிறுவனம் ஒண்டில படிச்சுப் போட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். என்னோட கூட என்ர வகுப்புப் பொடியளும் வந்தவங்கள். ஒருத்தன் நேற்று விளையாடின பேணியும் பந்தும்(எங்கட ஊரில சின்னப் பொடியள் மத்தியில பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்று- விளையாட்டைபற்றி விளங்கப்படுத்த வேணும் எண்டா இன்னுமொரு பதிவு போடோணும்)  பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். இண்டைக்கும் அதுதான் விளையாடுறது எண்டான். எனக்கு ஒரு ஆசை துளிர்விட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்).

விளையாட்டு நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது, பக்கத்து வீதியால அப்பா போகுமட்டும். அப்பா  சைக்கிள்ல (துவிச்சக்கரவண்டி) போய்க் கொண்டிருந்தார். பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள். மைதானத்தில ஓட்டப் போட்டியில ஓடுற ஒருத்தனையோ இல்லை மேடையில முதற்பரிசு வாங்கிற ஒருத்தனின் பெயரைச் சொல்லி இந்தளவுக்கு கத்தியிருக்க மாட்டாங்கள். அப்பாவை நான் பார்த்தேன் அவர் எங்களைப் பார்க்கவில்லை, நான் அதில இருக்கிறனோ எண்டு தேடவில்லை. அவருடைய கண்பார்வைக்குக் கிட்ட இருந்த ஒரு பொடியனைப் பார்த்துக் கொண்டு ஒரு சின்னப் புன்னகையுடன் தாண்டினார். என்ர வகுப்புப் பொடியள்தான் எண்டதைக் கண்டு கொண்டார். வீட்டுப் பக்கம் தான் போறார். என்னுடைய கையிலிருந்த பேணி கீழே விழுந்தது. சைக்கிளை நோக்கி ஓடினேன். என்ர பொடியள் செய்த கைங்கரியத்தால விளையாட்டைப் பாதியிலேயே நிப்பாட்டி விட்டு வீட்டை ஓடினேன். சோதினை வருதெண்டா மைதானப்பக்கம் தலை காட்டக்கூடாது எண்ட கட்டுப்பாடு எங்கட வீட்டில. இல்லாட்டி விளையாடிப் போட்டு களைச்சு வேத்து வந்து சாப்பிடுறதும் படுக்கிறதும் தான் வேலை. படிக்கிறதில்லை.

அப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச அப்பா நான் அவசரப்பட்டு நுழைஞ்சபோது சொன்னார்.
‘வயல்ல நிண்டனி போல கிடந்துது.’
‘இல்லை... சும்மா... அப்பத்தான்...’ வார்த்தைகள் தடுமாறின.
‘உன்ர பொடியன், சோதினை வருதெண்ட நினைப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.’ அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
‘சோதினைக்குப் படிக்கோணும் எண்டதுக்காகப் பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்துறதையும் நிப்பாட்டி விட பொடியன்ர கூத்தைப் பாத்தியோ. பூக்கண்டு கிடந்து வாடுது. நாளைக்கு காலம பள்ளிக்கூடம் போக முன்னம் நீ இருபது குடம் தண்ணி பூக்கண்டுகளுக்கு ஊத்தோணும். அப்பத்தான் நீ திருந்துவாய்.’

அடி விழாதது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு வேளை தான் கண்ட உடன விளையாட்டை விட்டுட்டு வந்திட்டன் எண்டதில திருப்தியோ அல்லது முன்னம் ஒருக்கா தன் முழுப் பலத்தையும் சேர்த்து எனக்கு அடிச்சதில ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களோ தெரியாது. (இதைப் பற்றி பிறகு சொல்லுறன்). அந்தக் காலத்தில ஊரில கிணத்திலதான் தண்ணியெடுக்கோணும். அடுத்தநாள் காலம வெள்ளனவே எழுப்பப்பட்டேன். தண்ணியூத்த வேணுமெல்லோ... ம்ம்ம் அதிகாலையில எழும்பிறதெண்டா இண்டைக்கும் எனக்கு சீவன் போற மாரி கஷ்டமான காரியம். எழும்பி குடத்தையும் தூக்கிக் கொண்டு போனன். கிணத்தில கப்பியால தண்ணி அள்ளிக் கொண்டு போய் ஏறக்குறைய எழுபத்தஞ்சு மீற்றர் தூரத்துல இருக்கிற பூக்கண்டுகளுக்குத் தண்ணி ஊத்தவேணும். முதல் ரண்டு குடம் தண்ணி நானே கிணத்தில அள்ளிக் கொண்டு போய் ஊத்தினன். மூண்டாம் முறைக்குத் தண்ணியெடுக்க வர கிணத்தடியில அப்பா. நான் தண்ணியள்ளி ஊத்திறன் நீ கொண்டு போய் பூக்கண்டுக்கு ஊத்து. எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.

