Sunday, February 21, 2010

விசேஷம்

அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன். 

ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம். 

யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம். 

எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.

அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான்.   

விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.

அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள்.  இவங்கள்...???’   

9 comments :

 1. காரைநகர் கசூரினாக் கடற்கரையில் கலாச்சாரச் சீரழிவு
  http://meenakam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95

  ReplyDelete
 2. கலாச்சாரமற்ற இனம் ஒரு மந்த புத்தியுள்ள இனம். அதேபோன்று கலாச்சாரமற்ற படை ஒருமந்தபுத்தியுள்ள படையேயாகும். ஒரு இனத்தின் தனித்துவம் அதன் கலாச்சாரத்தனித்தன்மையின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாகவே, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் கலாச்சாரத்தை அழித்துவிட்டால் போதுமானது என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் தமது கோட்பாடகவே கொண்டுள்ளனர்.

  அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் எந்த ஒரு இனமும் ஆக்கிரமிப்பாளர்களால் அறிவையும் மனதையம் வெல்லும் (Winning Hearts And Minds) நடவடிக்கை என்ற பெயரில் ஒருவிதமான உளவியல் நடவடிக்கைக்கு திட்டமிட்டவகையில் உள்ளாக்கப்படுவது வழக்கம்.

  இது அந்த இனத்தின் இயல்பை, கலாச்சாரத்தனித்துவத்தை பண்பாட்டுச்சிறப்பை, பாரம்பரியச் செழுமையை மெல்லமெல்ல ஊடுருவி, அவற்றை நிர்மூலமாக்கும் ஒரு தொலைநோக்குச் செயற்பாட்டை கொண்டதாகும். ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மக்கள் அவலங்களுக்குள்ளாகி அந்தரப்பட்டு பீதியுடன் இருக்கும் நிலையில் அவர்களின் அந்த நேர பலவீனங்களைப்பயன்படுத்தி அவர்களுள், அவர்களின் அன்றாட வாழ்வுள் ஊடுருவும் இந்த |கலாச்சார| அழிப்பு நடவடிக்கையாளர்கள் அவர்களின் இனத்தனித்துவத்தை இலக்கு வைத்தே செயற்படுவார்கள்.

  ReplyDelete
 3. ஆனாலும் ஒன்டு இருந்தது பால்குடி. என்ட சின்ன மாமாமார் 90களில் யாழ் பல்கலைகழகத்தில் படித்தவர்கள். அவர்கள் சொன்னது இது. சிபிரிட் இருக்கல்லோ (Spirit - அது 100 வீதம் அல்கஹோல்) அதை குடிச்சு போட்டு (எப்படி குடிசசவங்கள் என்டு கேளாதீங்கோ. அது அந்த பன்னாடைகளுக்குத் தான் தெரியும்) புட்போல் விளையாடுவார்களாம். யார் அதிகம் ஸ்டெடியா விளையாடுவார்களோ (வேற என்ன கோல் அடிப்பது தான்) அவர்கள் தான் ஹீரோக்கள்லாம். ஆனால் ராகிங்கை குறை கூறமுடியாது.

  எனக்குத் தெரிந்த ஒரு வாத்தியார் அவர் படிச்ச நாலு வருஷமும் ஹீரோ தான். இத்தனைக்கும் அவரின் குடும்பம் மிகவும் வறியது. ஏ எல் படிக்கும் வரை குடும்பத்தை பார்க்கவேணும் என்டு படித்த ஒருவர். பல்கலைக்கழகத்துக்குப் போனவுடன் தான் ஏதோ பெரிய கொம்பன் என்டு நடக்க வெளிக்கிட்டார். அது அவரின் அறியாமையே தவிர வேறு ஒன்றும் இல்லை. மனிதன் தானாக உணர்ந்து நடக்க வேண்டுமே தவிர, உதுக்கெல்லாம் சமூகம் பொறுப்பெடுக்க முடியாது. எத்தனை நல்ல குடும்பத்து பிள்ளைகள் வீணாக போகிறார்கள். வீட்டினரின் வளர்ப்பைத் தவிர வேற எதுவுமே ஒருவரின் நடத்தைக்கு பொறுப்பேற்க முடியாது.

