Sunday, October 18, 2009

அந்த இன்னும் ஒன்று...

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் பலருக்கு ஏமாற்றம். சிலருக்கு திருப்தி. இன்னும் சிலருக்கு கால்கள் நிலத்தில் நிற்காத மகிழ்ச்சி. நான் கடுமையான முயற்சி எடுக்கவில்லை, ஆனால் எனக்கு எப்பிடி இப்பிடி வந்தது என்று ஆச்சரியப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதே நேரம் பலர் நான் இவ்வளவு கடுமையான முயற்சியெடுத்தும் எதிர்பார்த்த அல்லது திருப்திப்படக்கூடிய அளவான பெறுபேறு கூடக் கிடைக்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். அதனால் குழப்பமடைவார்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் என் நண்பர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.

பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இவனும் எமது கல்விப் படிநிலையில் ஒரு நல்ல நிலையில் சிறப்பாக இருக்க வேண்டியவன். அதற்குரிய திறமைகள் இவனிடத்தில் இருந்தது.  ஆனால் ஏனோ அவனுக்கு கிடைக்க வேண்டிய நிலை அவனுக்கு கிடைக்கவில்லை என நினைக்கும் போது எனக்குள் ஒருவித உணர்வு ஏற்படுவதுண்டு. அதனால் பொறியியல்பீடத்துக்குத் தெரிவானவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியானவர்கள் என்பதில்லை என்பதே என்னுடைய கருத்து. தெரிவு செய்யப்படாத, ஆனால் அதற்குரிய தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலரின் வாழ்க்கை தெரிவு செய்யப்படாததனாலும் எம்முடைய சமுதாயக் கட்டமைப்பிலுள்ள நம்பிக்கையின் அழுத்தம் காரணமாகவும் குடும்ப நெருக்குதலின் காரணமாகவும் விரக்தியில் திசைமாறிப்போனதும் இருக்கின்றது.

நான் இப்போதும் நம்பும் விடயம் என்னவென்றால் ஒரேயொரு பரீட்சையின் மூலம் ஒருத்தனின் திறமைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பரீட்சைகளின் போது அவன் பதட்டமடைந்திருக்கலாம். இல்லை அவனுக்கு எதிர்பாராத காய்ச்சலோ தலையிடியோ ஏற்பட்டிருக்கலாம். அதனாலேற்பட்ட அசெளகரியம் காரணமாக தன்னுடைய முழுத் திறமைகளையும் வெளிக்கொணருமளவுக்கு சிறப்பாக பரீட்சை எழுத முடியாத சூழ்நிலையேற்பட்டிருக்கலாம். அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.  அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.  இதனாலேயே தனிய ஒரு பரீட்சையை வைத்துக் கொண்டு ஒருத்தனின் திறமைகளை முடிவு செய்ய முடியாதென்கிறேன்.

அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது. அதைவிட பெரியவர்களின் ஆசீர்வாதமும் நல்வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கிகளாக இருக்கின்றன என இன்னமும் நம்புகிறேன்.

18 comments :

  1. //பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு.//

    எனக்கும் இதே உணர்வு பல சந்தர்ப்பங்களில் ஏற்றட்டிருக்கிறது.

    நல்ல அலசல், அநேக இடங்களில் எனது எண்ணங்களும் இவ்வாறே இருக்கின்றன.

    ReplyDelete
  2. ///அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்///

    உண்மை.

    ///அதெல்லாத்தையும் விட பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுப்பதென்பது ஒருத்தனின் திறமையில் மட்டும் இருப்பதில்லை என்றே நம்புகிறேன். அதற்கு இன்னும் ஒன்றும் இருக்க வேண்டும். அந்த இன்னும் ஒன்றை அதிர்ஷ்டம் எனச் சொல்லலாம். என்னுடைய விடயத்தில் அந்த இன்னுமொன்று எனக்கு நிறையவே இருக்கிறது.///

    வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னுடைய ஆசிரியர் ஒருவர் என்னை வாழ்த்தும்போது (கல்லூரியில்) You will make your own luck என்றொரு சொற்றொடரைப் பாவித்தார். அதாவது உன்னுடைய அதிர்ஷ்டத்தை நீயே தேடிக்கொள்வாய் என்று. அதாவது, உன்னுடைய உழைப்புக்குரிய பலன் உனக்குக் கிடைக்கும் என்பதே அதன் மறைமுகப் பொருள். உங்களது வெற்றிக்குப் பின்னால் 100 உழைப்பு இருந்தது என்பது என் கருத்து.உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறையவே இருந்தது என்பது.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    ReplyDelete
  3. that's 100% true...
    i agree with u thanancy anna.

    ReplyDelete
  4. //அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.
    அதுபோக பரீட்சையென்பது சப்பித் துப்புதல் அல்லது வாந்தியெடுத்தல் எனப்படுவதோடு கல்விமுறையை புத்தகப் பூச்சி முறை எனவும் சொல்லமுடியும்.
    //

    என்ன சொல்கின்றீர்கள்.. யாராவது கணிதத்தை பாடமாக்கி நீங்கள் சொல்வது போல் வாந்தியெடுக்க முடியுமா.. சும்மா நீங்கள் தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக இப்படியாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.. கணிதம் என்பது ஒரு பெரும் கலை.. சும்மா நீங்கள் சொல்வது போல யாரும் சப்பிப் பின் துப்புவதற்கு அது ஒன்றும் வெற்றிலையல்ல.. நீங்கள் கணிதத்தோடு சம்பந்தப்படாமல் இருந்திருந்தால் நான் இங்கு வந்து பின்னூட்டம் இட்டிருக்கமாட்டேன்... ஆனால் நீங்களே பரீட்சைகளை (கணிதப் பரீட்சைகளை )வாந்தியெடுத்தலோடு ஒப்பிட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

    அதைவிட குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.
    (Shame on you) ஒரு நாட்டில் நடைபெறுகின்ற அதுவும் நாடுதழுவிய ஈடுபாட்டை ஏற்படுத்துகின்ற பரீட்சை ஒன்றை நீங்கள் இப்படியாக ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள்... என ஒரு சிறுபிள்ளைக்தனமாக வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டு கதைப்பது முற்றாகப் பிடிக்கவில்லை.. ஆசிரியர் படிப்பித்த என்ற பதம் எல்லோருக்கும் பொதுவானது.

    அவர் படிப்பித்ததை ஒருவனால் கிரகிக்க முடிவதும் மற்றொருவரால் கிரகிக்க முடியாது விடுவதும் இயல்வே.. அதுதான் கற்பித்தல் தேர்ச்சி என்றும் கற்றித்தல் ஆழுமை என்றும் சொல்லப்படும்... எல்லோருக்கும் எல்லாம் விளங்காது... அதுதான் இயல்பும் அதுதான் யதார்த்தமும்.. எல்லாத் திறமைகளையும் ஒருவனுக்குள்ளேயே இறைவன் அடக்கியிருப்பானாயின் இயற்கையின் சமநிலைக்குழப்பம் நிட்சயம்.. சற்று சிந்தித்து பார்த்தால் இது உங்களுக்கு என்ன எல்லோருக்கும் புரியும். சிலரிம் சில திறமைகள் இருக்கும் பலரிம் அது இருக்காது.. ஒருவனது பிறப்பு (Genetics and Innate Knowledge )மற்றும் அவன் வளர்கின்ற சூழல் காரணிகளால் அவனது திறமை தீர்மானிக்கப்படுகின்றது அத்துடன் வளர்க்கப்படுகன்றது. ஒருவர் மிகவேகமாகக் கணித்லைச் செய்ய முடியும்.. ஏன் அதே போலக் கணித்தலை மிகவேகமாகச் செய்ய முடியவில்லை என்னால் எனவும் நாம் யோசிக்கலாம்.. நீங்கள் கூறியது போல் நாம் பொறாமையும் கொள்ளலாம்.. ஆனால் ஒரு பரீட்சையை எடுத்துக் கொண்டால் மிகவேகமாக யார் கணித்தலை மேற்கொள்கின்றான் என்று பார்க்கப்படுவதில்லை.. அதைவிடிவும் மேலான பலவிடையங்களைச் சோதிப்பதுதான் பரீட்சை. அதுவும் ஒரு உயர்தரப் பரீட்சையை எடுத்துக்கொண்டால் அதிலே மாணவனுடைய நேர பயன்படுத்துகை மற்றும் அதன் எவ்வாறு அதனை ஒழுங்கமைக்கின்றான் என்பதும் பாடத்தில் மேல் உள்ள தெளிவு நேர்த்தி என்பனபோற்ற பலவிடையங்கள் சோதிக்கப் படுகின்றன.
    கிருத்திகன் சொன்னது போல் You will make your own luck.... நமது உழைப்பின் பயனே நமது விளைச்சலும்...