Thursday, August 27, 2009

நினைச்சுப் பாக்கிறன்

நினைச்சுப் பார்க்கிறன் என்னும் என்னுடைய வலைப்பூவின் இந்தப் பகுதியூடாக என்னுடைய சில நினைவுகளை மீட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் கீத் குமாரசாமியின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கையை, தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொள்ளுவதில் கீத் வெற்றி கண்டிருக்கிறார். நானும் என்னுடைய சிறு வயதுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை, என்னைப் பாதித்த, நான் எதிர்கொண்ட சவால்களை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய அனுபவங்கள் சிலருக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும். அல்லது இவனும் என்னை மாரித்தான் எல்லாமே பட்டுத்தான் பழுத்திருக்கிறான் என்ற வாழ்க்கை மீதான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டுவதாகக்கூட அமையக்கூடும். முதலாவது பகிர்வாக நான் சொல்ல விளைவது நான் காசு களவெடுத்ததைப் பற்றித்தான்.

இன்னும் இந்நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது (மற்றதெல்லாம் மறந்து போச்சு) எனக்கு ஐந்து வயதிருக்கும், நான் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். வீட்டில் களவெடுத்திருந்த பதினெட்டு ரூபாய் சில்லறைக்காசுகளை ஒழித்து வைத்துக் கொண்டு பாடசாலை செல்வதில் பெரும் பாடு பட்டேன். காற்சட்டை முன் சட்டைப்பைகள் (பொக்கற்றுக்கள்) பின் சட்டைப்பை, கணிதக் கருவிப்பெட்டியில் (கொம்பாஸ்) அட்டை வைத்து இரண்டாகப் பிரித்து மேலுக்கு கீழுக்கு என சில்லறைக்காசுகளை அடுக்கி வைத்திருந்தேன். அக்கால கருவிப்பெட்டி நெகிழியால் (பிளாஷ்திக்கால்) செய்யப்பட்டு காந்தத்தைப் பயன்படுத்தி மூடுவதாக இருந்தது. ஏன் காசெண்டு கேட்பது புரிகிறது. எங்கட பாலர் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு கடை ஒண்டு இருந்தது. அதில பல்லி முட்டாசு வாங்கிச் சாப்பிடத்தான். ஏறக்குறைய இருபது ரூபாய் இருந்தால் வகுப்பு முழுவதுக்குமே பல்லி முட்டாசு விருந்து வைத்து விடலாம். எல்லாரோடையும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறதில அப்பவே எனக்கு ஆசை.

 என்னுடைய கஷ்ட காலம் நான் பள்ளிக்குப் போற நேரம் பார்த்து என்னுடைய பொக்கற்றிலிருந்த சில்லறைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சத்தம் போட்டன. (ஏன் தான் சில்லறைக்காசுகளை ஒன்றோடு ஒன்று முட்டினால் சத்தம்போடும்படி செய்கிறார்களோ தெரியாது - ஒரு வேளை என்னை மாரிச் சில்லறைக் கள்ளர்களைப் பிடிக்கவோ?) அவ்வளவுதான், அம்மாவிடம் பிடிபட்டேன். விசாரணை தொடங்கியது. ஒவ்வொரு இடமாகத்தேடி ஒழித்து வைத்திருந்த காசுகளை எடுத்து எண்ணினால் பதினெட்டு ரூபாய். ‘உனக்கு எதுக்கு இவ்வளவு காசு?’ நான் பதில் பேசவில்லை. தொனி கொஞ்சம் கடுமையாகியது. அறையொன்றில் படுத்திருந்த அப்பா அந்த நேரம் எண்டு எழும்பினார். பிறகு பேசவும் வேணுமோ? அடியெண்டா அடிதான்.  ம்ம்ம்.... முதல் களவும் பிடிபட்டுப் போச்சு. வாங்கின அடி இண்டை வரைக்கும் நினைச்சுப் பார்க்க வைக்குது.

Sunday, August 23, 2009

இலங்கையிலுள்ள பதிவர்கள் சந்திப்பு - எனது பார்வை.

ஆரவாரமாக அறிவித்த படி இலங்கையிலுள்ள பதிவர்களின் சந்திப்பானது இன்று (23/8/2009) கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சிறந்த ஒழுங்கமைப்பைக் கோடுகாட்டியிருந்தது. ஆறாம் தரம் கல்வி பயிலும் மாணவன் முதல் நீண்ட காலம் எழுத்துலகை ஆண்டு வரும் பெரியவர்கள் வரை அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. புல்லட், சுபானு, ஆதிரை, மருதமூரான், எழில், சேரன், லோஷன் போன்றவர்கள் பயனுள்ள வகையில் உரையாற்றியிருந்தனர். சதீஷின் நிகழ்ச்சித் தொகுப்பு பாராட்டுக்குரியது. வந்தியத்தேவன் இறுதியாக கருத்துரை வழங்கியிருந்தார். மது இவையனைத்தையும் சிறந்த முறையில் நேரடி ஒளிபரப்பாக புலத்திலுள்ள நம்மவர்களும் மற்றைய நாட்டவர்களும் பார்ப்பதற்கு ஏற்படுகளைச் செய்திருந்தார். உண்மையில் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான்.

