Showing posts with label நினைச்சுப் பாக்கிறன். Show all posts
Showing posts with label நினைச்சுப் பாக்கிறன். Show all posts

Sunday, June 16, 2013

தாய்மடி தேடி..

இன்னும் நினைவிருக்கு...
ஆரம்ப பாடசாலை நாட்களில் ஓர் நாள் பின்னேரம்..
நான் ஏதோ ஒரு குழப்படி செய்து விட்டேன்.
நான் குழப்படி செய்யுறதெண்டது புதினமில்லையே...
இப்பிலிப்பில் தடி முறித்து சுழறச் சுழற அடிச்சீங்கள்
கால்கள் முழுவதும் தழம்புகள்...
வலி தாங்க முடியாமல் நான் அழுதேன்
ஓடிப் போய் கட்டிலில் படுத்தபடி அழுதேன்...

அரவணைக்க வந்தீர்கள்.
தழம்புகளுக்கு வாயால் ஊதி ஒத்தடம் கொடுத்தீர்கள்
நோகுதோ எண்டு கேட்டு பதறினீர்கள்...
நான் அடிச்சது உன்னைத் திருத்தத் தான்...
வேற ஒண்டுக்குமில்லை எண்டு என்னிடம் மண்டாடினீர்கள்
என்னைத் தேற்றுவதற்காய் மாம்பழங்கள் வெட்டித் தந்தீர்கள்...
அன்று முழுவதும் எனக்குப் பக்கத்திலேயே இருந்து
என்னைப் பார்த்து பார்த்து மனம் வெந்தீர்கள்
நோகுதோ நோகுதோ எண்டு எத்தினை முறை கேட்டீர்கள் எண்டு
எனக்கு ஞாபகம் இல்லை..

அடிச்சது வலிச்சதை விட நீங்கள் அழுதது தான் வலிச்சது
என்னுடைய வலியை விட நான் அன்பு வைத்திருப்பவர்கள்
என்னால் வேதனைப் படுவதைத்தான் என்னால்
தாங்கிக் கொள்ள் முடியவில்லை..
அன்றுதான் நான் திடமாய் முடிவெடுத்தேன்
என்னுடைய வலி எவரையும் காயப்படுத்தக் கூடாது.
எனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதனை முயன்றளவு
அன்பானவர்கள் முன்னிலையில் வெளிக்காட்டக் கூடாது

ஆனாலும் உங்களிடம் நான் எப்போதும் தோற்றுவிடுகிறேன்
என்னதான் நான் ஒழிக்க முயன்றாலும் கண்டு பிடித்துவிடுவீர்கள்
கொஞ்ச நாளைக்கு முதல் கூட, என்ன முகம்
வாடிக் கிடக்குது எண்டு கேட்டீர்கள்
எங்க தான் உந்த வித்தையை கற்றுக் கொண்டீர்களோ...
ஆறுதல் தேடி உங்களை நாடி ஓடி வருகிறேன்.

- தனஞ்சி

Saturday, April 13, 2013

கிணத்தில தண்ணியள்ளி..


பள்ளிக்கூடம் படிச்சுக் கொண்டிருந்த பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் கிணத்தில தண்ணியண்ணிக் குளிச்சம். நாங்கள் சகோதரர் உறவுமுறையுள்ள (ஒரே வளவுக்குள் மூன்று வீடுகள்) அஞ்சு பேர் ஒரே கிணத்தில குளிச்சிட்டு பள்ளிக் கூடம் போகோணும். அத விட வேலைக்குப் போற மூண்டு பேரும் குளிக்க வேண்டும். ஆனாலும் ஒவ்வொருநாளும் எல்லாரும் குளிப்பம். 

எங்களுக்கிடையில் இருந்த ஒப்பந்தம் என்னண்டால் ஆர் முதல் கிணத்தடிக்குப் போகினமோ அவரே முதலாவதாகக் குளிக்கும் உரிமை உடையவர். குளிக்கும் உரிமையுடையவர் விரும்பினால் ஒத்துமாறல் அடிப்படையில் மாறிக் கொள்ளலாம். 

கிணத்தடியில் இடம்பிடிக்கிறதுக்கு சகோதரங்களுக்கிடையில் போட்டி. ஒரே நேரம் கிணத்தடியை நோக்கி ரண்டு பேர் வெளிக்கிட்டால் ஓடிப் போய் இடம் பிடிப்பம். ஓட்டப் போட்டி எண்டு வந்திட்டால் பெரும்பாலும் தங்கச்சிமார் என்னட்ட தோக்க வேண்டி வந்துடும். ஓடிப் போய் இடம் பிடிச்சிட்டு அவளைப் பாத்து “நான் தானே முதலாவது” எண்டு சொல்லி அவளை வம்புச் சண்டைக்கு இழுக்கிறதில ஒரு சந்தோசம்.  சிலவேளை எதிர்த்து வாதாடுவாள். சிலவேளை சின்னண்ணா என்னை முன்னுக்கு விடுங்கோ எண்டு கெஞ்சுவாள். கொஞ்ச நேரம் வம்பிழுப்பன். பிறகு அவளை முன்னுக்கு விட்டுடுவன். ஒருமுறை சண்டை உச்சக்கட்டத்துக்கு போய் இரு வீட்டுப் பெரியாக்களும் வந்து சமரசம் பேச வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இப்ப அதே கிணறு இருக்கு. கிணத்தில குளிக்க ஆக்களில்லை. வயசு ஏறினதாலயும் மின்சாரம் வந்து வீட்டுக்குள்ளையே குளியலறை வந்ததாலையும் போட்டி இல்லை. கிணத்தில கையால தண்ணியள்ளிக் குளிக்கும்போது சொந்தக் கையால உழைச்சுச் சாப்பிடும் போது தோன்றும் பெருமிதம் தோன்றும். மூடிய அறைக்குள் நின்று கொண்டு குளிக்கும் போது ஏற்படாத சுதந்திரம், சந்தோசம் இயற்கையை ரசித்தபடி கிணத்தில குளிக்கும்போது ஏற்படுகிறது. கிணத்த படத்தில காட்டி இதுதான் கிணறு எண்டு பிள்ளையளுக்கு சொல்லிக் குடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை...

- தனஞ்சி.

  

Sunday, April 01, 2012

ஊருக்குப் போனன்...


தாய்மடி என்னும் இந்த வலைத்தளத்தை நான் ஆரம்பித்து இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. இன்றைய நாளில் நான் வலைப்பதிவு எழுதுவதற்கு உதவிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன். ஆரம்ப காலங்களில் அடிக்கடி எழுதி வந்தாலும் பின்னர் சோம்பல் காரணமாக எப்போதாவது எழுதி வந்தேன். அண்மைய நாட்களில் பதிவுகள் எதனையும் எழுதவில்லை. நான் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன் என தெரிவிக்கும் முகமாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களால் வெளியிடப்பட்ட சஞ்சிகளில் ஒன்றான சங்கமம் 2008 இல் இடம்பெற்ற என்னுடைய ஆக்கமொன்றை இங்கே பதிவிடுகிறேன்.

நன்றி
தனஞ்சி.




ஊருக்குப் போனன்…

ஊருக்கு புறப்படுவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னரே தமிழர் தலைநகர நண்பர்களின் உதவியுடன் கப்பலுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டோம். அவர்களின் வீடுகளிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டு பெரிய எடுப்பில் பயணத்தை மேற்கொண்டோம். ஐந்து மணிக்கு பல்கலைக்கழகம் முடிந்ததும் தங்குமிடம் வந்த பின்னர் திடீரென முடிவெடுத்து வீடுகளுக்குச் சொல்லாமலே இரவு ஒன்பது மணிக்கு வாகனமேறி, மதியம் ஒரு மணியளவில் வீடுகளுக்கு போய்ச் சேர்ந்து, குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காலங்களையும் நான் எண்ணாமலில்லை. தங்குமிடத்தில் இருவர் ஊருக்குப் போகிறார்களென்றால் மற்றவர் நிச்சயமாக ஊருக்குப் போக வேண்டிய கட்டாயம். அந்தளவுக்கு அலுப்படிச்சு ஊர் நினைப்புகளைச் சொல்லி உசுப்பேத்தி ஒரு மாதிரி அவரையும் ஊருக்குப் புறப்படும் வழி பண்ணிவிடுவோம். இப்போது புறப்படவேணும் எண்டு நினைத்தால் எத்தனை ஆயத்தங்கள்.. அப்பாடா..

தமிழர் தலைநகரத்து நண்பர்களின் சிறந்த வரவேற்போடும் உபசரிப்போடும் நான் முதன்முதல் அந்நகரத்தில் காலடி எடுத்து வைத்தேன். தலை நிமிர்ந்து நடக்கவேண்டிய தலைநகரத்து மக்கள் அடுத்த பரிசோதனை நிலையம் எங்கே என்று பார்ப்பதற்காய் தலையை நிமிர்த்துகிறார்கள். ஐம்பது மீற்றர்களுக்கு ஒரு முறை நாங்கள் வழிமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதைப் பார்க்கும் போது அந்த அரணிலும் இந்த அரணிலும் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் கோபமோ என எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசாங்கத்தின் பாரம்பரியமான காலம் தாழ்த்தி நிகழ்வுகளை நடத்தல் எங்களின் கப்பல் பயணத்திலும் நடந்தது. ஒரு நாள் கப்பல் தாமதமானது நகரைச் சுற்றிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

கன்னியாவுக்கு காலை ஆறு மணிக்கு வாகன சகிதம் எங்களால் முன்னெடுக்கப்பட்ட பயண நடவடிக்கை கேவலம் இரண்டு மரக்குற்றிகளால் வழிமறிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறும் முயற்சி பயனளிக்காததால், அங்குள்ளவர்களுடன் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடி, எங்களுக்கான சாதக பாதக தன்மை பற்றி சிந்தித்துக் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அடுத்த முயற்சி முற்பகல் ஒன்பது மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்து, சிறந்த வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட்ட பயணம் வெற்றி இலக்கை அடைந்தது. ஏழு கிணறுகளிலும் குளிப்பதில் நம்மவர்கள் காட்டிய அவசரத்தில் வெற்றிக்களிப்பு மட்டுமல்ல கொழும்பில் காணப்படும் தண்ணீர்ப் பஞ்சமும் வெளிப்படையாகவே தெரிந்தது. தொடர்ந்து கோணேச்சரர் கோவிலுக்கு, அமைதியான இயற்கைச் சூழலையும் மான் மயில்களையும் ரசித்த படியே சென்றடைந்தோம். பழைய ஐதீகக்கதைகளை சொல்லிய படியே இரட்டைப் பாறைகளுக்கிடையே கல்லெறிந்ததையும் மறக்க முடியாது. இயற்கையாய் அமைந்த ஆலய சூழலில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தியமை மனதுக்கு இதமாய் இருந்தது. எம்மை நன்கு உபசிரித்த நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் விடைபெற்று கப்பலுக்கு புறப்பட்டோம். கப்பலில் நாங்கள் ஏறிவிட்டோம். ஆனாலும் இன்னும் புறப்படவில்லை. எப்பாடா இது வெளிக்கிடும் என்று சலிப்பு மேலோங்கியபோது என் எண்ணங்கள் பழைய நிகழ்வுகளில் இதே போன்ற சந்தர்ப்பங்களை நாடியது.

ஏ - 9 வீதி திறந்திருந்த அந்த காலங்களில் கொழும்பிலிருந்து இரவு ஒன்பது மணியளவில் வெளிக்கிடும் வாகனங்கள் அடுத்தநாள் காலை நாலு மணி முதல் ஐந்து மணிக்குமிடையில் தாண்டிக்குளத்தில் பாதை திறப்பதற்காக தரித்து நிற்கும். பாதை காலை ஆறரைக்கு திறக்கும் வரை வாகனத்தை விட்டிறங்கி சுற்றிப்பார்ப்போம். விடுமுறை நாட்களில் காணப்படும் பெரிய வாகன வரிசையில் எங்களுக்கு தெரிந்தவர்களை கண்டுபிடித்து கதைப்பதில் ஒரு அலாதிப்பிரியம். ஆரார் ஊருக்கு போகிறார்கள் என்பதைக் கண்டறிந்து விடுவோம். முகத்தை கழுவிக்கொண்டு தேத்தண்ணி குடிக்கத் தேத்தண்ணிக் கடைக்குப் போனால் அங்கு சூரியன் வானொலி பெரிதாக ஒலிக்கும். "தங்கச் சூரியனே பொங்கும் எரிமலையே" என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேத்தண்ணி குடிச்சதாக ஞாபகம். குடிச்சுட்டு வெளிக்கிட நேரம் சரியா இருக்கும். உடன நாங்கள் வந்த வாகனத்தில் இருந்து இறங்கி ஆக முதல் நிற்கும் வாகனத்துக்கு போவம். கொஞ்சக் காசு கூடக் குடுத்தாலும் முதலாவதாக வீட்ட போகவேணும் எண்ட போட்டியால ஓட்டம் தான். வேகமா விண்ணப்பப் படிவங்கள் நிரப்ப வேணும் எண்டதுக்காகவே எங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கங்களை மனப்பாடம் பண்ணியதையும், நாங்கள் கம்பஸ் எண்டு பெருமையடிச்சு சலுகைகள் பெற்றுக்கொண்டு மற்றையவர்களை விடவும் முன்னுக்கு போகவும் பின்னிற்பதில்லை. இப்ப கப்பல் மெதுவாக ஆட்டம் கண்டது. கப்பல் வெளிக்கிட்டதை உணரக்கூடியதாக இருந்தது.