    இதைவிடவும் இன்னும் ஒன்று அதிஷ்டம்.. நிட்சயமாகத் தேவை.. அதுதான் மாணவனது விதியும், விதி என்னும் பெயரில் வரும் அதிஷ்டமும்... திறமையும் கொஞ்சம் அதிஷ்டமும் தேவை எதிலும் பிரகாசிப்பதற்கு..

    அதைவிடுத்து சும்மா தன்னடக்கதைக் காட்டுவதற்காக இதுபோன்று எழுதாதீர்கள்..

    ReplyDelete
  5. நிமல், கிருத்திகன், சஞ்சீவன் மற்றும் சுபானு ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. கீத்,
    வெற்றிக்கு உழைப்பு மிக மிக அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உழைப்பு மட்டும்தான் என்பதை ஏற்கமுடியவில்லை. நான் என்னைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்தாத சில பரீட்சைகளில் எதிர்பார்க்காத சிறந்த பெறுபேறு பெற்றது எவ்வாறு?
    அதைவிட கல்லூரி காலங்களில் கற்பித்த ஆசிரியர்களுக்கே கற்பிக்கக்கூடிய திறமையுள்ள பலர் எம்முடன் படித்தார்களே (கேள்வியை எழுதி முடிக்க முன்னரே விடையை சொன்னதால் செல்வமலர் ஆசிரியை வெளியில் நிப்பாட்டிய சிலரும் இதற்குள் அடக்கம்...) அனைவராலும் முதற்தடவையே சிறப்பாக சித்தியெய்த முடியவில்லையே, ஏன்? அவர்களிடம் உழைப்பும் திறமையும் இருக்கவில்லையா? அப்படியானால் அவர்களிடம் இல்லாமல் போன விடயம் என்ன?

    ReplyDelete
  7. சுபானு,
    நான் சொல்ல வந்த விடயம் கணிதத்துறைக்கு மட்டுமானதல்ல... கணிதத்தை குறை சொல்லவில்லை. பரீட்சை முறமையைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய விளக்கங்களையும் தருகிறேன்.
    5*8 = 40 என்று மூன்றாம் வகுப்பில் வாயால் பாடமாக்கிய (வாய்ப்பாடு)- மனப்பாடம் பண்ணிய விடயத்தைத்தான் இன்றும் எழுதுகிறேன். (இதைத்தான் சப்பித் துப்புதல் என்கிறேன்). இதை நீர் கண்டுபிடித்து எழுதுகிறீரோ?
    3+4*5 = ? என்ற கேள்விக்கு நான் எழுதும் பதில் 35 (3+4=7, 7*5=35) ஆனால் இன்னுமொருவனோ 23 (முதலில் 4*5=20, 20+3=23) என சரியாக எழுதிச் சிறந்த புள்ளியெடுக்கிறான். அவனுக்கு கற்பித்த ஆசிரியர் இந்தக் கேள்வியை அணுகும் முறைக்குரிய விதிமுறைகளைச் சொல்லிக்கொடுத்திருந்தார். அதனால் அவன் சரியெடுத்திருக்கிறான். எனக்கு கற்பித்த ஆசிரியர் விதிமுறையைச் சொல்லித்தரவில்லை. இந்தக் கணக்கை முதன் முதல் நான் சந்தித்த போது பிழையான விடையை எழுதினேன். எனெனில் எனக்கு இப்பிடி ஒரு விதிமுறையிருப்பதே தெரியாது. பிழையென்றதும் ஏன் பிழையென்று ஆராய ஆரம்பித்த பின்னரே இப்படியொரு விதிமுறை இருப்பதை அறிந்து கொண்டேன். அதாவது ஒரு கணக்கை அணுகும் முறையை ஆசிரியர்களே கற்பிப்பார்கள். அதையொத்த அணுகுமுறையால் தீர்க்கப்படக் கூடிய கணக்குகளை விரைவாகவும் சரியாகவும் தீர்த்தல் என்பது அவரவர் திறமையைப் பொறுத்தது. இல்லை நான் மேற்சொன்ன கணக்கைத் தீர்க்கும் முறையை ஆசிரியர் கற்பிக்காமலே ஊகித்தறிந்தோ கண்டுபிடித்தோ சரியாகத் தீர்க்கும் திறமை உம்மிடம் இருந்தால் உமக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
    (இதைத்தான் ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற என்ற சொற்பிரயோகம் மூலம் விளக்க முயன்றேன்).