தமிழ் பதிவர்கள் தமிழ் எழுத்துக்களை (ழ /ல) சரியான முறையில் கையாள்வது எனவும் இலங்கையில் அன்றாடம் பாவிக்கப்படும் தமிழ் மொழி நடையிலேயே இனி எழுதலாம் என்றும் கூறப்பட்டது. தமிழ் விசைப்பலகை மற்றும் யாழ்தேவி திரட்டி சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதம் இடம்பெற்றாலும் பல பயனுள்ள தகவல்கள் பரிமாறப்பட்டன. தொழில்நுட்பத்தகவல், பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் அவரவர் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தத்தில் இன்றைய சந்திப்பானது என் போன்ற எழுத ஆரம்பித்துள்ள பதிவர்களுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். இன்றைய இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.

இது இவ்வாறு இருக்க, இன்று நடந்த மற்ற விடயங்களையும் சொல்லத்தானே வேண்டும். புல்லட்டின் கடி இந்த பதிவர் சந்திப்பையும் விட்டு வைக்கவில்லை. அப்பப்ப சூடாப் போற நேரம் எல்லோரையும் சிரிக்க வைத்திருந்தார். ஆதிரை கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். ஆனாலும் சின்னப்பொடியன் பால்குடி நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் எனக்கு மேடையில் வைத்து கேக் ஊட்டவில்லை. இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவினரை நான் வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன். அழுது அடம்பிடித்து வாங்கலாம் எண்டு நினைச்ச போது புல்லட் அண்ணா என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு முழுக் கேக்கையும் எனக்குத் தந்திருந்தார். மற்றாக்களையும் பார்க்க பாவமாக இருந்ததால் எனக்கு கிடைச்சதை பெருந்தன்மையாக மற்றாக்களுக்கும் குடுத்தேன். வடையும் பற்றீசும் கூடவே நெஸ்கவேயும் பரிமாறியிருந்தனர். ஏற்பாட்டுக்குழுவின் தலையில துண்டுதான். நிதி நெருக்கடியைச் சமாளிக்க உண்டியல் வைக்கப்பட்டது. நூல் விநியோகமும் இடம்பெற்றது. வந்தியண்ணா வந்திருந்த அனைவரிடமும் இச்சந்திப்பு பற்றிய வலைப்பதிவுகளைக் கேட்டு வாங்குவதில் மும்முரமாக இருந்தார். ஏற்பாட்டுக்குழுவின் இன்னுமொருவர் லோஷன் அண்ணா சிங்க பதிவால் அடி வாங்கி அடி வாங்கியே நொந்து போனார். இருக்கிறம் சஞ்சிகை இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தத்தில உண்டியல் பக்கமே தலைகாட்டாத என்போன்றவர்களுக்கு செலவில்லாமல் வரவுதான் அதிகம்.

Saturday, August 22, 2009

நாங்களும் வருவமெல்லோ...

இலங்கைப் பதிவர் சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை(23/8/2009) காலை ஒன்பது மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. இலங்கையிலிருந்து வலைப்பதிவிடும் சிறந்த வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் என்னைப் போன்று அண்மையில் எழுத ஆரம்பித்துள்ள பதிவர்கள் முதல் எழுதத்துடிக்கும், எழுத்துக்களை வாசிக்கும் நெஞ்சங்கள் உட்பட விமர்சகர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.

சும்மா வீட்டில நிண்டு வேலை வெட்டியில்லாமல் பொழுதைப் போக்குவதை விட ஒருமுறை அங்க என்னதான் நடக்கப்போகுது எண்டு எட்டிப்பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் வரப்போறாங்கள். ஒருக்கால் ஆக்களைப் பாத்ததாகவும் போகுது. முடிஞ்சா அவங்களோட அறிமுகம் ஏற்படுத்தியதாகவும் போகுது. ஆனால் அங்க வந்து என்னை மட்டும் ஆரெண்டு தேடிப்போடாதேங்கோ. விசேட சாப்பாடும் குடுக்குறாங்களாம். விடுவமா என்ன? நாங்களும் வருவமெல்லோ...

மேலதிக விவரங்களுக்கு...Sunday, July 26, 2009

கணக்கு_08

8, 8, 3, 3 ஆகிய எண்களை மட்டும் பயன்படுத்தியும் (எல்லாவற்றையும் பயன்படுத்தவும் வேண்டும்) கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தியும் 24 ஐ விடையாகப் பெற வேண்டும் . முயற்சி செய்யுங்கள்.