கப்பல் தரை காணாத்தூரம் செல்லும் வரை மேல் தளத்தில் இருந்தபடி கரையில் தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடியும், கப்பல் கடலை கிழிக்கும் விதத்தினையும், ஆனாலும் கப்பலை முத்தமிடும் அலைகளையும் ரசித்தபடியே சென்றேன். நள்ளிரவு வேளையில் மெதுவாகப்பசி கண்டது. வாய்க்கு ஏதாவது கிடைக்குமா எனப் பார்க்க கீழ்த்தளத்துக்கு போனேன். என்னோட வந்த எல்லோரும் நல்ல நித்திரையில் இருந்தார்கள். அதிலொருத்தன் கப்பல் இயந்திர சத்ததை விடப் பெரிய சத்தமாக குறட்டை விட்டதை மறக்கவா முடியும். ஒவ்வொருத்தனின் பைகளுக்குள்ளும் கையை விட்டேன். ஒருமாதிரி இரண்டு அப்பிள் பழம் அகப்பட்டது. அதுவும் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே எனக்குள் சமர்ப்பணமாகியது. (என்ன பிரச்சனையெண்டால் நான்தான் அந்த அப்பிளை சுட்டதெண்டு இதுவரை ஒருத்தனுக்கும் தெரியாது. இதை அவங்கள் வாசிச்சாங்களெண்டால் பிரச்சனை பெரிசானாலும் பெரிசாகலாம்.) காலை வேளையில் கப்பல் தரை தட்டுது தட்டுது என்றால் எங்கே கரையைத் தொட்டது. நீண்ட நேரப் பயண வெறுப்பின் உச்சம் எங்களுடைய வார்த்தைகளிலும் தெரிந்தது. ஆனாலும் தரை தட்டிவிட்டோம் எண்ட உற்சாகம் மேலாகவே காணப்பட்டது.

அன்று இரவோடிரவகவே உயிரையும் பணயம் வைத்து வீடுகளுக்கு போய்ச்சேர்ந்தோம். பயண சலிப்பை வண்டியினுள் ஒலித்த பாடல் மறக்கச்செய்தது. அங்கு தனியார் வண்டிகளில் பயணிக்கும் போது ஒலிக்கும் பாடல்களின் தெரிவே வித்தியாசமானது. அவை பயணத்துக்கு தனி சுகம் சேர்ப்பவை. மெல்லிய சோகம் இழையோடும் நல்ல அர்த்தமுள்ளஇ சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்ற பாடல்களைக் கேட்ட படியே பயணம் செய்யும் போது பயணத்திலுள்ள சலிப்பு முதல் வீட்டுப் பிரச்சனை வரை அனைத்தையும் மறந்து பயணம் செய்வது அமைதியானது. எங்கிருந்து தான் இப்படிப் பொருத்தமான பாடல்களை தேடிப்பிடிப்பார்களோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. பிற்காலத்தில் அரசாங்கப் போக்குவரத்து வாகனங்களிலும் மக்களைக் கவர்வதற்காக அதே தெரிவுப் பாடல்களை ஒலிக்க விட்டதிலிருந்து நம்மவர்களை அத்தகைய பாடல்கள் எந்தளவுக்குக் கவர்ந்துள்ளது என்பதை உணரலாம். ஏன் எங்களுடைய கணணிகளில் கூட அத்தகைய தெரிவுகளென ஒரு தொகுதி பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மறக்கவா முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் மரங்களால் சூழப்பட்ட எமது வீடுகளையும், எம்மைக் கண்டதும் துள்ளிக் குதித்து சொந்தம் கொண்டாடிச் சந்தோசமாக வரவேற்கும் செல்லப்பிராணிகளையும், பூத்துக்குலுங்கி நறுமணத்தைப் பரப்பியபடியே அழகைத்தரும் பூமரங்களையும், தேவையறிந்து ஓடிவந்து தோள் கொடுக்கும் அயலவர்களின் அரவணைப்பையும், அமைதியான சூழலில் எம்மையெல்லாம் காத்து நிற்கும் தெய்வ சந்நிதானங்களையும், மிதிவண்டிகளில் உலாவரும் சின்னஞ்சிறார்களையும், ஊருக்கே சோறு போடும் உழவர்களையும், கண நேரம் ஓய்வெடுக்காது உழைப்பால் சிவந்த கைகளையும், கலாசாரம் பேணும் பொருத்தமான குடும்பப்பாங்கை கண்முன் காட்டும் உடைகளை அணிந்தவர்களையும், யார் வந்து எதிர்த்தாலும் கட்டிக்காக்கப்படும் விழுமியங்களையும், பறையுடனான காவடிகளையும், உடுக்குடனான கரகங்களையும், என்றும் மறவாத யாவரையும் உபசரித்து விருந்துண்ணக் கொடுக்கும் பழக்கங்களையும், ஒருவேளை உணவில்லையெனினும் மானத்தோடு மனிதத்தையும் இழக்காத மனிதர்களையும் பார்க்கும் போது நிச்சமாக சொல்லுகிறேன் அது தான் சொர்க்கம்.

மகிழ மரச் சோலையிலே இருக்கை போல் வடிவமைந்த கல்லிலே படுத்திருந்தபடி ஊர்க்கதைகள் உலகக் கதைகள் குடும்பச் சண்டைகள் சமகால அரசியல் மற்றும் காதல் விவகாரங்களை அலசுவதில் கிடைக்கும் தனி சுகம் வேறெங்கும் கிடைப்பதில்லை. அப்பப்ப கோயிலில் நடக்கும் பூசை அபிஷேகங்களில் கிடைக்கும் சோறு, “கோட்டா” மோதகங்களைப் பகிர்ந்துண்டபடியே இன்பமாய், ஒற்றுமையாய் ஒரே குடும்பம்போல மடத்தில் கூடிக்குலவியதை மறக்கவா முடியும்? மிதி வண்டிகளில் கடந்து செல்லும் நம்ம ஊரிளம் பெண்கள் முதலில் என்னை வித்தியாசமாகப் பார்த்தாலும் அடையாளம் கண்டு கொண்டதும் வழமையான பாணியில் கடைக்கண் பார்வையுடனும் தலைகுனிந்த வெட்கப் புன்னகையுடனும் கடந்து சென்றார்கள். பூங்காவனத்து மணலிலிருந்தபடியே கடந்து செல்லும் பெண்களுக்கு அடித்த நக்கல்களையும் நையாண்டிகளையும் மறந்திருக்க மாட்டார்கள்தானே. ஊரில் நடக்கும் கல்யாணவீடு முதல் செத்தவீடு அந்தியேட்டி வரை அனைத்து வைபவங்களுக்கும் இளைஞர்கள் சார்பில் பங்குபற்றி தேவையறிந்து உதவி செய்வதையும் சிறப்பாக சபை நடத்தி ஒற்றுமையாய் உணவுண்டு மகிழ்வதையும் நான் மறக்கவில்லை.

ஆனாலும் பழைய சந்தோசங்கள் போல இம்முறை இருக்கவில்லை. எந்நேரமும் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டே நகைச்சுவையுடன் கதைத்து விளையாடி மகிழ்ந்த சகோதரர்கள் வீட்டிலில்லை. எல்லா வயதினரும் உலா வந்த வீதிகளில் வயது முதிர்ந்தவர்களும் சின்னஞ்சிறார்களுமே வலம் வருகிறார்கள். என் வயதையொத்த இளைஞர்கள், என்னுடன் படித்த நண்பர்களைக் காண முடியவில்லை. பழைய காலப் பள்ளி வாழ்க்கையை மீட்டிப்பார்க்கத் தோழர்களில்லை. சிறுவயதினர் என்னை “அண்ணா”என அழைக்கும்போது பெருமையாயிருந்தாலும் “டேய்” எனக் கூப்பிட்டு என்னை ஆட்டுவிக்கும் அன்புக் கட்டளைகள் இல்லாதது கவலையைத் தருகிறது. ஒரு காலத்தில் நாங்கள் ஓடி விளையாடிய நண்பர்களின் வீடுகள் நிழல் தரு மரங்களின் இலைகளாலும் செடி கொடிகளாலும் நிரம்பிப் பாழடைந்து கிடக்கிறது. வீடுகளை அழகு படுத்த இளையவர்கள் இல்லாதது ஒவ்வொரு வீடுகளிலும் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் போகும் மாணவர்களின் மனங்களிலே எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. நாளை விடியும்போது நானிருப்பேனா என்ற சந்தேகத்துடன்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் இல்லை. படிப்பதற்குகந்த நேரங்கள் தவிர்ந்த நேரங்களில்தான் மின்சாரம் கிடைக்கிறது. கைத்தொலைபேசி சமிக்ஞைகளோ நானுமிருக்கிறேனென அமாவாசைக்கொருமுறை தோன்றி மறையும்.

விசிலடித்ததும் தங்கள் வாகனத்தை விட்டிறங்கி யாவரும் நின்ற இடத்திலேயே குறைந்தது இரண்டு மணி நேரமாவது நிற்க வேண்டிய “பாதை மறிப்பு” நம்மவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தினுள் திட்டமிட்டு எதனையும் செய்ய முடிவதில்லை. மச்சான் ஒருத்தியும் மாட்டுறாளில்லையெண்டால் பேசாமல் பாதைமறிப்பில் போய் நில். பக்கத்தில நிக்கிறவளிட்டை பேச்சுக்குடு. பாதை மறிப்பு முடிய நீங்கள் ரெண்டு பேரும் புதுச்சோடிகள் தான்டா. அந்தளவுக்கு கதைக்கிறதுக்கு நேரமும் கிடைக்கும் அதைவிட அவளுக்கும் வேற பொழுது போக்குமிருக்காது. நீ ஆட்டையைப்போட்டு விசயத்தை வெண்டிடலாமெண்டு நண்பர்கள் நகைச்சுவையாய் சொல்லுவார்கள். பாதை மறிப்பு விவகாரத்தால் உயர்தரப் பரீட்சை எழுதமுடியாமற் போன சந்தர்ப்பங்களும் கல்யாண வீடுகள் காலம் தப்பி நடந்த சந்தர்ப்பங்களுமுண்டு.

இத்தனையுமிருந்தென்ன, எந்தத் தடைகள் வந்தாலும் ஒவ்வொரு முறை வீழுகின்ற போதும் எழுந்து நிற்கும் வல்லமை படைத்தவர்கள் நம்மவர்கள். வீழ்வது அவமானமல்ல, ஒவ்வொரு முறை வீழும்போதும் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கிறோம் என்பதுதான் பெருமை. எத்தனை வழிகளில், யூத்தமென்ற போர்வையில் எம்மை அடக்க முயன்றாலும், அழிக்க முயன்றாலும் சாம்பலிலிருந்தும் எழுந்து நிற்கும் பீனிக்ஸ் பறவைகள் நம்மவர்கள். எத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தாலும் தளர்ந்து விடாது வளைந்து கொடுத்து அன்றாட வாழ்வை நடாத்துபவர்களும் அவர்களே. இதற்குச் சீதனம் என்ற போர்வையில் எம்மவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்துக் கட்டிக்காத்த பணமும் பொருளுமே காரணமென்றால் அது மிகையாகாது. இல்லையேல் நம்மவர்கள் பட்டினிச் சாவால் துடித்துச் சாவடைந்திருப்பார்கள். தமிழனென்றொரு இனம் நம்மூரில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கும்.

