Wednesday, October 21, 2009

தனி சுகம்

நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும் இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.

சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப் போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.

மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது. பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம்.  மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும் எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.  பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள் சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.
 மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச் சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும் வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான் அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு துடிக்குது.

2 comments :

  1. இரண்டு வருடங்கள் அந்தக் கல்லில் நானும் படுத்திருந்தேன். பெரும்பாலும் தமிழ்ப் பாடம் அந்த மடத்தில் தான் க்ல்லைக் கைப்பற்றுவதற்க்கு எங்களுக்குள் போட்டி பின்னர் ஒரு நாளைக்கு ஒருவர் என்ற ரீதியில் பங்குபோட்டு படுத்திருந்து தமிழ்ப் பாடம் படித்தது. பரீட்சை நாட்களில் சோதனை முடிந்தபின்னர் அந்தக் கல்லில் நித்திரையும் கொண்டிருக்கின்றோம்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தியண்ணா, நீங்களும் மடத்தில படுத்து நித்திரை கொண்டிருக்கிறியள். அந்த இனிய சுகத்தை அனுபவிச்சு இருக்கிறியள். எங்கும் அனுபவிக்க முடியா சுகம் அது...

    ReplyDelete