Wednesday, March 17, 2010
நகைச்சுவையுணர்வு
Thursday, June 18, 2009
நம்மால் முடியுமா?
இன்று வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி, அவர்களுக்கு நாம் எவ்வாறான வழிகளில் உதவலாம் என்பது பற்றிச் சிந்தித்து செயலாற்ற இன்னும் நாம் துணியவில்லை. யுத்தத்தின் கொடூரத்தால் மரணத்தின் வாசலையே முத்தமிட்டவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? நாம் உண்மையை அறிய முற்படவில்லை. எல்லோருக்குமான பொது நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட ஒன்று, இன்று ஒரு சில சமூகத்தவர்களின் தலையில் போய் பொறிந்திருக்கிறது. இன்று முள் முடியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். உலகெங்கணும் பரந்து வாழும் தமிழர்களிடையே இன்று தாங்கொணாத் துயரம் அனுபவிப்பவர்கள் அவர்களே. தங்களுக்கான துயரமல்ல அது. அவர்கள் அதை விரும்பிச் சுமக்கவும் இல்லை. நாங்களும் சுமக்க வேண்டிய எங்களுடைய பங்கையும் சேர்த்தல்லவா அவர்கள் சுமக்கிறார்கள். இறுதி வரை நாங்கள் சுமந்த நம்பிக்கையையே அவர்களும் சுமந்தார்கள். அதுக்காகவே வாழத்துணிந்தார்கள். தியாகங்கள் செய்ய தயங்காதவர்களாக விளங்கினார்கள். வா வென்று அழைக்கும் பரந்து விரிந்த வன்னிப் பரப்பில் வந்தவர்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கைகள் அவர்களுடையது. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை செய்து பசியின்றி வாழ்ந்தவர்கள் அவர்கள். இன்று என்ன நிலை?
உணவு உண்ணுகிறார்களா? போதியளவு கிடைக்கிறதா? நீர் கிடைக்கிறதா? கொடுக்கப்பட்ட குடில்களில் வசிக்க முடிகிறதா? அத்தியாவசிய பண்டங்கள் கிடைக்கிறதா? உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா? அவர்களின் உடல்நிலை என்ன? மனநிலை என்ன? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நாம் பதில் தேட முயலவில்லை.
இத்தனை கேள்விகளுக்கும் எங்களுடைய பதிலாக அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். எங்களை உள்ளுக்குள் விடுவதில்லையே. எங்களை அனுமதித்தால் அது செய்வம் இது செய்வம். இப்படித்தான் எம்மில் பலர் பேசிக் கொள்கிறோம். ஆனால் அதற்குரிய முயற்சிகளை எள்ளளவேனும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உண்மையான அக்கறை எமக்கு அம்மக்கள் மீது இருந்திருந்தால் இந்நேரம் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் சின்னஞ்சிறு உதவிகளை விட பெரிய அளவில் உதவியிருக்கலாம். சந்தர்ப்பம் கிடைப்பதென்பது மிக மிக அருமையானது. அதை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே பெறுபேறு தங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள். அவர்கள் சேர்ந்த நிதியை உரிய முறையில் உதவிகள் தேவையானவர்களுக்கு வழங்கியதாக அறிய முடிகிறது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கிறீஸ்தவ மாணவர் அமைப்பு பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு அவற்றை உரியவர்களிடம் சேர்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அறிய முடிகிறது. அதை விட கொழும்பிலுள்ள பாடசாலைகளினூடாக தமிழ் ஆசிரியர்கள் முகாம்களில் வாடும் இவ்வருடம் உயர்தரம் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை மேற்கொண்டதையும் அறிய முடிகிறது. அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் அப்பியாசப் புத்தகங்கள் பேனை பென்சில் போன்றவற்றை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பாதிக்கப்பட்ட மாண்வர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். கொழும்பில் பாடசாலைகளில் கற்பிக்கும் தனியார் கல்வித்துறையில் பிரபலமான ஆசிரியர்கள்கூட தங்களாலியன்ற கற்பித்தலையும் தாம் வெளியிட்ட பயிற்சிப்புத்தகங்களையும் இலவசமாக வழங்கியது பாராட்டுக்குரியது. அவர்கள் நேரடியாக மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நம்மில் பலர் கேட்கலாம் முகாமில் வசிப்பவர்களுடைய நிலைக்கு இப்ப படிப்பித்தலா முக்கியம் என்றும் இரண்டு மாதக் கற்பித்தலுடன் சிறந்த பெறு பேறு எடுக்க முடியாது, இது பயனற்ற வேலை என்றும்.