Friday, July 24, 2009

அவசர வேண்டுகோள்!!!

வவுனியா முகாம்களில் வாழும் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் தம்முடைய கல்வித் தேவைக்காக சில பாடப் புத்தகங்களை வாங்கித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். கொழும்பிலிருந்து கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்களூடாக கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையுடன் கூடிய அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் (ICUTS) என்ற அமைப்பினூடாக தங்களாலியன்றதை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு சில மாதங்களாக சிறப்பான முறையில் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள். இதனை அவர்களின் http://www.icuts.org/ இணையத்தளத்தினூடாக அறிய முடிகிறது. ஆனால் அவர்கள் தற்போது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். இதுவரையிலும் சிறப்பாகச் செய்ய முடிந்ததை தற்போது நிதி நெருக்கடியால் செய்யமுடியாமல் போகின்றதே என்கின்ற மாணவர்களின் மன வலியை அவர்களின் அவசர வேண்டுகோள் மூலமாக உணர முடிகிறது. பரீட்சை மிக நெருங்கி விட்ட நிலையிலும் தங்களாலியன்றதை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியோடு நிற்கிறார்கள்.

எம்முறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட உள்ளங்களே! தயவு செய்து நீங்களாக முன்வந்து மாணவர்களின் கல்விக்காக உதவி செய்யுங்கள். இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நபருடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரைந்து உதவுங்கள். அவர்களின் நெல்லெண்ணம் ஈடேற உதவுங்கள். மேலதிக விபரங்களுக்கு... http://www.icuts.org/


முகாம்களில் வாடும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதன் மூலம் அவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தலாம். இந்த முறை குறுகிய ஆயத்தப்படுத்தலின் மூலமாக சிறந்த பெறுபேறு பெறுவது கடினமாயினும் அடுத்த வருடமாயினும் அவர்கள் சிறந்த பெறுபேற்றுக்காக முயல்வார்கள். கோட்டா முறை மூலம் உள்வாங்கப்படும் மாணவர்களின் நலன் கருதியாயினும் கற்றலுக்கு புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் கைமாறும். வேறு பொழுது போக்குகளோ கதைப்புத்தகங்களோ இல்லாத நிலையில் அங்கு வாடும் மாணவர்கள் தொடர்ந்து இப்புத்தகங்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முயல்வார்கள்.

முகாம்களுக்குள் நுழையவே முடியாத இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை காலத்தோடு முடிவுக்கு வரலாம். அதற்கிடையில் முடிந்தளவு செய்வதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முயல்கிறார்கள். அதே நேரம் அங்கு வாடும் மாணவர்களுடன் வெளியேயிருந்து தொடர்புகளை உருவாக்கி மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் எதிர்காலம் மீதான புத்துணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

புத்தகங்கள் கொடுப்பதனால் முகாம்களில் வாடும் மக்களின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் உண்டாகும் என்றோ அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றோ வீண் விதண்டாவாதம் செய்யும் நேரம் இதுவல்ல. எமது நாட்டின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர்கள், இடம் பெயர்ந்து எல்லாத்தையும் இழந்து வாடும் கொடுமையை அனுபவித்தவர்களுக்கு இன்றைய அவல நிலை புரியும்.

உதவிக்காக ஏங்கித் தவிக்கும், கடிதம் எழுதிவிட்டு பதிலுக்கு கல்விப் புத்தகங்கள் வந்து சேரும் என்று காத்திருக்கும், மற்றைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அன்புத் தம்பி தங்கைக்காக நான் இதுவரை என்ன செய்தேன்? தேடியும் விடை கிடைக்கவில்லை. உங்களிடம் விடை இருக்கிறதா?

Tuesday, July 21, 2009

கணக்கு_07

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய வங்கிக் கணக்கில் 100 ரூபாயை வைத்திருக்கிறார். அவர் ஆறு தடவைகள் பணத்தை மீள எடுப்பதன் மூலம் 100 ரூபாயையும் மீள எடுக்கிறார்.கணக்கிலுள்ள மீதி வருமாரு:
மீளப்பெறல் வங்கி மீதிப்பணம்
ரூ.50 ரூ.50 ரூ.25 ரூ.25 ரூ.10 ரூ.15 ரூ.8 ரூ.7 ரூ.5 ரூ.2 ரூ.2 ரூ.0 -------- -------- ரூ.100 ரூ.99 -------- --------

கணக்கு எங்கேயோ உதைக்குதே? கணக்கில எங்க பிழை எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம். நீங்கள் கணக்கியலில எப்பிடி எண்டு பாத்திடுவமே?

Sunday, July 05, 2009

வலிக்குது...


