Sunday, February 21, 2010

விசேஷம்

அண்மையில் ஊருக்குப் போய் மடத்திலேந்து கதைக்கேக்க அறிஞ்ச சில விடயங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன. இருந்தாலும் நான் இவற்றை எதிர்பார்க்காமல் இருக்கவில்லை. கலாசரம் பற்றிப் பலர் சொல்லீட்டாங்கள். நான் ஒன்றும் அதுகளை பற்றிச் சொல்லேல்லை. வேறு சில விடயம் பற்றித்தான் சொல்லப் போறன். 

ஊர்ப் பொடியன் ஒருத்தனுக்கு நடந்த சம்பவம் தான் இது. வவுனியாவுக்கு வந்த அவன் வழமையாக ஊரில பாவிக்கிற சாராயப் போத்தல் ஒண்டின்ர பெயரைச் சொல்லிக் கேட்டிருக்கிறான். கடைக்காரன் உடன கேட்டானாம் ‘தம்பி நீ யாழ்ப்பாணமோ?’ எண்டு. இவன் அதிர்ந்து போனான். ‘எப்பிடிக் கண்டு பிடிச்சீங்கள்?’ எண்டு இவன் கேக்க கடைக்காரன் சொன்ன பதிலைக் கேட்டு, கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் அதிர்ந்து போனம். 

யாழ்ப்பாணத்தைத் தவிர வேற எந்த இடத்திலையும் அந்தப் பெயருடைய சாராயம் இல்லையாம். இதே வியாபாரப் பெயருள்ள சாராயம் நாடு பூராவும் விக்கப்பட்டாலும், அக்குறித்த பெயருடைய சாராயம் யாழ்ப்பாணத்தில மட்டும் தானாம் விக்கப்படுது. அதில அற்ககோல் வீதாசாரம் அதிகமாம். யாழ்ப்பாண மக்களுக்காக எண்டு விஷேசமாகத் தயாரிக்கப்பட்டதாம். இந்த வியாபாரப் பெயருள்ள சாராயப் போத்தல்கள் எல்லாத்திலையும் போத்தல் கண்ணாடியில் அவங்கட வியாபாரப் பெயர் குறிச்சிருப்பாங்கள். ஆனா யாழ்ப்பாணத்துக்கு வாறதில, போத்தல் கண்ணாடியில எதுவுமே போட்டிருக்கமாட்டாங்கள். தம்பி இனியாவது கவனிச்சுப் பார் எண்டு கடைக்காரன் சொன்னானாம். 

எப்பிடியெல்லாம் சீரழிக்க முடியுமோ அப்பிடியெல்லாம் சீரழிக்க முயற்சி செய்யுறாங்கள்.

அதில கதைச்சுக் கொண்டிருந்த ஒருத்தன் இதச் சொன்னவனைக் கேட்டான் இப்பிடித் தெரிஞ்சு கொண்ட பிறகும் ஏன்ரா குடிக்கிறாய்? குடியை விட வேண்டியது தானே எண்டு. ‘அடே நான் இதில ஊறிப் போனன். என்னால விடேலாது. சொன்னா நம்ப மாட்டாய் நான் குடிக்கேல்லையெண்டா என்ர கை நடுங்கும்’ எண்டான்.   

விட முடியும் எண்டு நினைக்கிறவங்கள் குடியை விடலாம். இனி பழகுறவங்கள் பழகாமல் விடலாம். குறிப்பா உந்தக் கம்பஸ் வழிய ராகிங் நேரம் கொடுமைப் படுத்திக் குடிக்கப் பழக்குவிக்கிற படிச்ச நாய்கள் யோசிச்சாலும் கொஞ்சம் குடியைக் கட்டுப்படுத்தி நல்ல சமுதாயத்தை வளர்க்க முடியும். குறிப்பாக நாம் இலக்கு வைக்கப் படுகிறோம் என்று தெரிந்த பின்னும் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது மடமைத் தனம்.

அடுத்த விடயம் வரி விதிப்பு. என்னை விட வயது மூத்த ஒருத்தர் சொன்னார், ‘தம்பி யாழ்ப்பாணத்துக்குப் வாற வியாபார வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுதாம். அவங்கட பார்வையில இன்னும் நாங்கள் வேற நாடுதான் தம்பி. வரித் தொகை பொடியள் அறவிட்டத விட கூடவாம். அவங்களாவது எங்களட்ட வாங்கி எங்கட பிரதேசங்களைக் கட்டியெழுப்பினாங்கள்.  இவங்கள்...???’   

