Wednesday, December 28, 2011

நள்ளிரவில்


சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...

கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.

திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.

அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது.   மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.

அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல...  

எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா? 

பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்? 

அன்று நடந்தது என்ன?

நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள். 

அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.

- தனஞ்சி


Thursday, December 22, 2011

தண்ணிக் காசு


நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25 அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம் எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக் கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம். 

நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம். ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான் பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம். 

அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர் மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும் திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700 ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள் நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில கட்டப்படும். 

அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100 ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.

Wednesday, December 21, 2011

ஞாபகம்


நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல் வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம்.  சிக்கனமான தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழல்.  நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால் எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல் அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம்.  நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும் இருந்தோம். 

பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர் எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும் சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும் இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.

- தனஞ்சி

Wednesday, May 18, 2011

அஞ்சலி!!!

மே 18...
நானிருக்குமிடங்களில்
விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன...
என் மனம்
அஞ்சலி செய்கிறது...

பி. கு: வெசக் நாளில் எழுதப்பட்டது.


Sunday, May 01, 2011

கணக்கு 13

ஒரு பக்க நீளம் 60 cm ஆகவுள்ளதும் மற்றைய இரு பக்க நீளங்கள் முழு எண்களாகவும் அமையக் கூடிய செங்கோண முக்கோணங்கள் எத்தனை அமைக்கலாம்? அம்முக்கோணங்களின் பக்க நீளங்கள் எவை?

Tuesday, March 01, 2011

திறமையிருந்தும்...


என்ர ஊராக்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலத்தான் என்ர வாழ்க்கையும் இருந்தது. என்ர வாழ்க்கையொண்டும் விதி விலக்கானதல்ல.  சொன்னா நம்பமாட்டியள் முதலாம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடம். ரண்டாம் மூண்டாம் ஆண்டு இன்னொரு பள்ளிக்கூடம். நாலாம் அஞ்சாம் ஆண்டு அடுத்த பள்ளிக்கூடம். இப்பிடி சாதாரண தரம் வரை ஒண்டைவிட்ட ஒரு வருசம் நான் பள்ளிக்கூடம் மாறின படிதான். இதில முக்கிய விசயம் என்னெண்டா ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ஊரில. நான் அவ்வளவு குழப்படியோ எண்டு தானே நினைக்கிறீங்கள். ஆனா நான் அப்பிடியில்லை.

ஈழத்தமிழன்ர நாளாந்த நிகழ்ச்சிகளில ஒண்டான இடப்பெயர்வு என்னை இப்பிடிப் பாடாப் படுத்திப் போட்டுது. இஞ்ச கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு படிப்புகளும், நாளுக்கு நாள் புதுப் புது ஆசிரியர்களும் புதுப்புது நண்பர்களும் எண்டு என்ர வாழ்க்கை போச்சுது. இருந்தாலும் படிச்சு நல்ல நிலைக்கு வரவேணுமெண்ட கொள்கையை நான் ஒரு நாளும் கை விடேல்ல.

சுனாமி என்ர வாழ்க்கையிலையும் தன்ர கை வரிசையைக் காட்டிச்சு. ஆர்ப்பரிச்சு உள்ளுக்கு வந்த கடல் அம்மாவையும் அவவின்ர குடும்பத்தில சிலரையும் காவு கொண்டது. கடல் அலை உயரமா வரூது எண்டத கண்டுட்டு நான் ஓடித் தப்பின்னான். அந்த நேரத்தில அம்மான்ர நினைப்பு வராமல் போச்சு. நான் பத்தாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த கடைசில நடந்த இந்த கொடூரத்தால பதினோராமாண்டில முதல் நாலைஞ்சு மாசமா நான் பள்ளிக்கூடம் போகேல்ல. என்னால அந்த சோகத்திலேந்து மீள முடியேல்ல. படிப்பு வேண்டாம் எண்டு நினைச்சிருந்தனான். அப்பாவும் சொந்தக்காரங்களும்எனக்கு ஆறுதல் சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பி வச்சினம். சாதரண தரச் சோதினை எழுதினன். எட்டு A ஒரு B. பாழாய்ப் போன ஆங்கிலத்துக்குத் தான் B.