அதுவல்ல இன்றைய தேவை, பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்கள் தம் பாரங்களை பகிர்ந்து மன உளைச்சல்களை இறக்கி வைத்து நாம் ஆறுதல் கூறவேண்டும். தம்மீது அக்கறை கொண்ட மக்கள் சமூகம் ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தமக்கு உதவத் தயாராக இருக்கிறது என்ற அரவணைப்பை நாம் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மனக் காயங்களை ஆற்றுவதற்கு உதவ வேண்டும். அதன் மூலம் எதிர்கால வாழ்க்கை மீது அவர்களுக்கு நம்பிக்கையையும் மற்ற தமிழ் உறவுகள் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையையும் துளிர்விட வைக்கலாம். இவையனைத்தையும் நேரடியாகச் சென்று நாம் வழங்க முடியாத சூழ்நிலையில் மிக மிக அருமையாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏன் சரிவரப் பயன்படுத்தக் கூடாது? சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கக் கூடியவர்கள். நேரடியாக உதவிகளை வழங்கக் கூடியவர்கள். உதவிகள் நேரடியாகக் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
கற்றல் உபகரணங்களை பாட நூல்களை பயிற்சிப் புத்தகங்களை இலவசமாக வழங்க விரும்புபவர்கள் பாடசாலைகளில் கற்பிக்கும் முகாம்களுக்குச் செல்லவிருக்கும் உயர்தர ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அன்பளிப்புகளை வழங்கலாம். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேசக்கரம்-2 ஆரம்பிக்க இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அதற்கு நிதியுதவியை வழங்கலாம். கொழும்பு மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் ஒரு முறை பொருள், நிதி சேகரிப்பில் ஈடுபடலாம். அல்லது பல்கலைக்கழக அனுமதியுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று இலவச கற்பித்தல் செயற்பாடுகளை கருத்தரங்குகளை செய்யலாம். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தோடு நாம் தொடர்புகளை உருவாக்க முடியும். அவர்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும். இலங்கையின் கல்வித்துறையில் உயர்ந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இதனைச் செய்யுமா? அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் இச்செயற்பாடுகளில் தாங்களாகவே முன்வந்து ஈடுபடுவார்களா? அதற்கு உதவியாக அவர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக முகாம்களுக்கு வெளியே வாழும் தமிழ் சமூகம் இருக்குமா? நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயற்படும் நேரம் இதுதான். வெட்டிப் பேச்சுக்களும் வீர வசனங்களும் பேசும் நேரம் இதுவல்ல. முழு மூச்சுடன் செயற்படும் நேரமே இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்ற நம்மால் முடியுமா?
Wednesday, April 15, 2009
தமிழன் என்பவன்
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாயக நிலப்பரப்புகள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களுடைய வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள். இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் முஸ்லீம்கள் என்று பிரிவுகள் உண்டு என யாவரும் அறிவீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில் தமிழர் முஸ்லீம் என்ற பிரிவுகள் தவறானவை. இவர்கள் எல்லோருமே தமிழர்கள். ஏனெனில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவருமே தமிழர்கள்.
அப்படியானால் இந்த முஸ்லீம்கள் யார்? அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்பது போல கிறீஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் கிறீஸ்தவர்கள் எனப்படுவது போல இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் அல்லது முஸ்லீம்கள் எனப்படுவர். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பராகில் அவர்களும் தமிழர்களே. என்னுடைய நண்பர்கள் உட்பட பலர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
இந்தியாவில் இலங்கையில் உள்ளது போன்று தமிழ் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இல்லை. யாவரும் தமிழர்களே என்ற ஒற்றுமை காணப்படுகிறது. ஆனால் இந்து முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. ‘ஒஸ்கார் தமிழன்’ என்றுதான் ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டுகிறார்களே தவிர ‘ஒஸ்கார் முஸ்லீம்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. இதே போல கலாநிதி அப்துல் கலாம், கவிக்கோ அப்துல் ரஹ்மான் என்று இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆனால் தமிழர்கள் என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுகின்ற பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப் படுத்தவே விரும்புகிறார்கள்.