Thursday, January 07, 2010

கணக்கு_10

நான் ஒன்று தொடக்கம் பத்து வரையிலான இலக்கங்களுக்குள் அடுத்துள்ள இலக்கங்கள் இரண்டை நினைத்தேன். அதிலொன்றை கண்ணனிடமும் மற்ற இலக்கத்தை நந்தனிடமும் இரகசியமாகச் சொன்னேன். இருவருக்குமிடையில் கீழுள்ள கலந்துரையாடல் மட்டுமே நடந்தது.

நந்தன் : எனக்கு உன்னுடைய இலக்கம் தெரியாது.
கண்ணன் : எனக்கும் உன்னுடைய இலக்கம் தெரியாது.
நந்தன் : ஆம், உன்னுடைய இலக்கத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.

நான் நினைத்த இலக்கங்களுக்குச் சாத்தியமான, நான்கு சோடி இலக்கங்கள் (நான்கு விடைகள்) மேற்குறித்த கலந்துரையாடலிலிருந்து உங்களால் கண்டு பிடிக்க முடியும். எங்கே, உங்களுடைய மூளையைக் கொஞ்சம் கசக்கி விடையைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம். விளக்கங்களுடன் விடைகளை இணைத்தால் உதவியாக இருக்கும்.

Wednesday, January 06, 2010

கள்ள வோட்டு

நாட்டின்ர சனாதிபதித் தேர்தலும் வருது. இப்ப இருக்கிறவர் இன்னும் ரெண்டு வருசம் சனாதிபதியா இருக்கலாமாம். ஆனா இப்ப நடத்துறதுக்கு என்ன காரணம் எண்டா தான் திரும்பி வரோணும் எண்டதுக்காகவாம். என்ன ஒரு தேசப் பற்றுப் பாருங்கோ. வழமையைப் போல சிறுபான்மை இன மக்களின்ர வோட்டிலதான் வெற்றி தங்கியிருக்கெண்டு தேர்தலையொட்டிச் சிறு பான்மையினர் விசேசமா கவனிக்கப் படீனம். என்னதான் இருந்தாலும் எங்கட நாட்டில நீண்டகாலமா இருக்கிற சூழலைப் பாத்தா ஒரு காலமும் சிறுபான்மையினர் ஒருத்தர் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று சனாதிபதியாக முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை எண்டைக்கும் சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். அதனால அத ஒழிக்கிறதுக்கு ஏதாச்சும் வழியிருக்கோ எண்டு பாக்க வேணும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம் இல்லை. இவ்வளவுதான் எனக்கிருக்கிற அரசியல் அறிவு.

அது இருக்கட்டும் நான் சொல்ல வந்த விசயம் வேற. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழர்கள் எல்லாரும் தாங்கள் ஒரு தலைமையின் கீழ்தான் இருக்கிறம் எண்டதைக் காட்ட ஒரே கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எண்ட நிபந்தனை. உண்மையைச் சொல்லோணுமெண்டா அப்ப எனக்கு வாக்குரிமை கூட இல்லை. உயர்தரச் சோதினைக்கு படிச்சுக் கொண்டிருந்த காலம். தமிழ்த் தேசியம் மீதிருந்த உந்துதாலால் நானும் என்ர வயசையொத்த சில நண்பர்களும் வோட்டுப் போடுறதெண்டு முடிவெடுத்தாச்சு. அந்தத் தேர்தல்ல பல்கலைக் கழக பொடியள் மும்முரமா பிரச்சாரம் செய்ததாலையும் ‘வயதுக்கு வந்தாக்களுக்கு மட்டும்’ எண்டிருக்கிறதுகளை என்னண்டொருக்கா பாக்கோணும் எண்டிருக்கிறதைப் போல (இதுவும் வயசுக்கு வந்தாக்களுக்கு மட்டும்தானே) எப்பிடி வோட்டுப் போடுறதெண்டதைப் பாக்கோணுமெண்ட ஆசையும் கூடவே இருந்ததாலையும் வோட்டுப் போடுறதெண்டு யோசிச்சம்.