உ/ தரத்தில கணிதம் தான் படிக்கிறதெண்டு எப்பவோ நான் தீர்மானிச்சுக் கொண்ட விசயம். முதல் ஆறு மாசம் பள்ளிக்கூடமும் தனியார் கல்வி நிறுவனமும் போய் படிச்சுக் கொண்டிருந்தனான். அப்பத்தான், பாழாய்ப் போன வயசு பதினெட்டைத் தாண்டிச்சுது.  வீட்டுக்கொருத்தர் நாட்டைக் காக்கப் புறப்படுக எண்டு கட்டாயப் படுத்தினாங்கள். தேடித் தேடி ஆக்களைப் பிடிக்கத் தொடங்கினாங்கள். நான் மட்டுமென்ன விதிவிலக்கோ?

ஒழிச்சு வாழ வேண்டிய நிலை. ஆரம்பத்தில வேறொரு இடத்தில இருந்த நான் என்ர சொந்த ஊருக்குத் திரும்பினன். ஊரிலேந்து பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான வேற இடங்களுக்குப் போயிட்டினம். கடும் செல்லடியால ஊரில பெரிசா ஒருத்தரும் இருக்கேல்ல. எனக்கு வேற வழி தெரியாமல் செல்லடியையும் பொருட்படுத்தாமல் ஊருக்கே போனன். வலுக்கட்டாயமா ஆக்களைச் சேக்கிறதில பொடியள் மும்முரமா நிண்டதால பகல் நேரத்தில ஒருத்தரும் புழங்காத பனங்கூடலுக்குள்ள காவோலைகளை சுத்தவரக் குமிச்சுப் போட்டு நடுவுக்குள்ள படுத்திருந்தன்.

மத்தியானச் சாப்பாட்டை அப்பம்மா ஒழிச்சுக் கொண்டு வருவா. பக்கத்துக் காணிக்குள்ள வந்து வச்சிட்டுப் போவா. நான் எடுத்துச் சாப்பிடுவன். அந்த நேரம் நிறையப் படிக்கோணுமெண்ட வெறியிருந்ததால என்னட்ட கிடந்த உயர்தரப் பாடப் புத்தகங்களை என்ர பாட்டில வாசிச்சன். சுயமாப் படிச்சன். பல பாடங்கள் தொடக்கத்தில விளங்காம இருந்தாலும் படிப்பிக்கவும் சந்தேகம் கேக்கவும் ஒருத்தரும் இல்லை. ஒண்டும் செய்யேலாது. என்ர அறிவுக்கெட்டின வகையில திரும்பித் திரும்பி வாசிச்சு அவையளை விளங்கிக் கொண்டன். பயிற்சிப் புத்தகங்களோ, செய்து பாக்க சோதினைப் பேப்பர்களோ இல்லை.

இரவு கடக்கரை மணல் வெளியில கொஞ்சம் பள்ளம் தோண்டிப் போட்டு படுத்திருப்பன். ஏனெண்டா இரவிரவா வெளிச்சத்தோட வீடு காணி வழிய பொடியள் தப்பியோடினாக்களைத் தேடுவாங்கள். கடக்கரையில ரோந்து போய்க் கொண்டிருப்பாங்கள். ஊராக்களும் மாறி மாறி ஒழுங்கு முறையில ரோந்து போகோணும். நான் படுத்திருக்க ரோந்து போறவங்கள் கதைச்சுக் கொண்டு போறது வடிவாக் கேக்கும்.  எல்லாத்தையும் தாண்டித் தான் நான் ஒழிக்க வேண்டிய நிலை.

ஒரு நாள் ரண்டு நாளில்ல, ஒண்டரை வருசம் நான் இப்பிடி வாழ்ந்தன். சூரியன் உதிச்சு மறையும் வரை ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. நான் பல சந்தர்ப்பங்களில் அருந்தப்பில் பிடிபடாமல் தப்பியிருக்கிறன். அந்த நேரங்களில ஆமி அடிக்கிற மல்ரி பரல் முதல் எல்லா செல்களும் என்னைச் சுத்தி எங்கட ஊரில விழும். செவிப்பறை வெடிக்கும். எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஒழிச்சு இருந்தன்.

