மார்கழி மழை கால விடுமுறைக்கு எங்கட பிரதேசப் பொடியளின்ர பொழுது போக்கு பட்டமேத்துறதுதான். மழைக்காலம் எண்டபடியா விளையாடேலாது. அப்ப பள்ளிக்கூட விடுமுறை வேற. வட கீழ்ப் பருவக்காற்றும் அப்பத்தான் அளவா வீசத் தொடங்கியிருக்கும். பட்டம் விடுறதுக்கு பொருத்தமான காலம் அப்பத்தான். பொடியளுக்கு பட்டம் விடுறதுதான் தொழில். பட்டத்திலையும் வாலாக்கொடி ஏத்தாதாக்கள் ஒருத்தரும் இல்லை எண்டு சொல்லலாம். வாலாக் கொடியெண்டா டயமண்ட் வடிவில மூண்டே மூண்டு ஈக்கிலையும் ரிசுவையும் கொஞ்சம் நூலையும் பயன்படுத்திச் செய்யப்படும் பட்டம். இவ்வளவுதான் வாலாக்கொடி கட்டுறதுக்குத் தேவை. ஆனாலும் எனக்கு இண்டை வரைக்கும் கட்டத் தெரியாது. ஏனெண்டா ஈக்கிலை வளைச்சு செட்டையை சரியா சமச்சீரா ஒட்டுறதிலதான் திறமையே இருக்கு.
பெரிய பெரிய பட்டங்கள் கட்டி ஏத்த முன்னம் ஏழெட்டு வயசுகளில வாலாக்கொடியை கடையில வாங்கி ஏத்துறனான். வாலில்லாமல் ஏத்தலாம். ஆனா அது சரியான சிக்கலான விசயம். குத்தத் தொடங்கினா நிலத்தில முட்டுமட்டும் குத்தும். இல்லாட்டி அங்கனக்க பனை தென்னை வேம்பு ஆல அரச மா மரங்களில தொங்கிப் போடும். அதனால பெரும்பாலும் வால் கட்டித்தான் ஏத்துறனாங்கள். ஏத்த முன்னம் முச்சை போடுறதிலையும் கன வகையிருக்கு. உச்சி முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல நிக்கக் கூடிய மாரி போடுறது. கொஞ்சம் குறுக்கி விட்டா - இழுவை முச்சையெண்டா பட்டம் தலைக்கு மேல வராம குறிப்பிட்ட ஏற்றத்தில நிக்கும். இழுவை நல்லா இருக்கும். வண்டி வைக்காது (நூல் தொய்யலாக இருக்காது). இப்பிடி கன விசயம் வாலாக் கொடிக்கே இருக்குக் கண்டியளோ.
இன்னொண்டையும் சொல்லோணும், எத்தினை விதமான பட்டங்கள் ஏத்தினாலும் வானத்தில ராசா இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.
வாலாக்கொடி |
பட்டமேத்தேக்கையும் பல அனுபவங்கள். ஒரு தைப்பொங்கலண்டு ஆசையா வாலாக் கொடியும் நூலும் புதுசு வாங்கி ஏத்தினனான். பட்டம் ஒரே இழுவையில ஏறீட்டுது. வலு சந்தோசம். நூலை தொடர்ந்து இழக்கிக் கொண்டே இருந்தன். பட்டத்தின்ர இழுவைக்கு நூலும் போய்க் கொண்டே இருந்திச்சு. திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல. 'நூலைப் பிடி நூலைப் பிடி'யெண்டு கத்தினதுதான்; வாலாக்கொடி பாத்துக் கொண்டு நிக்கப் போச்சுது. அடியில நூலைக் கட்டியிருந்தா எங்கையாவது மரங்களில அடிக்கட்டை சிக்கி நிண்டு வாலாக் கொடியேறி நிண்டிருக்கும். இராக்கொடி பகல்கொடியா பட்டம் சளைக்காமல் நிண்டிருக்கும் மழை பெய்தோ அல்லது காத்து நிண்டோ பட்டம் படுக்காம இருக்கும் வரை...