    அதைவிட இந்தக் கணக்கைத் தீர்க்கும் விதிமுறையை அறிந்திருந்தும் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை உணராமல் பிழை விடுபவர்களும், இந்தக் கணக்கைத் தீர்க்க ஒரு விதி முறையிருக்கிறது ஆனால் விதிமுறையைப் பரீட்சை மண்டபத்தில் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லையாதாலால் (சப்பித்துப்ப முடியவில்லை) பிழை விடுபவர்களும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //5*8 = 40 என்று மூன்றாம் வகுப்பில் வாயால் பாடமாக்கிய (வாய்ப்பாடு)- மனப்பாடம் பண்ணிய விடயத்தைத்தான் இன்றும் எழுதுகிறேன். (இதைத்தான் சப்பித் துப்புதல் என்கிறேன்). இதை நீர் கண்டுபிடித்து எழுதுகிறீரோ?//

    ம்... யார்சொன்னது 5*8 = 40 என உங்களை வாயால் பாடமாக்கித் துப்பச் ( இந்தப் பதம் பயன்படுத்த விருப்பமில்லை.. ஆனாலும் நீங்கள் சப்பித் துப்புதல் எனப் பயன்படுத்தியதால் மீளவும் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது.) சொன்னது... மீளவும் நீங்கள் பிழையான எண்ணக்கருவில் கணித்ததை விளங்கிக்கொண்டு இருப்பதாகத்தான் புரிகின்றது.. மூன்றாம் ஆண்டில் 5*8 = 40 எனப் படிப்பிக்க முன்னர் ஆசிரியர் சின்னச் சின்னப் பொருட்களைக் கூட்டமாக அடுக்கி வைத்து அவற்றின் மூலம் பெருக்கம் என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்தியிருப்பார் என நினைக்கின்றேன். அதாவது 5 அலகுகொண்ட பொருட்களின் 8க் கூட்டங்களை ஒன்றாகச் சேர்ப்பதன் அர்த்தம் தான் இந்த 5*8 எனவிளங்கிய பின்னர்தான் உங்களுக்கு அவர் 5*8=40 என்ற பெருக்கத்னை அறிமுகப்படுத்தியருப்பார். அதாவது நான் சொல்வதென்னவென்றால் காரணத்தோடு தான் எதுவும் கணிதத்தில் கற்பிக்ப்படுகின்றது. மந்திரத்தில் மாங்காய் பறிக்கும் விளக்கமில்லாக் கற்பித்தல் செயன்முறை கணித்தில் கிடையாது.

