Wednesday, March 17, 2010

நகைச்சுவையுணர்வு

நகைச் சுவையுணர்வு என்பது இயல்பாக இருக்க வேண்டும். எதிர்பாராததாக இருக்க வேண்டும். பொருத்தமானதாக இருக்க வேண்டும். எல்லோரும் ரசிக்கும் படியாகவும் மற்றவர்களைப் புண்படுத்தாததாகவும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதை விட நகைச் சுவையை ரசிப்பதென்பது ஆளாளுக்கு வேறுபடும். சிலர் (நான் உட்பட) வெடிச் சிரிப்புச் சிரிச்சு (கக்கட்டம் போட்டுச் சிரிச்சு) நகைச்சுவையை ரசிப்பார்கள். உண்மையிலேயே தங்களை அறியாமலே நகைச்சுவையை ரசிப்பதனாலேயே எதிர்பாராத நேரங்களில் இவ்வாறு சிரிக்க நேரிடுகிறது. 

அது அப்பிடியே கிடக்க, எனக்குள் ஒரு உறுத்தல் இருக்கிறது. உண்மையிலேயே நாங்கள் தரமான நகைச்சுவையைத் தான் ரசிக்கிறோமா, இல்லை எங்களின் நகைச்சுவை உணர்வுகள் தரமற்ற ஒரு நிலைக்கு கொண்டு செல்லப் படுகின்றனவோ? இன்று அதிகமாக ரசிக்கப்படும் நகைச்சுவைகள் ஒருத்தரை புண்படுத்தவதாக இருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒருத்தரைக் கேவலப்படுத்திக் கொச்சைப் படுத்தும் கதைகளைத்தான் நாங்கள் நகைச்சுவை என்று அதிகமாக ரசிக்கிறோம். கூட்டம் ஒன்று சேர்ந்தால் ஒருத்தனை எல்லாரும் போட்டு கடிச்சு அவமானப் படுத்தும்போது அதனைப் பார்த்து சுற்றிவர நிக்கிற எல்லாருமே கைதட்டி ரசிச்சுச் சிரிச்சுக் கொண்டாடுவார்கள். இதுதான் உண்மையான நகைச்சுவை உணர்வா? 

என்னுடைய கருத்துப்படி சினிமாவில் கவுண்டமணி செந்திலைப் பார்த்து ‘கோமுண்டித் தலையா, பனங்கொட்டைத் தலையா’ என்றெல்லாம் கேவலமாக திட்டும் போதுதான் நாங்கள் எல்லாரும் கைதட்டிச் சிரிப்போம். அதிகமாக ரசிப்போம். ஒருத்தனை அவமானப் படுத்தும் வார்த்தைகள் தான் எங்களுக்கு நகைச்சுவை உணர்வை, ரசிப்பைத் தருகிறதென்றால் எங்களுடைய ரசனையின் மட்டம் சரியா? மற்றவர்களை அவமானப் படுத்தாமல் எல்லோருமே சேர்ந்து சிரிக்கக் கூடிய நகைச்சுவைகள் இல்லையா? உண்மையான நகைச்சுவைகளை, தக்க தருணத்தில் எதிர்பாராத விதமாக எழும் நகைச்சுவைகளை ரசிப்பதை விடுத்து தரங்குறைந்த ஒருத்தரை அவமானப் படுத்தும் நோக்கில் கூறும் வார்த்தைகளைத் தான் நாங்கள் சிறந்த நகைச்சுவை என்று ரசிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 