வழமையா நாங்கள் கூடுற மடத்தடிக்குப் போனா நாங்கள் தான் தாமாதமாப் போயிருக்கிறம். அதுக்கு முன்னமே எங்கட பொடியள் வோட்டுப் போடத் தொடங்கீட்டாங்கள். குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்களிக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் பட்டோம். (களவுக்கு போறது இப்பிடித்தானே ) எனக்குத் தரப்பட்ட இடம் எங்கட இடத்திலேந்து கொஞ்சத் தூரத்தில இருக்கிற பள்ளிக்கூடம். முதல்ல உதில கொஞ்சம் அனுபவம் உள்ளாள் வாக்களிப்பு நிலையத்துக்குள்ள போனார். அடுத்ததா அவற்ற தலமையில பின்னால புதுசா வோட்டுப் போடப் பழகுறாக்கள் நாங்கள் ஒரு அணி போல உள்ளுக்குள்ள போனம்.

எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன்.  அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன் அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவற்ற முகத்த பாக்கேலாமப் போச்சு. டக்கெண்டு திரும்பி அவர் பெயரை ஆருக்காக வாசிச்சாரோ அவையளைப் பாத்தன். அடுத்த அதிர்ச்சி. அதில இருந்த எல்லாருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவையளைத் தெரியும். வாசிக்கப்பட்டது என்னுடைய பெயரில்லையெண்டது மட்டுமில்லை நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக் கூடாதெண்டதும் அவையளுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒருத்தரும் ஒண்டும் பறையேல்ல. அப்பத்தான் எனக்கு மெல்ல நடுக்கம் பிடிச்சுது. ஒகோ,இது இப்பிடிச் சிக்கலோ? பிடிபட்டா கதை கந்தல் தான் எண்டது விளங்கிச்சுது. வோட்டுப் போட்டுட்டுப் போய் கையை நீட்டினா கைக்கு வர்ணம் பூசினதும் இன்னுமொரு ஆசிரியர். என்னை ஏழெட்டு வயது முதல் அறிந்தவர். கிட்டத்தட்ட மூண்டு வருசம் என்னுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தவர்.  சின்ன விரலை இழுத்து வச்சு ‘இன்னுமொரு தரம் நீ வோட்டுப் போடக்கூடாது’ எண்டு சொல்லிச் சொல்லி அந்த விரல் முழுக்க தன்ர பலம் முழுக்கச் சேத்து அழியாத படி நிறந்தீட்டி விட்டார். வெளீல வந்தாப்போல தான் அப்பாடா ஒரு மாரித் தப்பீட்டம் எண்டு பெருமூச்சு விட்டன். அதே நாளில நான் பொலீசு வாகனத்தில ஏத்தப்பட்ட சோகக் கதையைப் பிறகொருக்காச் சொல்லுறன்.

அண்டைக்கு பின்னேரம் எல்லாம் முடிய பொடியள் எல்லாரும் ஒண்டு கூடி அவரவர் சாகசங்களைச் சொன்னாங்கள். எண்ணுக் கணக்கில்லாத வோட்டுப்போட்டவங்களும் இருந்தாங்கள். அத விட பலருக்கு நடந்த கொடுமையென்னண்டா தங்கட சொந்த வோட்டுப் போட முடியேல்ல. நெஞ்ச நிமித்திக் கொண்டு அடையாள அட்டையிருக்கிற துணிவில தங்கட வோட்டுக்களை கடைசில போடப் போன கன பேர் இந்த வோட்டு உன்னுடையதில்லை. நீ இதுக்கு முன்னம் வந்து வோட்டுப் போட்டுட்டாய் எண்டு சொல்லி திருப்பியனுப்பப்பட்டிருந்தினம். அதை விட கொடுமை என்னண்டா ஓடியோடி வோட்டுப் போட்ட ஒருத்தன்ர சொந்த வோட்டை இன்னுமொருத்தன் கொண்டு போய் வோட்டுப் போட்டுட்டு வந்தது தான்...

Tuesday, December 01, 2009

உபயம்...

கல்லூரி வாழ்க்கையில மறக்க முடியாத நாட்களில நாடகம் பழகிய (பழகப் போறன் எண்டு வீட்டில சொல்லிக் கொண்ட) நாட்கள் மறக்கமுடியாதவை. நாடக வாழ்க்கை வாழ்ந்தம் எண்டும் சொல்லலாம். ஏனெண்டா பல நாடகங்களை, நாடக நெறியாளர்களாகிய ஆசிரியர் வீடுகளுக்குப் போய்த்தான் பழகியிருக்கிறம்.  சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தனியார் வகுப்புகளுக்கும் முழுக்குப் போட்டுக் கொண்டு வீட்டில நாடகம் பழகப் போறன் எண்டு சொல்லிப் போட்டு வெளிக்கிடுறது. குறுக்கு வழி குச்சொழுங்கை எண்டு இல்லாத ஒண்டையும் உருவாக்கிக் கொண்டு சைக்கிள் நுழையாத இடங்களுக்குள்ளாலயும் சைக்கிளை விட்டுக் கொண்டு போறது. ஆசிரியர்களின் வீடுகளுக்குப் போகேக்க என்னவோ தனித்தனியாத்தான் போவம். முடிஞ்சு வரேக்க ஒரு பெரிய பட்டாளமே வரும். இரகுவரன் ஆசிரியரினதும் சத்தியசீலன் ஆசிரியரினதும் வீடுகளுக்கு சென்று நாடகம் பழகினாலும் சீலன் ஆசிரியரிடம் ஆங்கில நாடகம் பழகிப் போட்டு வரேக்க இருக்கிற ஆர்ப்பாட்டம் மாதிரி மற்றது இருக்கிறேல்ல. பெரும்பாலும் ஆங்கில நாடகம் பழகிறது ஒரே வகுப்பு மாணவர்கள் தான். அப்ப வீதியில போகேக்க பம்பலைப் பற்றிச் சொல்லவும் வேணுமோ...

 வீதியில வரேக்க ஒருத்தன்ர சைக்கிள் கைப்பிடியில மற்றவன் கையைப் பிடிச்சுக் கொண்டு சைக்கிள் ஓடுறதில ஒரு சுகம் இருக்குப் பாருங்கோ. அது தனி அலாதியானது. என்னதான் காவல்துறை சட்டம் எண்டு சொன்னாலும் எனக்கு இப்பிடி சைக்கிள் ஓடி வாறதில ஒரு சந்தோசம். ஒரே வகுப்புப் பொடியள் எண்டா நக்கல் நையாண்டிகளுக்கும் இடைக்கிட ‘கூ’ அடிச்சுக் கத்திக் கொண்டு போறதுக்கும் குறைவிருக்காது. அதுவும் கொஞ்சம் இருட்டெண்டா காணும். சத்தத்தைப் பற்றி பேசவும் வேணுமோ? வீதியால போறாக்கள் ஏன் வாகனங்கள் கூட எங்களை விலத்தித்தான் போக வேணும் எண்ட நினைப்பில வீதி முழுக்க எங்கட ஆட்சிதான். எத்தினை பேர் பேசிக் கொண்டும் எங்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டும் போயிருப்பினம். அதெல்லாம் எங்களுக்கு உறைச்சால்தானே. அதெல்லாம் இப்ப சிங்கள மொழியில திட்டு வாங்கேக்க பயன்படுதெண்டதில ஒரு திருப்திதான், வேறென்னத்தைச் சொல்ல...

நானும் கல்லூரி காலத்திலிருந்தான நண்பனும் பதிவருமான கிருத்திகனும் நாடகம் பழகப் போன பொடியள்ல ரண்டு பேர். (இதையும் வாசிங்கோ) முடிஞ்சு வரேக்க எங்கட எல்லாற்ற சைக்கிளும் நிப்பாட்டப் படும் இடம் சுதாஸ் (பெயர் சரியென்று நினைக்கிறன்) ஐஸ்கிறீம் கடை. எங்களுக்கு என்ன விதமான ஐஸ்கிறீம் வேணுமெண்டு கடைக்காரனுக்கே தெரியும். ஆக்கள் எண்ணிக்கையும் பெரும்பாலும் ஒரே அளவாத்தான் இருக்கும். கடைக்காரனுக்கு நாங்கள் சொல்ல முன்னமே ஐஸ்கிறீம் போட்டுக் கொண்டு வந்திடுவான். அது முடிய பொடியளுக்கு பீடாவும் தேவையெண்டும் தெரியும். என்னத்தைத் தான் சொன்னாலும் எங்கட நாடகக் குழுவில ஆர் காசு குடுக்கிறதெண்ட பிரச்சினை இருந்ததில்லை. எல்லாருமே குடுப்பாங்கள் எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சுப் போடாதேங்கோ... முதல் ரண்டு நாள் கீத்தின்ர உபயம். மூண்டாவது நாள் ஆரோ ஒருத்தன் தான் குடுக்கிறன் எண்டு சொன்னான். அந்த நேரம் பாத்து எங்கட குழுவில இருந்த தோசை எண்டொருத்தன் சொன்னான் பாருங்கோ ‘நீ காசு குடுத்தா கீத்துக்குப் பிடிக்காது. அவன், தான் தான் குடுக்க வேணுமெண்டு சொல்றவன்” (எப்பிடித்தான் இப்பிடியான வசனங்களை கண்டு பிடிக்கிறாங்களோ???) இதுக்குப் பிறகு கீத் வாய் திறக்கேலுமோ? ஐஸ்கிறீம் குடிச்ச எல்லா நாளும் கீத்தின்ர உபயம் தான். உண்மையைச் சொல்லோணுமெண்டா முகம் சுழிக்காம நண்பர்களுக்கு வாங்கிக் குடுக்கிறதெண்டா அவன் தான். அதை விட இன்னுமொரு உண்மை, மற்றாக்களின்ர உபயத்தில சாப்பிடிற மாதிரி திருப்தி சொந்தக் காசில சாப்பிடேக்க வாறேல்ல. உதென்ன உது... லவ்லி கூல்பாரோட ஒப்பிடேக்க இதெல்லாம் ஒரு லந்தைப் பழம் (அதாங்க ஜுஜுபி) எண்டு கீத் சொல்ல வாறது புரியுது. இருந்தாலும் இதையும் மறக்கேலுமோ?

Saturday, November 21, 2009

மிச்சக் காசு

எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய் கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர் நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.

கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது. நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப் போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.

இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும் கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான் குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.

ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

Sunday, November 08, 2009

பெற்றோரும் கல்வி முறையும்

கல்வி முறை என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப் படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.

எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான் எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப் போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப் பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.

பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன் நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).

இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக இருக்கும்.  அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள் விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை.

Thursday, October 29, 2009

கணக்கு_09

நான் என்னுடைய தம்பியின் தற்போதைய வயதை ஆண்டு மாதங்களில் சொன்னேன். ஆனால் வயதைப் பதிந்தவரோ நான் சொன்ன ஆண்டை மாதங்களாகவும் மாதத்தை ஆண்டுகளாகவும் பதிந்து விட்டார். இப்போது தம்பியின் வயது உண்மை வயதின் 5/8 மடங்காக இருந்தது எனின், தம்பியின் உண்மையான வயது என்ன? 

Sunday, October 25, 2009

கல்வி முறை

இலங்கையில் கல்வி முறையைப் பற்றி அதிலுள்ள பல நல்ல விடயங்களைப் பற்றி அதிகமாக நான் இங்கு எழுதப்போவதில்லை. ஏனெனில் அதைனைப் பற்றி எல்லோருமே அறிவார்கள். ஆனால் கல்விமுறை பற்றி எனக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் பற்றி இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். எமது கல்வி முறை இலவசக் கல்வி முறை. உண்மையில் மிகவும் புகழ்ந்து பாராட்டக்கூடிய மிகச்சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்று. சின்னஞ்சிறிய வளர்முக நாடாக இருந்து கொண்டு கல்வியை இலவசமாக கட்டாயக் கல்வி மூலம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக செய்ததன் மூலம் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. அதை விட ஏழை பணக்காரன் வேறு பாடின்றி அனைவருமே அடிப்படைக் கல்வியறிவையேனும் பெறக்கூடியதாக இருக்கிறது. அந்த விடயத்தில் எமது கல்வி முறையை நிச்சயமாகப் புகழ வேண்டும்.

ஆனாலும் இந்தக் கல்வி முறை எமது சமுதாயத்தில் எழுப்பும் சில நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். கட்டாயக் கல்விமுறை எம்மீது திணிக்கும் சிக்கல்களைப் பற்றியே சொல்கிறேன். கட்டாயக்கல்வி முறையானது எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்னிடத்தில் உங்களுக்குத் தேவையான எல்லா விடயங்களும் இருக்கின்றன என்பதைப் போன்றதொரு மாயையுடன் அனைவரையும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கிறது. அனைவருக்கும் கல்வி வழங்குகிறது. படிக்கும் காலங்களில் அனைவரும் பள்ளிக்கூடத்தை மட்டும் நம்பியே தன்னுடைய எதிர்காலக் கனவுகளில் இறங்குகிறோம். படித்து ஏதேனும் சிறந்ததொரு வேலையெடுத்து பணம் உழைப்பதே பலரின் எதிர்காலக்கனவுகளின் இறுதி வடிவம். அதற்குரிய கல்வியறிவைப் பள்ளிக்கூடம் தரும் என்றே நம்புகிறோம். இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி முறை எம்மை இந்நம்பிக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது.

ஆனால் பாடசாலை வாழ்க்கையில் அரசாங்கப் பரீட்சைகள் மூன்று நடைபெறுகின்றன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதரண தரப் பரீட்சை, உயர்தரப்பரீட்சை ஆகிய மூன்றும் ஆகும். இதில் சா/த மற்றும் உ/த பரீட்சைகள் மாணவர்கள் தொடர்ந்து இலவசக் கற்கை நெறியைத் தொடர்வதோ இல்லையோ என்பதைத் தீர்மானிப்பதாக அமைகின்றன. இப்பரீட்சைகளின் பெறுபேறுகளால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்ட மாணவர்கள் எல்லாத்தையும் இழந்த, வாழ்க்கையைத் தொலைத்ததைப் போன்று உணர்கிறார்கள். காரணம் பள்ளிக்கூடம் தமக்கொரு வாழ்க்கையை அதாவது தொழில்வாய்ப்பைத் தேடக்கூடிய அறிவைத் தரும் என்ற நம்பிக்கையில், பள்ளிக்கூடத்தில் கற்பிப்பதைத் தவிர வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய கல்வியைப் பெறாமல் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ வாழ்ந்து விடுகிறார்கள். பின்னர் தாங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை கற்றதை வைத்துக் கொண்டு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத நிலை உருவாகியிருப்பதையும் இவர்கள் உணரும்போது ஒரு இந்த வெறுமை நிலை தோன்றுகிறது.

ஆனால் தொடர்ந்து உயர் கல்வி கற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி இலவசக் கல்வியை முடித்துக் கொண்டவுடனேயே வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் அவர்கள் இந்தளவுக்கு வெறுமை நிலையை உணர்வதில்லை. ஆனால் தொடர்ந்து இலவசக் கல்வி முறையைப் பெற முடியாதவர்களின் நிலை கவலைக்கிடமாகிறது.  தொடர்ந்து படிக்க முடியாமல் போனது ஒரு புறம் இது நாள் வரை கற்றதை வைத்துக் கொண்டு உடனடியாக ஒரு தொழில் வாய்ப்பைத் தேட முடியாத சூழ்நிலை மறுபுறம் அவர்களில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த எமது கல்வி முறை அவர்களில் மட்டுமல்ல பெற்றோர்களிடத்திலும் எம் சமுதாயத்திலும் பலமான தாக்கங்களைத் தோற்றுவிக்கிறது. இக்கல்விமுறையை எம் சமுதாயம் எப்பிடி எதிர் கொள்கின்றது என்பதில் எனது கருத்துக்களைப் பிரதிபலித்து பிறிதொரு பதிவிடுவேன்.

எமது கல்வி முறை பற்றி என்னுடைய கருத்து என்னவெனில் இடை நிறுத்தப்படும் மாணவகளுக்கு தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்காமல் விட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்கு சிறிது காலம், வேலை வாய்ப்பைத் தேடித் தரக் கூடிய இலவசக் கல்வியை வழங்கலாம். பல்கலைக் கழக படிப்புகள் இட்டுச் செல்லாத தொழில் வாய்ப்புகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் அடிப்படை அறிவு தேவைப் படுகின்ற தொழில் பயிற்சிகளையும் அதற்கான நுட்பங்களையும் கற்பிக்கலாம். இதன் மூலம் தொழில் வாய்ப்புகளைத் தேடக் கூடிய இலவச அறிவை இடை விலக்கப்படும் மாணவர்கள் பெறுவதோடு தாங்கள் ஒதுக்கப்பட்டோம் ஏமாற்றப்பட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரமாட்டார்கள். வாழ்க்கையில் அவர்களும் தொழில்வாய்ப்பைத் தேடிக் கொள்வார்கள். அவர்களைச் சார்ந்த பெற்றோர்களும் சமுதாயத்தினரும் அவர்கள் மீதான நெருக்குதலைக் குறைப்பதற்கும் அவர்களும் சிறந்த தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கும் வழிவகுக்கும் என்பது எனது எண்ணம்.

Wednesday, October 21, 2009

தனி சுகம்

நான் இதுவரை பொடியளோட தங்கியிருந்த இடங்களிலயோ, சுத்திப் பார்த்த இடங்களிலயோ மிகச் சிறந்த இடமாக என்ர ஊரின்ர நடுவில இருக்கிற மடத்தையே நான் கருதுறன். மகிழ மரம் நிழல் தர, எண்டைக்குமே குளிர்மையான இடமாக இருக்கும் இடம் எங்கட மடம். அந்தியேட்டிக் கிரியைகள் செய்யுறதுக்காக கட்டப்பட்டது அந்த மடம். மடத்தோட சேத்து பொடியள் இருக்கிறதுக்காகவும் களைப்பாறிப் படுக்கிறதுக்காகவும் கல்லுகள் வச்சிருக்கு. படுத்திருக்க அமைப்பான கல்லுகளும் இருக்கு. மகிழ மர நிழலில சுத்தி வர அடுக்கப்பட்டிருக்கிற கல்லுகளில இருந்த படியும் படித்திருந்தபடியும் கதையளக்கிறதில ஒரு தனி சுகம். பம்பல் நக்கல்களுக்கும் குறைவிருக்காது. கால நேரம் தெரியாம எல்லா விடயங்களையும் அலசுவம்.

சிலநேரங்களில அப்படியே கண்ணயர்ந்து நல்லா நித்திரை கொண்டுவிடுவோம். கதையளக்கும்போது சூடான விவாதங்களும் நடக்கும். சில வேளை முறுகுப்படுறதிலயோ அடிதடியிலோ அவை முடிவதுமுண்டு. ஆனாலும் ஓரிரு நாட்களில் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பீடும். எங்கட பொடியள் மடத்தை ‘இரண்டாம் தாய்வீடு’ எண்டும் சொல்லுவாங்கள். கன பொடியளுக்கு ஒரு சில நாட்களில இரவு தங்குறதுக்கு இடம் கொடுத்தது இந்த மடம். கல்யாண வீட்டுக்கு சோடிக்கப் போய் வர நேரம் பிந்தினால் வீட்டுக்குப் போய் வீட்டுக்காரருக்குக் கரைச்சல் கொடுக்காம இருக்கிறதுக்காக மடத்திலேயே படுக்கிறதும் இருக்கு.

மடத்திலிருந்து கதைக்கிறதுக்கு பதினாறு வயசுக்கு மேற்பட்ட பொடியளுக்குத்தான் (சா/த சோதினை எழுதினாப் பிறகுதான்) அனுமதி. கல்யாணம் கட்டினாக்கள் மடத்துக்கு வாறத தாங்களாகவே நிப்பாட்டிப் போடுவினம். அதுதான் மடம் எங்கட பொடியளின்ர தனி ராச்சியமாக விளங்குது. பொடியள் வயசு வேறுபாடில்லாமல் ஒண்டு கூடுவம். ஊரில நடக்கிற கல்யாண வீடுகளுக்கு தவறாமல் போவம்.  மடத்துப் பொடியளுக்கென்று தனியான அழைப்பு வரும். கல்யாண வீடுகளில சோடிக்கிறது எங்களின்ட பொறுப்பு. செத்த வீடுகளிலும் எங்களின்ட பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.  பொடியளுக்கு ‘கார்ட்ஸ்’ விளையாடுறதுதான் பெரும்பாலான பொழுது போக்கு. பின்னேரம் துடுப்பாட்டம் அல்லது கால்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் விளையாடுவம். அதைவிட விருந்துகள் சிறப்பானவை. இதுக்கெண்டே வீடு ஒதுக்கி இருக்குது. கோழி வாங்குறது அல்லது ஆடு அவுக்கிறது முதல் இறச்சியை வெட்டிச் சமைப்பது வரை அனைத்திலுமே பொடியளின்ர பங்களிப்புத் தான். நாங்களே சமைத்துச் சாப்பிடுவம். கடக்கரைக்குப் போய் விதம் விதமா மீன் வாங்கி வந்து கூழ் காச்சிப் பிளாவில் குடிப்பதும் தனி சுகம்.




 மடத்தில இருக்கிறதால இன்னுமொரு லாபம் என்னண்டா பிள்ளையார் கோயில் ‘கோட்டா’ மோதகம். கோயில்ல நடக்கும் ஒவ்வொரு மோதகப்பூசையின் போதும் மடத்துப் பொடியளுக்காக ஒரு பங்கு தருவாங்கள்.அதை எங்களுக்கிடையில பங்கு பிரிச்சு சாப்பிடும் பழக்கம் சிறப்பானது. மடத்தில கூடுற எங்கட பொடியளுக்கிடையில இருக்கிற ஒற்றுமையைப் புகழ வேணும். ஆராவது ஒரு பொடியன் கோட்டாவைப் பிரிச்சுக் குடுக்கிற பொறுப்பை எடுத்துக் கொள்ளுவான். முடிஞ்சளவுக்குச் சமனான பங்காப் பிரிதச்சு எல்லாருக்கும் குடுப்பான். சமனான பங்காப் பிரிக்க முடியாமல் போற நேரங்களில, சின்னப் பங்கெண்டாலும் எல்லாருக்கும் கிடைக்கிறமாரி முதல்ல பிரிச்சுக் குடுப்பான். பிறகு மிச்சத்தை, இன்னும் வேணுமெண்ட ஆக்களுக்கு கேட்டுக் கேட்டு பங்கிட்டுக் குடுப்பான். இதுதான் சோடா, ஐஸ்கிறீம் அல்லது ஜூஸ் வாங்கிக் குடிச்சா என்ன வடை வாங்கிச் சாப்பிட்டா என்ன நடக்கிறது. இண்டைவரை இந்த விசயத்தில் பிரச்சின வந்ததா நான் அறியேல்ல. ஆனால் பின்னாளில் நான் வெட்கித் தலை குனிந்த விடயம் என்னவென்றால் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுக்கு இரவு விருந்தொன்றை தயார்படுத்தும் பொறுப்பு என்னைப்போல நால்வரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆட்களை விடவும் சற்று அதிகமான எண்ணிக்கைக்கு போதுமான அளவு உணவு ஒழுங்கு செய்திருந்தோம். விரும்பிய அளவு உணவு எடுக்கலாம் எனச் சொல்லப்பட்ட போது இறுதியாக நின்ற ஏறக்குறைய கால்வாசிப்பேருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தி கால தாமதமாக உணவு பெற வேண்டிய நிலை. சிலர் இன்னுமொருவர் உண்ணக்கூடியளவு உணவை கழிவுப் பெட்டிக்குள் போட்டனர். மற்றவர்களைப் பற்றி எள்ளளவேனும் சிந்திக்காத அவர்களின் போக்கை இப்படியான ஒரு சமூகத்திலிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.


நாம எங்க போனாலும் இப்பவும் எங்கட பொடியளுக்கிடையில தொடர்பை வச்சிருக்கிறம். அவரவர் தங்கியிருக்கிற இடங்களுக்கு கிட்ட இருக்கிற பொடியள் அப்பப்ப கூடிக் கதைச்சுக் கொள்ளுவம். (எங்கட பேச்சு வழக்கில சொல்லுறதெண்டா குட்டி மடம் ஒண்டு அமைக்கிறது). இண்டைக்கும் மடத்துக்குப் போய் கல்லு இருக்கைகளுக்கு மேல ஆறி அமரப்படுத்துக் கொண்டு நம்மட பொடியளோட ஊர்க்கதை உலகக் கதைகளை வம்பளந்து கொண்டு அப்பிடியே நித்திரை கொள்ளோணும் எண்டு மனசு துடிக்குது.

Sunday, October 18, 2009

அந்த இன்னும் ஒன்று...

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.

பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது.  ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.

நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.  அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.  இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.

அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.