    விளக்கமும் காரணம் என்ன என்பதைக் கூறிய பின்னர்தான் கணிதம் கற்பிக்கப்டுகின்றது. கற்பித்தல் செயற்பாட்டை இலகுவாக்குவதற்கு உங்களுக்கு அவர் மனப்பாடம் செய்யுங்கள் எனக் கூறியிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக கணிதம் பாடமாக்கித் துப்புத்தல் என்ற உங்களின் வளமற்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதற்றாக அவர் பாடமாக்கிகொள்ளுங்கள் என்று கூறினார் என்ற காரணத்தை அறியாமல் நீங்கள் கணிதம் பாடாக்கித்தான் செய்வேன் என்றான் ... நான் எதுவும் சொல்வதிற்கில்லை..



    //, இந்தக் கணக்கைத் தீர்க்க ஒரு விதி முறையிருக்கிறது ஆனால் விதிமுறையைப் பரீட்சை மண்டபத்தில் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லையாதாலால் //
    பாடமாக்கி துப்பினால் இதுதான் நிலை.. காரணம் அறிந்து கற்றிருந்தால் மறப்பதற்கு கணிதம் ஒன்றும் நாயன்மார் எழுதிய பதிகங்கள் இல்லை.. அது கலை.. இரசித்து அனுபவித்து படித்திருக்க வேண்டும்.. நீங்கள் இந்தப் பதிவை சற்று ஒவ்வோர் வசனமாக மீளவாசியுங்கள் புரியும்.. உங்களைப் பொறுத்தவரை கணிதம் என்பது பாடமாக்கித் துப்புவதாகவே தோன்றுகின்றது..


    மற்றும் நான் ஆசிரியர் எல்லோருக்கும் பொதுவானவர் - படிப்பிக்கின்ற ஒவ்வொருவருக்கும் சமமாக்தான் படிப்பிக்கின்றார்.. அதில் கிரகித்தல் என்பது ஒவ்வொருவர் திறமை.. அதைத்தான் நான் வலியுறுத்தியிருந்தேன்.. எனது முன்னய பின்னூட்டக் கருத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள் என நினைக்கின்றேன்..


    //3+4*5 = ? என்ற கேள்விக்கு நான் எழுதும் பதில் 35 (3+4=7, 7*5=35) ஆனால் இன்னுமொருவனோ 23 (முதலில் 4*5=20, 20+3=23) என சரியாக எழுதிச் சிறந்த புள்ளியெடுக்கிறான். அவனுக்கு கற்பித்த ஆசிரியர் இந்தக் கேள்வியை அணுகும் முறைக்குரிய விதிமுறைகளைச் சொல்லிக்கொடுத்திருந்தார்.//

    //எனக்கு கற்பித்த ஆசிரியர் விதிமுறையைச் சொல்லித்தரவில்லை. இந்தக் கணக்கை முதன் முதல் நான் சந்தித்த போது பிழையான விடையை எழுதினேன். எனெனில் எனக்கு இப்பிடி ஒரு விதிமுறையிருப்பதே தெரியாது. பிழையென்றதும் ஏன் பிழையென்று ஆராய ஆரம்பித்த பின்னரே இப்படியொரு விதிமுறை இருப்பதை அறிந்து கொண்டேன்.//

    உங்களிடமே பதிலும் இருக்கின்றது.. ஆராய்ந்து படிப்பதுதான் கணிதம்.. அதனைக் கிரகிக்கும் தன்மை பெற்றவர்கள்தான் பிரகாசிக்க முடியும்.. என்பது என்கருத்து.. அது எல்லோராலும் இயலாது.. சும்மா ஒருவன் நல்லா வேகமாக சுருக்கங்களைக் கணிக்கின்றான் என்பதற்காக அவனை நீங்கள் ஒரேயாடியாக நீங்கள் திறமையற்றவர் என்றும் அவர் தான் திறமைசாலி என்றும் உங்களை நீங்களே தாழ்த்துவதன் மூலமாக ஒருவிதமான தன்னடக்க உணர்வலைகளை எழுப்ப முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது..