என்னுடைய எண்ணப்படி சினிமா எங்களை தரங்கெட்ட ரசனைக்கு இழுத்துச் செல்கிறது. மற்றவர்கள் அவமானப்படுவதை, துன்பப்படுவதை ரசிப்பதை ஊக்குவிக்க முயல்கிறது. எங்களை அறியாமலே நாங்கள் அவற்றிற்கு அடிமையாகிறோம். சினிமா தவிர பதிவுலகமாவது தரமான நகைச்சுவைகளை பதிவிடுகிறதா? அல்லது அவற்றைத் தேடியெடுத்து பதிவிட்டு வாசகர்களின் நகைச் சுவையுணர்வை தரமானதாக பேணுகிறதா? அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறதா? இல்லை ‘நாசமாப் போக’ என்று மற்றவரை திட்டித் தீர்ப்பதைத் தான் சிறந்த நகைச் சுவையாக எண்ணி ரசிக்கிறதா? மற்றவர்கள் அவமானப் படும்போது கைதட்டிச் சிரிக்கும் கேவலமான விடயங்களைத்தான் தரமான நகைச் சுவையுணர்வு என்று தவறான பாதையில் மக்களை வழி நடத்தாமல் தரமான நகைச்சுவையை எல்லோருமே ரசிக்கக் கூடிய நகைச்சுவைகளை முன் கொணர முடியுமா? 

5 comments :

  1. உண்மை அண்ணா இப்பொழுது நகைச்சுவை என்பதன் வடிவம் மாறிவிட்டது .பிறரை துன்பபடுத்தி பார்ப்பதிலும் பிறர் கஷ்டத்தில் இன்பம் காணுவதுமே மட்டும் நகைச்சுவையாக மாறிவிட்டது .இந்த மாற்றத்திற்கு காரணம் ,தமிழ் சினிமாவின் சில நகைச்சுவை நடிகர்களே ......?

    ReplyDelete
  2. ஆனால் இந்த இயல்பு இப்போது மாறி வருகிறது. இப்போது கவுண்டமணியின் நகைச்சுவைகளை பார்க்கும் போது பலர் முகம் சுழிக்கின்றனர். விவேக் பொன்றவர்களின் அறிவு புர்வமான பகிடிகளும் வடிவேலு போன்றோரின் Action பாணியிலான நகைச்சுவைகளுமே பெரும்பாலும் எடுபடுகின்றன மக்கள் மத்தியில்.

    ReplyDelete
  3. ம் பால்குடி சிந்திக்க வேண்டிய ஒரு விடயத்தை உங்களுக்கேயுரிய பாணியில் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல ஒரு விசயத்தை எடுத்து இருக்கிறிங்க.....பால்குடி எண்டாலும் விசயங்கள் நல்லாதான் இருக்கு....
    இன்னும் ஒரு துன்பத்தில் இன்பம் கண்டுதான் பழக்கம் எங்கட சனத்துக்கு...
    ///இன்று அதிகமாக ரசிக்கப்படும் நகைச்சுவைகள் ஒருத்தரை புண்படுத்தவதாக இருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது.///
    பால்குடி இதை உங்கள் வாழ்க்கையில் பல இடங்களில் கண்டு இருப்பிங்க .....


    ///அல்லது அவற்றைத் தேடியெடுத்து பதிவிட்டு வாசகர்களின் நகைச் சுவையுணர்வை தரமானதாக பேணுகிறதா? அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறதா? இல்லை ‘நாசமாப் போக’ என்று மற்றவரை திட்டித் தீர்ப்பதைத் தான் சிறந்த நகைச் சுவையாக எண்ணி ரசிக்கிறதா? மற்றவர்கள் அவமானப் படும்போது கைதட்டிச் சிரிக்கும் கேவலமான விடயங்களைத்தான் தரமான நகைச் சுவையுணர்வு என்று தவறான பாதையில் மக்களை வழி நடத்தாமல் தரமான நகைச்சுவையை எல்லோருமே ரசிக்கக் கூடிய நகைச்சுவைகளை முன் கொணர முடியுமா? ///
    பதிவு உலகம் சிந்திக்கின்ற அல்லது ஒரு விசயத்தை சொல்ற மாதிரியான நகைச்சுவைகளை போடுவது குறைவு என்று நினைக்கிறன்..தேவையான ஒரு விசயத்தை நகைச்சுவையோடு சொன்னால் அது நன்றாக இருக்கும் ...

    ReplyDelete
  5. கோகுல், கார்த்தி, வடலியூரான், கருணையூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    கார்த்தி, வடிவேலு ஏமாளித்தனமாக ஏதாவது செய்து மாட்டுப்பட்டு அடி வாங்குவதைத்தானே விசிலடித்து ரசிக்கிறோம்.

    ReplyDelete