பெற்றோலுக்குப் பதிலாய் மண்ணெண்ணெயில் வாகனமோட்டியவர்களுக்கு, மிதிவண்டியைச் சுற்றி மட்டைப்பந்துப் போட்டி பார்த்தவர்களுக்கு, சுண்ணாம்பினால் கட்டிடிடம் கட்டியவர்களுக்கு, குண்டும் குழியுமான திருத்த முடியாத வீதிகளிலும் இலாவகமாக வாகனமோட்டக் கற்றுக் கொண்டவர்களுக்கு, ஆகாயத்தில் பறப்பது முதல் ஆழ்கடலினாழத்தில் பயணிப்பது வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, ஏன் பல்குழல் குண்டுகளின் மேலுறைகளையே பூச்சாடியாக்கி அழகு பார்த்தவர்களுக்கு, குண்டுச்சத்தங்களுக்கும் குழல்களினதிர்வுகளுக்குமிடையேயும் வாழ்ந்தவர்களுக்கு, செங்குருதியுறைந்த மண்மேலே நடக்கப் பழகிய நம்மவர்களுக்கு வாழவா கற்றுக் கொடுக்க வேண்டும்? தன்மானத்தோடும் சுய உரிமை காக்கும் அதிகாரத்தோடும் வாழுவோமென்ற வெறி இருக்கும் வரை, எம்மால் முடியுமென்ற நம்பிக்கையிருக்கும்வரை  எதையுமெதிர்கொள்ளும் வீரமிருக்கும்வரை தமிழன் வாழ்வும் நிலைத்திருக்கும். வரலாற்றில் தடம் பதிக்கும்.


ச. தனஞ்ஜெயன்
மட்டம் 03

Wednesday, December 28, 2011

நள்ளிரவில்


சொய்சாபுரத்தில இருந்த காலத்தில ஒரு நாள் இரவு, கிட்டத்தட்ட அதிகாலை பன்னிரண்டு முப்பது மணியிருக்கும். சூடான கதை ஒண்டு கதைச்சுக் கொண்டிருந்ததால நாங்கள் நித்திரை கொள்ளேல்ல. திடீரெண்டு ஆரோ ஓடி வாற சத்தம்... எங்கட கதவைத் தட்டுற சத்தம்... ஓடிப் போய் முதலாம் மாடியிலேந்து குதிக்கிற சத்தம்... நாங்கள் குழம்பிப் போனம். என்ன நடக்குதெண்டு விழங்கேல்ல...

கொஞ்ச நேரத்தில எங்கட வீதியால ரண்டு பேர் ஓடி வந்தாங்கள். சிங்களத்தில “கொட்டி... கொட்டி...” (தமிழ்ல புலி.. புலி..) எண்டு சத்தம் போட்டுக் கொண்டு.. சமாதானம் செத்துக்கொண்டிருந்த காலம் எண்ட படியா பொடியள் ஆரையும் துரத்திக் கொண்டு வந்தவங்களோ? அவன் ஏன் வந்து எங்கட வீடுக் கதவைத் தட்ட வேணும்? எங்களுக்கு மெல்ல பயம் பிடிக்கத் தொடங்கிச்சுது. மெல்லமா எங்கட வீட்டு விளக்குகளை அணைச்சுப் போட்டு சன்னலோட ஒட்டி நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம் எண்டு யோசிச்சம். திடீரெண்டு கன சனம் எங்கட வீதியில கூடீட்டுது. கொட்டி கொட்டி எண்டு சொல்லிக் கொண்டு எங்கட வீட்டை கை காட்டி கதைக்கத் தொடங்கினம். எங்களுக்கு மெல்ல நடுங்கத் தொடங்கீட்டுது. பொலிஸ் வந்தால் எங்கள் எல்லாரையும் உள்ளுக்குக் கொண்டு போய்ப் போடப் போறான் எண்ட நிலை.

திடீரெண்டு ”ராமு (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) வாடா.. நான் சோமு சொல்லுறன். ஒரு பயமுமில்லை. வெளீல வாடா” எண்டு பலமா சத்தம் போட்டுக் கேட்டுது. இந்தக் குரல் எங்கட சிரேஸ்ட மாணவர் அண்ணா ஒருத்தருடையது. ராமு எங்கட மட்டத்தைச் சேர்ந்தவன். அவங்கள் ரண்டு பேரும் ஒரே வீட்டில இருக்கிறவங்கள். ஆனால் எங்கட வீட்டிலேந்து கிட்டத்தட்ட 600 மீற்றர் தூரத்தில இருக்கிறவங்கள். அவங்கள் ஏன் எங்கட வீதிக்கு தலை தெறிக்க ஓடி வரோணும்? சோமு ஏன் எங்கட வீடுப் பக்கம் வந்து பிறகு எங்கேயோ ஓடி ஒழிக்கோணும். ஒண்டுமே புரியேல்ல. வீதி முழுக்க சனம் ஓடித் திரியுது. சிங்களத்தில புலி புலி எண்டு சொல்லுறாங்கள்.எங்கட வீட்டைக் காட்டியும் கதைக்கிறாங்கள். கொஞ்ச நேரம் ஆடிப் போனம். வெளீல போய் நடந்தது என்ன எண்டு விசாரிக்க விரும்பேல்ல. பிடிபட்டால் உள்ளுக்குள்ள தான். உள்ளுக்குள்ள போட்டா ஆள் இருக்குதோ இல்லையோ எண்டும் தெரியாது, எப்ப வெளீல விடுவாங்கள் எண்டும் தெரியாது.

அந்த நேரத்தில எங்களுக்கு தெரிஞ்ச, அந்த நண்பர்களின்ர அறையிலேந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பு எடுத்தம், ”கொஞ்சம் பொறுத்தெடு” எண்டுட்டு அந்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது. எங்கட வீதியில வாகன சத்தம் கேட்டது.   மெதுவா எட்டிப் பாத்தம் வீதி வெளிச்சத்தில இவங்கள் ரண்டு பேரும் வாகனத்துக்குள்ள ஏத்தப் படூறது தெரிஞ்சது. நிலமை கவலைக்கிடம். திருப்பியும் அந்த அண்ணாக்கு அழைப்பெடுத்தம். இப்ப அவர் இணைப்பில இருக்கிறார். அவர் எதுவுமே பேசவில்லை. சிங்களத்தில சரமாரியாக உரையாடிக் கேட்குது. வாகனமும் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அந்த அண்ணாவும் வாகனத்தில் ஏற்றப்பட்டதை உணர்ந்து கொண்டோம்.

அவர்களிருந்த வீட்டுக்கு பக்கத்தில இருந்த இன்னுமொரு அண்ணாக்கு அழைப்பெடுத்தம். நேற்று புதுசா எங்கட வீட்டுக்கு பக்கத்தில குடியிருக்க வந்த அண்ணன்மார் இருவரின் வீட்டில ’குடு’க்காரர் வந்து நிக்கிறாங்களாம். (போதை வஸ்து பாவிப்பவர்கள், அப்பப்ப வழிப்பறி களவுகளிலும் ஈடுபடுபவர்கள்). அவங்களுக்கு பயமா இருக்கெண்டு சொன்னதால தாங்கள் என்னண்டு பாக்கப் போறம் எண்டு தனக்குச் சொன்னவை எண்டு சொன்னார். இப்ப என்ன செய்யுறது. நடந்தது என்னண்டும் தெரியேல்ல...  

எங்களுக்கு அந்த நேரத்தில வந்த யோசினை மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு இதனைத் தெரியப்படுத்துறது. அந்த ராத்திரி நேரத்தில் (அதிகாலை 1 மணியிருக்கும்) அவருடைய தொலை பேசிக்கு அழைப்பு எடுத்தம். துணை வேந்தர் அழைப்புக்கு பதில் சொன்னார். எங்களுக்கு தெரிந்த விடயங்களை தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னோம். வாகனத்தில் ஏத்திக் கொண்டு போனதையும் அவர்களுடைய தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் சொன்னோம். அவர் சொன்னார் இன்னும் ஐந்து நிமிடத்தில் எம்முடன் மறு படியும் தொடர்பு கொள்வதாக... சிறிது நேரத்தில் துணைவேந்தர் எங்களுடைய தொலைபேசிக்கு அழைத்து சொன்னார் அவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் விடுவிக்கப்படுவார்கள். நீங்கள் ஒண்டும் பயப்படத் தேவையில்லை. அந்த நேரம் கெட்ட நேரத்திலும் மொறட்டுவைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எங்களுக்கு உதவினார் எண்டு சொன்னால் நம்ப முடிகிறதா? 

பொலீஸ் பிடித்தார்களா? அப்படியானால் ஏன் இவர்கள் ஓடினார்கள்? 

அன்று நடந்தது என்ன?

நாங்கள் இருந்த பகுதி குடுக்காரர்களுக்கு பிரசித்தமானது. முதல் நாள் எங்களுடைய வீட்டுக்கு அண்மையில் குடி வந்த அண்ணன்மார்களுக்கு குடுக்காரர்களைப் பற்றி தெரிந்திருந்தது. அன்றைய நாள் பகல்வேளை அவர்கள் கணனி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வரும்போது வீட்டுக்கு முன்னால் ஓரிருவர் சந்தேகத்துக்கிடமாக நடமாடியிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டை நோட்டம் விட வந்த குடுக்காரர் எண்டு அவர்கள் நினைத்து விட்டார்கள். 

அண்டைக்கு இரவு பொலீஸ் சிவில் உடையில் சோதனையிட அவங்கட வீட்டுக்கு வந்திருக்கிறாங்கள். அவங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டினதைப் பாத்து வந்தது குடுக்காரர் எனப் பயந்து, பொலீசில் பிடிபட்ட அண்ணாக்கு அழைப்பெடுத்து உதவிக்கு வரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் தன்னுடைய அறை நண்பர்கள் நால்வரையும் கூட்டிக்கொண்டு இவர்களுக்கு உதவிக்காக நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் புறப்பட்டு வந்திருக்கிறார். வந்த இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலீஸ் இவர்களை மறித்திருக்கிறான். வந்தவர்களும் மறிப்பது குடுக்காரர் என நினைத்து தப்புவதற்காக ஓடினார்கள். இதுதான் நடந்தது. பொலீஸ் துரத்தி பிடிச்சு கிட்டத்தட்ட ஒரு கிழமைக்குப் பின்னரே அவர்களை விடுவித்தனர். படிக்க வந்து கொஞ்ச நாள்ல நடந்த இந்த சம்பவமும் மறக்க முடியாதது.

- தனஞ்சி


Thursday, December 22, 2011

தண்ணிக் காசு


நாங்கள் இருந்த சொய்சாபுர வீட்டின்ர நீர் மானி எங்கட வீட்டுக்குள்ளேயே இருந்தது. அதனால நீர்மானி வாசிப்பாளர் எங்கட வீட்டுக்குள்ள வந்துதான் நீர்மானியை வாசிச்சு கட்டணம் அறவிட வேணும். நாங்கள் பாவிச்ச நீருக்கான கட்டணம் பாவிச்ச அலகுகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் 15 அலகுக்கும் 50 ரூபா, 15 - 20 அலகு பாவிச்சிருந்தால் 80 ரூபா அளவில வரும். 20-25 அலகு பாவிச்சிருந்தால் 250 ரூபா அளவில வரும். எப்பிடியும் இந்தக் கட்டணத்தை 100 ரூபாக்குள்ள கட்டுப்படுத்தியே ஆக வேணும் எண்டு யோசிச்சம். குளிக்காம இருக்கிறது சிறந்த தீர்வெண்டாலும் அதனால மற்றாக்களும் பாதிக்கப்படுவினம் எண்டதால என்ன செய்யலாம் எண்டு யோசிச்சம். அப்பத்தான் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்ர வழமை ஒண்டைக் கண்டு பிடிச்சம். அத எங்களுக்கு சாதகமா பயன்படுத்திறதெண்டு முடிவெடுத்தம். 

நீர்மானி வாசிப்பவர் வீட்டுக்குள்ள வந்து வாசிப்பை வாசிக்க முடியாமல் போனால் கடைசி மாதம் என்ன கட்டணம் வந்ததோ அந்தக் கட்டணத்தைத் தான் இந்த மாதக் கட்டணமாக அறவிடுவார். அப்ப ஒரு மாதம் மிகக்குறைஞ்ச கட்டணத்தை பதிவு செய்து போட்டு அடுத்த மாதத்திலேந்து அவரை உள்ள விடாமல் கதவைப் பூட்டி வச்சிருந்தால் அவர் பழைய கட்டணத்தை பதிவு செய்வார். நாங்கள் குறைஞ்ச கட்டணம் கட்டலாம். ஏன் நாங்கள் இப்பிடி செய்யத் துணிஞ்சனாங்களெண்டால் பெரும்பாலும் நாங்கள் ஊரில தான் நிக்கிறது. பெயர் தான் கம்பஸில படிக்கிறமெண்டு. சோதினை வருதெண்டால் தான் எல்லாரும் ஒண்டா நிப்பம். அந்த நேரம் தண்ணிக் காசு எகிறும். அடுத்த மாதம் எங்கட வீடு பூட்டிக் கிடக்கும். தண்ணி பாவிச்சிருக்க மாட்டம். சராசரியாப் பாத்தா 15 - 20 அலகுக்குள்ள தான் பாவிச்சிருப்பம். இந்த சராசரியை எங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திறதுதான் நோக்கம். 