யாரோ எல்லாரும் வருகிறார்கள்...
பேசும் மொழி புரியவில்லை...
இன்று இரவு...
ஒன்பது மணி...
விசாரணை...
என்ன செய்ய?
வேறு வழியில்லை...
செல்கிறேன்...

கைகளால் எதையென்று
மறைப்பது...?
என்னுடம்பில்...
எங்கெங்கோ எல்லாம்...
என்னென்னவோ எல்லாம்...
செய்கிறார்கள்...
எனக்கு நடப்பது என்னவென்று
என் அறிவுக்கு விளங்கவில்லை...
எத்தனை பேரென்று...
எண்ணத் தோணவில்லை...
வலி தாங்க முடியவில்லை...
என் அழுகை அவர்களின்
கொக்கரிப்பில் அடங்குகிறது.

எல்லாம் முடிந்தது...
வாகனத்தில் இறக்கப்படுகிறேன்..
தறப்பாழினுள் நுழைகிறேன்..
நேற்றுத்தான் அக்காளானவள்
ஓடி வந்து அணைக்கிறாள்.
எனக்கும் இப்பிடித்தான் பிள்ளை...
எங்கட நிலை இதுதான்...
யோசிச்சுப் பயனில்லை...

எல்லாமே திறந்த வெளி...
நடந்தது எல்லாருக்குமே தெரியும்..
எல்லாரும் என்னை என்ன நினைப்பார்கள்?
நான் விரும்பியா இதெல்லாம்
எனக்கு நடக்கிறது...
எம்மில் சிலருக்கு மட்டும் தான்
விதிக்கப்பட்டதோ...
நான் அப்பிடி என்ன தான்
பிழை செய்து விட்டேன்...?
நான் கவரிமானாகவா...?
இல்லை வாழவா...?
வழி தெரியவில்லை...
வலி தாங்கமுடியவில்லை...

Wednesday, July 01, 2009

கணக்கு_06

ஐந்து சதம் ஒரு ரூபா ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் தரப்பட்டுள்ளன. மொத்தமாக நூறு நாணயக் குற்றிகள் இருக்கின்றன. நூறு ரூபா பெறுமதியான நாணயங்களே இருக்கின்றன எனின் எத்தனை ஐந்து சதம் எத்தனை ஒரு ரூபா எத்தனை ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் இருக்கின்றன?

Friday, June 26, 2009

கணக்கு_05

கணக்கு_04 இலுள்ள அதே கணக்குத்தான். ஆனால் மாபிள்களின் எண்ணிக்கை ஒன்பதுக்குப் பதிலாக பன்னிரெண்டு.
கணக்கை மீண்டும் தருகிறேன்.

ஒத்த உருவமுடைய பன்னிரெண்டு மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.
எங்கே உங்கள் திறமையை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

Thursday, June 18, 2009

நம்மால் முடியுமா?இருக்கிறாரா இல்லையா என ஆராய்வதிலும் ஐந்தாம் கட்டம், றோ என்றெல்லாம் ஆக்கங்கள் எழுதுவதிலும் அது பற்றி விவாதிப்பதிலுமே எங்களுடைய நேரத்தை செலவிடுகிறோமே தவிர நாம் செய்ய வேண்டிய செயல்களில் நாம் கவனம் செலுத்தவில்லை. நாம் நடந்து செல்ல வேண்டிய இலட்சியப் பாதையில் இன்று எம் காலடியில் முட்களும் கற்களும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை விலக்கி எவ்வாறு அடுத்த காலடியை முன்னோக்கி எடுத்து வைப்பது என்பது பற்றிச் சிந்திப்பதை விடுத்து, அலட்சியப்படுத்தி விட்டு தூரத்தே தெரியும் இலட்சியத்தைப் பற்றியே சிந்திக்கிறோம்.

இன்று வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி, அவர்களுக்கு நாம் எவ்வாறான வழிகளில் உதவலாம் என்பது பற்றிச் சிந்தித்து செயலாற்ற இன்னும் நாம் துணியவில்லை. யுத்தத்தின் கொடூரத்தால் மரணத்தின் வாசலையே முத்தமிட்டவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? நாம் உண்மையை அறிய முற்படவில்லை. எல்லோருக்குமான பொது நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்று, இன்று ஒரு சில சமூகத்தவர்களின் தலையில் போய் பொறிந்திருக்கிறது. இன்று முள் முடியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உலகெங்கணும் பரந்து வாழும் தமிழர்களிடையே இன்று தாங்கொணாத் துயரம் அனுபவிப்பவர்கள் அவர்களே. தங்களுக்கான துயரமல்ல அது. அவர்கள் அதை விரும்பிச் சுமக்கவும் இல்லை. நாங்களும் சுமக்க வேண்டிய எங்களுடைய பங்கையும் சேர்த்தல்லவா அவர்கள் சுமக்கிறார்கள். இறுதி வரை நாங்கள் சுமந்த நம்பிக்கையையே அவர்களும் சுமந்தார்கள். அதுக்காகவே வாழத்துணிந்தார்கள். தியாகங்கள் செய்ய தயங்காதவர்களாக விளங்கினார்கள். வா வென்று அழைக்கும் பரந்து விரிந்த வன்னிப் பரப்பில் வந்தவர்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கைகள் அவர்களுடையது. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை செய்து பசியின்றி வாழ்ந்தவர்கள் அவர்கள். இன்று என்ன நிலை?