எங்கட தமிழாக்களின்ர குணம் தெரியும் தானே. தான் நல்லாயில்லட்டிலும் பரவாயில்லை. மற்றவன் நல்லாயிருந்தா பொறுக்காதே. ஆரோ ஒருத்தர் நான் ஊரில தான் இருக்கிறதா மாட்டிக் குடுத்திட்டாங்கள். என்ர அப்பாவைப் பிடிச்சுக் கொண்டு போய் என்னை ஒப்படைச்சாத்தான் விடுவன் எண்டாங்கள். என்னைப் பிடிச்சுத் தரச் சொல்லி அப்பாவை விடுவிச்சாங்கள். அதோட அப்பா தலை மறைவானவர்தான்.  எப்பவாவது இரவோட இரவா ஊருக்கு வந்து தான் உயிரோட இருக்கிற விசயத்த அப்பம்மாக்குச் சொல்லிப் போட்டு போடுவார்.

கடைசியில பொடியள் எங்கட இடத்தை விட்டுப் பின் வாங்க வேண்டிய நிலை. நான் கொஞ்ச தூரம் இடம்பெயர்ந்து போனன். பிறகு சனத்தோட சனமா ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ள வந்தன். அங்க அனுபவிச்சத சொல்லத் தேவையில்லை. நாலு மணிக்கெழும்பி குழிச்சாத்தான் நல்ல நிலையிலுள்ள தண்ணியில குளிக்கலாம். சாப்பாடு தண்ணி உடுப்பு வசதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அதுக்குள்ள இருந்து நான் எப்பிடியும் உ/த சோதினை எடுக்க வேணுமெண்டு முடிவெடுத்தன். படிக்கிற வசதி செய்து தரச் சொல்லி எத்தினை பேரைக் கெஞ்சினன். நான் மட்டுமில்லை என்னோட சில பொடியங்களையும் சேத்துக் கொண்டு மண்டாடினன். பல பெரியாக்கள் வந்து அது செய்யலாம் இது செய்யலாம் எண்டு அறிக்கை மட்டும் விட்டுட்டு போவினம். எதுவும் நடந்ததில்லை. கொஞ்சக் கொஞ்ச வசதி வாய்ப்புகள் படிக்கிறதுக்கு கிடைச்சது. அதுக்கு நன்றி சொல்லியே ஆகவேணும்.

நான் படிக்கிற பொடியன் எண்டு சொன்னபடியாத்தான் ஆமி விசாரணைக் கெடுபிடிகளிலேந்து ஓரளவுக்கேனும் விடுதலை கிடைச்சுது. அதுக்குள்ளேந்து படிக்கேக்க எங்கட மெத்தப்படிச்ச சில தமிழர்களே சொன்னாங்கள் நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறாயெண்டு. இருந்தாலும் என்ர வைராக்கியத்தை நான் கை விடேல்ல.

நான் படிக்கிறதுக்கு எடுத்த முயற்சிக்கு சின்ன உதாரணம். முகாமுக்குள்ள வந்து போற அண்ணாமார் அக்காமர் சிலரைப் பிடிச்சு எனக்கிருந்த சில சந்தேகங்களைத் தீக்கிறதுக்கு ஆசுப்பத்திரியில ஆசிரியர் சிலரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தன். ஏற்பாடு முடிஞ்சாப்பிறகு நான் ஆசுப்பத்திரிக்கு முகாமிலேந்து போக வேணுமெண்டா தமிழ் வைத்தியர் எனக்கு வருத்தமெண்டு உறுதிப்படுத்த வேணும். முதல் நாள் காச்சலெண்டு போய் காட்டினன். வைத்தியர் போக விடேல்ல. ரண்டாம் நாள் வைத்தியரட்டைப் போய் உண்மையைச் சொன்னன் படிக்கிறதுக்காகத்தான் நான் போக வேணுமெண்டு. வைத்தியர் நக்கலா நாலு கதையும் சொல்லி, படிச்சுக் கிழிச்சது காணுமெண்டு திட்டி போகேலாதெண்டு சொன்னார். இப்பிடிப் பல முயற்சி செய்து முகாமுக்குள்ள கிடைச்ச வசதியைக் கொண்டு படிக்கோணுமெண்ட வெறியில படிச்சன். உ/த பரீட்சை மண்டபத்தில நான் ஒருத்தன் தான் கணிதப் பிரிவு. எனக்காக நாலு பரீட்சை மேற்பார்வையாளர்கள்.