ஆனால் இலங்கையில் அப்படியில்லை. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களை முஸ்லீம் என்று வேறொரு இனமாகவே காட்ட முனைகிறார்கள். அதே நேரம் மற்ற மதங்களைப் பின்பற்றுகின்ற தமிழர்கள், முஸ்லீம்களும் தமிழர்களே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இந்தப் பாகுபாடுகள் எப்படித் தோற்றம் பெற்றவையாக இருக்கலாம்? எனது கருத்துப்படி பெரும்பாலும் அரசியல் வாதிகளின் அரசியல் நலனுக்காகவே இந்தப் பிரிவு தோற்றம் பெற்றிருக்கலாம் என நம்புகிறேன். அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் பிளவு விரிவடைந்ததாகக் கூட இருக்கலாம். எது நடந்திருந்தாலும் எல்லோரும் தமிழர்களே என்பதை யாவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
புகையிரதப் பயணம் ஒன்றின் போது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் (முஸ்லீம் அடங்கலாக) எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதையும் பல கிராமங்களினூடாக (இந்துக்கள் முஸ்லீம்கள் வசித்த) துவிச்சக்கர வண்டியோடி திறந்த வெளியொன்றிலே எல்லோரும் ஒன்று சேர இருந்து சினிமாப் படங்கள் பார்த்ததையும், ஒன்று சேர்ந்து கோவில் நிகழ்வுகளில் பங்குபற்றியதையும் எல்லோருமாகச் சேர்ந்து போட்டியாகப் பிறை பார்ப்பதையும் நினைவு கூர்ந்து அது ஒரு பொற்காலம் என்றார்.
அரசியல்வாதிகளே இன்றைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. இன்றைய கிழக்கின் நிலை என்னவெனில் முஸ்லிம் கிராமங்களுக்குள் சுதந்திரமாக இந்துக்களோ கிறீஸ்தவர்களோ நுழைய முடியவில்லை. அதுபோல மறுதலையாக முஸ்லீம்கள் மற்றக் கிராமங்களுக்குள் நுழைய முடிவதில்லை.
இன்றைய காலத்தின் தேவை என்னவெனில் தமிழர்களுக்கிடையிலான ஒற்றுமை. அவர்கள் இந்துக்களோ முஸ்லீம்களோ கிறீஸ்தவர்களோ என்பதல்ல. இன்றைய யதார்த்தத்தை சிந்தித்தால் தமிழர்களுக்கிடையிலான பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஒரு பகுதியினரை இன்னுமொரு பகுதியினருக்கெதிராகத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களை நாங்களே அடித்துக் கொண்டு பிரிவினையை வளர்த்துக் கொள்வதை ஊக்குவித்து தமது நலனுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையை இனி வரும் காலங்களில் நிறையவே எதிர்பார்க்கலாம். தமிழர் அனைவரினதும் தாகம் ஒன்றாக இருந்த போதும் இன்றைய அரசியல்வாதிகள் எமக்கிடையே குழப்பங்களை உண்டு பண்ணி திசைதிருப்பி விடுகிறார்கள். அதை சரியாகப் புரிந்து கொள்ளாத, தமிழர்களுக்கிடையிலேயே புரிந்துணர்வு இல்லாத நாங்கள் எங்களை நாங்களே அடித்துக் கொள்கிறோம்.
