Showing posts with label பட்டத சொல்லுறன். Show all posts
Showing posts with label பட்டத சொல்லுறன். Show all posts

Friday, October 04, 2013

அஞ்சாமாண்டு பெறுபேறும் விளைவுகளும்

எனக்கு இன்னமும் விளங்காமல் இருக்கிறதுகளில ஒண்டு எங்கட சனம் ஏனுந்த அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறாங்கள் எண்டதுதான். பத்திரிகையில ஒரு விளம்பரம் அஞ்சாம் ஆண்டு சித்தியடைஞ்ச ஒருவருக்கு பட்டமளிப்பு விழாவுக்கு அணியிற மாதிரி ஒரு தொப்பியும் அதற்குரிய ஒரு உடுப்பும் போட்டு உறவினர்களால வாழ்த்து விளம்பரம் போடப்பட்டிருந்தது.

தனிப்பட்ட விளம்பரம் போடுறது அவரவர் உரிமை, அதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தான் நான் யோசிக்கிறேன்.  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் வறிய மாணவர்கள் மட்டுமே மாதாந்த உதவி கிடைக்கும். பலருக்கு கிடைப்பதில்லை. இதனை எந்தவொரு பெற்றோரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சித்தியடையாத மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பார்கள். இதுவே பல பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக அமைவதுமுண்டு.  இதில சித்தியடையாவிட்டால் வாழ்க்கையே தொலைஞ்சு போகுமெண்ட பிழையான எண்ணம் மாணவர்கள் மத்தியில விதைக்கப் படுகிறது.

சுயமாக கற்றலை இன்னும் உணராத வயதிலுள்ள மாணவர்களுக்கு கல்வி மேல் வெறுப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். கல்விக்கு முக்கியம் குடுக்கப்படலாம் தான் அதுக்காக அதில்லையெண்டால் எதுவுமேயில்லை எண்ட மாயை உருவாக்கப்படக்கூடாது. அதுவும் சிறு வயதிலேயே... 

பெற்றோர்களே, உறவினர்களே அஞ்சாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்தளவுக்கு பெரிசாக்கி விளம்பரம் பண்ணுவதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குறைந்த புள்ளியெடுத்தவர்களை ஒதுக்கி வைக்கும் மனப்பாங்கையும் மற்றவர்களின் மேல் வெறுப்பு, பொறாமை காழ்ப்புணர்ச்சிகள் வளர்வதையும் ஊக்குவிக்காதீர்கள். இந்த பெறுபேற்றை வைத்து நான் படிப்பதற்கு பொருத்தமற்றவன் என எந்தவொரு மாணவனோ அல்லது எனது பிள்ளை படிப்பதற்கு லாயக்கில்லாதவன் என எந்தவொரு பெற்றோரும் முடிவெடுப்பார்களாயின் அதுவே அவர்களது வாழ்க்கையின் அழிவின் ஆரம்பமாகும். அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணர்வதேயில்லை. 

- தனஞ்சி

Thursday, July 18, 2013

யாழ் பொறியியல் பீடமும் எங்கட சனத்தின்ர கதையும்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது ஆரம்பிப்பது நல்லதா இல்லையா என்ற விவாதம் இன்னமும் முற்றுப் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒருவர் இது சம்பந்தமாக விவாதித்ததை கேட்டு அதிர்ந்து போனேன்.

“எங்கட பொடியளின்ர படிப்பை பாழாக்குறதுக்குத் தானே தொடங்குறீங்கள். எங்க தொடங்கப் போறீங்கள்? கிளிநொச்சியில வெறும் காணி தானே இருக்கு. ஒழுங்கான கட்டிடங்கள் இல்லை. ஆய்வுகூட வசதிகள் இல்லை. அதுக்குள்ள கொண்டு போய் இஞ்சினியர் பொடியளைப் பாழாக்கப் போறியள். அவங்கள் படிச்சு முடிச்சு வெளியேற 8 வருசம் செல்லப் போகுது. இவங்கள் வெளியேறேக்க அவனோட மற்ற கம்பசுக்குப் படிக்கப் போனவங்கள் வேலைக்கு போய் 4 வருசம் அனுபவம் எடுத்திடுவாங்கள். எங்கட பொடியளை நீங்களே கெடுத்துக் குட்டிச் சுவராக்குங்கோ... உங்களுக்கென்ன சும்மா இருக்க சம்பளம் வரும்தானே... உங்கட பாட்டை நீங்கள் பாத்துக் கொள்ளுவீங்கள். படிக்க வாற பொடியளைப் பற்றி உங்களுக்கென்ன அக்கறை? எங்கட படிப்பை அழிக்கிறதுதானே அவங்கட நோக்கம். அதுக்கு நீங்களும் துணை போங்கோ... எங்கட தமிழ் சனம் அழிஞ்சது உங்களை மாரியானாக்களால தானே...”

பொறியியல் பீடம் ஆரம்பிக்கிறது நல்லதோ கூடாதோ எண்ட விவாதம் காலாவதியாகி விட்டது. ’என்னாது காந்தி செத்துட்டாரா?’  என்று இப்போது கேட்பதைப் போன்றது. எனக்குத் தெரிந்து 1974ம் ஆண்டிலிருந்து பொறியியல் பீடம் ஆரம்பிப்பது பற்றிய முன்னெடுப்புகளும் விவாதங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன.    நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ அரசாங்கம் பொறியியல் பீடத்தை ஆரம்பித்தே தீரும். நான் விரிவிரையாளனாக சேருறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகுது. பொறியியல் பீடம் தொடங்குவது நல்லதோ இல்லையோ எண்ட விவாதத்தை இப்ப கதைக்கிறது பொருத்தமில்லாத விசயம், இது பலருக்கு ஏன் விளங்குதில்லை?

பொறியியல் பீட கட்டட திட்ட வரைவு


பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொள்கிறது. ஆரம்பிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனை நானும் நீயும் வாக்குவாதப் பட்டோ, அறிக்கை விட்டோ நிறுத்த முடியாது எண்ட நிலைக்கு வந்து விட்டது. இப்ப நாங்கள் பார்க்க வேண்டியது, ஆரம்பிக்கப் பட இருக்கிற பொறியியல் பீடத்தை எப்பிடி முன்னிலைக்கு கொண்டு வருவது? அதுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனை நாங்கள் செய்கிறோமா என்பது தான்.

வெறும் காணியைத் தந்து கட்டிடம் கட்டித் தரலாம், வசதிகள் செய்து தரலாம் இப்ப நீங்கள் பொறியியல் பீடத்தை தொடங்குங்கோ எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கிறது எண்டால், படிக்க வாற பிள்ளைகளை எப்பிடி பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்?, அவர்களுக்கு எங்களால் முடிந்தளவு சிறப்பான கற்கை நெறிகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்ன?, எப்பிடி அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பதை அல்லது அது சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் பெறும் சிறந்த வழிமுறைகளை கையாளுவதை விடுத்து, இப்பவும் பொறியியல் பீடம் தொடங்குவது பிழை எண்டு விவாதித்துக் கொண்டிருக்க முடியுமோ? ஏன் எங்கட சமூகம் கள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்துக்குத் தேவையான விடயங்களைச் சிந்திக்காமல் திரும்பத் திரும்ப பழசையே சொல்லிக் கொண்டிருக்கிறது எண்டு இன்னும் எனக்கு விளங்கவில்லை.

பொறியல்பீடம் ஆரம்பிப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்பது எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. முறையான கற்பித்தலை முதல் ஓரிரு வருடங்களுக்கு வழங்க முடியாத நிலை இருக்கிறது என்பதும் அதனை நானோ நீயோ கதைப்பதனால் நீக்கிவிட முடியாது என்பதும் பொறியியல் பீடத்தில் இணைந்து கொண்டுள்ள அனைத்து விரிவுரையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவாக தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பிரச்சினை பிரச்சினை என்று ஒதுங்கி நிக்காமல் தெளிவாகத் தெரிந்த பிரச்சினையை துணிச்சலோடு எதிர்கொள்ளுவோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை நம்பி வரும் மாணவர்களுக்கு எங்களால் முடிந்ததை அனைத்து தரப்பினரது உதவிகளோடும் முன்னெடுப்போம். அதற்கு ஏன் எங்கட சமூகம் ஒண்டு சேர்ந்து உதவி செய்ய முன்வரக்கூடாது?