உணவு உண்ணுகிறார்களா? போதியளவு கிடைக்கிறதா? நீர் கிடைக்கிறதா? கொடுக்கப்பட்ட குடில்களில் வசிக்க முடிகிறதா? அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கிறதா? உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் உடல்நிலை என்ன? மனநிலை என்ன? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயலவில்லை.


இத்தனை கேள்விகளுக்கும் எங்களுடைய பதிலாக அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். எங்களை உள்ளுக்குள் விடுவதில்லையே. எங்களை அனுமதித்தால் அது செய்வம் இது செய்வம். இப்படித்தான் எம்மில் பலர் பேசிக் கொள்கிறோம். ஆனால் அதற்குரிய முயற்சிகளை எள்ளளவேனும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உண்மையான அக்கறை எமக்கு அம்மக்கள் மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சின்னஞ்சிறு உதவிகளை விட பெரிய அளவில் உதவியிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைப்பதென்பது மிக மிக அருமையானது. அதை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பெறுபேறு தங்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அவர்கள் சேர்ந்த நிதியை உரிய முறையில் உதவிகள் தேவையானவர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கிறீஸ்தவ மாணவர் அமைப்பு பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு அவற்றை உரியவர்களிடம் சேர்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது. அதை விட கொழும்பிலுள்ள பாடசாலைகளினூடாக தமிழ் ஆசிரியர்கள் முகாம்களில் வாடும் இவ்வருடம் உயர்தரம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை மேற்கொண்டதையும் அறிய முடிகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் அப்பியாசப் புத்தகங்கள் பேனை பென்சில் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மாண்வர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். கொழும்பில் பாடசாலைகளில் கற்பிக்கும் தனியார் கல்வித்துறையில் பிரபலமான ஆசிரியர்கள்கூட தங்களாலியன்ற கற்பித்தலையும் தாம் வெளியிட்ட பயிற்சிப்புத்தகங்களையும் இலவசமாக வழங்கியது பாராட்டுக்குரியது. அவர்கள் நேரடியாக மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் கேட்கலாம் முகாமில் வசிப்பவர்களுடைய நிலைக்கு இப்ப படிப்பித்தலா முக்கியம் என்றும் இரண்டு மாதக் கற்பித்தலுடன் சிறந்த பெறு பேறு எடுக்க முடியாது, இது பயனற்ற வேலை என்றும்.

அதுவல்ல இன்றைய தேவை, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்கள் தம் பாரங்களை பகிர்ந்து மன உளைச்சல்களை இறக்கி வைத்து நாம் ஆறுதல் கூறவேண்டும். தம்மீது அக்கறை கொண்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தமக்கு உதவத் தயாராக இருக்கிறது என்ற அரவணைப்பை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மனக் காயங்களை ஆற்றுவதற்கு உதவ வேண்டும். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை மீது அவர்களுக்கு நம்பிக்கையையும் மற்ற தமிழ் உறவுகள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையையும் துளிர்விட வைக்கலாம். இவையனைத்தையும் நேரடியாகச் சென்று நாம் வழங்க முடியாத சூழ்நிலையில் மிக மிக அருமையாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏன் சரிவரப் பயன்படுத்தக் கூடாது? சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடியவர்கள். நேரடியாக உதவிகளை வழங்கக் கூடியவர்கள். உதவிகள் நேரடியாகக் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

கற்றல் உபகரணங்களை பாட நூல்களை பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்க விரும்புபவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் முகாம்களுக்குச் செல்லவிருக்கும் உயர்தர ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்கலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம்-2 ஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு நிதியுதவியை வழங்கலாம். கொழும்பு மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒரு முறை பொருள், நிதி சேகரிப்பில் ஈடுபடலாம். அல்லது பல்கலைக்கழக அனுமதியுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று இலவச கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தரங்குகளை செய்யலாம். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தோடு நாம் தொடர்புகளை உருவாக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும். இலங்கையின் கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இதனைச் செய்யுமா? அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் இச்செயற்பாடுகளில் தாங்களாகவே முன்வந்து ஈடுபடுவார்களா? அதற்கு உதவியாக அவர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழ் சமூகம் இருக்குமா? நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும் நேரம் இதுதான். வெட்டிப் பேச்சுக்களும் வீர வசனங்களும் பேசும் நேரம் இதுவல்ல. முழு மூச்சுடன் செயற்படும் நேரமே இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற நம்மால் முடியுமா?