அதன் படி தண்ணிக் கட்டணத்தை 80 ரூபாக்குள்ள மட்டுப்படுத்தி ரண்டு மாதம் வெற்றிகரமா எங்கட திட்டம் நிறைவேறிச்சு. நீர் மானி வாசிப்பாளர் வரும் திகதிகள் எங்களுக்கு கொஞ்சம் தெரியும். அந்தக் காலத்தில எங்கட வீட்டுக் கதவை ஆர் தட்டினாலும் திறக்கிறேல்ல. மூண்டாம் மாதம் மானி வாசிப்பாளர் வீட்டுக்குள்ள வந்து மானியை வாசிச்சா, கட்ட வேண்டிய கட்டணம் 700 ரூபாவை எட்டியது. இப்ப எங்களுக்கு ஒரு சிக்கல் வந்திட்டுது. அடுத்த முறை மானி வாசிப்பாளர் வரேக்க வீட்டில நாங்கள் நிண்டே ஆக வேணும் இல்லாட்டி திருப்பியும் 700 ரூபா வரும். பாவிக்காத தண்ணிக் காசும் சேர்ந்து எங்கட தலையில கட்டப்படும். 

அப்ப இன்னுமொரு வழி கண்டு பிடிச்சம், மானி வாசிப்பை எழுதி வீட்டுக் கதவில ஒட்டி விடுறது. மானி வாசிப்பாளர் அதனை மானி வாசிப்பாக கருதி கட்டணம் அறவிடுவார். எங்களுக்கு ஏற்றமாரி மானி வாசிப்பை கணக்குப் போட்டு வாசல்ல ஒட்டி விடுவம். மானி வாசிப்பளரும் அதை நம்பி அலகுகளைக் கணிப்பார். கொஞ்ச காலம் நீர்க் கட்டணமாக 100 ரூபாக்குள்ள செலுத்தின்னாங்கள்.

Wednesday, December 21, 2011

ஞாபகம்


நீண்ட நாட்களுக்கு பிறகு பல்கலைக் கழகம் சென்றதில் பழைய ஞாபகங்கள் சில வந்து போயின. நான் கற்ற காலத்தில் நிலவிய சூழல் இப்போது இல்லை. அன்றைய சூழல் பயம் மிக்கதும் அடுத்தது என்ன நடக்கும் எண்டு தெரியாததாகவும் இருந்தது. வீட்டிலிருந்து வெளிக்கிட்டால் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வோமோ என்பது உறுதியில்லாமல் இருந்த காலம். அந்தக் கால கட்டங்களில் நிகழ்ந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்து போயின. சில சம்பவங்களை இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடந்தாலும் அந்த நேரம் எங்கட வாழ்க்கை பயத்தோடே கழிந்தது. அவற்றில் என் நினைவுக்கு வரும் சில சம்பவங்களை மீட்டிப் பார்க்கிறேன்.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கற்றதால் சொய்சாபுரம் தான் நானும் என்னுடைய நண்பர்களும் தங்கிய இடம். முதல் வருடம் சொய்சாபுர தொடர்மாடிகள் ஒன்றில் வீடு ஒன்றை எடுத்து மொத்தமாக நால்வர் பகிர்ந்து கொண்டோம்.  சிக்கனமான தொகைக்கு வீடு கிடைக்குதெண்டு எடுத்த வீட்டின் சூழல் எப்பிடி எண்டது கொஞ்ச நாள் போகத்தான் புரிஞ்சு கொண்டது. இனி என்ன செய்யுறது தலையைக் குடுத்திட்டம் பயத்தை வெளீல காட்டாமல் பிரச்சினைகளை எதிர் கொண்டே ஆக வேண்டிய சூழல்.  



நாங்கள் இருந்தது முதலாவது மாடி. ஒரே நீட்சியாக அமைந்திருந்த மூன்று தொடர் மாடிகளின் நடு மாடியில் எங்கள் வீடு. சன்னலால் எட்டிப் பார்த்தால் இந்தத் தொங்கல்லேந்து அந்த தொங்கல் வரையும் தெரியும். எதிர் மடிகளில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு பொழுது போக்கு. சிங்களத்தில நடக்கிற சண்டைகள் எங்களுக்கு விளங்காட்டிலும் ககைக்கிற தொனி, கையால் அடிபடுகின்ற மற்றும் கதவு சன்னல் அடிக்கப்படுற சத்தங்களை வைத்து சண்டையை நாங்களே கற்பனை பண்ணி அவர்கள் பேசுவதை எங்களுக்கு விரும்பிய தமிழுக்கு மாத்தி (டப்பிங் படங்களைப் போல) எங்களுக்குள் நக்கலடித்துக் கொள்ளுவம்.  நாங்கள் மூவர் ஒரே மட்டத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே சிந்தனை ஒரே ரசனையுள்ளவர்களாகவும் அரட்டையடிப்பதில் வல்லவர்களாகவும் இருந்தோம். 

பிறகென்ன கதைக்கப் பிடிச்சால் கதை அந்த மாரிப் போகும். சில வேளைகளில் படுக்கேக்க காலமை மூண்டு நாலு மணியாகும். சூடான விவாதங்கள் ஆளாளுக்கு நக்கல், அவன் அவள் அவர் எண்டு ஊருலகம் முழுக்க அலசி ஆராஞ்சு நாட்டு நடப்பு (சமாதானம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருந்த காலப்பகுதி) எண்டு கதை நீளும். எங்களுக்கிடையில் ஒழிவு மறைவின்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உட்பட எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொண்டோம். கிட்டடியில சில காலம் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் போன, அன்றைய அறை நண்பர்களில ஒருத்தனை சந்திச்சன். “மச்சான் அந்தக்காலத்திலேந்து எங்களுக்குள்ள ஒழிவு மறைவு இருந்ததில்லைத் தானே, வேறொருத்தருக்கும் சொல்லேல்ல உனக்கு மட்டும் சொல்லுறன்” எண்டு தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான முடிவு ஒன்றை எனக்கு சொன்ன போது எனக்கு வந்த சந்தோசத்துக்கு அளவேயில்லை. அவன் எங்க எங்கையோ போய் வந்தாலும் அதே நட்பு இண்டைக்கும் இருக்கு எண்டு நினைக்க சந்தோசம் தான். நீண்ட நேரம் அவனோட இருந்து பழைய சில ஞாபகங்களை மீட்டிச் சந்தோசப்பட்டன்.

- தனஞ்சி

Thursday, July 29, 2010

வாலாக் கொடி

மார்கழி மழை கால விடுமுறைக்கு எங்கட பிரதேசப் பொடியளின்ர பொழுது போக்கு பட்டமேத்துறதுதான். மழைக்காலம் எண்டபடியா விளையாடேலாது. அப்ப பள்ளிக்கூட விடுமுறை வேற. வட கீழ்ப் பருவக்காற்றும் அப்பத்தான் அளவா வீசத் தொடங்கியிருக்கும். பட்டம் விடுறதுக்கு பொருத்தமான காலம் அப்பத்தான். பொடியளுக்கு பட்டம் விடுறதுதான் தொழில். பட்டத்திலையும் வாலாக்கொடி ஏத்தாதாக்கள் ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லலாம். வாலாக் கொடியெண்டா டயமண்ட் வடிவில மூண்டே மூண்டு ஈக்கிலையும் ரிசுவையும் கொஞ்சம் நூலையும் பயன்படுத்திச் செய்யப்படும் பட்டம். இவ்வளவுதான் வாலாக்கொடி கட்டுறதுக்குத் தேவை. ஆனாலும் எனக்கு இண்டை வரைக்கும் கட்டத் தெரியாது. ஏனெண்டா ஈக்கிலை வளைச்சு செட்டையை சரியா சமச்சீரா ஒட்டுறதிலதான் திறமையே இருக்கு. 

பெரிய பெரிய பட்டங்கள் கட்டி ஏத்த முன்னம் ஏழெட்டு வயசுகளில வாலாக்கொடியை கடையில வாங்கி ஏத்துறனான். வாலில்லாமல் ஏத்தலாம். ஆனா அது சரியான சிக்கலான விசயம். குத்தத் தொடங்கினா நிலத்தில முட்டுமட்டும் குத்தும். இல்லாட்டி அங்கனக்க பனை தென்னை வேம்பு ஆல அரச மா மரங்களில தொங்கிப் போடும். அதனால பெரும்பாலும் வால் கட்டித்தான் ஏத்துறனாங்கள். ஏத்த முன்னம் முச்சை போடுறதிலையும் கன வகையிருக்கு. உச்சி முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல நிக்கக் கூடிய மாரி போடுறது. கொஞ்சம் குறுக்கி விட்டா - இழுவை முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல வராம குறிப்பிட்ட ஏற்றத்தில நிக்கும். இழுவை நல்லா இருக்கும். வண்டி வைக்காது (நூல் தொய்யலாக இருக்காது). இப்பிடி கன விசயம் வாலாக் கொடிக்கே இருக்குக் கண்டியளோ. 

இன்னொண்டையும் சொல்லோணும், எத்தினை விதமான பட்டங்கள் ஏத்தினாலும் வானத்தில ராசா இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.

வாலாக்கொடி


பட்டமேத்தேக்கையும் பல அனுபவங்கள். ஒரு தைப்பொங்கலண்டு ஆசையா வாலாக் கொடியும் நூலும் புதுசு வாங்கி ஏத்தினனான். பட்டம் ஒரே இழுவையில ஏறீட்டுது. வலு சந்தோசம். நூலை தொடர்ந்து இழக்கிக் கொண்டே இருந்தன். பட்டத்தின்ர இழுவைக்கு நூலும் போய்க் கொண்டே இருந்திச்சு. திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல. 'நூலைப் பிடி நூலைப் பிடி'யெண்டு கத்தினதுதான்; வாலாக்கொடி பாத்துக் கொண்டு நிக்கப் போச்சுது. அடியில நூலைக் கட்டியிருந்தா எங்கையாவது மரங்களில அடிக்கட்டை சிக்கி நிண்டு வாலாக் கொடியேறி நிண்டிருக்கும். இராக்கொடி பகல்கொடியா பட்டம் சளைக்காமல் நிண்டிருக்கும் மழை பெய்தோ அல்லது காத்து நிண்டோ பட்டம் படுக்காம இருக்கும் வரை...  

இன்னொருமுறை ஏழெட்டு வயசு காலப் பகுதி. வீட்டுக்கு முன்னால் காணிக்குள்ளதான் வாலாக்கொடியேத்திக் கொண்டு நிண்டனான். பட்டமேறீட்டுது. அப்ப வலு சந்தோசம்தானே. கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது. அந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா எந்த இடத்தில நிண்டாலும் உடன குப்புறப்படு எண்டு சொல்லித் தந்தவங்கள். எனக்கு அந்தச் சின்ன வயசு காலப்பகுதியில அந்த இடத்தில குப்புறப்படுக்கிறதில உடன்பாடு இல்லை. எங்கையாவது ஓடி மறைஞ்சிருக்கோணுமெண்டதுதான் என்ர எண்ணம். வெட்டை வெளீல நிண்டா குண்டு பட்டுடும். எங்கையாவது ஓடி ஒழிச்சா ஒண்டும் நடக்காது எண்டது என்ர நினைப்பு பாருங்கோ. அந்தக் காலத்திலையே எனக்கு என்ன ஒரு ஞானம்!!! 

ஆட்லறி குண்டுகளின்ர முதலாவது வெடிச்சத்தம் ஏவின இடத்திலையும் ரெண்டாவது வெடிச்சத்தம் வானத்திலையும் மூண்டாவது வெடிக்கிற இடத்திலையும் கேக்கும். எங்கட தலைக்கு மேல ரண்டாவது வெடி வெடிச்சா எங்களுக்குப் பாதிப்பில்லை எண்டத ஊகிக்கலாம் எண்டு பிறகுதானே தெரிஞ்சுது. ஆனாலும் எத்தினை குண்டுகள் அடிக்கிறாங்கள் எண்டு தெரியாதுதானே. அத விட ஒருக்கா அடிச்சா தொடந்து ரண்டு மூண்டு அடிப்பாங்கள் எண்டொரு நம்பிக்கை. அண்டைக்கும் ஓடிப் பொய் ஒரு பத்தேக்குள்ள ஒழிச்சிருந்தனான். ஒரு அரை மணித்தியாலம் கழிஞ்சு சத்தம் ஒண்டும் இல்லையெண்டு வெளீல வந்தா என்ர கையில வாலாக்கொடியின்ர நூலிருக்கு. அதைக் கைவிடாமத்தான் இவ்வளவு நேரமும் இருந்திருக்கிறன்.  மேல பட்டத்தை பாத்தா வாலாக் கொடி எதுவுமே நடக்காததைப் போல எந்த சலனமுமில்லாம சாடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்லறிக் குண்டுகள் கடற்கரையில விளையாடிக் கொண்டிருந்த, காலாற ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகள் சிலரின் வாழ்க்கையை காவு கொண்டதோடு சிலரின் அவயவங்களை பறித்தெடுத்ததென்பது வாலாக்கொடியைப் போல அதை ஏவினவங்களுக்கும் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை...