நான் விரும்பிறனோ விரும்பவில்லையோ பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படத்தான் போகிறது. நான் விரிவுரையாளனாகிறனோ இல்லையோ விரிவுரைகள் நடக்கத்தான் போகிறது. ஆரம்ப காலங்களில் மாணவர்கள் பாதிக்க்கப் படத்தான் போகிறார்கள். இவ்வளவும் வெளிப்படை உண்மைகள். இதை சொல்லிக் காட்டுவதற்கு ஒருவரும் தேவை இல்லை. இப்போது நாங்கள் சிந்திக்க வேண்டியது, கதைக்க வேண்டியது, மாணவர்களுக்கேற்படப் போகும் பாதிப்புகளை எப்பிடி குறைக்கலாம்? பாதிக்கப்படப் போகிற மாணவர்களை எப்பிடி பாதிப்புகளிலிருந்து மீட்க முடியும்?  பொறியல்பீடத்தை எவ்வாறு முன்னிலைக்கு கொண்டு வரலாம்? இதை ஏன் இன்னும் எங்கள் சமூகம் (அனைவரையும் இங்கே குறிக்கவில்லை) புரிந்து கொள்ளவில்லை? ஏன் இன்னமும் பழைய, தற்காலத்திற்கு பொருந்தாத, செல்லாத கதைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறது?

- தனஞ்சி.

Sunday, May 12, 2013

இருந்தாலும் நாங்கள் நண்பர்கள்.


தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளாந்த செயற்பாடுகளை இன்னும் இன்னும் சுலபமாக்குகிறது, வேகமாக்குகிறது என்றாலும் மனித உணர்வுகளை, உறவுகளை கொன்று புதைக்கிறது.

மெய்நிகர் நண்பர்கள் (virtual friends) 
முகப்புப் புத்தகம், கூகிள் பிளஸ் என்பவற்றின் வளர்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை, எங்களோடு நீண்ட நாள் தொலைந்து போனவர்களை இணைப்பதற்கு பயன்பட்டாலும், நட்பு என்ற மனித உணர்வை மழுங்கடிக்கவே செய்கிறது. ஆரென்று முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட என் நண்பர்கள். 

நான் இண்டைக்கு படம் போட்டால் அல்லது நிலையை எழுதினாலோ (status update) பகிர்ந்து கொண்டாலோ (share) அதுக்கு அவன்/ அவள் வந்து விருப்பம் (like) தெரிவிப்பான்/ள். நாளைக்கு அவன்/ள் படம் போட்டாலோ அல்லது நிலையை மேம்படுத்தினாலோ பகிர்ந்து கொண்டாலோ நான் அதுக்கு விருப்பம் தெரிவிப்பேன். அல்லது கொஞ்சம் மேல போய் ஏதாவது கருத்து (comment) தெரிவிப்பேன். மாறி மாறி எங்களுக்கிடையில் இது ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்தினடிப்படையில் இப்பிடி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவு தான்... அதுக்கு பெயர் நாங்கள் இருவரும் நண்பர்கள்.

ஒரு சிலர் மற்றவர்களை பொறாமைப் பட வைப்பதற்காகவே படங்களைத் தரவேற்றுவார்கள். நிலையை மேம்படுத்துவார்கள். உண்மையான அவர்களின் மன நிலையோ அல்லது சூழ்நிலையோ அவை பிரதிபலிப்பதில்லை. அப்பிடி மற்றவன் போட்டுட்டான் எண்டதுக்காகவே நானும் படம் போட்டு அவனுக்கு என்னாலையும் செய்ய முடியும் எண்டு காட்டோணும், அவன் வாங்கின விருப்பங்களின் எண்ணிக்கையளவு நானும் வாங்க வேணுமெண்டு நானும் அப்பிடியே செய்யுறது. 

அவன் ஒண்டு செய்தால் அதுக்கு ஒரு படி மேல போய் நானும் செய்து காட்ட வேணுமெண்டு செய்யுறது. உண்மையிலே அது எனக்கு தேவையா, எனக்கு பயனுள்ளதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை.  எப்போதுமே நான் சந்தோசமா இருக்கிறேன் எண்டு மற்றவனுக்கு காட்ட வேணும் எண்டதுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிறேனா, நான் எனக்கு எது பிடிக்கும்: எது சந்தோசத்தை தரும் என்று தீர்மானித்து அதன் படி வாழ்கிறேனா என்று சிந்திப்பதில்லை. இவை எங்களையெல்லாம் ஒரு பொறாமை மனப்பாங்குக்கும், மற்றவர்களுக்கு படம் காட்டும் மன நிலைக்கும், மனித உணர்வுகளை மதிப்பதை குழி தோண்டிப் புதைக்கும் மன நிலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.



நண்பனுக்கு ஒரு உதவி எண்டால் நேரடியாக சென்று என்ன வேணுமெண்டு கேட்டு செய்த நட்பு காணாமலே போகிறது. உரிமையோட உதவி கேட்க முடிந்த உதவி செய்ய முடிந்த காலத்தை நினைச்சுப் பாக்க மட்டும் தான் முடிகிறது. மச்சான் நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு அவன் உதடுகள் சொன்னாலும் அவன்ர முகத்தை பார்த்து அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பும் இருந்தது. மன பாரங்களை ஒரு நண்பனுக்கு எதிரே இருந்து சொல்லச் சொல்ல அவன் அதற்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருந்த கவலை எல்லாத்தையும் போக்கின காலம் வாராமலே போய்விடுமோ? 

முந்தியெல்லாம் நண்பனின் பிறந்த நாள் என்றால் வீடு தேடிப் போய் கொண்டாடுவோம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். இண்டைக்கு முகப்புப் புத்தகத்தில பிறந்த நாள் வாழ்த்து ஒண்டு போட்டால் போதும். அவனுடன் எங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டோம் எண்ட திருப்தி எங்களுக்குள் ஏற்பட்டுக் கொள்கிறது. வெளியிடங்களிலிருந்து ஒருத்தன் நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருந்தால் அவனை நேரில போய் சந்திச்சு அவனோட எங்கட நேரத்தை செலவழிச்சு உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளுவோம். இணடைக்கு அவன் வந்து நிக்கிறானம் எண்டால் ஓ.. முகப்புப் புத்தகத்தில பாத்தனான்... அவ்வளவுதான்... நேரில போக வேணும், சந்திக்க வேணும், சுகம் விசாரிக்க வேணும், நட்பை, உணர்வுகளை பகிர வேணும் எண்ட எண்ணம் தோன்றுவதில்லை.

மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை.  மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது. 


- தனஞ்சி.

Wednesday, May 18, 2011

அஞ்சலி!!!

மே 18...
நானிருக்குமிடங்களில்
விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன...
என் மனம்
அஞ்சலி செய்கிறது...

பி. கு: வெசக் நாளில் எழுதப்பட்டது.


Tuesday, March 01, 2011

திறமையிருந்தும்...


என்ர ஊராக்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் போலத்தான் என்ர வாழ்க்கையும் இருந்தது. என்ர வாழ்க்கையொண்டும் விதி விலக்கானதல்ல.  சொன்னா நம்பமாட்டியள் முதலாம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடம். ரண்டாம் மூண்டாம் ஆண்டு இன்னொரு பள்ளிக்கூடம். நாலாம் அஞ்சாம் ஆண்டு அடுத்த பள்ளிக்கூடம். இப்பிடி சாதாரண தரம் வரை ஒண்டைவிட்ட ஒரு வருசம் நான் பள்ளிக்கூடம் மாறின படிதான். இதில முக்கிய விசயம் என்னெண்டா ஒவ்வொரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு ஊரில. நான் அவ்வளவு குழப்படியோ எண்டு தானே நினைக்கிறீங்கள். ஆனா நான் அப்பிடியில்லை.