Saturday, May 30, 2009

கணக்கு_04

ஒத்த உருவமுடைய ஒன்பது மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

Thursday, May 21, 2009

அனுமதியுங்கள்...

இத்தனை கொடுமைகளையும் இழைத்து விட்டு, ஒரு இனப்படுகொலையையே ஓசைப்படாமல் நிகழ்த்தி விட்டு எதுவுமே நடக்காதவர் போல எதுவுமே தங்களுக்கு தெரியாது என்பது போல நிவாரணப் பணியாம்... முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பது பற்றியோ அவர்களை மீளக் குடியமர்த்துவது பற்றியோ எதுவுமே பேசாது முகாம்களிலுள்ள மக்களுக்கு நிவாரணப்பணியாம்...

இத்தனை கொடுமைகளையும் கண்டு சலித்த மக்களுக்கு முதலில் தேவையானது மன நிம்மதியே. எம்மக்களை பசி தாகத்தால் தவிக்க விட்டு, குண்டுகள் போட்டு கொன்று விட்டு, அங்கவீனர்களாக்கிவிட்டு நிவாரணம் தருகிறார்களாம்... நடந்தவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா இல்லை சிறிதளவேனும் வருத்தம் தெரிவித்தார்களா? செய்வதெல்லாம் செய்து விட்டு நிவாரணமாம்...

எல்லாத்தையும் விட கொடுமையானது மனதில் ஏற்படும் வலியே... மனதிலுள்ள வலி போய் மனம் வலிமையடையுமாயின் காசு நிவாரணங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? எம்மக்களுக்கு முதலில் தேவையானது வாழ்வில் நம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளும் அதற்குரிய செயற்பாடுகளுமே... முகாம்களிலிருந்து விடுவித்து தமது சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியமர்த்தினால் பலர் நிகழ்ந்த கொடுமைகளை மறந்து கண்முன்னே கண்ட கொடூரக் காட்சிகளை மறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். அதுவே உண்மையான நிவாரணமுமாகும்.

நிவாரணப்
பணிகளுக்கு நிதி தேவைதான் அதுக்காக அத்தியாவசியாமகத் தேவையான மன உளைச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் செயற்பாட்டை விடுத்து நிவாரணம் வழங்குதல் பொருத்தமற்றதாகவே படுகிறது. (முகாம்களில் மன உளைச்சலை மென்மேலும் அதிகரிக்கும் கொடுமைகள் நடத்தப்படுவது வேறு விடயம்) மாறாக முகாம்களைத் திருத்தியமைக்கவே நிவாரணங்கள் பயன்படப் போகின்றன. அதனால் இது சிறந்த நிவாரணப் பணியாகுமோ?

எம்மக்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை நோக்கி அனுமதி கேட்கிறேன்...

