அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன்.
ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம்.
யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம்.
எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.
அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான்.
விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.
அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள். இவங்கள்...???’