ஈழத்தமிழன்ர நாளாந்த நிகழ்ச்சிகளில ஒண்டான இடப்பெயர்வு என்னை இப்பிடிப் பாடாப் படுத்திப் போட்டுது. இஞ்ச கொஞ்சம் தொட்டு அங்க கொஞ்சம் தொட்டு படிப்புகளும், நாளுக்கு நாள் புதுப் புது ஆசிரியர்களும் புதுப்புது நண்பர்களும் எண்டு என்ர வாழ்க்கை போச்சுது. இருந்தாலும் படிச்சு நல்ல நிலைக்கு வரவேணுமெண்ட கொள்கையை நான் ஒரு நாளும் கை விடேல்ல.

சுனாமி என்ர வாழ்க்கையிலையும் தன்ர கை வரிசையைக் காட்டிச்சு. ஆர்ப்பரிச்சு உள்ளுக்கு வந்த கடல் அம்மாவையும் அவவின்ர குடும்பத்தில சிலரையும் காவு கொண்டது. கடல் அலை உயரமா வரூது எண்டத கண்டுட்டு நான் ஓடித் தப்பின்னான். அந்த நேரத்தில அம்மான்ர நினைப்பு வராமல் போச்சு. நான் பத்தாம் ஆண்டு படிச்சுக் கொண்டிருந்த கடைசில நடந்த இந்த கொடூரத்தால பதினோராமாண்டில முதல் நாலைஞ்சு மாசமா நான் பள்ளிக்கூடம் போகேல்ல. என்னால அந்த சோகத்திலேந்து மீள முடியேல்ல. படிப்பு வேண்டாம் எண்டு நினைச்சிருந்தனான். அப்பாவும் சொந்தக்காரங்களும்எனக்கு ஆறுதல் சொல்லி பள்ளிக்கூடம் அனுப்பி வச்சினம். சாதரண தரச் சோதினை எழுதினன். எட்டு A ஒரு B. பாழாய்ப் போன ஆங்கிலத்துக்குத் தான் B.

உ/ தரத்தில கணிதம் தான் படிக்கிறதெண்டு எப்பவோ நான் தீர்மானிச்சுக் கொண்ட விசயம். முதல் ஆறு மாசம் பள்ளிக்கூடமும் தனியார் கல்வி நிறுவனமும் போய் படிச்சுக் கொண்டிருந்தனான். அப்பத்தான், பாழாய்ப் போன வயசு பதினெட்டைத் தாண்டிச்சுது.  வீட்டுக்கொருத்தர் நாட்டைக் காக்கப் புறப்படுக எண்டு கட்டாயப் படுத்தினாங்கள். தேடித் தேடி ஆக்களைப் பிடிக்கத் தொடங்கினாங்கள். நான் மட்டுமென்ன விதிவிலக்கோ?

ஒழிச்சு வாழ வேண்டிய நிலை. ஆரம்பத்தில வேறொரு இடத்தில இருந்த நான் என்ர சொந்த ஊருக்குத் திரும்பினன். ஊரிலேந்து பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான வேற இடங்களுக்குப் போயிட்டினம். கடும் செல்லடியால ஊரில பெரிசா ஒருத்தரும் இருக்கேல்ல. எனக்கு வேற வழி தெரியாமல் செல்லடியையும் பொருட்படுத்தாமல் ஊருக்கே போனன். வலுக்கட்டாயமா ஆக்களைச் சேக்கிறதில பொடியள் மும்முரமா நிண்டதால பகல் நேரத்தில ஒருத்தரும் புழங்காத பனங்கூடலுக்குள்ள காவோலைகளை சுத்தவரக் குமிச்சுப் போட்டு நடுவுக்குள்ள படுத்திருந்தன்.

மத்தியானச் சாப்பாட்டை அப்பம்மா ஒழிச்சுக் கொண்டு வருவா. பக்கத்துக் காணிக்குள்ள வந்து வச்சிட்டுப் போவா. நான் எடுத்துச் சாப்பிடுவன். அந்த நேரம் நிறையப் படிக்கோணுமெண்ட வெறியிருந்ததால என்னட்ட கிடந்த உயர்தரப் பாடப் புத்தகங்களை என்ர பாட்டில வாசிச்சன். சுயமாப் படிச்சன். பல பாடங்கள் தொடக்கத்தில விளங்காம இருந்தாலும் படிப்பிக்கவும் சந்தேகம் கேக்கவும் ஒருத்தரும் இல்லை. ஒண்டும் செய்யேலாது. என்ர அறிவுக்கெட்டின வகையில திரும்பித் திரும்பி வாசிச்சு அவையளை விளங்கிக் கொண்டன். பயிற்சிப் புத்தகங்களோ, செய்து பாக்க சோதினைப் பேப்பர்களோ இல்லை.

இரவு கடக்கரை மணல் வெளியில கொஞ்சம் பள்ளம் தோண்டிப் போட்டு படுத்திருப்பன். ஏனெண்டா இரவிரவா வெளிச்சத்தோட வீடு காணி வழிய பொடியள் தப்பியோடினாக்களைத் தேடுவாங்கள். கடக்கரையில ரோந்து போய்க் கொண்டிருப்பாங்கள். ஊராக்களும் மாறி மாறி ஒழுங்கு முறையில ரோந்து போகோணும். நான் படுத்திருக்க ரோந்து போறவங்கள் கதைச்சுக் கொண்டு போறது வடிவாக் கேக்கும்.  எல்லாத்தையும் தாண்டித் தான் நான் ஒழிக்க வேண்டிய நிலை.

ஒரு நாள் ரண்டு நாளில்ல, ஒண்டரை வருசம் நான் இப்பிடி வாழ்ந்தன். சூரியன் உதிச்சு மறையும் வரை ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. நான் பல சந்தர்ப்பங்களில் அருந்தப்பில் பிடிபடாமல் தப்பியிருக்கிறன். அந்த நேரங்களில ஆமி அடிக்கிற மல்ரி பரல் முதல் எல்லா செல்களும் என்னைச் சுத்தி எங்கட ஊரில விழும். செவிப்பறை வெடிக்கும். எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு ஒழிச்சு இருந்தன்.

எங்கட தமிழாக்களின்ர குணம் தெரியும் தானே. தான் நல்லாயில்லட்டிலும் பரவாயில்லை. மற்றவன் நல்லாயிருந்தா பொறுக்காதே. ஆரோ ஒருத்தர் நான் ஊரில தான் இருக்கிறதா மாட்டிக் குடுத்திட்டாங்கள். என்ர அப்பாவைப் பிடிச்சுக் கொண்டு போய் என்னை ஒப்படைச்சாத்தான் விடுவன் எண்டாங்கள். என்னைப் பிடிச்சுத் தரச் சொல்லி அப்பாவை விடுவிச்சாங்கள். அதோட அப்பா தலை மறைவானவர்தான்.  எப்பவாவது இரவோட இரவா ஊருக்கு வந்து தான் உயிரோட இருக்கிற விசயத்த அப்பம்மாக்குச் சொல்லிப் போட்டு போடுவார்.