  அந்த வாத்தியாரைப்போல நல்லதை பார்க்க மாட்டேன் நல்லதை கேட்கமாட்டேன் என்டு காதையும் கண்ணையும் இறுக மூடிக்கொண்டு இருப்பவர்களை என்ன செய்ய முடியும். என்ன கலிகாலம் என்டால் உவர்கள் நல்லா ஜாம் ஜாம் என்டு இருக்கினம் நல்லவன் கஷ்டப்படுகிறான். அதனால் தான் அதை கலிகாலம் என்டு சொல்லினம் என்டு நினைக்கிறன்.

  விருந்தோன்பும் பண்பும் கூட ஒரு வகையில் கலாசாரமே. வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை குடுப்பதும் எங்கள் கலாசாரமே. ஆனால் எத்தனை வயதில் மூத்தவர்கள் மரியாதைக்குரியவர்களாக இருக்கிறார்கள். கனகாலத்துக்கு முதல் நல்லவர்கள் தான் இருந்தார்கள். இப்ப என்ன்டா என்டால் நல்லவர்களை கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேட வேண்டி இருக்கு.

  ஆனாலும் மிகவும் பழமைவாதியாக இருக்காமல் அதே நேரத்தில் எங்கள் "வேர்களை" மறக்காமல் சிறந்த‌ தனிமனிதனாக வாழ்வது எங்கள் கைகளில் தான் இருக்கிறது. அச்சு சொன்ன மாதிரி ''அந்த நேர பலவீனங்களைப்பயன்படுத்தி'' எங்களை அழிக்க நினைப்பவர்களை நாம் அசாதரண மனவுறுதியுடன் எதிர்கொள்வது கடினம் தான். ஆனாலும் அது கடினம் என்டு சொல்லிக்கொண்டு முயற்சி செய்யாமல் இருப்பது எங்களின் "பெரும்ப் பிழையே". முயற்சி செய்யாமல் இருப்பது எங்கள் சோம்பல் குணம் தான்....

  சிங்கப்பூர் என்ட நாட்டில் என்ன தான் கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தாலும், மக்களும் உணர்ந்ததால் தான் அவர்கள் நாடு அப்படி முன்னேறி இருக்கு. ஒரு வயதானவர் ரெயினில் ஏறினால் அடுத்த செக்கன் (மில்லி செக்கன் என்டு கூட சொல்லலாம்) எழுந்து இடம் கொடுக்கும் இளவயதினர் சிங்கப்பூரில் நிறைந்திருக்கிறார்கள். தாய் தகப்பன் பிள்ளைகளை இருத்தி கதைக்கவேணுமே தவிர ஆசிரியர்களும் ஊடகங்களும் தங்கள் பிள்ளைகளை திருத்தவேணும் என்டு நினைக்கும் பெற்றோர்களை கழுவில் ஏற்ற வேண்டும். பிள்ளைகளை பாக்க நேரம் இல்லை என்பது எல்லாம் பொய். மனம் இருந்தால் வழி உண்டு. எங்கள் சோம்பலுக்கு நேரமில்லை என்ற சாக்கு சொல்லுவது அபத்தம்.

  ஆனாலும் சிங்கப்பூர் ஊடகங்கள் சிறுவர்களை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவர்களது தமிழ் நிகழ்ச்சிகளின் (ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்திருக்கிறன்) தரம் அப்படி. சிங்கப்பூரை உதாரணம் காட்டினால் அது சின்ன நாடு.. இயக்கத்தை உதாரணம் காட்டினால் அன்டி இயக்கம் அவர்களைப்பற்றி மகிந்தவை விட அதிகமாக சேற்றை வாறி இறைப்பார்கள். தங்கள் குறைகளை அப்படித்தானே மறைக்க முடியும்.

  ReplyDelete
 4. முன்னொரு காலத்தில் குரு எனபவர் தெயவத்துக்கு முதல் வருவார். இப்ப வாற ஆசிரியர்களில் பாதிக்கு மேல் குணக்கேடானவர்களாக இருப்பதால் பெற்றோர் இன்னும் அதிக கவனத்துடன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அவர்கள் கைகளில் தான் எல்லாம் இருக்கு. ஒழுங்காக தொடக்கத்தில் இருந்தே செதுக்கினால் ஓரளவு வளர்ந்த பின் பிள்ளைகளே உணர்ந்து நடப்பார்கள். அது தான் உண்மை.