Saturday, June 12, 2010

துலாப் போடுதல்...

துலாப்போடுதல் எண்ட சொல் வழக்கை கேள்விப்படாமல் இருக்க மாட்டீங்கள் எண்டு நம்புறன். தூங்கி வழிதல் / விழுதல் எண்டு பொருள் படும். எல்லாருமே துலாப் போட்டிருப்பீங்கள் எண்டே சொல்லலாம். துலாப் போடுறவனை விட துலாப் போடுறவனைப் பாக்குறவனுக்கு ஒரு அலாதி சந்தோசம் இருக்குப் பாருங்கோ. துலாப் போடுறவன்ர ஒவ்வொரு அசைவையும் நல்லாவே ரசிக்கலாம். அது கிடக்க... இப்ப கொஞ்ச நாளா நான் துலாப்போடுற சந்தர்ப்பம் அதிகரிச்சுப் போட்டுது. இருந்தாலும் நான் மீட்டிப் பாக்க வந்த விசயம் சின்ன வயசில துலாப் போட்ட சந்தர்ப்பங்கள். எல்லாருக்குமே தெரியும் தானே படிக்கேக்க தான் துலாப் போட்டிருப்பன் எண்டு. 

அந்தக் காலத்தில ஒரு குப்பி விளக்கோ அல்லது அரிக்கன் லாம்போ கொழுத்தி வச்சுட்டு சுத்தி வர இருந்து படிக்க வேண்டியதுதான். பொழுதுபட்டால் முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து மேசையில இருக்க வேண்டும் எண்டது கட்டளை. என்ன செய்ய? பின்னேரங்களில ஓடி விளையாடிப் போட்டு வந்து மேசையில இருந்தா எப்பிடி இருக்கும்? அடிக்கடி துலாப் போடுவன். துலாப்போட்டு விளக்குக்கு மேல விழுந்து விளக்குப் பத்தியெரிஞ்சு மரணமான சம்பவங்களும் அந்தக் காலத்தில நிறைய நடந்ததுதான். துலாப்போடும்போது கூட இருக்கிறாக்களையும் கவனிக்காம துலாப் போட வேண்டியதுதான் (நித்திரைக்கு எங்க தெரியப் போகுது எங்கட மானப் பிரச்சினை). 

படிக்கும்போது துலாப் போட்டால் ‘புத்தகத்தை மூடி வச்சிட்டுப் போய்ப் படு’ எண்டு அப்பா சொல்லுவார். அப்ப சந்தோசம் தானே எண்டு நினைப்பியள் போல... அண்டைக்குப் போய்ப் படுக்கலாம். பிரச்சினையில்லை. அடுத்தடுத்த நாட்களில, கூட நேரம் இருந்து படிக்க வேணும். சில வேளை விளையாடப் போற ஓய்வு நேரத்திலயும் இருந்து படிக்க வேணும். அண்டைக்கு பழகின பழக்கம் இண்டைக்கும் நான் துலாப் போடும்போது படிப்பது கிடையாது. எத்தினை மணியெண்டாலும் (வெள்ளன எண்டாலும்) படுத்துடுவன். (அறை நண்பர்களுக்கு தெரியும்) இவ்வளவு படிக்கக் கிடக்கே எண்டு சிந்திக்கிறதில்லை.

உயர் தரம் படிக்கும் வரை கற்பிக்கும் போது துலாப் போட்டதா ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் கற்பிக்கும்போது துலாப் போடாத நாளேயில்லையெனலாம். காரணம் சோதினைக்கு முதல் கிழமை தலைகீழா நிண்டு படிச்சுப் பாடமாக்கிப் போட்டுப் போய் சோதினை செய்யலாம் எண்டதால. என்ர நண்பன் சொன்னதுதான் ஞாபகம் வருது... ’என்னடா எந்த நாளும் லெக்சருக்கு வந்து நித்திரை கொள்ளுறியே’ எண்டதுக்கு அவன் சொன்ன பதில் ’நித்திரையில தான் எனக்கு படிப்பிக்கிறது எல்லாம் விளங்கும்.’  சிலர் இருந்த படியே நித்திரை கொண்டுவிடுவார்கள். சிலர் கண்ணாடி போடுறது நித்திரை கொள்ளுறதை மறைக்கத்தான். பஸ்ஸுக்குள்ள பக்கத்தில இருக்கிறவன் துலாப்போட்டு எங்களுக்கு மேல விழுந்தா எரிச்சல்தான் வரும். அதே நேரம் கொஞ்சம் தள்ளியிருந்து துலாப் போடுறவனை, அவனுடைய இயக்கத்தை ரசிக்கச் சொல்லும். என்னத்தைச் சொன்னாலும் துலாப் போடுறவனுக்குத்தான் அவன்ர கஸ்டம் விளங்கும்.  

Wednesday, January 06, 2010

கள்ள வோட்டு

நாட்டின்ர சனாதிபதித் தேர்தலும் வருது. இப்ப இருக்கிறவர் இன்னும் ரெண்டு வருசம் சனாதிபதியா இருக்கலாமாம். ஆனா இப்ப நடத்துறதுக்கு என்ன காரணம் எண்டா தான் திரும்பி வரோணும் எண்டதுக்காகவாம். என்ன ஒரு தேசப் பற்றுப் பாருங்கோ. வழமையைப் போல சிறுபான்மை இன மக்களின்ர வோட்டிலதான் வெற்றி தங்கியிருக்கெண்டு தேர்தலையொட்டிச் சிறு பான்மையினர் விசேசமா கவனிக்கப் படீனம். என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டில நீண்டகாலமா இருக்கிற சூழலைப் பாத்தா ஒரு காலமும் சிறுபான்மையினர் ஒருத்தர் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று சனாதிபதியாக முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை எண்டைக்கும் சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். அதனால அத ஒழிக்கிறதுக்கு ஏதாச்சும் வழியிருக்கோ எண்டு பாக்க வேணும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம் இல்லை. இவ்வளவுதான் எனக்கிருக்கிற அரசியல் அறிவு.

அது இருக்கட்டும் நான் சொல்ல வந்த விசயம் வேற. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழர்கள் எல்லாரும் தாங்கள் ஒரு தலைமையின் கீழ்தான் இருக்கிறம் எண்டதைக் காட்ட ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எண்ட நிபந்தனை. உண்மையைச் சொல்லோணுமெண்டா அப்ப எனக்கு வாக்குரிமை கூட இல்லை. உயர்தரச் சோதினைக்கு படிச்சுக் கொண்டிருந்த காலம். தமிழ்த் தேசியம் மீதிருந்த உந்துதாலால் நானும் என்ர வயசையொத்த சில நண்பர்களும் வோட்டுப் போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு. அந்தத் தேர்தல்ல பல்கலைக் கழக பொடியள் மும்முரமா பிரச்சாரம் செய்ததாலையும் ‘வயதுக்கு வந்தாக்களுக்கு மட்டும்’ எண்டிருக்கிறதுகளை என்னண்டொருக்கா பாக்கோணும் எண்டிருக்கிறதைப் போல (இதுவும் வயசுக்கு வந்தாக்களுக்கு மட்டும்தானே) எப்பிடி வோட்டுப் போடுறதெண்டதைப் பாக்கோணுமெண்ட ஆசையும் கூடவே இருந்ததாலையும் வோட்டுப் போடுறதெண்டு யோசிச்சம்.

வழமையா நாங்கள் கூடுற மடத்தடிக்குப் போனா நாங்கள் தான் தாமாதமாப் போயிருக்கிறம். அதுக்கு முன்னமே எங்கட பொடியள் வோட்டுப் போடத் தொடங்கீட்டாங்கள். குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் பட்டோம். (களவுக்கு போறது இப்பிடித்தானே ) எனக்குத் தரப்பட்ட இடம் எங்கட இடத்திலேந்து கொஞ்சத் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடம். முதல்ல உதில கொஞ்சம் அனுபவம் உள்ளாள் வாக்களிப்பு நிலையத்துக்குள்ள போனார். அடுத்ததா அவற்ற தலமையில பின்னால புதுசா வோட்டுப் போடப் பழகுறாக்கள் நாங்கள் ஒரு அணி போல உள்ளுக்குள்ள போனம்.

எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன்.  அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன் அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவற்ற முகத்த பாக்கேலாமப் போச்சு. டக்கெண்டு திரும்பி அவர் பெயரை ஆருக்காக வாசிச்சாரோ அவையளைப் பாத்தன். அடுத்த அதிர்ச்சி. அதில இருந்த எல்லாருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவையளைத் தெரியும். வாசிக்கப்பட்டது என்னுடைய பெயரில்லையெண்டது மட்டுமில்லை நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக் கூடாதெண்டதும் அவையளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒருத்தரும் ஒண்டும் பறையேல்ல. அப்பத்தான் எனக்கு மெல்ல நடுக்கம் பிடிச்சுது. ஒகோ,இது இப்பிடிச் சிக்கலோ? பிடிபட்டா கதை கந்தல் தான் எண்டது விளங்கிச்சுது. வோட்டுப் போட்டுட்டுப் போய் கையை நீட்டினா கைக்கு வர்ணம் பூசினதும் இன்னுமொரு ஆசிரியர். என்னை ஏழெட்டு வயது முதல் அறிந்தவர். கிட்டத்தட்ட மூண்டு வருசம் என்னுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தவர்.  சின்ன விரலை இழுத்து வச்சு ‘இன்னுமொரு தரம் நீ வோட்டுப் போடக்கூடாது’ எண்டு சொல்லிச் சொல்லி அந்த விரல் முழுக்க தன்ர பலம் முழுக்கச் சேத்து அழியாத படி நிறந்தீட்டி விட்டார். வெளீல வந்தாப்போல தான் அப்பாடா ஒரு மாரித் தப்பீட்டம் எண்டு பெருமூச்சு விட்டன். அதே நாளில நான் பொலீசு வாகனத்தில ஏத்தப்பட்ட சோகக் கதையைப் பிறகொருக்காச் சொல்லுறன்.

அண்டைக்கு பின்னேரம் எல்லாம் முடிய பொடியள் எல்லாரும் ஒண்டு கூடி அவரவர் சாகசங்களைச் சொன்னாங்கள். எண்ணுக் கணக்கில்லாத வோட்டுப்போட்டவங்களும் இருந்தாங்கள். அத விட பலருக்கு நடந்த கொடுமையென்னண்டா தங்கட சொந்த வோட்டுப் போட முடியேல்ல. நெஞ்ச நிமித்திக் கொண்டு அடையாள அட்டையிருக்கிற துணிவில தங்கட வோட்டுக்களை கடைசில போடப் போன கன பேர் இந்த வோட்டு உன்னுடையதில்லை. நீ இதுக்கு முன்னம் வந்து வோட்டுப் போட்டுட்டாய் எண்டு சொல்லி திருப்பியனுப்பப்பட்டிருந்தினம். அதை விட கொடுமை என்னண்டா ஓடியோடி வோட்டுப் போட்ட ஒருத்தன்ர சொந்த வோட்டை இன்னுமொருத்தன் கொண்டு போய் வோட்டுப் போட்டுட்டு வந்தது தான்...

Tuesday, December 01, 2009

உபயம்...

கல்லூரி வாழ்க்கையில மறக்க முடியாத நாட்களில நாடகம் பழகிய (பழகப் போறன் எண்டு வீட்டில சொல்லிக் கொண்ட) நாட்கள் மறக்கமுடியாதவை. நாடக வாழ்க்கை வாழ்ந்தம் எண்டும் சொல்லலாம். ஏனெண்டா பல நாடகங்களை, நாடக நெறியாளர்களாகிய ஆசிரியர் வீடுகளுக்குப் போய்த்தான் பழகியிருக்கிறம்.  சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தனியார் வகுப்புகளுக்கும் முழுக்குப் போட்டுக் கொண்டு வீட்டில நாடகம் பழகப் போறன் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிடுறது. குறுக்கு வழி குச்சொழுங்கை எண்டு இல்லாத ஒண்டையும் உருவாக்கிக் கொண்டு சைக்கிள் நுழையாத இடங்களுக்குள்ளாலயும் சைக்கிளை விட்டுக் கொண்டு போறது. ஆசிரியர்களின் வீடுகளுக்குப் போகேக்க என்னவோ தனித்தனியாத்தான் போவம். முடிஞ்சு வரேக்க ஒரு பெரிய பட்டாளமே வரும். இரகுவரன் ஆசிரியரினதும் சத்தியசீலன் ஆசிரியரினதும் வீடுகளுக்கு சென்று நாடகம் பழகினாலும் சீலன் ஆசிரியரிடம் ஆங்கில நாடகம் பழகிப் போட்டு வரேக்க இருக்கிற ஆர்ப்பாட்டம் மாதிரி மற்றது இருக்கிறேல்ல. பெரும்பாலும் ஆங்கில நாடகம் பழகிறது ஒரே வகுப்பு மாணவர்கள் தான். அப்ப வீதியில போகேக்க பம்பலைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ...