கடைசியில பொடியள் எங்கட இடத்தை விட்டுப் பின் வாங்க வேண்டிய நிலை. நான் கொஞ்ச தூரம் இடம்பெயர்ந்து போனன். பிறகு சனத்தோட சனமா ராணுவக் கட்டுப் பாட்டுக்குள்ள வந்தன். அங்க அனுபவிச்சத சொல்லத் தேவையில்லை. நாலு மணிக்கெழும்பி குழிச்சாத்தான் நல்ல நிலையிலுள்ள தண்ணியில குளிக்கலாம். சாப்பாடு தண்ணி உடுப்பு வசதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

அதுக்குள்ள இருந்து நான் எப்பிடியும் உ/த சோதினை எடுக்க வேணுமெண்டு முடிவெடுத்தன். படிக்கிற வசதி செய்து தரச் சொல்லி எத்தினை பேரைக் கெஞ்சினன். நான் மட்டுமில்லை என்னோட சில பொடியங்களையும் சேத்துக் கொண்டு மண்டாடினன். பல பெரியாக்கள் வந்து அது செய்யலாம் இது செய்யலாம் எண்டு அறிக்கை மட்டும் விட்டுட்டு போவினம். எதுவும் நடந்ததில்லை. கொஞ்சக் கொஞ்ச வசதி வாய்ப்புகள் படிக்கிறதுக்கு கிடைச்சது. அதுக்கு நன்றி சொல்லியே ஆகவேணும்.

நான் படிக்கிற பொடியன் எண்டு சொன்னபடியாத்தான் ஆமி விசாரணைக் கெடுபிடிகளிலேந்து ஓரளவுக்கேனும் விடுதலை கிடைச்சுது. அதுக்குள்ளேந்து படிக்கேக்க எங்கட மெத்தப்படிச்ச சில தமிழர்களே சொன்னாங்கள் நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறாயெண்டு. இருந்தாலும் என்ர வைராக்கியத்தை நான் கை விடேல்ல.

நான் படிக்கிறதுக்கு எடுத்த முயற்சிக்கு சின்ன உதாரணம். முகாமுக்குள்ள வந்து போற அண்ணாமார் அக்காமர் சிலரைப் பிடிச்சு எனக்கிருந்த சில சந்தேகங்களைத் தீக்கிறதுக்கு ஆசுப்பத்திரியில ஆசிரியர் சிலரைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தன். ஏற்பாடு முடிஞ்சாப்பிறகு நான் ஆசுப்பத்திரிக்கு முகாமிலேந்து போக வேணுமெண்டா தமிழ் வைத்தியர் எனக்கு வருத்தமெண்டு உறுதிப்படுத்த வேணும். முதல் நாள் காச்சலெண்டு போய் காட்டினன். வைத்தியர் போக விடேல்ல. ரண்டாம் நாள் வைத்தியரட்டைப் போய் உண்மையைச் சொன்னன் படிக்கிறதுக்காகத்தான் நான் போக வேணுமெண்டு. வைத்தியர் நக்கலா நாலு கதையும் சொல்லி, படிச்சுக் கிழிச்சது காணுமெண்டு திட்டி போகேலாதெண்டு சொன்னார். இப்பிடிப் பல முயற்சி செய்து முகாமுக்குள்ள கிடைச்ச வசதியைக் கொண்டு படிக்கோணுமெண்ட வெறியில படிச்சன். உ/த பரீட்சை மண்டபத்தில நான் ஒருத்தன் தான் கணிதப் பிரிவு. எனக்காக நாலு பரீட்சை மேற்பார்வையாளர்கள்.

சோதினை முடிவில கணிதப்பிரிவில நல்ல பெறுபேறுகளை எடுத்ததால தகுதியடிப்படையில் மொறட்டுவை கம்பஸ் பொறியியல் பீடம் கிடைச்சுது. இஞ்ச வந்தா ஆங்கிலத்தில விரிவுரைகள். எனக்கு சரியாப் புரியேல்ல. நாலு வருசத்துக்குப் பிறகு ஒரு வகுப்பறையிலேந்து ஆசிரியர் படிப்பிக்க பாடம் படிக்கிறன். எனக்கு நித்திரை நித்திரையா வந்துது. என்னால சமாளிக்க முடியேல்ல. கம்பஸ் தொடங்கி மூண்டு மாசத்துக்குள்ள சோதினை. அந்த சோதினை தான் நான் படிக்க வேண்டிய பொறியியில் பிரிவைத் தீர்மானிக்கப் போகுது.

நான் எதிர்பார்த்த துறை எனக்குச் சில வேளை கிடைக்காமல் போகலாம். ஒரே காரணம் ஆங்கிலத்தில பாடங்களை என்னால தொடர முடியாமல் போனதுதான். ஆங்கில மொழியில ஒரு பாடத்தை படிக்கிறதுக்குரிய ஆயத்தத்தை செய்யுறதுக்கு அவகாசம் காணாததுதான். ஆனால் நீங்களெல்லாரும் என்னைப் பாத்து சொல்லுவீங்கள் வன்னி மாவட்டத்திலேந்து வந்தவனுக்கு ஒண்டுமே தெரியாதெண்டு. ஆனா அதப் பற்றி எனக்கு கவலையில்லை. இவ்வளவு முன்னேறி வந்த எனக்கு இப்பிடியொரு சிக்கல் வருமெண்டு கனவில கூட நினைச்சதில்லை. இருந்தாலும் மேலும் மேலும் படிக்க வேணுமெண்டிருக்கிற என்ர ஆர்வத்தை ஆராலையும் தடுக்கேலாது....

-------------------------------------------------------------------------------------------------------------

நான் சந்தித்த நண்பர்களில் இவனும் ஒருத்தன். இவனுடைய திறமை என்னை வியக்க வைத்தது. ஆனால் இவனை இந்த சமூகம் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாதது என்னைப் பாதித்தது. அவனுடைய வாழ்க்கையை அவனாக நான் இங்கே எழுதியிருக்கிறேன். நிறைய இருந்தாலும் முடிந்தளவு சுருக்கியிருக்கிறேன். 

எனக்குள்ளே எழுந்த சில கேள்விகள் :
  • இனங்காணப்படாத திறமைசாலிகள் இவனைப் போல பலர் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. எவ்வாறு அவர்களை இனம் காணுவது?
  • மின் விளக்கு வெளிச்சத்தில் படிச்சு, அம்மா சத்துணவு சமைச்சுத் தர, நேரத்துக்கு நேரம் சாப்பாடு சமைச்சு - தேத்தண்ணி போட்டுத் தர, மணித்தியாலத்துக்கொரு பிரத்தியேக வகுப்பு வச்சு, நாளுக்கொரு பயிற்சி சோதினை வச்சு, சந்தேகம் தீர்க்க வாத்திமார் டசின் கணக்கில இருக்கப் படிச்சு நல்ல பெறுபேறெடுத்த நம்மவர்கள் எங்கே? சுயமாக உ/த கணிதப்பிரிவில் கற்று சிறந்த பெறுபேறெடுத்த இவனைப் போன்றவர்கள் எங்கே? 
  • இவர்களுடைய அறிவுத் திறமை இப்பிடியே மழுங்கடிக்கப் பட்டு விடுமோ? 
  • மிகத் திறமையான இவனைப் போன்றவர்கள் மொழிப் பிரச்சினையால் பல்கலையில் திறமையற்றவர்களாக கணிக்கப்படுகிறார்களே... ஒருத்தனின் திறமையை எவ்வாறு சரியாக மதிப்பிட முடியும்?

-தனஞ்சி.

Saturday, November 27, 2010

கண்ணீர்

என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...
கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...
கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...
சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...
உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...
என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...

Sunday, August 29, 2010

அப்ப ஆசைப்பட்டன்...

அப்ப ஆசைப்பட்டன்...
வீட்டை சம்மதிக்கேல்ல...
நான் விரும்பிறன் எண்டு
எவ்வளவோ சொல்லிப் பாத்தன்...
மாற்றமில்லை...
வீதியில எல்லாரும் பாக்க
திரியுறன் தானே எண்டன்...
கையை விட்டுடு எண்டினம்...
கூடவே கூட்டிக்கொண்டு திரிஞ்சிட்டு
கழட்டி விட எனக்கு மனமில்லை...
எல்லாருமே எதிர்த்திச்சினம்...
உனக்கு வயசு பத்தாது
சட்டமே ஒத்துக் கொள்ளாது எண்டினம்...
கடைசில கையை விட்டுட்டன்...

