Monday, October 05, 2009

தலையிழந்த, நான் வைத்த பனையே..

நான் உனக்கு கொள்ளி வைப்பேன் என்றா இத்தனை நாளும் நான் வரும் வரை காத்திருந்தாய்? உனக்குக் கொள்ளி வைக்க எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? நான் வைத்து, நான் பார்க்க வளர்ந்த மரம் நீ... உனக்கு எப்பிடி நான் கொள்ளி வைப்பேன்? யாருக்குத் தெரியும் உன் வாழ்வு இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுமென்று... நீ செழிப்புற்று வளர்ந்த போதெல்லாம் சந்தோசப்பட்டேன். உன்னுடலில் ஏறி ஓடியாடி விளையாடியிருக்கிறேன். நீ முளைத்தெழுந்த மண்ணில் புழுதி படப் புரண்டு குதூகலித்திருக்கிறேன். உன்னிடமிருந்து நான் உச்சப் பயனையும் பெற்றுக் கொண்டேன். இன்றோ நீ தலையிழந்து அழகிழந்து உன்னை அரவணைப்பாரையிழந்து கூனிக் குறுகி நிற்கிறாய். யார் யாரோ எல்லோரும் உன்மேல் கைவைத்துச் செல்கின்றனர். வெட்கித் தலை குனிந்து வேதனையில் துடிப்பதைக் காண்கிறேன்.  

வங்கக்கடலில் மட்டுமல்ல கடல்கடந்து பசுபிக் அத்திலாந்திக் என ஏழு கடல்களையும் இணைத்து உருவான புயல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உன்னைத் தாக்கிய போது நீ என்ன பாடு பட்டிருப்பாய்? தன்னந்தனியே எழுந்து நின்று எது வந்தபோதும் எதிர்கொள்வேன் என்ற துணிவோடு எதிர்த்தாயே...  பசளையையும் தண்ணீரையும் வழங்கிக் கொண்டு நான் உன்னிடமிருந்து விலகி இன்னுமொரு இடத்தில் வாழ்ந்தேனே... அவை மட்டும் உனக்குப் போதாது, நான் உன்னோடு கூட இருப்பதைப்போல வலிமை பிறிதொன்றும் இல்லை என்பதை அன்று நான் ஏன் உணரவில்லை? ஒரு வேளை அன்று உன்னோடு நான் இருந்திருந்தால் ஒன்றில் இருவருமே தலையையிழந்திருப்போம், இல்லை நீயாவது இன்று தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பாய். இன்றும் கூட உனக்காக எதுவும் செய்ய முடையாதபடி வெறுமனே உன்னைப் பார்த்த படி கடக்கிறேன்... நீ சுமந்த, நான் என் கைப்பட எழுதிய என் தமிழ் வாசகங்கள் எல்லாம் வடிவம் மாறியிருக்கே... நான் சிறு கத்தி கொண்டு உன்னுடலில் செதுக்கிய வடிவங்களெல்லாம் சிதைந்து போச்சே... நீ முழைத்த நிலத்தருகே விழித்தெழுமென்று நம்பி நான் நட்டு வைத்த விதைகளுக்குப் பதில் வேறு விதைகள் தூவப்பட்டிருக்கே...  வெள்ளை நிறக்கறையான்கள் உன்னைத் துளைத்தெடுத்து புத்து அமைப்பதைக் காண்கிறேன். குளவிகள் மண்ணினால் உயர்ந்த மேடமைத்து சிங்கத்து குகை அமைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை. ஒப்புக்கேனும் ஏன் என்று கேட்க முடியாத ஈனமான நிலையில் நான்...

இன்று நான் என் ஆசையைச் சொல்லி வைக்கிறேன்... சிதையில் நான் கிடக்கும்போது என் நெஞ்சின்மேல் உன் உடல்தான் வைக்கப்பட வேண்டும். நான் செய்த அற்ப விடயங்களை எண்ணி எண்ணி என் நெஞ்சு விம்மிப் புடைக்கும் ஒவ்வொரு கணமும் நீ என்னைத் துளைக்கும் கேள்விகளைக் கேட்டு என் நெஞ்சை அழுத்த வேண்டும். அப்போதாவது எனது நெஞ்சு, தான் செய்த தவறுகளை எண்ணி எண்ணி உருகி உருகித் தீயோடு சங்கமிக்கட்டும். நீ முழைத்தெழுந்த மண்ணிலேயே என் சாம்பலும் விதைக்கப்பட வேண்டும். ஏனெனில் சில வேளை நான் கூட நாளை உனக்கருகே இன்னுமொரு பனையாக முளைத்தெழலாம்.


2 comments :

  1. எங்க ஐயா.. கன காலமாக் காணேல்லை??

    ReplyDelete
  2. கீத், தரைப்பாதை வழியே வங்கக்கடலில் கால் நனைக்கச் சென்றிருந்தேன்.

    ReplyDelete