    //பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. //
    இதற்கு என்ன அர்த்தம்.. உங்கள் திறமை மீதே நம்பிக்கையற்றவரா நீங்கள் அல்லது நான் சொன்னது போன்று தன்னடக்க பச்சாதாப உளச்சார் அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றீர்களா..? இரண்டுமே உங்களைப் போன்ற ஒருவருக்கு இருக்கவேண்டிய ஒரு குணாதியம் இல்லை..

    ReplyDelete
  10. // குறித்த ஒரு ஆசிரியர் கற்பித்ததைப் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதனால் ஒரு சிலருக்கு சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.

    பால்குடியின் கருத்துடன் நான் 100% உடன்படுகிறேன் உதாரணத்திற்காக 1. ஏன் வன்னியிலிருந்து மெறிட்டில குறைஞ்சபேர்தான் வருகினம். ஏன் அவங்களுக்கு திறமையில்லையா? ஏன் ஆசிரியர்கள் அங்கு இல்லையா? அங்கேயும் ஏதொ படிப்பிக்கிறார்கள்தானே? காரணம் என்னவெண்டால் அங்க இருக்கிற ஆசிரியர்கள் எக்சாம் பொயின்ட் ஒவ்வியுவில் பெரும்பாலும் படிப்பிப்பதில்லை. அதோட அங்கே போதிய திறமையான (யாழில் உள்ளது போன்ற) ஆசிரியர்கள் இல்லை. சுபானு சொன்னது போல இருந்திருந்தால் அவங்களும் கூட மாக்ஸ்தானே எடுக்கணும். ஆனா அது நடப்பதில்லையே ஏன்?

    ReplyDelete
  11. கார்த்தி அதற்குக் காரணம் ஆசிரியர்கள் exam point of view இல் கற்பிக்காமை இல்லை.. கற்றல் கற்பித்தலுக்குரிய ஏது காரணிகளும் கசூழலும் ஒழுங்காகவும் சீராகவும் கிடைக்காமை.. அதனால்தான் சீரான ஒரு பெறுபேற்றைப் பெறமுடியாது போயுள்ளது.. இதுதான் அடிப்படைக் காரணம்.. முதலில் கற்பித்தல் பெயற்பாடே சீராக இல்லாத சந்தர்பங்களில் Exam point of View எல்லாம் அடுத்தபட்சம் தான். அதை ஆசிரியர்களின் மேல் ஓரேயடியாக பழியினைத் தூக்கிப் போடுவது ஏற்புடையதாகத் த தெரியவில்லை...

    ReplyDelete
  12. கார்த்தியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சுபானு,
    கார்த்தி சொன்னது ஆசிரியரில் பழி போடுவதல்ல. பரீட்சைக்குத் தயார்ப் படுத்துவதற்கான கற்பித்தல் என்பது வேறு. அறிவுக்காகக் கற்பித்தல் என்பது வேறு.
    நீர் உ/த காலங்களில் பாடசாலைக்கு எத்தனை நாள் சென்றீர்? பள்ளிக்கூட இடைவேளையோடு வீட்டுக்குப் போய் தனியார் வகுப்புக்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் போனதை மறந்து விட்டீரோ? ஏன் அவ்வாறு செய்தீர்? பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள் என்றால் எதற்கு தனியார் வகுப்புக்களுக்குச் சென்றீர்? (உம்மைப்போல விரும்பிய திறமையான தனியார் வகுப்பு ஆசிரியர்களைத் தெரிவு செய்து படிக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும் என என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?) உ/த பரீட்சையின் பின்னர் அனைவருமே தான் விரும்பிய கற்கை நெறிக்குச் செல்லலாம் என்றிருந்தால் நீர் இந்தளவுக்கு ஓடியோடிப் படித்திருப்பீரோ? ஆக மொத்தத்தில் எங்களுடைய கல்வி பரீட்சையை மையமாகக் கொண்டதே தவிர அறிவையும் நுணுக்கங்களையும் முழுமையாகப் பெறுவதற்கானது அல்ல.
    கணிதத்தின் ஒவ்வொரு செய்கைகளையும் நீர் சொன்னது போல காரணத்தை விளங்கி படிக்க முடியும். ஆனால் அது பரீட்சைக்கு எந்தளவுக்கு உதவும் என்பதைத் தான் நான் குறிப்பிட்டிருந்தேன். 0+0=0, 0*1=0 இவற்றை நீர் சிறுவயது எத்தனை முறை முதல் பயன்படுத்தியிருப்பீர்? இது எவ்வாறு வருகின்றது என்ற முறைப்படியான விளக்கத்தை இருபது வயதைக் கடந்த பின்னர்தானே அறிந்திருப்பீர்? இவ்வளவு காலமும் இவற்றைத் தெளிவான விளக்கமின்றியே எழுதி வந்திருக்கிறீர்.
    இவற்றிற்கான தெளிவான விளக்கங்கள் பரீட்சைக்கு விடையெழுதுவதற்குப் பயன்படா என்பதே என்னுடைய நிலைப்பாடு.