இப்பவும் ஆசைப் படுறன்...
மறுப்புகள் இல்லை...
மினக்கெட நேரமில்லை...
ஓய்வும் கிடைக்குதில்லை...
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்குறதுக்கு...
வாகனம் ஓட இப்பவும் ஆசைப்படுறன்...



குறிப்பு : அப்பாடா...!!! ஒரு மாரி ஐம்பது பதிவுகள் எழுதீட்டன்... என்னை உற்சாகப்படுத்திய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

Saturday, August 21, 2010

இணையத்தைக் கண்டு பிடித்தவர் யார்?

உறவினர் வீடொண்டுக்குப் போனனான். அவயின்ர குடும்பத்தில நாளைக்கு அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதப் போற தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள். நான் போய் உள்ளட்டதும் அவளின்ர அம்மா சொன்னா ‘ஆ... “மெத்த” படிச்ச அண்ணா ஒராள் வாறார், உனக்குத் தெரியாதத கேளு பிள்ளை...’


பிள்ளை கேட்டதில முதல் கேள்வி இணையத்தை கண்டு பிடிச்சவர் யார்? நான் முழுசினன். பிள்ளை கேள்விப் பத்திரத்தைக் கொண்டு வந்து காட்டி இதில நாலு விடையிருக்கு. அதிலையெண்டாலும் பாத்து சரியான விடையைச் சொல்லுக்கோ... அதில ஒண்டு கடை ஒண்டின்ர பெயர் இருந்திச்சு. ஒரு வேளை அந்தப் பெயரில ஒருத்தர் இருந்த படியாத்தான் கடைக்கு அவற்ற பெயரை வச்சாங்களோ எண்டு நான் யோசிச்சன். கேட்ட கேள்விக்கு நேரடியாகவும் பதில் சொல்லத் தெரியேல்ல. நாலு விடைக்குள்ளேந்தும் ஆளைக் கண்டு பிடிக்கவும் முடியேல்ல. இனியென்ன செய்யுறது வெக்கத்தை விட்டுட்டுச் சொன்னன் நான் இணையத்தில பாத்து சொல்லுறன் எண்டு. தாய் கேட்டா 'தம்பி நீ தானே விடிஞ்சா பொழுது பட்டா இணையத்தோட இருக்கிறனி உனக்கும் உது தெரியாதோ?'


தங்கச்சி நிறையக் கேள்விகள் கேட்டாள். என்னால பலதுக்குப் பதில் சொல்ல முடியேல்ல. உதாரணத்துக்கு இன்னுமொரு கேள்வி. ஒரு வருட நாட்காட்டியில் இலங்கை அரசாங்க விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்னால முடியேல்ல. நான் சொன்னன் 'பிள்ளை ஒண்டையும் யோசியாத, உதையெல்லாம் யோசிச்சுக் குளம்பாத, நாளைக்குப் போய் தெரிஞ்சத செய்து போட்டு வா...' தாய் சொன்னா 'தம்பி அதெப்பிடி சும்மா விடேலும். நல்ல புள்ளியெடுக்கேல்ல எண்டா கொழும்பில உயர் பள்ளிக்கூடங்களுக்கு ஆறாம் ஆண்டு அனுமதியில்லாமல் போடும். பிறகு எந்தப் பள்ளிக்கூடத்தில அனுமதியெடுக்கிறது. பிறகு என்ர பிள்ளை கண்ட கண்ட காவாலிப் பிள்ளையளோடதானே படிக்க வேண்டி வரும். நீங்கள் மட்டும் நல்ல பள்ளிக்கூடங்களில படிச்சு முன்னுக்கு வந்திடுங்கோடா...' உதுக்கு நான் என்னத்த சொல்லுறது. நாளைக்கு சோதினையெழுதப் போற பிள்ளைக்கு முன்னால விவாதிக்க விரும்பேல்ல.


எனக்குத் தெரிஞ்சு நான் படிச்ச கல்லூரியில நுழைவுத்தேர்வு தனியாக நடத்துவாங்கள்.  அதில் சித்தியெய்தினாலே கல்லூரி அனுமதி கிடைச்சிடும். அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்குறதுக்காக நடத்துற சோதினையை தங்கட சோம்பேறித் தனத்துக்காக தங்கட பள்ளிக்கூடத்துக்கான நுழைவுத்தேர்வா கருதுற பள்ளிக்கூடங்கள் இருக்கும் வரை, அதையே தங்களுக்கான பெரிய கெளரவமாக கருதுற பெற்றோர் இருக்கும் வரை பிள்ளை சித்திரவதை செய்யப்படுவது தடுக்கப்பட முடியாது.


எல்லாத்தையும் விட, தங்கச்சி கேட்ட கேள்விகளைப் பாக்கேக்க கடைசியா எனக்கு ஒரு பெரிய உண்மை விளங்கிச்சு. நாளைக்குச் சோதினையெழுதப் போற பிள்ளைகளோட நான் சோதினையெழுதினால் நான் பரீட்சையில சித்தியடைவது சந்தேகமே; இன்னும் சொல்லப் போனால் கொழும்பிலுள்ள உயர் பாடசாலை எண்டு சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களில் எனக்கு ஆறாம் ஆண்டுக்கான அனுமதி கிடைக்காது.

Sunday, May 16, 2010

வார்த்தைகள் இல்லை...

இரங்கல் கவிதை எழுத என்னால் முடியவில்லை...
எத்தனை பேர் எண்டு எண்ணவும் முடியவில்லை...

முள்ளியில் நின்று வெள்ளி முழைக்குமென்று விழி பிதுங்கியவர்களும்
வாய்க்கால் வழியாக வாழ்வு வருமென்று மன்றாடி நின்றவர்களும்
மனிதாபிமானம் மண்ணில் இன்னும் இருக்கென்று நம்பியவர்களும்
இனி என்னத்தைச் செய்ய என எல்லாத்தையும் இழந்தவர்களும்
சேர்ந்திருந்த செய்தியறிந்தும் செய்து முடித்தனர்...

எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...
அதையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்புச் செய்தனர்...
அப்பாவிகளின் அழுகுரல்கள் அடங்கின...
அவர்களின் நம்பிக்கைகளும் தாகங்களும் அடக்கப்பட்டன...
அவர்களின் உடலங்களும் புதைக்கப்பட்டன...

ஆரார் மாண்டார்? ஆரார் தப்பினர்? ஆரார் இன்னும் இருக்கின்றனர்
அறியாது இன்னும் தவிக்கும் நெஞ்சங்களுக்கு
ஆறுதல் சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...

Sunday, April 04, 2010

உழைப்பு பட்டுது...

“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”

“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.” 

நான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.

“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”

“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச் சொல்லித் தப்பில்லை.”

“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”

“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”

“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”

“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”

“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே நினைச்சன்.”

“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம் தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக் கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன். 

காலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம் உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”

“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”

“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும் நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும் சொல்லியழ...” 

Sunday, February 21, 2010

விசேஷம்

அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன். 

ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம். 

யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம். 

எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.

அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான்.   

விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.

அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள்.  இவங்கள்...???’   

Sunday, November 08, 2009

பெற்றோரும் கல்வி முறையும்

கல்வி முறை என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப் படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.

எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான் எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப் போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப் பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.

பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன் நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).

இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக இருக்கும்.  அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள் விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை.

Sunday, October 25, 2009

கல்வி முறை

இலங்கையில் கல்வி முறையைப் பற்றி அதிலுள்ள பல நல்ல விடயங்களைப் பற்றி அதிகமாக நான் இங்கு எழுதப்போவதில்லை. ஏனெனில் அதைனைப் பற்றி எல்லோருமே அறிவார்கள். ஆனால் கல்விமுறை பற்றி எனக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். எமது கல்வி முறை இலவசக் கல்வி முறை. உண்மையில் மிகவும் புகழ்ந்து பாராட்டக்கூடிய மிகச்சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறிய வளர்முக நாடாக இருந்து கொண்டு கல்வியை இலவசமாக கட்டாயக் கல்வி மூலம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக செய்ததன் மூலம் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. அதை விட ஏழை பணக்காரன் வேறு பாடின்றி அனைவருமே அடிப்படைக் கல்வியறிவையேனும் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த விடயத்தில் எமது கல்வி முறையை நிச்சயமாகப் புகழ வேண்டும்.