இதற்கு நாம் மத ரீதியாக வேறு பட்டாலும் தமிழன் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும். நாம் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. எமக்கிடையிலான முரண்பாடுகள் வளர்க்கப்பட வேண்டியவையல்ல. இதனை முஸ்லீம்கள் மட்டுமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிற மதத்தவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலில் எமக்கிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்ப்போம். அதுவே நாளைய சந்ததியினருக்கு நல்லதை விட்டுச் செல்ல வழி வகுக்கும். இல்லையேல் எமக்கிடையே சண்டைகளை வளர்த்துக் கொண்டு பழியையும் பாவத்தையுமே விட்டுச் செல்வோம். சந்தோசத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு நித்தம் நித்தம் பயந்து பயந்து எம்முறவுகளே எம்மை சாகடிப்பார்களோ என்று வாழ்வது முட்டாள்தனம். நேருக்கு நேரே பேசுவதன் மூலமும் விட்டுக் கொடுப்பின் மூலமும் எங்களுக்கிடையிலான கசப்புணர்வைக் களைந்து விட்டு ஒன்று சேர்வதே சரியானதாக இருக்கும். அதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும்.
மணிரத்தினத்தின் பம்பாய் படத்திலே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின்(?) வரிகளில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனமிங்கே பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
Wednesday, April 08, 2009
மெல்லத் தமிழ்...
முதலாவதாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்து, மெது மெதுவாக தமிழ் மொழியானது அழிந்து போகும் என்பதாகும். இங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் ‘அப்படியானால் தமிழர்களின் நிலை என்ன?’ என்பதாகும். தமிழர்களும் அழிந்து போவார்கள்தானே அதிலென்ன சந்தேகம்? என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் தமிழர்களாலேயே தமிழ் மொழி அழிக்கப் படலாம் என்பதை பாரதியார் முன்கூட்டியே உணர்ந்திருப்பாரோ? அதாவது தமிழர்கள் தாங்களாகவே அந்நிய நாகரிக மோகத்திற்கு ஆட்பட்டு அந்நிய மொழியை பேசி, தமிழனாலேயே தமிழ் மொழி அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சி பாரதியார் மேற்சொன்னவாறு பாடினாரோ என்று கூடச் சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் இன்றைய சமகால நிலை அதனைத்தான் எடுத்துக் கூறுகின்றது.
அடுத்ததாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கருத்து மெதுவாக தமிழ் இனி அச்சாகும் என்பதை சேர்த்து சொன்னால் இனிச்சாகும் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அதாவது இனி வரும் காலங்களில் தமிழ் மொழி ஆக்கங்கள் அதிகமாக உருவாக்கபட்டும் பழந்தமிழ் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டும் அச்சுக் கூடங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்பதையே பாரதியார் தனது காலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். இன்று தமிழ் மொழி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளதைப் போல என்கிறார்கள்.
அதே கூற்றுக்கு இன்னுமொரு கருத்தும் கூறப்படுகிறது. மெல்ல - வாயால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கத் தமிழ் மொழியானது மிகவும் இனிமையானதாக மாறும் என்பதாகும். வெல்லங்களை வாயினில் போட்டு அரைக்கும்போது மென்மேலும் இனிமையாவதைப் போல. பாரதியாரின் கூற்றுக்கு என்னைக் கவர்ந்த கருத்தும் இதுவே. இப்பிடித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இன்றைய யதார்த்தத்தை நோக்கும்போது உண்மை அதுவில்லையெனத் தோன்றுகிறது. கசப்பானதுதான் ஆனாலும் அதுதான் உண்மை.
அதாவது முதலாவதாக விவரிக்கப்பட்ட கருத்தே இன்றைய நிலைக்குப் பொருத்தமானதாகும் என்பது எனது கருத்து. தமிழருக்கு என்றொரு நாடு இல்லை என்பதை விட தமிழர்களைக் காப்பதற்கு உலகின் எந்த ஒரு இனமுமே முன்வரவில்லை என்ற இன்றைய நிலையை சிந்திக்கும்போது தமிழினம் அழிக்கப்படுவது எதிர்பார்க்கக்கூடியதொன்றாகிறது. ஈழத்திலே தமிழினப் படுகொலைகள் நடந்தேறுகின்றதைப் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடங்கள் எல்லாவற்றிலும் தெளிவாக எடுத்து இயம்பியும் உடனடியாக உதவி செய்ய, படுகொலையைத் தடுத்து நிறுத்த எவருமே முன்வரவில்லை. புலத்திலுள்ளவர்கள் தெருத்தெருவாக ஒவ்வொரு இடமும், தாம் யாரைத் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ யாருக்காக தம் உடலை வருத்தி உழைப்பை வழங்குகிறார்களோ அவர்களிடம் உதவி கேட்கிறார்கள். உடனடியாக எவரும் எமது கவலையைப் போக்க முன்வரவில்லை. அழிந்து போன பின் அழுது கண்ணீர் விட்டு என்ன பயன்? அதற்காக நாம் சோர்ந்து விடாது ஒன்று சேர்ந்து வென்றெடுப்பதுதான் வழி என்பது வேறு விடயம்.