    //பின்னாளில் அவர்களைச் சந்திக்கும்போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு. //
    100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இறுதி 1 மீற்றர் வரை என்னுடன் சரிக்குச் சமனாகவோ முன்னுக்குப் பின்னுக்கோ ஓடி வந்தவன் எதிர்பாரா விதமாக குழியொன்றில் காலை விட்டுத் தலை குப்புற விழுந்தால் தொலைந்தான் ‘எதிரி’ என்று பார்ப்பவனில்லை. நான் வெற்றி வாகை சூடினாலும் தடக்கியிருக்காவிட்டால் அவன் வென்றிருப்பான். ஏனெனில் அவன் விழுந்ததற்கு அவன் காரணமில்லை (அவனுக்கான ஓடுபாதையே) ஒரு வேளை அந்த ஓடுபாதையில் நான் ஓடியிருந்து நான் தடக்கி விழுந்திருந்தால் என்னுடைய மனம் என்ன வேதனைப் படும் என்பதை உணர்ந்ததுண்டா? அவனுடைய வெற்றியை அவனுடைய திறமை தீர்மானிக்காததால் நான் தட்டிப்பறித்த அல்லது அவனுக்கு எதுவுமே கிடைக்கவில்லையே என்ற உணர்வு. அது எனக்குத் தன்னம்பிக்கை இல்லை என்பதையோ திறமை இல்லை என்பதையோ சுட்டி நிற்காது.

    ReplyDelete
  13. //நீர் உ/த காலங்களில் பாடசாலைக்கு எத்தனை நாள் சென்றீர்? பள்ளிக்கூட இடைவேளையோடு வீட்டுக்குப் போய் தனியார் வகுப்புக்களுக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் போனதை மறந்து விட்டீரோ? ஏன் அவ்வாறு செய்தீர்?//

    வன்மையாக் கண்டிக்கின்றேன்.. பாடசாலை நேரத்தில் நான் தனியார் வகுப்புக்களுகளுக்குச் சென்றதே கிடையாது. மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் என்பதே நான் அறியா ஒன்று... அத்துடன் உயர்தரப் பரீட்சை எழுதுவத்கு முதல் மாசி 2004வரை நான் பாடசாலை சென்றேன்.. ஏன் எனில் மாணவர் முதல்வன் என்ற கடமை ஒன்று பூர்த்தி செய்யாமல் இருந்தது..

    என்னை தாக்கி நீ்ங்கள் பின்னுட்டமிடுவதை தயவுகூர்ந்து நிறுத்துங்கள்.. இதுவரைக்கும் பொதுப்படையாகத்தான் நாம் கதைத்துகொண்டிருக்கின்றோம்..

    ReplyDelete
  14. //ஆக மொத்தத்தில் எங்களுடைய கல்வி பரீட்சையை மையமாகக் கொண்டதே தவிர அறிவையும் நுணுக்கங்களையும் முழுமையாகப் பெறுவதற்கானது அல்ல.//

    அறிவையும் பயன்படுத்துகின்ற நுணுக்கங்களையும் சோதிப்பதுதான் பரீட்சை.. சும்மா பொழுது போக்கிற்காகப் பரிட்சை நடாத்தப்டுவதில்லை..