சோதினை முடிவில கணிதப்பிரிவில நல்ல பெறுபேறுகளை எடுத்ததால தகுதியடிப்படையில் மொறட்டுவை கம்பஸ் பொறியியல் பீடம் கிடைச்சுது. இஞ்ச வந்தா ஆங்கிலத்தில விரிவுரைகள். எனக்கு சரியாப் புரியேல்ல. நாலு வருசத்துக்குப் பிறகு ஒரு வகுப்பறையிலேந்து ஆசிரியர் படிப்பிக்க பாடம் படிக்கிறன். எனக்கு நித்திரை நித்திரையா வந்துது. என்னால சமாளிக்க முடியேல்ல. கம்பஸ் தொடங்கி மூண்டு மாசத்துக்குள்ள சோதினை. அந்த சோதினை தான் நான் படிக்க வேண்டிய பொறியியில் பிரிவைத் தீர்மானிக்கப் போகுது.

நான் எதிர்பார்த்த துறை எனக்குச் சில வேளை கிடைக்காமல் போகலாம். ஒரே காரணம் ஆங்கிலத்தில பாடங்களை என்னால தொடர முடியாமல் போனதுதான். ஆங்கில மொழியில ஒரு பாடத்தை படிக்கிறதுக்குரிய ஆயத்தத்தை செய்யுறதுக்கு அவகாசம் காணாததுதான். ஆனால் நீங்களெல்லாரும் என்னைப் பாத்து சொல்லுவீங்கள் வன்னி மாவட்டத்திலேந்து வந்தவனுக்கு ஒண்டுமே தெரியாதெண்டு. ஆனா அதப் பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வளவு முன்னேறி வந்த எனக்கு இப்பிடியொரு சிக்கல் வருமெண்டு கனவில கூட நினைச்சதில்லை. இருந்தாலும் மேலும் மேலும் படிக்க வேணுமெண்டிருக்கிற என்ர ஆர்வத்தை ஆராலையும் தடுக்கேலாது....

-------------------------------------------------------------------------------------------------------------

நான் சந்தித்த நண்பர்களில் இவனும் ஒருத்தன். இவனுடைய திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால் இவனை இந்த சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாதது என்னைப் பாதித்தது. அவனுடைய வாழ்க்கையை அவனாக நான் இங்கே எழுதியிருக்கிறேன். நிறைய இருந்தாலும் முடிந்தளவு சுருக்கியிருக்கிறேன். 

எனக்குள்ளே எழுந்த சில கேள்விகள் :
  • இனங்காணப்படாத திறமைசாலிகள் இவனைப் போல பலர் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எவ்வாறு அவர்களை இனம் காணுவது?
  • மின் விளக்கு வெளிச்சத்தில் படிச்சு, அம்மா சத்துணவு சமைச்சுத் தர, நேரத்துக்கு நேரம் சாப்பாடு சமைச்சு - தேத்தண்ணி போட்டுத் தர, மணித்தியாலத்துக்கொரு பிரத்தியேக வகுப்பு வச்சு, நாளுக்கொரு பயிற்சி சோதினை வச்சு, சந்தேகம் தீர்க்க வாத்திமார் டசின் கணக்கில இருக்கப் படிச்சு நல்ல பெறுபேறெடுத்த நம்மவர்கள் எங்கே? சுயமாக உ/த கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறெடுத்த இவனைப் போன்றவர்கள் எங்கே? 
  • இவர்களுடைய அறிவுத் திறமை இப்பிடியே மழுங்கடிக்கப் பட்டு விடுமோ? 
  • மிகத் திறமையான இவனைப் போன்றவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்கலையில் திறமையற்றவர்களாக கணிக்கப்படுகிறார்களே... ஒருத்தனின் திறமையை எவ்வாறு சரியாக மதிப்பிட முடியும்?

-தனஞ்சி.