ஆனாலும் இந்தக் கல்வி முறை எமது சமுதாயத்தில் எழுப்பும் சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். கட்டாயக் கல்விமுறை எம்மீது திணிக்கும் சிக்கல்களைப் பற்றியே சொல்கிறேன். கட்டாயக்கல்வி முறையானது எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்னிடத்தில் உங்களுக்குத் தேவையான எல்லா விடயங்களும் இருக்கின்றன என்பதைப் போன்றதொரு மாயையுடன் அனைவரையும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்குகிறது. படிக்கும் காலங்களில் அனைவரும் பள்ளிக்கூடத்தை மட்டும் நம்பியே தன்னுடைய எதிர்காலக் கனவுகளில் இறங்குகிறோம். படித்து ஏதேனும் சிறந்ததொரு வேலையெடுத்து பணம் உழைப்பதே பலரின் எதிர்காலக்கனவுகளின் இறுதி வடிவம். அதற்குரிய கல்வியறிவைப் பள்ளிக்கூடம் தரும் என்றே நம்புகிறோம். இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி முறை எம்மை இந்நம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ஆனால் பாடசாலை வாழ்க்கையில் அரசாங்கப் பரீட்சைகள் மூன்று நடைபெறுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதரண தரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சை ஆகிய மூன்றும் ஆகும். இதில் சா/த மற்றும் உ/த பரீட்சைகள் மாணவர்கள் தொடர்ந்து இலவசக் கற்கை நெறியைத் தொடர்வதோ இல்லையோ என்பதைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. இப்பரீட்சைகளின் பெறுபேறுகளால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள் எல்லாத்தையும் இழந்த, வாழ்க்கையைத் தொலைத்ததைப் போன்று உணர்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடம் தமக்கொரு வாழ்க்கையை அதாவது தொழில்வாய்ப்பைத் தேடக்கூடிய அறிவைத் தரும் என்ற நம்பிக்கையில், பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதைத் தவிர வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய கல்வியைப் பெறாமல் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ வாழ்ந்து விடுகிறார்கள். பின்னர் தாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை கற்றதை வைத்துக் கொண்டு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத நிலை உருவாகியிருப்பதையும் இவர்கள் உணரும்போது ஒரு இந்த வெறுமை நிலை தோன்றுகிறது.

ஆனால் தொடர்ந்து உயர் கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி இலவசக் கல்வியை முடித்துக் கொண்டவுடனேயே வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் அவர்கள் இந்தளவுக்கு வெறுமை நிலையை உணர்வதில்லை. ஆனால் தொடர்ந்து இலவசக் கல்வி முறையைப் பெற முடியாதவர்களின் நிலை கவலைக்கிடமாகிறது.  தொடர்ந்து படிக்க முடியாமல் போனது ஒரு புறம் இது நாள் வரை கற்றதை வைத்துக் கொண்டு உடனடியாக ஒரு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத சூழ்நிலை மறுபுறம் அவர்களில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த எமது கல்வி முறை அவர்களில் மட்டுமல்ல பெற்றோர்களிடத்திலும் எம் சமுதாயத்திலும் பலமான தாக்கங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கல்விமுறையை எம் சமுதாயம் எப்பிடி எதிர் கொள்கின்றது என்பதில் எனது கருத்துக்களைப் பிரதிபலித்து பிறிதொரு பதிவிடுவேன்.

எமது கல்வி முறை பற்றி என்னுடைய கருத்து என்னவெனில் இடை நிறுத்தப்படும் மாணவகளுக்கு தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்காமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிது காலம், வேலை வாய்ப்பைத் தேடித் தரக் கூடிய இலவசக் கல்வியை வழங்கலாம். பல்கலைக் கழக படிப்புகள் இட்டுச் செல்லாத தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அடிப்படை அறிவு தேவைப் படுகின்ற தொழில் பயிற்சிகளையும் அதற்கான நுட்பங்களையும் கற்பிக்கலாம். இதன் மூலம் தொழில் வாய்ப்புகளைத் தேடக் கூடிய இலவச அறிவை இடை விலக்கப்படும் மாணவர்கள் பெறுவதோடு தாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரமாட்டார்கள். வாழ்க்கையில் அவர்களும் தொழில்வாய்ப்பைத் தேடிக் கொள்வார்கள். அவர்களைச் சார்ந்த பெற்றோர்களும் சமுதாயத்தினரும் அவர்கள் மீதான நெருக்குதலைக் குறைப்பதற்கும் அவர்களும் சிறந்த தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது எனது எண்ணம்.

Sunday, October 18, 2009

அந்த இன்னும் ஒன்று...

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.

பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது.  ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.

நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.  அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.  இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.

அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.

Monday, October 05, 2009

தலையிழந்த, நான் வைத்த பனையே..

நான் உனக்கு கொள்ளி வைப்பேன் என்றா இத்தனை நாளும் நான் வரும் வரை காத்திருந்தாய்? உனக்குக் கொள்ளி வைக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் வைத்து, நான் பார்க்க வளர்ந்த மரம் நீ... உனக்கு எப்பிடி நான் கொள்ளி வைப்பேன்? யாருக்குத் தெரியும் உன் வாழ்வு இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுமென்று... நீ செழிப்புற்று வளர்ந்த போதெல்லாம் சந்தோசப்பட்டேன். உன்னுடலில் ஏறி ஓடியாடி விளையாடியிருக்கிறேன். நீ முளைத்தெழுந்த மண்ணில் புழுதி படப் புரண்டு குதூகலித்திருக்கிறேன். உன்னிடமிருந்து நான் உச்சப் பயனையும் பெற்றுக் கொண்டேன். இன்றோ நீ தலையிழந்து அழகிழந்து உன்னை அரவணைப்பாரையிழந்து கூனிக் குறுகி நிற்கிறாய். யார் யாரோ எல்லோரும் உன்மேல் கைவைத்துச் செல்கின்றனர். வெட்கித் தலை குனிந்து வேதனையில் துடிப்பதைக் காண்கிறேன்.  

வங்கக்கடலில் மட்டுமல்ல கடல்கடந்து பசுபிக் அத்திலாந்திக் என ஏழு கடல்களையும் இணைத்து உருவான புயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உன்னைத் தாக்கிய போது நீ என்ன பாடு பட்டிருப்பாய்? தன்னந்தனியே எழுந்து நின்று எது வந்தபோதும் எதிர்கொள்வேன் என்ற துணிவோடு எதிர்த்தாயே...  பசளையையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டு நான் உன்னிடமிருந்து விலகி இன்னுமொரு இடத்தில் வாழ்ந்தேனே... அவை மட்டும் உனக்குப் போதாது, நான் உன்னோடு கூட இருப்பதைப்போல வலிமை பிறிதொன்றும் இல்லை என்பதை அன்று நான் ஏன் உணரவில்லை? ஒரு வேளை அன்று உன்னோடு நான் இருந்திருந்தால் ஒன்றில் இருவருமே தலையையிழந்திருப்போம், இல்லை நீயாவது இன்று தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாய். இன்றும் கூட உனக்காக எதுவும் செய்ய முடையாதபடி வெறுமனே உன்னைப் பார்த்த படி கடக்கிறேன்... நீ சுமந்த, நான் என் கைப்பட எழுதிய என் தமிழ் வாசகங்கள் எல்லாம் வடிவம் மாறியிருக்கே... நான் சிறு கத்தி கொண்டு உன்னுடலில் செதுக்கிய வடிவங்களெல்லாம் சிதைந்து போச்சே... நீ முழைத்த நிலத்தருகே விழித்தெழுமென்று நம்பி நான் நட்டு வைத்த விதைகளுக்குப் பதில் வேறு விதைகள் தூவப்பட்டிருக்கே...  வெள்ளை நிறக்கறையான்கள் உன்னைத் துளைத்தெடுத்து புத்து அமைப்பதைக் காண்கிறேன். குளவிகள் மண்ணினால் உயர்ந்த மேடமைத்து சிங்கத்து குகை அமைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. ஒப்புக்கேனும் ஏன் என்று கேட்க முடியாத ஈனமான நிலையில் நான்...