ஒரு பக்கம் தமிழர்களைக் காக்க மற்றவர்கள் முன்னிற்கவில்லை என்றால் மறுபக்கம் தமிழர்களாலேயே தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு அழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழனுக்குத் தமிழனால்தான் அழிவென்பது எழுதி வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பாக இருப்பது எம்மினத்தின் இன்னுமொரு சாபக்கேடு. முன்னைய தமிழர் வரலாற்றை எடுத்து நோக்குவோமானால் கூட வீரம், செல்வம், காதல் என்றெல்லாம் பெருமையாகப் பேசுவோம். ஆனால் ஒற்றுமையாக சேர்ந்து சாதித்த விடயங்கள் என்பவை அரிதே. எல்லா வரலாற்றுக் கதைகளிலும் தமிழனுக்கு தமிழனே வில்லனாவான். இந்த மனப்போக்கை மாற்றவே முடியாதா? பொறாமையும், தான் மட்டுமே முன்னுக்கு வர வேண்டும், தானே தலைமை தாங்க வேண்டுமென்ற மனப்பாங்கும், தனக்கு மட்டுமே எல்லாம் உரித்துடையது என்ற எண்ணமும் இருக்கும் வரை இந்த மனப்போக்கு மாறாதது.
இன்றைய அந்நிய நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் தமிழ் மொழியை தமிழர்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்களுக்கிடையில் உரையாடுவதற்கே வெளிப் பகட்டுக்காக அந்நிய மொழிகளில் உரையாடுகிறார்கள். எங்களுக்கு அந்த மொழியும் தெரியும் என்று பந்தா வேறு. ஆங்கிலம் படிக்கத்தான் வேண்டும். ஆங்கிலேயனுடன் சவால் விடக்கூடிய நிலைக்கு கற்கத்தான் வேண்டும் நான் மறுக்கவில்லை. ஆங்கில மொழியில் ஆங்கிலேயனுடன் போட்டி போட்டு வெல்ல வேண்டும். அப்போதுதான் எங்களுடைய திறமைகள் வெளிக் கொணரப்படும். ஆனால் எம்மினத்துக்கிடையில் உரையாடுவதற்கு எதற்கு அந்நிய மொழி? இசைப்புயல் ரஹ்மான் உலக மேடையிலேயே தமிழில் பேசினார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் நமது வீட்டிலேயே தமிழில் கதைக்கிறோம் இல்லையே, பிறகு எப்படி தமிழ் மொழி அழியாது காக்கப்படும்? இன்று சின்னப் பிள்ளைகளுக்கு பெற்றோர் ‘இந்த மாமாவுக்கு “ருவிங்கிள் ருவிங்கிள்..” பாடிக் காட்டுங்கோ’ என்று சொல்கிறார்களே தவிர “நிலா நிலா ஓடி வா” பாடிக் காட்டுங்கோ என்று சொல்வதில்லை என்ற என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் தான் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறான சின்னச்சின்ன அன்றாட விடயங்களில் தமிழை மறந்து விட்டு மேடையில் அலங்காரத்துக்காக பேசினால் மட்டும் தமிழ் காக்கப்பட்டு விடாது. நாம் ஒவ்வொருவரும் தமிழில்தான் கதைப்போம் என்று நிச்சயமான முடிவெடுத்து செயற்படுத்துவோமானால் தமிழுக்கு தமிழர்களால் ஏற்படும் அழிவைத் தடுக்கலாம். இது பெரிய விடயமேயில்லை. ஆனால் ஏன் இதனை செயற்படுத்துகிறோம் இல்லை என்பது எனக்கு விளங்கவில்லை.
