சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...
கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.
திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.
அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது. மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.
அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல...
எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா?
பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்?
அன்று நடந்தது என்ன?
நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள்.
அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.
- தனஞ்சி
- தனஞ்சி