தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளாந்த செயற்பாடுகளை இன்னும் இன்னும் சுலபமாக்குகிறது, வேகமாக்குகிறது என்றாலும் மனித உணர்வுகளை, உறவுகளை கொன்று புதைக்கிறது.
மெய்நிகர் நண்பர்கள் (virtual friends)
முகப்புப் புத்தகம், கூகிள் பிளஸ் என்பவற்றின் வளர்ச்சி எங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை, எங்களோடு நீண்ட நாள் தொலைந்து போனவர்களை இணைப்பதற்கு பயன்பட்டாலும், நட்பு என்ற மனித உணர்வை மழுங்கடிக்கவே செய்கிறது. ஆரென்று முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள் கூட என் நண்பர்கள்.
நான் இண்டைக்கு படம் போட்டால் அல்லது நிலையை எழுதினாலோ (status update) பகிர்ந்து கொண்டாலோ (share) அதுக்கு அவன்/ அவள் வந்து விருப்பம் (like) தெரிவிப்பான்/ள். நாளைக்கு அவன்/ள் படம் போட்டாலோ அல்லது நிலையை மேம்படுத்தினாலோ பகிர்ந்து கொண்டாலோ நான் அதுக்கு விருப்பம் தெரிவிப்பேன். அல்லது கொஞ்சம் மேல போய் ஏதாவது கருத்து (comment) தெரிவிப்பேன். மாறி மாறி எங்களுக்கிடையில் இது ஒரு எழுதப் படாத ஒப்பந்தத்தினடிப்படையில் இப்பிடி நடந்து கொண்டிருக்கும். அவ்வளவு தான்... அதுக்கு பெயர் நாங்கள் இருவரும் நண்பர்கள்.
ஒரு சிலர் மற்றவர்களை பொறாமைப் பட வைப்பதற்காகவே படங்களைத் தரவேற்றுவார்கள். நிலையை மேம்படுத்துவார்கள். உண்மையான அவர்களின் மன நிலையோ அல்லது சூழ்நிலையோ அவை பிரதிபலிப்பதில்லை. அப்பிடி மற்றவன் போட்டுட்டான் எண்டதுக்காகவே நானும் படம் போட்டு அவனுக்கு என்னாலையும் செய்ய முடியும் எண்டு காட்டோணும், அவன் வாங்கின விருப்பங்களின் எண்ணிக்கையளவு நானும் வாங்க வேணுமெண்டு நானும் அப்பிடியே செய்யுறது.
அவன் ஒண்டு செய்தால் அதுக்கு ஒரு படி மேல போய் நானும் செய்து காட்ட வேணுமெண்டு செய்யுறது. உண்மையிலே அது எனக்கு தேவையா, எனக்கு பயனுள்ளதா என்றெல்லாம் சிந்திப்பதில்லை. எப்போதுமே நான் சந்தோசமா இருக்கிறேன் எண்டு மற்றவனுக்கு காட்ட வேணும் எண்டதுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆனால் உண்மையில் சந்தோசமாக இருக்கிறேனா, நான் எனக்கு எது பிடிக்கும்: எது சந்தோசத்தை தரும் என்று தீர்மானித்து அதன் படி வாழ்கிறேனா என்று சிந்திப்பதில்லை. இவை எங்களையெல்லாம் ஒரு பொறாமை மனப்பாங்குக்கும், மற்றவர்களுக்கு படம் காட்டும் மன நிலைக்கும், மனித உணர்வுகளை மதிப்பதை குழி தோண்டிப் புதைக்கும் மன நிலைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாங்கள் உணரவில்லை.
நண்பனுக்கு ஒரு உதவி எண்டால் நேரடியாக சென்று என்ன வேணுமெண்டு கேட்டு செய்த நட்பு காணாமலே போகிறது. உரிமையோட உதவி கேட்க முடிந்த உதவி செய்ய முடிந்த காலத்தை நினைச்சுப் பாக்க மட்டும் தான் முடிகிறது. மச்சான் நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு அவன் உதடுகள் சொன்னாலும் அவன்ர முகத்தை பார்த்து அவன் மன உணர்வுகளைப் புரிந்து கொண்ட நட்பும் இருந்தது. மன பாரங்களை ஒரு நண்பனுக்கு எதிரே இருந்து சொல்லச் சொல்ல அவன் அதற்கு ஆறுதல் சொல்லித் தேற்றி இருந்த கவலை எல்லாத்தையும் போக்கின காலம் வாராமலே போய்விடுமோ?
முந்தியெல்லாம் நண்பனின் பிறந்த நாள் என்றால் வீடு தேடிப் போய் கொண்டாடுவோம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். இண்டைக்கு முகப்புப் புத்தகத்தில பிறந்த நாள் வாழ்த்து ஒண்டு போட்டால் போதும். அவனுடன் எங்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு விட்டோம் எண்ட திருப்தி எங்களுக்குள் ஏற்பட்டுக் கொள்கிறது. வெளியிடங்களிலிருந்து ஒருத்தன் நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருந்தால் அவனை நேரில போய் சந்திச்சு அவனோட எங்கட நேரத்தை செலவழிச்சு உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை பகிர்ந்து கொள்ளுவோம். இணடைக்கு அவன் வந்து நிக்கிறானம் எண்டால் ஓ.. முகப்புப் புத்தகத்தில பாத்தனான்... அவ்வளவுதான்... நேரில போக வேணும், சந்திக்க வேணும், சுகம் விசாரிக்க வேணும், நட்பை, உணர்வுகளை பகிர வேணும் எண்ட எண்ணம் தோன்றுவதில்லை.
மெய்நிகராக்கம் (virtualization) கணனித் துறைக்கு என்னவோ புதிய புரட்சியாக இருக்கலாம். பல பயன்களை தருவதாகக் கூட இருக்கலாம். மனித வாழ்க்கையில் மெய்நிகராக்கல் என்பது உணர்வுகளை, உறவுகளை மழுங்கடிக்கிறது. மனிதபிமானத்தை கொன்று புதைக்கிறது. மெய்நிகராக்கல் மேலைத் தேய கலாசாரங்களுக்கு பொருந்துவதாக இருக்கலாம், நிச்சயமாக எங்களுடைய, உறவுகளால் பிணைக்கப் பட்டு வாழ்கின்ற எங்களின் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகவேயில்லை. மனிதர்களை உணர்வுகளற்ற சடங்களாக்கிறது.
- தனஞ்சி.