இன்று நான் என் ஆசையைச் சொல்லி வைக்கிறேன்... சிதையில் நான் கிடக்கும்போது என் நெஞ்சின்மேல் உன் உடல்தான் வைக்கப்பட வேண்டும். நான் செய்த அற்ப விடயங்களை எண்ணி எண்ணி என் நெஞ்சு விம்மிப் புடைக்கும் ஒவ்வொரு கணமும் நீ என்னைத் துளைக்கும் கேள்விகளைக் கேட்டு என் நெஞ்சை அழுத்த வேண்டும். அப்போதாவது எனது நெஞ்சு, தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி உருகி உருகித் தீயோடு சங்கமிக்கட்டும். நீ முழைத்தெழுந்த மண்ணிலேயே என் சாம்பலும் விதைக்கப்பட வேண்டும். ஏனெனில் சில வேளை நான் கூட நாளை உனக்கருகே இன்னுமொரு பனையாக முளைத்தெழலாம்.


Thursday, September 10, 2009

பத்து வயசில...

பத்து வயசில எண்டு தொடங்கி சொல்ல வந்த விஷயம் அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசிலைப் பற்றித்தான். இப்ப எனக்குப் பத்து வயசில நடந்த நிகழ்வுகளில ஒண்டு ரெண்டைத் தவிர எல்லாமே மறந்து போச்சு. அறியாத வயசு, பால்மணம் மாறாத அந்தப் பால்குடி வயசில நடக்கிற சோதினையைப் பற்றித்தான் சொல்லப் போறன். சோதினை நடக்கிறதொண்டும் பெரிய விஷயமில்லை. ஆனால் அதுக்கு நடக்கிற ஆயத்தங்களும் ஆரவாரங்களும்தான் ஏனெண்டு எனக்கு இன்னும் புரியேல்ல, சரியா விளங்கேல்ல.

அஞ்சாம் ஆண்டுப் புலமைப் பரிசில் சோதினை வைக்கிறதுக்கு காரணம் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேலே எடுக்கின்ற வறிய மாணவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து படிப்பதற்காக சிறு தொகை நிதியை பரிசிலாக வழங்குவதாகும். இதுக்காகத்தான் அரசாங்கம் இந்தச் சோதினையையே ஆரம்பிச்சதெண்டு சொல்லுறாங்கள். அப்பிடியெண்டா அதுக்காக ஏனிந்த ஆரவாரங்கள்? சோதினை தொடங்கப் பட்டதன் நோக்கம் இப்ப பலருக்குத் தெரியாது. ஆனா ஒண்டு மட்டும் நல்லாத் தெரியும் இதில நல்ல புள்ளியெடுத்தால் பெரிய பள்ளிக்கூடங்கள் என்று சொல்லப்படுகின்ற பள்ளிக்கூடங்களுக்கான ஆறாம் ஆண்டு அனுமதியை வாங்கலாம். அதை விட பெற்றார் நெஞ்சை நிமித்திக் கொண்டு தன்னோட வேலை செய்யுறாக்களுக்கு கேக் குடுக்கலாம். சித்தியடையத் தவறிய மற்றப் பிள்ளைகளின்ர பெற்றாரை நக்கலடிக்கலாம். ஆக மொத்தத்தில பெற்றார் தங்கட சுய மரியாதைக்காகப் பிள்ளைகளின்ர பெறுபேற்றைப் பயன்படுத்தினம்.

அஞ்சாம் ஆண்டெண்டால் பிள்ளைக்குப் பத்து வயசு. காலமை நாலு மணிக்கு எழும்ப வேணும். அதுக்கெண்டு விழிப்பூட்டும் கடிகாரங்கள் வீட்டில விழிப்பா இயங்கும். பிள்ளை உறக்கத்தின் இனிமையை மேலும் அனுபவிக்கப் புரண்டு படுத்தால் அம்மா மாறி அப்பா மாறி சத்தம் போடுவினம். பிள்ளை அரைகுறை மனசோட எழும்பி படிக்கிறதுக்கு மேசையில இருந்தா பாவம் பிள்ளைக்கு நித்திரை வெறி இன்னும் முறிஞ்சிருக்காது. புத்தகம் தலைகீழாக் கிடக்குதோ எண்டதையே பிரித்தறிய முடியாத நித்திரைக் கலக்கத்தில தூங்கி விழும் (துலாப் போடும் - ஊர் வழக்கு). காலம வெள்ளண இதமான குளிர் இன்னும் மெத்தையத்தான் ஞாபகப்படுத்தும். சிலவேளை சுடச் சுட தேத்தண்ணி வரும். அதைக் குடிச்சிட்டுக் கொஞ்சம் படிச்சாலும்  அது முடிய பள்ளிக்கூடம், முடிஞ்சு வர சாப்பாட்டை அவசரமா முடிச்சுட்டு தனியார் வகுப்பு. சொன்னா நம்ப மாட்டியள் கன பிள்ளைகளின்ர காலமை மத்தியானச் சாப்பாடுகள் காருக்குள்ளேயே நடக்குது.(என்ன கொடுமையோ?) முடிஞ்சு வர வீட்டில பிரத்தியேக வகுப்புகள். கொஞ்ச நேரம் சாப்பாடு. பிறகு படிப்பு. பதினொரு மணிக்குத் தான் பிள்ளைக்குப் படுக்கிறதுக்கு அனுமதி. (எனக்கு இவ்வளவத்தையும் எழுதவே களைச்சுப் போச்சு, நித்திரை தூங்குது)

பிரத்தியேக வகுப்பைப் பற்றிச் சொல்லியே ஆகவேணும். முதல்ல எத்தினை ஆசிரியர்களை ஒழுங்கு படுத்திறதெண்டதிலேயே போட்டி. பக்கத்து வீட்டில அல்லது கூட வேலை செய்யுறவை ரெண்டு பேரை வச்சுப் படிப்பிக்கினம் எண்டா நான் மூண்டு பேரை ஒழுங்கு படுத்த வேணும். சரி அதுதான் போச்சுதெண்டா வாத்திமாருக்குள்ளேயே திறமான வாத்திமாரை பிடிக்க வேணும். அவர் தனக்கு நேரமில்லை,  இடைக்கிட வரமாட்டன் எண்டு சொன்னாலும் பரவாயில்லை. ஏனெண்டா வெளியில ஆரும் கேட்டா இன்னார் படிப்பிக்கினம் எண்டு சொல்லிக் கொள்ளலாம்தானே. அதை விட ஆசிரியருக்கு குடுக்கிற சம்பளத்திலையும் போட்டி ஆர் கூடக் குடுக்கிறதெண்டு. பிரத்தியேக வகுப்புச் சொல்லிக் குடுக்கப் போகும் நண்பன் ஒருவன் சொன்னான், தான் சில வேளை மனச்சாட்சியாக குறஞ்ச காசு வாங்கினாலும் சில பெற்றோர் சொல்லுவினமாம் உங்களுக்கு கூடக் காசு தந்தாத்தான் நீங்கள் படிப்பிக்கிறது பிள்ளைக்கு ஏறுமெண்டு. என்ன கண்டுபிடிப்போ? என்னத்தைச் செய்தென்ன? பிள்ளையெல்லா படிக்கவேணும்,  பிள்ளையெல்லோ சோதினை எழுத வேணும். எப்பத்தான் இது பெற்றாருக்கு விளங்கப் போகுதோ? ஏன் எதுக்காக படிக்கிறன் எண்டு தெரியாமலே பிள்ளை வதைபடுது - வாய் திறந்து தான் படும் வேதனையை வெளியில சொல்ல முடியாத வயசில.