  அம்மா சின்ன வயதில் ஒன்று கூறுவா. தன் பிள்ளைகள் நாட்டிற்கோ சமூகத்திற்கோ கேடு உருவானால் தானே அவர்ளை அழித்துவிட்டு அப்படி பட்ட பிள்ளைகளை பெற்ற தன்னையும் அழித்துக்கொள்வேன் என்று. சில வேளைகளில் நாங்கள் கதைப்போம், அப்படி உந்த அம்மா அப்பா செய்தால் அரசாங்கமே தேவையில்லை என்று. உது கொஞ்சம் எக்ஸ்டீர்ம் தான் ஆனாலும், சில வேலைகளில் சிலரைப்பார்க்கும் போது உதுகளை வளர்க்கத்தெரியாதவர்கள் அட்லீஸ்ட் கொன்று போட்டிருக்கலாம் என்டு இருக்கும்.

  ஒழுங்காக வளர்ப்பது மிகவும் கடினம். இல்லை என்று சொல்லேல்ல. ஆனாலும் கடைசிவரை விடாமல் முயற்சி செய்யவேண்டியது பெற்றோரே. எது ஒழுக்கம் எது நல்லது என்பதற்கு துல்லியமான வரைவிலக்கணம் குடுப்பது கடினம். தான் சார்ந்த சமூகத்திற்கு கேடு செய்யாமல் இருப்பது கூட ஒழுக்கம் தான். தன்னைச் சார்ந்தவர்களுக்கு வேதனை / அரியண்டம் குடுக்காவிட்டால் அதுவும் ஒழுக்கம் தான். ஒழுக்கம் என்பது மிகச்சிறந்த கலாசாரம். அதற்கு யாழ்ப்பாணத்தானாக இருகக்த்தேவையில்லை, மனிதாக இருக்கவேண்டும்.

  எங்களுக்கு என்று இருக்கும் சில கலாசார கோட்பாடுகளை மனதில் இருத்தவேண்டியது எங்களது கையில் தான் இருக்கு.

  உதில் எழுதினதுக்கும் உங்கள் ஆக்கத்துக்கும் தொடர்பு இருக்கா இல்லையா என்டு தெரியேல்ல.. கொட்டித்தீர்த்து விட்டேன். பொருத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 5. என்ன பிறாண்ட் சராயம் அது??? நானும் வாங்கி அடிக்கப்போறன்...

  ReplyDelete
 6. பால்குடி ...
  ///யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம்./// யாழ் சனம் நல்ல திடகாத்திரமான ஆக்கள் எண்டு விளங்கிடு போல....

  ///எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்./// தலைக்கு மேல வெள்ளம் போயிட்டு இனி சாண் ஏறினா என்ன முழம் ஏறினா என்ன ...தட்டிக்கொடுக்க ஆக்கள் இருக்காங்க ..தட்டிக் கேக்க யார் இருக்காங்க....

  ஆனால் மடத்தில ஒரு பால்குடியை வைச்சுக்கொண்டு இப்படி கதைச்சது பிழைதான் ....lol

  ReplyDelete
 7. அச்சுவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். மிகச் சிறப்பானதொரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

  முகிலினி அக்காவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அவரவர் உணர்ந்து திருந்திக் கொள்ளாமல் எதுவும் நடந்து விடப் போவதில்லை.

  கார்த்தியினது கருணையூரானினதும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  கார்த்தி, மூடியை மணந்து பாக்கிறதுக்குத் தானே... எல்லா பிறாண்டும் ஒரே மணம் தான்...

  கருணையூரான்,
  //தட்டிக்கொடுக்க ஆக்கள் இருக்காங்க ..தட்டிக் கேக்க யார் இருக்காங்க....

  உண்மைதான்...

  ReplyDelete
 8. ம்.. நல்லதொரு சமூக அக்கறையுள்ள,அனைவரும் விழித்துக் கொள்ளவேண்டியதொரு பதிவு.

  ReplyDelete
 9. வடலியூரான் போகி ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete