Thursday, August 27, 2009

நினைச்சுப் பாக்கிறன்

நினைச்சுப் பார்க்கிறன் என்னும் என்னுடைய வலைப்பூவின் இந்தப் பகுதியூடாக என்னுடைய சில நினைவுகளை மீட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் கீத் குமாரசாமியின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கையை, தான் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொள்ளுவதில் கீத் வெற்றி கண்டிருக்கிறார். நானும் என்னுடைய சிறு வயதுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை, என்னைப் பாதித்த, நான் எதிர்கொண்ட சவால்களை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன். சில வேளைகளில் என்னுடைய அனுபவங்கள் சிலருக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும். அல்லது இவனும் என்னை மாரித்தான் எல்லாமே பட்டுத்தான் பழுத்திருக்கிறான் என்ற வாழ்க்கை மீதான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்டுவதாகக்கூட அமையக்கூடும். முதலாவது பகிர்வாக நான் சொல்ல விளைவது நான் காசு களவெடுத்ததைப் பற்றித்தான்.

இன்னும் இந்நிகழ்வு எனக்கு நினைவிருக்கிறது (மற்றதெல்லாம் மறந்து போச்சு) எனக்கு ஐந்து வயதிருக்கும், நான் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். வீட்டில் களவெடுத்திருந்த பதினெட்டு ரூபாய் சில்லறைக்காசுகளை ஒழித்து வைத்துக் கொண்டு பாடசாலை செல்வதில் பெரும் பாடு பட்டேன். காற்சட்டை முன் சட்டைப்பைகள் (பொக்கற்றுக்கள்) பின் சட்டைப்பை, கணிதக் கருவிப்பெட்டியில் (கொம்பாஸ்) அட்டை வைத்து இரண்டாகப் பிரித்து மேலுக்கு கீழுக்கு என சில்லறைக்காசுகளை அடுக்கி வைத்திருந்தேன். அக்கால கருவிப்பெட்டி நெகிழியால் (பிளாஷ்திக்கால்) செய்யப்பட்டு காந்தத்தைப் பயன்படுத்தி மூடுவதாக இருந்தது. ஏன் காசெண்டு கேட்பது புரிகிறது. எங்கட பாலர் பள்ளிக்குப் பக்கத்தில ஒரு கடை ஒண்டு இருந்தது. அதில பல்லி முட்டாசு வாங்கிச் சாப்பிடத்தான். ஏறக்குறைய இருபது ரூபாய் இருந்தால் வகுப்பு முழுவதுக்குமே பல்லி முட்டாசு விருந்து வைத்து விடலாம். எல்லாரோடையும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுறதில அப்பவே எனக்கு ஆசை.

 என்னுடைய கஷ்ட காலம் நான் பள்ளிக்குப் போற நேரம் பார்த்து என்னுடைய பொக்கற்றிலிருந்த சில்லறைகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சத்தம் போட்டன. (ஏன் தான் சில்லறைக்காசுகளை ஒன்றோடு ஒன்று முட்டினால் சத்தம்போடும்படி செய்கிறார்களோ தெரியாது - ஒரு வேளை என்னை மாரிச் சில்லறைக் கள்ளர்களைப் பிடிக்கவோ?) அவ்வளவுதான், அம்மாவிடம் பிடிபட்டேன். விசாரணை தொடங்கியது. ஒவ்வொரு இடமாகத்தேடி ஒழித்து வைத்திருந்த காசுகளை எடுத்து எண்ணினால் பதினெட்டு ரூபாய். ‘உனக்கு எதுக்கு இவ்வளவு காசு?’ நான் பதில் பேசவில்லை. தொனி கொஞ்சம் கடுமையாகியது. அறையொன்றில் படுத்திருந்த அப்பா அந்த நேரம் எண்டு எழும்பினார். பிறகு பேசவும் வேணுமோ? அடியெண்டா அடிதான்.  ம்ம்ம்.... முதல் களவும் பிடிபட்டுப் போச்சு. வாங்கின அடி இண்டை வரைக்கும் நினைச்சுப் பார்க்க வைக்குது.

3 comments :

 1. அடி சக்கை... நீங்களும் கள்ளத்தீனுக்குக் காசு திருடிப் பிடிபட்ட ஆளே... நானும்தான்.. (நான் சொன்னனோ இல்லையோ... சேம் குட்டை..சேம் மட்டை)

  ///உண்மையைச் சொல்லவேணும் எண்டா பள்ளிக்காலத்திலிருந்தான நண்பன் கீத் குமாரசாமியின் பதிவுகளால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தப் பகுதியை ஆரம்பித்திருக்கிறேன்///
  பால்குடியப் பாத்து inspire ஆன எங்களைப் பாத்து பால்குடி inspire ஆகிறார்.... வாழ்க்கை உண்மையிலேயே வட்டம்தான் போல கிடக்கு...

  தொடந்து எழுதுங்கோ... வாழ்க்கையில வெற்றி பெற நடந்த போராட்டத்தில நாங்கள் எங்கை எங்கை பிழை விட்டனாங்கள் எண்டு கண்டுபிடிச்சு எங்கட பொடியளையாவது நல்ல மாதிரி வளக்க முயலலாம்... அதோட ‘பால்குடியால செய்ய முடிஞ்ச சில விஷயம் ஏன் உன்னால செய்ய முடியேல்ல‘ எண்ட மனநிலையிலை இருக்கிற எங்கட அம்மாவுக்கும் விளக்கம் சொல்லலாம்

  ReplyDelete
 2. நன்றி கீத் மற்றும் சுபானு.
  கீத், நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதலாம் என நினைக்கிறன். அதன்மூலம் ஒரு சிலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுமாயின் சந்தோசமே.

  ReplyDelete