 • ஊர் விட்டு ஊர் தாண்டி நாள் முழுவதும் யுத்த பூமியில் இடம்பெயர்வது என்றால் என்னவென்று உங்களுக்கு காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
 • நீங்கள்வளர்த்த கால்நடைகள் உங்களின் கண்முன்னே கால்களிழந்து காயம்பட்டுக் கதறுவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
 • பதுங்கி வாழ்வதென்றால் என்ன, பதுங்கு குழிக்குள் வாழ்வதென்றால் என்ன என்பதை உங்களுக்கு வாழப் பழக்க அனுமதியுங்கள்...
 • குண்டுகளின் வெடியோசைகள் அதன் அதிர்வுகள் விளைவுகள் எப்பிடி இருக்கும் என்று உங்கள் பகுதிகளில் காட்ட அனுமதியுங்கள்...
 • எரிகுண்டு எப்பிடியெல்லாம் எரிக்கும் என்பதை உங்களுக்கு ஆதார பூர்வமாக உங்கள் பகுதிகளில் செய்து காட்ட அனுமதியுங்கள்...
 • பல்குழலின் பலத்தையும் கிபிரினால் கிணறு தோண்டுவது எப்படியென்பதையும்காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
 • பசியே அறியாத உங்கள் பரம்பரையில் வந்த உங்கள் குழந்தை கண்முன்னே பசிக்கொடுமையால் துடிதுடித்து இறப்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
 • உங்கள் பால்குடிக் குழந்தை தாயின் முலையில் பாலின்றி பசியால் தாயின் கையில் இருந்தபடியே உயிர்விடுவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
 • அந்தத் தாயின் மனது வலியையும் உணர்வு வெளிப்பாட்டையும் உங்களைஅனுபவிக்க வைக்க அனுமதியுங்கள்...
 • உங்களின் அப்பா குண்டு பட்டு கால் கையிழந்து காப்பாற்ற மருந்துகளின்றிகண்முன்னே துடிதுடித்து உயிர்துறப்பதை உங்களுக்கு காட்டுவதற்குஅனுமதியுங்கள்....
 • உங்களின் பேரன் குளிரின் கொடுமையால் நடுநடுங்கியபடி முனகியபடிமூச்சிழுத்து சாவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
 • உங்களின் தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்க உணவில்லையே என்றவேதனையையில் குண்டடி பட்டு இறப்பதை உங்களுக்க் காட்டஅனுமதியுங்கள்...
 • உங்களின் உறவுகள் உங்களின் பெயரை உறக்கக் கூறியபடியே மாண்டு போவதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
 • உங்களின் அயலவர் காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்ற அவலக் குரல் எழுப்பிய படியே நடு வீதிகளில் இறந்து போவதைக் காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
 • பட்ட காயத்துக்கு மருந்தின்றி வைத்திய சாலையில் மரத்தடியில் நிலத்தில் படுத்திய படி உங்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள்...
 • ஒரு குடும்பத்துக்கான கூடாரத்தில் ஒன்பது குடும்பங்கள் வாழ்வது எப்படியென்பதை காட்டுவதற்கு அனுமதியுங்கள்...
 • உங்களின் பத்து வயதுப் பிள்ளை கையில் ஒரு தட்டுடன் உணவுக்காய்வரிசையில் நிற்பதை உங்களுக்கு காட்ட அனுமதியுங்கள்...
 • பசி பட்டினிக் கொடுமையையும் தவித்த வாயின் தாகத்தின் தவிப்பையும் உங்களுக்கு உணர்த்த அனுமதியுங்கள்...
 • உங்கள் சகோதரனை உடல் பிழந்து சிறுநீரகத்தையும் கண்ணையும் எடுத்து வியாபாரம் செய்ய அனுமதியுங்கள்.
 • உங்கள் சகோதரியை கதறக் கதற வன்புணர அனுமதியுங்கள்... (அந்தளவுக்குவெறி பிடித்தவர் நாமில்லை).
 • இத்தனையையும் பார்த்துக்கொண்டு இவற்றைத் தடுத்து உயிர்களைக் காக்க முடியாத மன நிலையில் உங்களைப் புலம்ப வைக்க அனுமதியுங்கள்...
 • எம்மவர்கள் பட்ட கொடுமைகள் நிறைந்த வாழ்வை உங்களை வாழவைத்து வேதனைகளை உணர வைக்க அனுமதியுங்கள்...

மேற்சொன்ன எல்லாத்துக்கும் நீங்கள் அனுமதிப்பீர்களானால் , என்னிடம் பணம் இல்லையாயினும் என்னுறவுகளிடம் மன்றாடியேனும் 500 கோடி ரூபாய் பணம் சேர்த்து உங்களுக்கு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீர்களா?

இரத்த வெறி கொண்டு பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு இதனை நான் எழுதவில்லை. என்னுடைய பார்வையில் நீங்கள் செய்தது இப்படித்தான் தெரிகிறது... உன்னுடைய காலை வெட்டியெடுத்து, உறவுகளைப் பறித்தெடுத்து விட்டு, உன்னை பசிக் கொடுமையால் தவிக்க விடுகிறேன்... சில நாட்களின் பின் நிவாரணம் தருகிறேன். வாங்கிக் கொண்டு போ... இதுதானே உங்கள் நிலைப்பாடு. அப்பிடியானால் சனநாயகம், சமத்துவம் பற்றிப்பேசும் நாடுகளே உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல எனக்கொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள். போரின் வலியை உங்களுக்கு உணர வைக்கிறேன். சொல்லிப் புரிய வைக்க முடியாதென்பது இன்று நன்கு உணரப்பட்ட விடயமே. அனுமதி கிடைக்குமா?


Monday, May 18, 2009

முடியல...

காதில் விழும் செய்திகளை ஏற்க முடியல...
வெடியொலிகளை காதால் கேட்க முடியல...
தொண்டையை அடைக்கும் துக்கத்தை தாங்க முடியல...
மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியல...
என்னதான் நடந்திருக்கும் என ஊகிக்கவும் முடியல...
நாளைய நாளைப் பற்றிச் சிந்திக்கவும் முடியல...
எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த முடியல...
நம்பிக்கையை கூட என்னால் நம்ப முடியல...
நடந்து வந்த பாதையை மறக்க முடியல...
நடக்கப் போவதையும் நினைக்க முடியல...
சுதந்திரம் என்ற சொல்லை சொல்ல முடியல...
அடங்காத எம் தாகத்தை அடக்க முடியல...
என்னதான் நடந்தாலும் ‘ஆட்டம்’ இத்துடன் முடியல...
தொடரும்......................................................

(தயவு செய்து தலையங்கத்தை வாசிக்கவும்)

Wednesday, May 13, 2009

கணக்கு_03

சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.
நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம்.
தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும். (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...