இப்போது புலமைப் பரிசில் பரீட்சையெல்லாம் உயர்தரதப் பரீட்சையின் நிலைக்கு ஒப்பாக வைத்து நோக்கப்படுகின்றது. அதாவது வாழ்வா சாவாப் போராட்டம் போல. உயர்தரத்தில் தவறினால் பல்கலைக்கழக அனுமதியில்லை. ஐந்தாம் ஆண்டில் தவறினால் உயர் பாடசாலை அனுமதியில்லை. இப்போதெல்லாம் சாதாரண தரத்திற்கு மதிப்பே இல்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறும் மாணவர்கள் உயர்தரக் காலங்களில் பிரகாசிப்பதில்லை என்ற பொதுவான அவதானிப்புகள் இருந்த போதும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான ஆரவாரம், எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.

முதலாவதாக சிறு வயதுப் பிள்ளைகள் தங்களுக்கான சுதந்திரங்களைத் தொலைத்துவிட்டு பரீட்சை என்ற போர்வையில் கொடுமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வே இல்லாமல், பொழுது போக்குகளே இல்லாமல் படிப்பு என்னும் நிலை களையப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் சுய கெளரவம் இந்தப் பரீட்சையின் பெறுபேற்றிலேயே தங்கியிருக்கிறது என்ற எண்ணம் களையப்பட  வேண்டும். இவ்வெண்ணம் தோற்றம் பெறுவதற்கான முழுமுதற்காரணம் உயர் பாடசாலைகளுக்கான அனுமதி இப்பெறுபேற்றிலேயே தங்கியிருத்தலாகும். இதற்கு அரசாங்கம் இப்பரீட்சையின் நோக்கம்  வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதுதான் என்றால் இப்பரீட்சையின் பெறுபேற்றை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் (உயர் பாடசாலைகளின் அனுமதிக்காக அல்ல).

உயர் பாடசாலைகள் தங்களுடைய அனுமதிக்காக தனித்தனி பரீட்சைகள் வைத்து மாணவர்களைத் தெரிவு செய்யலாம். அப்பரீட்சைக்கு விரும்பியவர்களைத் தோற்றுவதற்கு அனுமதிக்கலாம். அதே போல உயர் பாடசாலை அனுமதியானது ஆறாம் தரத்துடன் நின்று விடாது அதற்குப் பிறகான ஒவ்வொரு வருடமும் வெளி மாணவர்களிடம் பரீட்சை வைத்தோ அல்லது மீண்டும் ஒன்பதாம் தரத்தில் பரீட்சை வைத்தோ அனுமதியை வழங்கலாம். ஏனெனில் ஆறாம் தரத்தில் சித்தியெய்தத் தவறியவன் ஒன்பதாம் தரத்தில் அதே நிலையில்தான் இருப்பான் என்று எதிர்வு கூற முடியாது. இவ்வாறு செய்வதனால் உயர் பாடசாலைகளுக்கான போட்டிகள் குறைவடையும், பெற்றோர் இந்த முறை தப்பினால் அடுத்த முறை என்ற மன நிலையில் பிள்ளைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பார்கள். பிள்ளைக்கு ஓய்வும் அமைதியான கல்வியும் கிடைக்கும். புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மையான நோக்கமாகிய வறிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் என்பது அதிக எண்ணிக்கையான வறிய மாணவர்களுக்குச் சென்றடைய வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களும் ஊக்கமாக கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும். சமுதாய வளர்ச்சிக்கு இது வித்தாகும்.

Saturday, September 05, 2009

பட்டத சொல்லுறன்

பட்டத சொல்லுறன் பகுதியூடாக நான் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்ந்தவற்றை, நிகழ்பவற்றை என்னுடைய பார்வையினூடாகச் சொல்லலாம் என முயற்சிக்கிறேன். இவற்றில் நான் அனுபவப் பட்டதும் மனதில் பட்டதும் அடங்கும்.

 ‘அறுப்பான் வந்திட்டான்.. குடிச்சிட்டு வந்து அந்த அப்பாவிப் பிள்ளையைப் போட்டுப் படுத்திற பாடு.... சனியன் அழிஞ்சு போகானாம்.. ஒரு உழைப்பில்ல..மச்சான்மாற்ற காசில குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு போகுது’

பாட்டித் திட்டித் தீர்க்கவும் பக்கத்து வீட்டுப் படலையோட துவிச்சக்கர வண்டி ஒண்டு மோதிச் சத்தம் கேக்கவும் சரியா இருந்திச்சு. தொடர்ந்து சில கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். கதவுகள் சாளரங்களுக்கு அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. சின்னப் பிள்ளைகள் பயத்தினால் சத்தம் போட்டுக் கத்தும் சத்தம் கேட்டது. மனிசருக்கு அடி விழும் சத்தம்.
‘விடுங்கோப்பா.. இஞ்ச... அடியாதேங்கோப்பா’ என பக்கத்து வீட்டு அக்கா கத்தும் சத்தம்.
 ‘அடிச்சுப் போட்டான் போல கிடக்கு... அக்காவையும் பொடியளையும் போட்டுப் படுத்திற பாடு’ என் பங்குக்கும் பாட்டியோடு சேர்ந்து ஆமாம் போட்டேன்.
 கொஞ்ச நேரத்தில் எல்லாமே அடங்கிப் போனது.

அடுத்த நாள் பின்னேரம் பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்கு வந்திருந்தா. பாட்டி கதையைத் தொடக்கினா. நான் அறையொன்றுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
‘நேற்றுக் கடுமையான அடியோ’
‘இல்லை  ராசாத்தியக்கா... அது ஒண்டுமில்லை.. இஞ்சையும் கேட்டதே...’
 ‘என்ன சமாளிக்கப் பாக்கிறாய்.. நல்ல அடிபோல கிடக்கு’
‘சீ... அப்பிடி ஒண்டுமில்லை’ அக்கா கூனிக் குறுகி நெளிவதை அவவின் சொற்கள் எனக்கு உணர்த்தின.
‘இஞ்ச பிள்ள நான் ஒண்டு சொல்லட்டே உந்தக் குடிகாரனோட ஏன் நீ குடும்பம் நடத்துறாய். ஒரு உழைப்புமில்லை.கொண்ணன்மார் தானே காசு அனுப்பிறாங்கள். பேசாமல் அவனைத் துரத்திவிடு... அப்பத்தான் அவனும் திருந்துவான் பிள்ளைகளுக்கும் பிரச்சினை இல்லை. நீ இவனால படுற பாடு போதும்’

 ‘இல்லை ராசாத்தியக்கா... அவர் இரவில குடிச்சுட்டு வந்து சத்தம் போடுறது உண்மைதான். ஆனால் பகலில பொறுப்பா இருக்கிறார். வேலைக்குப் போகாட்டிலும் அவர் வீட்டு வேலை செய்யுறதில எனக்கு ஒத்தாசையா இருக்கிறார். பிள்ளையளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக் கொண்டு போறது முதல் அவர்களின் உடுப்புத் தோய்க்கிறது வரை எல்லாத்தையும் இவர்தானே செய்யுறார். எங்கட சந்தோசத்துக்காகத்தான் பகல் முழுக்க கஷ்டப்படுறார். இரவில அவற்ற சந்தோசத்துக்காக கொஞ்சம் குடிச்சா என்ன? எங்களுக்காக இவ்வளவு செய்யுறவருக்காக இதைக் கூட எங்களால பொறுத்துக் கொள்ள முடியாதோ?’
எனக்கு கன்னத்தில அறைஞ்சதப் போல ஒரு உணர்வு. ஒரே ஒரு நிகழ்வை வைத்து அவன் நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிக்க நான் யார்?

பி.கு. இந்நிகழ்வு குடிப்பதற்கு ஒரு அங்கீகாரமாக அமையாது.