Friday, April 03, 2009
கருத்துக்களம்.
ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமையிருக்கிறது. அதற்காக விடயத்துக்குப் பொருத்தமில்லாத கருத்துக்களை கூறுவது நல்லதல்ல. குறித்த ஒரு விடயம் சம்பந்தமான கருத்துக்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகளுடன் மனிதாபிமான அடிப்படையிலும் மாற்றமடையக் கூடியவை.
இதுதான் இறுதியானதும் உறுதியானதுமான கருத்து என்று எதையுமே சொல்ல முடியாது. பல பக்கங்களிலிருந்து பல தரப்புகளிடமிருந்து வேறு வேறு கருத்துக்கள் வெளிப்படலாம். ஆனாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான கருத்துக்கள் இல்லாமலுமில்லை. அதாவது ஒரு விடயம் சம்பந்தமாக விவாதித்துக் கொண்டு செல்லும்போது சில பொதுவான விடயங்களில் விவாதிப்பவர்களிடையே இணக்கப்பாடு எட்டப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணக்கம் காணப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்ற கருத்துக்களை விவாதிப்பவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதனைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
ஆனால் இன்றோ பலர் அப்படியில்லை. உதாரணமாக ‘தமிழை வளர்ப்போம்’ என வாய் கிழிய கத்துபவரே அந்நிய மொழியிலேயே தமிழர்களுடன் உரையாடுவார். ஊருக்குத்தானே உபதேசம் உனக்கில்லை என்ற தொனியிலான விடயங்கள் நிச்சயமாகத் தவிர்க்கப் பட வேண்டியவை.
அதை விட மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கின்ற மனப்பாங்கு எம்மிடம் இல்லவேயில்லை என்றால் கூட மிகையாகாது என்றுதான் தோன்றுகிறது. நான் சொன்னதுதான் சரி என்று ஒற்றைக்காலில் நிற்பவர்கள் பலர். அதிலும் கவனிக்கப் பட வேண்டியது என்னவெனில் தான் கூறியது தவறான கருத்து என்று கூறியவரே உணரும் நிலை வந்தாலும் நிலமையை மழுப்பிச் சமாளிப்பாரே தவிர மற்றவர் கருத்துக்களை மருந்துக்கும் ஏற்கமாட்டார். இந்நிலை நிச்சயமாக தவிர்க்கப் பட வேண்டியது. ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை சிறு வயது முதலே வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அம்மனப்பாங்கு வளர்க்கப்பட வேண்டும்.
‘கருத்துக்களம்’ என்னும் பகுதியினூடாக நான் கற்ற, அனுபவம் மூலம் பெற்ற, அவதானித்த, நண்பர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை எழுதலாம் என்றிருக்கிறேன். இந்தப் பகுதியில் நான் எனது கருத்துக்களையே சொல்ல இருக்கிறேன். அவை பெரும்பாலும் எங்கிருந்தோ பெறப்பட்டவையாக இருக்கும். ஆனால் என்னைக் கவர்ந்தவையாகவோ என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவோ இருப்பதனால் எழுதுகிறேன்.
இங்கு கூறும் கருத்துக்களிலிருந்து நான் ஏதோ விதிவிலக்கானவனென்றோ நான் இவற்றுடன் சம்பந்தப்படாதவன் என்றோ நான் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சரியென்ற தோரணையிலோ நான் எழுத முனையவில்லை. இந்தப் பகுதியின் மூலமாக என்னுடைய எதிர்பார்ப்பு என்னவெனில் இப்பகுதியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும். விடயத்துக்குப் பொருத்தமில்லாக் கருத்துக்கள், குறிப்பிட்ட தனி நபரையோ தனிக் குழுவையோ பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
அது மட்டுமில்லாமல் சொல்லப்படும், மற்றவர்களால் பின்னூட்டப்படும் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தயவுசெய்து அதனைப் பின்பற்றி நடக்க முயற்சி செய்யுங்கள். வாசிப்பதோடு நின்று விடாதீர்கள். நிச்சயமாக இதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். வாழ்வை வளமாக்கலாம்.