 வீதியில வரேக்க ஒருத்தன்ர சைக்கிள் கைப்பிடியில மற்றவன் கையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிள் ஓடுறதில ஒரு சுகம் இருக்குப் பாருங்கோ. அது தனி அலாதியானது. என்னதான் காவல்துறை சட்டம் எண்டு சொன்னாலும் எனக்கு இப்பிடி சைக்கிள் ஓடி வாறதில ஒரு சந்தோசம். ஒரே வகுப்புப் பொடியள் எண்டா நக்கல் நையாண்டிகளுக்கும் இடைக்கிட ‘கூ’ அடிச்சுக் கத்திக் கொண்டு போறதுக்கும் குறைவிருக்காது. அதுவும் கொஞ்சம் இருட்டெண்டா காணும். சத்தத்தைப் பற்றி பேசவும் வேணுமோ? வீதியால போறாக்கள் ஏன் வாகனங்கள் கூட எங்களை விலத்தித்தான் போக வேணும் எண்ட நினைப்பில வீதி முழுக்க எங்கட ஆட்சிதான். எத்தினை பேர் பேசிக் கொண்டும் எங்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டும் போயிருப்பினம். அதெல்லாம் எங்களுக்கு உறைச்சால்தானே. அதெல்லாம் இப்ப சிங்கள மொழியில திட்டு வாங்கேக்க பயன்படுதெண்டதில ஒரு திருப்திதான், வேறென்னத்தைச் சொல்ல...

நானும் கல்லூரி காலத்திலிருந்தான நண்பனும் பதிவருமான கிருத்திகனும் நாடகம் பழகப் போன பொடியள்ல ரண்டு பேர். (இதையும் வாசிங்கோ) முடிஞ்சு வரேக்க எங்கட எல்லாற்ற சைக்கிளும் நிப்பாட்டப் படும் இடம் சுதாஸ் (பெயர் சரியென்று நினைக்கிறன்) ஐஸ்கிறீம் கடை. எங்களுக்கு என்ன விதமான ஐஸ்கிறீம் வேணுமெண்டு கடைக்காரனுக்கே தெரியும். ஆக்கள் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். கடைக்காரனுக்கு நாங்கள் சொல்ல முன்னமே ஐஸ்கிறீம் போட்டுக் கொண்டு வந்திடுவான். அது முடிய பொடியளுக்கு பீடாவும் தேவையெண்டும் தெரியும். என்னத்தைத் தான் சொன்னாலும் எங்கட நாடகக் குழுவில ஆர் காசு குடுக்கிறதெண்ட பிரச்சினை இருந்ததில்லை. எல்லாருமே குடுப்பாங்கள் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சுப் போடாதேங்கோ... முதல் ரண்டு நாள் கீத்தின்ர உபயம். மூண்டாவது நாள் ஆரோ ஒருத்தன் தான் குடுக்கிறன் எண்டு சொன்னான். அந்த நேரம் பாத்து எங்கட குழுவில இருந்த தோசை எண்டொருத்தன் சொன்னான் பாருங்கோ ‘நீ காசு குடுத்தா கீத்துக்குப் பிடிக்காது. அவன், தான் தான் குடுக்க வேணுமெண்டு சொல்றவன்” (எப்பிடித்தான் இப்பிடியான வசனங்களை கண்டு பிடிக்கிறாங்களோ???) இதுக்குப் பிறகு கீத் வாய் திறக்கேலுமோ? ஐஸ்கிறீம் குடிச்ச எல்லா நாளும் கீத்தின்ர உபயம் தான். உண்மையைச் சொல்லோணுமெண்டா முகம் சுழிக்காம நண்பர்களுக்கு வாங்கிக் குடுக்கிறதெண்டா அவன் தான். அதை விட இன்னுமொரு உண்மை, மற்றாக்களின்ர உபயத்தில சாப்பிடிற மாதிரி திருப்தி சொந்தக் காசில சாப்பிடேக்க வாறேல்ல. உதென்ன உது... லவ்லி கூல்பாரோட ஒப்பிடேக்க இதெல்லாம் ஒரு லந்தைப் பழம் (அதாங்க ஜுஜுபி) எண்டு கீத் சொல்ல வாறது புரியுது. இருந்தாலும் இதையும் மறக்கேலுமோ?

Saturday, November 21, 2009

மிச்சக் காசு

எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய் கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர் நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.

கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது. நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப் போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.

இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும் கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான் குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.

ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

Wednesday, October 21, 2009

தனி சுகம்

நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும் இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.

சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப் போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.

மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது. பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம்.  மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும் எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.  பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள் சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.




 மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச் சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும் வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான் அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு துடிக்குது.

Monday, September 21, 2009

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.


நண்பன் மருதமூரான் பள்ளிப் பயின்றதொரு காலம் தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பையேற்பதனால் எனக்கும் என்னுடைய பள்ளிக்காலத்தை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி மருதமூரான்.

நான் எனது ஆரம்பக்கல்வியை என்னுடைய ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். தென்புலோலியூரில் பிறந்து பல்வேறு துறைகளில் சிறந்து விழங்குபவர்கள் பலரை உருவாக்கி விட்டு ஆரவாரமின்றி தன் சேவையை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடசாலை. சின்ன வயசு... வாழ்க்கையின் பாரங்களை உணராத, கவலையை அறியாத வயசில் துள்ளித் திரிந்தோம்.அவ்வப்போது வானத்தைப் பார்த்து விட்டு மேசைக்குக் கீழ் பதுங்கியதும் அந்நேரங்களில் எல்லோருமே வீறிட்டுக் கத்தி அம்மாவையோ அப்பாவையோ இல்லை ஆண்டவனையோ துணைக்கு அழைத்ததும் நினைவிலிருக்கு.

ஆசிரியர்கள் பற்றி எழுதுவதாயின் எத்தனை பேரை எழுதுவதென்று ஒரு சிக்கல். எனக்கு கல்வி கற்பித்தவர்கள் ஒருபுறம் அதே நேரம் நான் கல்வி கற்காவிட்டாலும் நெருங்கிப் பழகியவர்கள் பலர்.  என்னுடைய முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர்களும், வாழ்ந்து காட்டி எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். (நான் படித்த காலத்துக்குப் பின்னர் புற்றளையில் கற்பித்த பலரும் இதற்குள் அடக்கம்) அதை விட எனக்கு கற்பித்தவர்கள் எனும்போது தனியார் கலாசாலைகளில் கற்பித்தவர்களும் அடங்குகிறார்கள். இவர்களை எல்லோரையும் எழுதுவதென்றால் பதிவு
நீளமாகுவது மட்டுமில்லை. நேரமும் போதாது. எனவே பாடசாலைகளில் எனக்கு கற்பித்தவர்களில் சிலரை மட்டும் நினைவு கூருகிறேன்.


புற்றளையில் கற்பித்த இராஜேஷ்வரி, சதாசிவம், ஈஷ்வரி, திலகவதி, கெளரி, கமலாம்பாள், ரஞ்சினி, சகுந்தலா என்ற ஆசிரியைகளும் சம்பந்தர், சண்முகநாதன் என்ற ஆசிரியர்களும் நினைவிலிருக்கிறார்கள். என்னடா இவன் எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கிறானே எண்டு யோசிக்க வேண்டாம். இவர்களில் பெரும்பாலானோர் என்னூரவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் என்னுறவினர்கள். அஞ்சாம் ஆண்டு முடிந்ததும் எல்லாரும் ஹாட்லிக் கல்லூரிக்குப் போறாங்களே நானும் போனால் என்ன (அந்த நேரம் இதைத்தவிர வேறெந்தக் காரணமும் என்னிடம் இருக்கவில்லை : அம்மா அப்பாவின் ஆசை என்றும் சொல்லலாம்) என்ற நினைப்போடு ஹாட்லிக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.

யாவருமே அறிந்திருக்கும் ஹாட்லிக் கல்லூரியைப் பற்றி நான் இங்கு விவரிக்கவில்லை. அரிவரியைப் புற்றளை மகா வித்தியாலயம் தொடக்கி விட உச்சத்தைத் தொடுமளவுக்கு மிச்சத்தைச் சொல்லித்தந்தது ஹாட்லிக் கல்லூரி. புதிய மாணவர்கள் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், கல்லூரிக்கேயுரிய சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என என்னுடைய கல்வியுலகம் விரிந்தது. எப்பிடித் தான் கட்டுப்பாடு போட்டாலும் அதனை உடைத்தெறிந்து மதில் பாய்ந்து இடைநேரத்தில் ஓடும் திறமையும் எம்மவர்களிடம் காணப்பட்டது. நான் படித்த காலங்களில் கல்லூரியின் வாசலில் இருந்து இரு நூறு மீற்றர் தொலைவிலுள்ள விசேட நுழைவாயிலிருந்து கல்லூரியின் வாசலையடைய ஏறக்குறைய அரைமணித்தியாலம் எடுக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு நாம் அனைவரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் பாணுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் நிற்போம் (அவ்வளவு ஆர்வக் கோளாறுகள் நாங்கள்). படிக்கிறதுக்குரிய பாடப்புத்தகங்கள் கொப்பிகள் எல்லாம் சரியாக கொண்டு வந்திருக்கிறோமோ எனப் பார்ப்பது மட்டுமில்லை  உடுப்புகள் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறமோ என உடம்பெல்லாம் தடவிப் பார்த்த பின்னர் தான் (தேவைப்பட்டால் கழற்றிகாட்டிய பின்னர்தான்) நாம் கல்லூரிக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவோம் (அவர்களுக்கு எம்மில் அவ்வளவு அக்கறை...). கல்லூரியின் மைதானத்துக்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேர காலத்துக்குள் சகல விளையாட்டு நிகழ்வையும் பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்கள் - பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட எவருமே உள் நுழைய முடியாத கோட்டையாக எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் விளங்கியது.

கல்லூரியில் கற்ற காலங்களில் ஒரே வகுப்பு மாணவர்களிடையே நிறைந்த ஒற்றுமை காணப்பட்டது. ஊர்களுக்கிடையே துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவோம். சின்னச் சின்னச் சண்டைகளும் வருவதுண்டு. ஆனாலும் என்ன நடந்தாலும் அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும்போது எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாகப் பழகுவோம். ஊர்ப் பாகுபாடு பார்த்து சண்டை பிடித்ததோ அல்லது ஒரு ஊர்க்கரர் வீறாப்புக் கதைத்து மற்ற ஊர்க்காரரின் முனேற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதோ இல்லை. கல்லூரியின் பின்னரான என்னுடைய வாழ்வில் கண்டு வெறுப்படைந்த விடயங்களில் இதுவும் ஒன்று. எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய கல்லூரி அண்ணன்மார்களுக்கு கொடுத்த தலையிடிகளும் ஆசிரிய ஆசிரியைகளுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து மறைவில் நக்கலடித்ததும் நினைவிலிருக்கிறது. பொது வேலைகள் (மேடை ஆயத்தப்படுத்தல்...) என்ற சாக்கில் வகுப்பில் பாட நேரங்களுக்கு நிற்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதும் ஞாபகமிருக்கு.

