நாட்டின்ர சனாதிபதித் தேர்தலும் வருது. இப்ப இருக்கிறவர் இன்னும் ரெண்டு வருசம் சனாதிபதியா இருக்கலாமாம். ஆனா இப்ப நடத்துறதுக்கு என்ன காரணம் எண்டா தான் திரும்பி வரோணும் எண்டதுக்காகவாம். என்ன ஒரு தேசப் பற்றுப் பாருங்கோ. வழமையைப் போல சிறுபான்மை இன மக்களின்ர வோட்டிலதான் வெற்றி தங்கியிருக்கெண்டு தேர்தலையொட்டிச் சிறு பான்மையினர் விசேசமா கவனிக்கப் படீனம். என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டில நீண்டகாலமா இருக்கிற சூழலைப் பாத்தா ஒரு காலமும் சிறுபான்மையினர் ஒருத்தர் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று சனாதிபதியாக முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை எண்டைக்கும் சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். அதனால அத ஒழிக்கிறதுக்கு ஏதாச்சும் வழியிருக்கோ எண்டு பாக்க வேணும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம் இல்லை. இவ்வளவுதான் எனக்கிருக்கிற அரசியல் அறிவு.
அது இருக்கட்டும் நான் சொல்ல வந்த விசயம் வேற. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழர்கள் எல்லாரும் தாங்கள் ஒரு தலைமையின் கீழ்தான் இருக்கிறம் எண்டதைக் காட்ட ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எண்ட நிபந்தனை. உண்மையைச் சொல்லோணுமெண்டா அப்ப எனக்கு வாக்குரிமை கூட இல்லை. உயர்தரச் சோதினைக்கு படிச்சுக் கொண்டிருந்த காலம். தமிழ்த் தேசியம் மீதிருந்த உந்துதாலால் நானும் என்ர வயசையொத்த சில நண்பர்களும் வோட்டுப் போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு. அந்தத் தேர்தல்ல பல்கலைக் கழக பொடியள் மும்முரமா பிரச்சாரம் செய்ததாலையும் ‘வயதுக்கு வந்தாக்களுக்கு மட்டும்’ எண்டிருக்கிறதுகளை என்னண்டொருக்கா பாக்கோணும் எண்டிருக்கிறதைப் போல (இதுவும் வயசுக்கு வந்தாக்களுக்கு மட்டும்தானே) எப்பிடி வோட்டுப் போடுறதெண்டதைப் பாக்கோணுமெண்ட ஆசையும் கூடவே இருந்ததாலையும் வோட்டுப் போடுறதெண்டு யோசிச்சம்.
வழமையா நாங்கள் கூடுற மடத்தடிக்குப் போனா நாங்கள் தான் தாமாதமாப் போயிருக்கிறம். அதுக்கு முன்னமே எங்கட பொடியள் வோட்டுப் போடத் தொடங்கீட்டாங்கள். குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் பட்டோம். (களவுக்கு போறது இப்பிடித்தானே ) எனக்குத் தரப்பட்ட இடம் எங்கட இடத்திலேந்து கொஞ்சத் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடம். முதல்ல உதில கொஞ்சம் அனுபவம் உள்ளாள் வாக்களிப்பு நிலையத்துக்குள்ள போனார். அடுத்ததா அவற்ற தலமையில பின்னால புதுசா வோட்டுப் போடப் பழகுறாக்கள் நாங்கள் ஒரு அணி போல உள்ளுக்குள்ள போனம்.
எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன். அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன் அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவற்ற முகத்த பாக்கேலாமப் போச்சு. டக்கெண்டு திரும்பி அவர் பெயரை ஆருக்காக வாசிச்சாரோ அவையளைப் பாத்தன். அடுத்த அதிர்ச்சி. அதில இருந்த எல்லாருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவையளைத் தெரியும். வாசிக்கப்பட்டது என்னுடைய பெயரில்லையெண்டது மட்டுமில்லை நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக் கூடாதெண்டதும் அவையளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒருத்தரும் ஒண்டும் பறையேல்ல. அப்பத்தான் எனக்கு மெல்ல நடுக்கம் பிடிச்சுது. ஒகோ,இது இப்பிடிச் சிக்கலோ? பிடிபட்டா கதை கந்தல் தான் எண்டது விளங்கிச்சுது. வோட்டுப் போட்டுட்டுப் போய் கையை நீட்டினா கைக்கு வர்ணம் பூசினதும் இன்னுமொரு ஆசிரியர். என்னை ஏழெட்டு வயது முதல் அறிந்தவர். கிட்டத்தட்ட மூண்டு வருசம் என்னுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தவர். சின்ன விரலை இழுத்து வச்சு ‘இன்னுமொரு தரம் நீ வோட்டுப் போடக்கூடாது’ எண்டு சொல்லிச் சொல்லி அந்த விரல் முழுக்க தன்ர பலம் முழுக்கச் சேத்து அழியாத படி நிறந்தீட்டி விட்டார். வெளீல வந்தாப்போல தான் அப்பாடா ஒரு மாரித் தப்பீட்டம் எண்டு பெருமூச்சு விட்டன். அதே நாளில நான் பொலீசு வாகனத்தில ஏத்தப்பட்ட சோகக் கதையைப் பிறகொருக்காச் சொல்லுறன்.
அண்டைக்கு பின்னேரம் எல்லாம் முடிய பொடியள் எல்லாரும் ஒண்டு கூடி அவரவர் சாகசங்களைச் சொன்னாங்கள். எண்ணுக் கணக்கில்லாத வோட்டுப்போட்டவங்களும் இருந்தாங்கள். அத விட பலருக்கு நடந்த கொடுமையென்னண்டா தங்கட சொந்த வோட்டுப் போட முடியேல்ல. நெஞ்ச நிமித்திக் கொண்டு அடையாள அட்டையிருக்கிற துணிவில தங்கட வோட்டுக்களை கடைசில போடப் போன கன பேர் இந்த வோட்டு உன்னுடையதில்லை. நீ இதுக்கு முன்னம் வந்து வோட்டுப் போட்டுட்டாய் எண்டு சொல்லி திருப்பியனுப்பப்பட்டிருந்தினம். அதை விட கொடுமை என்னண்டா ஓடியோடி வோட்டுப் போட்ட ஒருத்தன்ர சொந்த வோட்டை இன்னுமொருத்தன் கொண்டு போய் வோட்டுப் போட்டுட்டு வந்தது தான்...