    //0+0=0, 0*1=0 ...

    அந்தவயத்திற்குத் தேவையான விளக்கமும் அறிவிற்கும் ஏற்றால்ப்போல்தான் கற்பிக்கப்டுகின்றன.. முதலில் அதை விளங்கிக் கொள்ளுங்கள்.. முதலாம் ஆண்டில் படிக்கும் பொது இல்லாத ஒன்று என்றுதான் பூச்சியத்திற்கு விளக்கம் கொடுக்கப்டுட்டது.. அந்த வயதுப்பிள்ளைக்கு அந்தஅளவு அறிவு மட்டம் போதும்.. அதற்கிணங்கவே பாடத்திட்டங்களும் பரீட்சைகளும் நடாத்தப்படுகின்றன..

    //100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இறுதி 1 மீற்றர் வரை என்னுடன் சரிக்குச் சமனாகவோ முன்னுக்குப் பின்னுக்கோ ஓடி வந்தவன் எதிர்பாரா விதமாக குழியொன்றில் காலை விட்டுத் தலை குப்புற......
    //

    அவன் அப்படி கால் தடக்கிவிழும்போது உண்மையான நீங்கள் சொல்வதுபோல் தொலைந்தான் எதிரி என நீங்கள் பார்ப்பவராயில்லாவிடத்து நீங்கள் அவனைக் கரங் கொடுத்து உதவியிருப்பீர்கள்.. அல்லாமல் நீங்கள் மிகுதித் தூரத்ததையும் மிக்க சிரத்தையாக அவனது அனுபவத்தையும் உங்களின் பாடமாக்கி பின் ஓடிமுடித்து விட்டு பின்னர் வந்து ஐயோ அவனைப் பார்க்கும் போது எனக்கு குற்ற உணர்வு ஏற்படுவதுண்டு என்று சொன்னால்.. வேறு எப்படிக் கருத முடியும்...???

    ReplyDelete
  15. தேவையில்லாமல் நமது பின்னூட்டங்கள் நீளுகின்றன.. உங்களிடம் இருந்து சிறந்த கருத்துப்பரிமாற்றத்தை எதிர்பார்த்துத்தான் இப்படியாக கருத்தை வளர்த்துக்கொண்டு போனேன்.. வேறு எதற்கும் இல்லை.. ஆனால் ஒன்று.. ஒவ்வொருவருக்கும் அவரவவரின் பார்வைகளின் வீச்சுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.. அதனை நான் இதற்கூடாகப் பார்கின்றேன்.. பொதுவாக எல்லோரும் இப்படித்தான் சிந்திக்கின்றார்கள் என்று என்னால் அதன் வளியே நடைபோட முடியவில்லை.. அதில் நான் தோல்வியும் அடைந்திருக்கின்றேன்... எனவே தேவையற்ற இந்த விவாத்தை நிறுத்துவோமே...

    ReplyDelete
  16. தனிநபர் மீதான விவாதங்களைத் தவிர்த்திருக்கலாம். இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

    ReplyDelete
  17. //அசாத்தியக் கெட்டிக்காரர்கள் பலர் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெறத் தவறியிருக்கிறார்கள். என்னே வேகமாக கணித்தல் செய்கிறான் என்று நான் பார்த்துப் பொறாமைப்பட்ட சிலர் கல்வியுலகில் அவர்களுக்குக் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. இன்னும் சிலர் வாய் மொழி மூலமாகக் கேட்டால் கேள்வியை முடிக்க முன்னரே அதற்கு சரியான பதிலைக் கூறுபவர்களாக இருப்பார்கள். ஆனாலும் பரீட்சையின்போது எதிர்பார்த்த பெறுபேற்றை அவர்கள் அடையவில்லை.
    Yah I know who those friends ... nice article...

    ReplyDelete
  18. தர்சனின் வருகைக்கும் கருத்துக்கு நன்றி. நீரும் நிறைய எழுதலாமே...

    ReplyDelete