ஹாட்லியில் எனக்குக் கற்பித்தவர்கள் பலர். எட்டாம் தரத்தில் ஒரு தவணையில் நன்கு ஆசிரியர்கள் கணிதம் படிப்பித்தார்கள் என்றால் நம்பவா முடிகிறது. தவநேசன், துரைராசா, சத்தியசீலன் ஆகிய ஆசிரியர்கள் நீண்டகாலமாக எங்களுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருந்து வழி நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள் ஆறுமுகம், யாதவானந்தன் கணித ஆசிரியர்கள் பாலேந்திரா ஜெயகோபால், மரியதாஸ் விஞ்ஞான ஆசிரியர்கள் இரகுவரன் பரணிதரன் ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர். இவர்களில் மரியதாஸ் அடிக்கு மட்டுமில்லை கணிதக் ‘குறுக்குவழி’ செயன்முறைக்கும் பெயர் பெற்றவர். ஜெயகோபால் ஆசிரியரின் “x=y, y=z, எனவே x=z இதைச்சொல்லிப்போட்டு ஒரு மாணவனை எழுப்பி உனக்கு என்ன விளங்கினது எண்டு கேட்டா அவன் சொன்னான் ஆசிரியரே நான் உங்களை நேசிக்கிறேன் நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் எனவே...” என்ற மேடைப்பேச்சின் இடையில் சொன்ன நகைச்சுவை பிரபல்யமானது. (மு.கு. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்). உயர்தரத்தில் வகுப்பாசிரியர் ரஜேஸ்கந்தன் மற்றும் செல்வமலர் ஆசிரியை (நான் கற்ற காலத்தில் கற்பித்த, தற்போதும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஆசிரியையாக விளங்குகிறார்) சிவகுமார் ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றேன். சீலன் ஆசிரியரிடமும் ரகுவரன் ஆசிரியரிடம் நாடகம் பழகியதும் அந்தச் சந்தர்ப்பங்களில் சமூகம் மீது பல கோணங்களிலிருந்தான பார்வையையும் நடைமுறை யதார்த்தம் மிக்க வாழ்க்கை என்னவென்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் அடி வாங்கிய சந்தர்ப்பங்களுக்கும் குறைவில்லை. புற்றளை மகா வித்தியாலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தாமதித்து சென்றதனால் அதிபர் ஜோஷுவா அவர்களிடம் அடி வாங்கி அழுதது இன்றும் நினைவிலிருக்கு.அவ்வப்போது தேவாரம் பாடமாக்காவிடில் திருநீறு பூசி பொட்டு வைக்கவிடில் நவம் ஆசிரியரிடம் வாங்கிய அடி. எல்லாத்துக்கும் மேலாக ஆங்கில ஆசிரியர் சீலன் அவர்களிடம் வாங்கிய அடி. ஹாட்லி மைதானத்தில் எமது கல்லூரிக்கும் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு கல்லூரிக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் எமது வகுப்பு மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர். எனக்கு போட்டியைப் பார்க்கவேணும் என்ற எண்ணம். ஒரு ஆசிரியர் அனுமதித்தால் மட்டுமே மைதானத்துக்குள் நுழைய முடியும். கற்பிக்க வந்த சீலன் ஆசிரியரிடம் எம்முடைய வகுப்பை மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினேன். இரண்டு மூன்று முறை மறுத்தார். தொடர்ந்தும் தொல்லை கொடுத்தேன். முன்னுக்கு வந்து கைகளை உயர்த்தி கரும்பலகையில் வை என்றார். அவ்வளவுதான் நினைவிருக்கிறது. முழங்காலுக்கு கீழே விழுந்த அடியால் கால்கள் விறைத்து விட்டன. இந்த அதிரடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உயர்தரப் பரீட்சையின் பின்னர் ஒருமுறை கல்லூரிக்கு சென்றபோது தான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது என்னிடம் அடிவாங்கியவன் இன்று நல்லாயிருக்கிறான் என்றதும் நினைவிலிருக்கு.

பள்ளிக்காலங்கள் இனித் திரும்பி வரா எனத் தெரிந்த போதும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது மனசு.

இத்தொடர் விளையாட்டுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீட்கும்படி நான் அழைப்பது :


நிமல்
கிருத்திகன்
கார்த்தி
மதுவதனன்


Sunday, September 13, 2009

நீந்தப் பழக்கினாங்கள்

எங்களூரின்ர நடுவில இருக்கிற பிள்ளையார் கோவிலோடு இணைந்ததாக பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கேணி ஒண்டு இருக்குது. கோடை காலங்களில் தண்ணி வத்திப் போனாலும் மாரி காலத்தில தண்ணி நிறைஞ்சிடும். இதுதான் எங்கட பொடியளின்ர நீச்சல் குளம். மாரி காலத்தில மழை பெய்து நிலம் ஈரமாக கிடக்கிறதால மைதானங்களில விளையாட முடியாது. அந்தக் காலங்களில பள்ளிக்கூடமும் விடுமுறை விட்டுடுவாங்கள். வேற பொழுது போக்கும் இல்லை. அப்ப நீச்சலடிக்கிறதுதான் ஒரே பொழுது போக்கு. செயற்கை நீச்சல்தடாகங்கள் மாதிரி இல்லை. கேணிக்குள்ள தண்ணி மட்டம் ஒரே அளவாகத்தானிருக்கும். ஆளை விட ரெண்டு மூணு மடங்காகவும் இருக்கும். அதனால நீச்சலடிக்கப் பழகிறது ரொம்பக் கஸ்டம். இருந்தாலும் எங்கட ஊர்ப் பொடியளில பெரும்பாலானாக்களுக்கு நீந்தத் தெரியும். ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு வயசு வர வகுப்புப் பொடியளா சேர்ந்து போய் பழகுவோம். நீச்சலடிக்கத் தெரிந்த அண்ணாமார் பழக்கியும் விடுவினம்.

கேணி பிரதான வீதிக்குப் பக்கத்தில இருக்கிறதால அதால போய் வாற பொடியங்கள் எல்லாரும் பெரும்பாலும் அவிடத்தில நிண்டு ஒருக்கால் கேணிக்குள்ள என்ன நடக்குது எண்டு பாத்திட்டுத்தான் போவம். நல்லா நீந்தத் தெரிஞ்ச அண்ணாமார் பெல்டி அடிச்சு சாகசமெல்லாம் காட்டுவினம். பக்கத்தில இருக்கிற மகிழ மரத்தால ஏறிப் போய் ஓட்டுக்கு மேல இருந்து பெல்டி அடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள குதிக்கிறதைப் பார்த்தா எங்களைச் சுண்டியிழுக்கும். சின்ன அடையாளம் கட்டின கல்லொண்டை கேணக்குள்ள எறிஞ்சு போட்டு போட்டிக்கு சுழியோடிப்போய் எடுப்பினம். கேணிக்குள்ள கீஸ் பெட்டி (அடிச்சுப் பிடிச்சு) விளையாடுவினம். பாக்க ஆசையா இருக்கும். முழு நீச்சல் திறமையையும் காட்டி நீந்துவினம். அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்கு, பெரிதான வீதியால போய் வாற பொம்பிளைப் பிள்ளைகளின்ர கடைக்கண் பார்வையை திருப்பிறது. உந்த விஷயத்தில சிலபேர் சாகசம் காட்டியே ‘அருள்’ பெற்றிருக்கினம்.




அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினை முடிஞ்ச கொஞ்ச நாளில என்ர நண்பன் ஒருத்தனுக்கு அவன்ர அண்ணன்மார்களில் இருவர் பழக்கிய நீச்சல்தான் இண்டைக்கும் என்ர கண்ணுக்குள்ள நிக்குது. தனியார் கலாசாலையில் படிச்சிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தன். வழக்கம்போல கேணியடிக்குக் கிட்ட வந்து பிரதான பாதையிலேந்து விலத்தி துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டுவந்து அளவாக் கட்டப்பட்ட கேணி தூணில காலை வச்சுக் கொண்டு வேலியாகப் போடப்பட்ட இரும்பு வேல் கம்பிகளில கையைப் பிடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள எட்டிப் பாத்தன். ஏங்கிப் போனன்.

கேணியின்ர ரண்டு கரையிலயும் அவன்ர ரண்டு அண்ணன்மார்களும் நிக்கீனம். கேணியின்ர நடுவில இடுப்பில ஒல்லியைக் (பயன்தரத் தவறிய தேங்காய்)  கட்டிக் கொண்டு அவன் ‘காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ நான் சாகப் போறன், காப்பாத்துங்கோ’ எண்டு கத்திக் கொண்டிருந்தான். கைகால்களை அடிச்சு நீந்தின படி கத்திக் கொண்டிருந்தான். வேறை ஆக்களும் கேணுக்குள்ள நீந்திக் கொண்டிருந்தவை. ஆனா ஒருத்தரும் இவனைக் காப்பாத்த வரேல்ல. தட்டுத் தடுமாறி நீந்தி ஒரு கரைக்கு இவன் போனால் அந்தக் கரையில நிக்கிற அண்ணா குழறக் குழற இவனைப் பிடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விடுவார். மீண்டும் கத்திக் கத்தியே மற்றக் கரையை நோக்கி நீந்துவான். சத்தத்தைக் கேட்ட பாதையால போன அவன்ர அம்மப்பா எட்டிப்பாத்தார். அவனோ ‘அம்மப்பா காப்பாத்துங்கோ, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன்.’ எண்டு கத்திக் கொண்டு கைகால்களால் நீச்சலடிச்சுக் கொண்டிருந்தான். ஆனா அண்ணன்மார்களோ விடுவதா இல்லை. அவன் கத்துறதப் பாத்தா உண்மையிலேயே ஆள் முடிஞ்சிடுமோ எண்டு எனக்குள்ள ஒரு பயம். அண்ணன்மாரும் மனிசரோ எண்டு திட்டிக் கொண்டன்.

ஆனா அவர்களுக்கிருந்த துணிவு என்னண்டா அவன்ர இடுப்பில ஒல்லி கட்டியிருக்கிறதால லேசில தாழ மாட்டான். அடுத்தது அவர்கள் ரண்டு பேரும் நீச்சல்ல புலி. அதை விட பக்கத்தில நீந்திக் கொண்டிருக்கிற மற்றப் பொடியளும் இவன் தாழுறான் எண்டா காப்பாத்தத் தயார் நிலையிலேயே எப்பவும் இருப்பாங்கள். அதனால இவன் தாழுறதைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. ஆனா இவன் நல்லாத் தண்ணி குடிச்சிட்டான். நீந்தப் பழகிற எல்லாருக்குமே வாற அடிப்படைப் பிரச்சினையே இதுதான். இருந்தாலும் அந்த ஒரே நாள் கத்தலோடையே அவன் நீந்தப் பழகீட்டான். எங்கட வகுப்பிலேயே முதன் முதல் நீந்தப் பழகி எங்களுக்கு சாகசம் காட்டினவன் அவனேதான்.

அண்மையில கொழும்பில ஒரு நீச்சல் குளத்தில எங்கட ஊருக்குப் பக்கத்தூரில இருக்கிற என்னை விட வயசு கூடின அண்ணாவைச் சந்திக்கேக்க சொன்னார், ‘என்னதான் இருந்தாலும் உங்கட ஊர்க் கேணிக்குள்ள குளிக்கிற மாரி வருமேடா.’ அந்தளவுக்கு எங்கட ஊர்க் கேணி சுத்து வட்டாரத்தில பிரபலமானது. பலருக்கு நீச்சல் பழக்கினதும் எங்கட ஊர்க் கேணிதான்.



Sunday, September 06, 2009

கால்பந்து விளையாடுவம்

வீரபத்திரர் கோவில் காணிக்குள்ள விளையாடுறதைப் பற்றித்தான் சொல்லப் போறன். இண்டைக்கு இதைச் சொல்லுறதில ஒரு விடயம் என்னண்டா அந்த வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் இண்டைக்கு நடக்குது. வீரபத்திரர் கோவிலுக்குப் பக்கத்தில ஒரு திறந்த காணி இருக்குது. அந்தக் காணிக்குள்ளாலதான் கோவிலுக்கு போவதற்கான பாதைகளில் ஒன்றும் போகுது. அந்தத் திறந்த வெளிக்காணிக்குள்ள தான் நாங்கள் கால்பந்து விளையாடுவம். சிலவேளைகளில் துடுப்பாட்டமும் பேணியும் பந்தும் விளையாடியிருக்கிறம்.  
அந்தக் காணிக்கு கிட்டிய தூரத்தில் குடிமனைகள் இல்லாததால் சத்தம் போட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் பந்து பக்கத்து காணிக்குள்ளையோ கோவிலுக்குள்ளையோ போனால்தான் பிரச்சினை. பக்கத்துக் காணிக்குள்ள பெரிய புளியமரங்கள் இருக்கு. அதுகள்ளேருந்து விழும் புளியம்பழங்களைப் பொறுக்கி காணி உரிமையாளர் விக்கிறதால காணிக்குப் பலத்த பாதுகாப்புடன் கூடிய வேலி. அதனால பந்து அதுக்குள்ள போனா எடுக்கிறது வலு கஷ்டம். அதைவிட அதுக்குள்ள பந்தெடுக்கப் போகேக்குள்ள காணிக்காரர் நிண்டா துலைஞ்சுது. கத்திச் சத்தம் போடுவார். அவ்ற்ற கையில பிடிபட்டா போச்சு. அவரட்ட மட்டுமில்லை வீட்டிலையும் தோலுரிப்புத்தான். இது போக, கோவிலுக்குள்ள பந்து போனால் வாசற்கதவு பூட்டியிருக்கிறதால மதிலேறி விழுந்துதான் போக வேணும். வீரபத்திரர் எல்லோ, சும்மாவோ? ஆர் மதிலேறி விழுறது எண்டதில பிரச்சினை.
அதை விட வீரபத்திரர் கோவிலின் நிர்வாகி வீரகத்தி ஐயா எண்டு ஒருத்தர் இருந்தார் (தற்சமயம் எம்முடன் இல்லை).அவர் அந்தக்காலத்தில நல்லா வயசு போய் பொல்லுப் பிடிச்சுக் கொண்டுதான் நடப்பார். அவருக்கு நாங்கள் அந்தக் காணிக்குள்ள விளையாடுவது பிடிக்காது. ஏனெண்டா அந்தக் காணிக்குள்ள போட்டிருக்கிற பனம்பாத்தி முதல் வேலிக் கதியால்கள் வரை அனைத்தையும் உழக்கிக் கொண்டுதான் நாங்கள் விளையாடுவம். அதை விட பந்தடிச்சு கோவில் ஓடுகள் உடைப்பது முதல் போட்டிக்கு ஆர் கனதூரம் கல்லெறியிறதெண்டு தொடங்கி குறிதவறி ஓட்டுக்கு மேல விழுந்து ஓடு உடையிறது வரை அனைத்தையும் கன கச்சிதமாக நாங்கள் செய்து முடிப்பம். அதனால அவருக்கு நாங்கள் விளையாடுறது பிடிக்கிறதில்லை. அவற்ற பக்கமும் நியாயம்தான். எத்தினை தரம் எத்தினை ஓடெண்டு மாத்துறது. ஆனால் அவர் தான் எங்களுக்கு பெரிய வில்லனே. 
நாங்கள் வழமையா அஞ்சரைக்கு தனியார் கலாசாலை முடிஞ்சுதான் விளையாடப் போவம். அவர் கிட்டத்தட்ட ஆறரையளவில கோவிலுக்கு விளக்கேத்த அந்தப் பாதையால வருவார். அவர் தூரத்தில வரேக்கயே எங்களைக் கண்டாரெண்டா பொல்லைத் தூக்கிக் காட்டிக் கொண்டு பேசிக் கொண்டு வருவார். அவர் வர்ரதுக்குள்ள காணி காலியாயிடும். அவரவர் தங்கட கொப்பிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு சைக்கிளையும் (துவிச்சக்கர வண்டி) எடுத்துக் கொண்டு ஓடுவம். அவரின்ர கண்ணில என்னையெல்லாம் அடையாளம் தெரிஞ்சா அந்தோ கதிதான். ஆக்கள் மூலமா தகவல் சொல்லியெண்டாலும் எங்கட வீட்டுக்கு கதை வந்திடும். அவ்வளவுதான், பிறகு நடக்கும் அர்ச்சனைகளைப் பற்றிச் சொல்ல வரேல்ல. ஒவ்வொரு திக்குத் திக்காக ஓடுற நாங்கள் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் ஒளிச்சு நிண்டு என்ன நடக்குதெண்டு பாப்பம். மேலும் விளையாடக்கூடிய சாதக பாதக நிலைகளை ஆராஞ்சு அவர் போன பிறகு மீண்டும் விளையாடுவம். விளையாட்டில அந்தளவுக்கு ஊறிப்போய் விடுவம். அதை விட இப்பிடியான சிக்கல்களை எதிர்கொண்டு விளையாடுறதில ஒரு ருசியுருக்குப் பாருங்கோ. அனுபவிக்கக் குடுத்து வைக்கோணும். 

Saturday, August 29, 2009

தண்டனை

அப்ப நான் ஏழாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தனான் எண்டு நினைக்கிறன். பள்ளிக்கூட தவணைச் சோதினைக்கு இன்னும் ஒரு கிழமையே இருந்தது. பின்னேரம் தனியார் கல்வி நிறுவனம் ஒண்டில படிச்சுப் போட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தன். என்னோட கூட என்ர வகுப்புப் பொடியளும் வந்தவங்கள். ஒருத்தன் நேற்று விளையாடின பேணியும் பந்தும்(எங்கட ஊரில சின்னப் பொடியள் மத்தியில பிரபல்யமான விளையாட்டுக்களில் ஒன்று- விளையாட்டைபற்றி விளங்கப்படுத்த வேணும் எண்டா இன்னுமொரு பதிவு போடோணும்)  பற்றி சொல்லிக் கொண்டு வந்தான். இண்டைக்கும் அதுதான் விளையாடுறது எண்டான். எனக்கு ஒரு ஆசை துளிர்விட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேணியும் பந்தும் விளையாடுவதற்காக நானும் நண்பர்களோட எங்கட ஊரின்ர வயல் வெளியில (நெல் விதைக்காத காலங்களில வயல் வெளியெல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள தான்).

விளையாட்டு நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது, பக்கத்து வீதியால அப்பா போகுமட்டும். அப்பா  சைக்கிள்ல (துவிச்சக்கரவண்டி) போய்க் கொண்டிருந்தார். பொடியள் சும்மா இருந்தாங்களோ? என்ர பெயரைச் சொல்லிக் கத்தினாங்கள். மைதானத்தில ஓட்டப் போட்டியில ஓடுற ஒருத்தனையோ இல்லை மேடையில முதற்பரிசு வாங்கிற ஒருத்தனின் பெயரைச் சொல்லி இந்தளவுக்கு கத்தியிருக்க மாட்டாங்கள். அப்பாவை நான் பார்த்தேன் அவர் எங்களைப் பார்க்கவில்லை, நான் அதில இருக்கிறனோ எண்டு தேடவில்லை. அவருடைய கண்பார்வைக்குக் கிட்ட இருந்த ஒரு பொடியனைப் பார்த்துக் கொண்டு ஒரு சின்னப் புன்னகையுடன் தாண்டினார். என்ர வகுப்புப் பொடியள்தான் எண்டதைக் கண்டு கொண்டார். வீட்டுப் பக்கம் தான் போறார். என்னுடைய கையிலிருந்த பேணி கீழே விழுந்தது. சைக்கிளை நோக்கி ஓடினேன். என்ர பொடியள் செய்த கைங்கரியத்தால விளையாட்டைப் பாதியிலேயே நிப்பாட்டி விட்டு வீட்டை ஓடினேன். சோதினை வருதெண்டா மைதானப்பக்கம் தலை காட்டக்கூடாது எண்ட கட்டுப்பாடு எங்கட வீட்டில. இல்லாட்டி விளையாடிப் போட்டு களைச்சு வேத்து வந்து சாப்பிடுறதும் படுக்கிறதும் தான் வேலை. படிக்கிறதில்லை.

அப்பத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்ச அப்பா நான் அவசரப்பட்டு நுழைஞ்சபோது சொன்னார்.
‘வயல்ல நிண்டனி போல கிடந்துது.’
‘இல்லை... சும்மா... அப்பத்தான்...’ வார்த்தைகள் தடுமாறின.
‘உன்ர பொடியன், சோதினை வருதெண்ட நினைப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.’ அம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
‘சோதினைக்குப் படிக்கோணும் எண்டதுக்காகப் பூக்கண்டுக்குத் தண்ணி ஊத்துறதையும் நிப்பாட்டி விட பொடியன்ர கூத்தைப் பாத்தியோ. பூக்கண்டு கிடந்து வாடுது. நாளைக்கு காலம பள்ளிக்கூடம் போக முன்னம் நீ இருபது குடம் தண்ணி பூக்கண்டுகளுக்கு ஊத்தோணும். அப்பத்தான் நீ திருந்துவாய்.’

அடி விழாதது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு வேளை தான் கண்ட உடன விளையாட்டை விட்டுட்டு வந்திட்டன் எண்டதில திருப்தியோ அல்லது முன்னம் ஒருக்கா தன் முழுப் பலத்தையும் சேர்த்து எனக்கு அடிச்சதில ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவங்களோ தெரியாது. (இதைப் பற்றி பிறகு சொல்லுறன்). அந்தக் காலத்தில ஊரில கிணத்திலதான் தண்ணியெடுக்கோணும். அடுத்தநாள் காலம வெள்ளனவே எழுப்பப்பட்டேன். தண்ணியூத்த வேணுமெல்லோ... ம்ம்ம் அதிகாலையில எழும்பிறதெண்டா இண்டைக்கும் எனக்கு சீவன் போற மாரி கஷ்டமான காரியம். எழும்பி குடத்தையும் தூக்கிக் கொண்டு போனன். கிணத்தில கப்பியால தண்ணி அள்ளிக் கொண்டு போய் ஏறக்குறைய எழுபத்தஞ்சு மீற்றர் தூரத்துல இருக்கிற பூக்கண்டுகளுக்குத் தண்ணி ஊத்தவேணும். முதல் ரண்டு குடம் தண்ணி நானே கிணத்தில அள்ளிக் கொண்டு போய் ஊத்தினன். மூண்டாம் முறைக்குத் தண்ணியெடுக்க வர கிணத்தடியில அப்பா. நான் தண்ணியள்ளி ஊத்திறன் நீ கொண்டு போய் பூக்கண்டுக்கு ஊத்து. எனக்கு தண்டனையும் கிடைச்சுது. பூக்கண்டுகளும் செழிச்சு வளந்திச்சுது.

Thursday, August 27, 2009

நினைச்சுப் பாக்கிறன்

நினைச்சுப் பார்க்கிறன் என்னும் என்னுடைய வலைப்பூவின் இந்தப் பகுதியூடாக என்னுடைய சில நினைவுகளை மீட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் கீத் குமாரசாமியின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கையை, தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொள்ளுவதில் கீத் வெற்றி கண்டிருக்கிறார். நானும் என்னுடைய சிறு வயதுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை, என்னைப் பாதித்த, நான் எதிர்கொண்ட சவால்களை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய அனுபவங்கள் சிலருக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும். அல்லது இவனும் என்னை மாரித்தான் எல்லாமே பட்டுத்தான் பழுத்திருக்கிறான் என்ற வாழ்க்கை மீதான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டுவதாகக்கூட அமையக்கூடும். முதலாவது பகிர்வாக நான் சொல்ல விளைவது நான் காசு களவெடுத்ததைப் பற்றித்தான்.

இன்னும் இந்நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது (மற்றதெல்லாம் மறந்து போச்சு) எனக்கு ஐந்து வயதிருக்கும், நான் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். வீட்டில் களவெடுத்திருந்த பதினெட்டு ரூபாய் சில்லறைக்காசுகளை ஒழித்து வைத்துக் கொண்டு பாடசாலை செல்வதில் பெரும் பாடு பட்டேன். காற்சட்டை முன் சட்டைப்பைகள் (பொக்கற்றுக்கள்) பின் சட்டைப்பை, கணிதக் கருவிப்பெட்டியில் (கொம்பாஸ்) அட்டை வைத்து இரண்டாகப் பிரித்து மேலுக்கு கீழுக்கு என சில்லறைக்காசுகளை அடுக்கி வைத்திருந்தேன். அக்கால கருவிப்பெட்டி நெகிழியால் (பிளாஷ்திக்கால்) செய்யப்பட்டு காந்தத்தைப் பயன்படுத்தி மூடுவதாக இருந்தது. ஏன் காசெண்டு கேட்பது புரிகிறது. எங்கட பாலர் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு கடை ஒண்டு இருந்தது. அதில பல்லி முட்டாசு வாங்கிச் சாப்பிடத்தான். ஏறக்குறைய இருபது ரூபாய் இருந்தால் வகுப்பு முழுவதுக்குமே பல்லி முட்டாசு விருந்து வைத்து விடலாம். எல்லாரோடையும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறதில அப்பவே எனக்கு ஆசை.

 என்னுடைய கஷ்ட காலம் நான் பள்ளிக்குப் போற நேரம் பார்த்து என்னுடைய பொக்கற்றிலிருந்த சில்லறைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சத்தம் போட்டன. (ஏன் தான் சில்லறைக்காசுகளை ஒன்றோடு ஒன்று முட்டினால் சத்தம்போடும்படி செய்கிறார்களோ தெரியாது - ஒரு வேளை என்னை மாரிச் சில்லறைக் கள்ளர்களைப் பிடிக்கவோ?) அவ்வளவுதான், அம்மாவிடம் பிடிபட்டேன். விசாரணை தொடங்கியது. ஒவ்வொரு இடமாகத்தேடி ஒழித்து வைத்திருந்த காசுகளை எடுத்து எண்ணினால் பதினெட்டு ரூபாய். ‘உனக்கு எதுக்கு இவ்வளவு காசு?’ நான் பதில் பேசவில்லை. தொனி கொஞ்சம் கடுமையாகியது. அறையொன்றில் படுத்திருந்த அப்பா அந்த நேரம் எண்டு எழும்பினார். பிறகு பேசவும் வேணுமோ? அடியெண்டா அடிதான்.  ம்ம்ம்.... முதல் களவும் பிடிபட்டுப் போச்சு. வாங்கின அடி இண்டை வரைக்கும் நினைச்சுப் பார்க்க வைக்குது.