இன்னொருமுறை ஏழெட்டு வயசு காலப் பகுதி. வீட்டுக்கு முன்னால் காணிக்குள்ளதான் வாலாக்கொடியேத்திக் கொண்டு நிண்டனான். பட்டமேறீட்டுது. அப்ப வலு சந்தோசம்தானே. கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது. அந்தக் காலத்தில வெடிச் சத்தம் கேட்டா எந்த இடத்தில நிண்டாலும் உடன குப்புறப்படு எண்டு சொல்லித் தந்தவங்கள். எனக்கு அந்தச் சின்ன வயசு காலப்பகுதியில அந்த இடத்தில குப்புறப்படுக்கிறதில உடன்பாடு இல்லை. எங்கையாவது ஓடி மறைஞ்சிருக்கோணுமெண்டதுதான் என்ர எண்ணம். வெட்டை வெளீல நிண்டா குண்டு பட்டுடும். எங்கையாவது ஓடி ஒழிச்சா ஒண்டும் நடக்காது எண்டது என்ர நினைப்பு பாருங்கோ. அந்தக் காலத்திலையே எனக்கு என்ன ஒரு ஞானம்!!!
ஆட்லறி குண்டுகளின்ர முதலாவது வெடிச்சத்தம் ஏவின இடத்திலையும் ரெண்டாவது வெடிச்சத்தம் வானத்திலையும் மூண்டாவது வெடிக்கிற இடத்திலையும் கேக்கும். எங்கட தலைக்கு மேல ரண்டாவது வெடி வெடிச்சா எங்களுக்குப் பாதிப்பில்லை எண்டத ஊகிக்கலாம் எண்டு பிறகுதானே தெரிஞ்சுது. ஆனாலும் எத்தினை குண்டுகள் அடிக்கிறாங்கள் எண்டு தெரியாதுதானே. அத விட ஒருக்கா அடிச்சா தொடந்து ரண்டு மூண்டு அடிப்பாங்கள் எண்டொரு நம்பிக்கை. அண்டைக்கும் ஓடிப் பொய் ஒரு பத்தேக்குள்ள ஒழிச்சிருந்தனான். ஒரு அரை மணித்தியாலம் கழிஞ்சு சத்தம் ஒண்டும் இல்லையெண்டு வெளீல வந்தா என்ர கையில வாலாக்கொடியின்ர நூலிருக்கு. அதைக் கைவிடாமத்தான் இவ்வளவு நேரமும் இருந்திருக்கிறன். மேல பட்டத்தை பாத்தா வாலாக் கொடி எதுவுமே நடக்காததைப் போல எந்த சலனமுமில்லாம சாடிக் கொண்டிருந்தது. அந்த ஆட்லறிக் குண்டுகள் கடற்கரையில விளையாடிக் கொண்டிருந்த, காலாற ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அப்பாவிகள் சிலரின் வாழ்க்கையை காவு கொண்டதோடு சிலரின் அவயவங்களை பறித்தெடுத்ததென்பது வாலாக்கொடியைப் போல அதை ஏவினவங்களுக்கும் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை...
முதன்முதல்ல அம்மா கட்டித்தந்த வாலாக்கொடியைத்தான் ஏத்தின்னான். பிறகு புறமோசன் கிடைச்சு ஏத்தாத பட்டம் இல்லை எண்டு சொல்லிக்கொள்ளலாம். இந்த ஞாபகங்களோட வாசிச்சுக்கொண்டு வந்தால் முடிவு :(
ReplyDeleteசுபாங்கனின் வருகைக்கும் கௌத்துக்கும் நன்றி. அப்ப அம்மா உம்மை விட நல்லாப் பட்டம் கட்டுவவோ...?
ReplyDeleteஅருமையான பதிவு. வாலாக்கொடியில ஆரம்பிச்சு படலம், பிராந்து, கொக்கு என்று பட்டமேத்திரதிண்ட அடுத்தடுத்த கட்டங்களுக்கு பதவியுயர்வு பெறும் நாட்களை மறக்க முடியாது.
ReplyDelete///இந்த வாலாக் கொடிதான். ஏனெண்டா வானத்தில ஏறி நிக்கேக்க வேற எந்தப் பட்டத்தின்ர நூலோட வாலாக் கொடியின்ர நூல் மாட்டுப்பட்டாலும் மற்றப் பட்டம்தான் அறுத்துக் கொண்டு போகும். மற்றாக்களின்ர பட்டத்தை அறுக்கப் பண்ணோணும் எண்டதுக்காகவே வாலாக்கொடியேத்தினதாகவும் ஞாபகம் இருக்கு.
ReplyDeleteபால்குடி அந்தக் காலத்திலை அந்தப் பட்டம் எல்லாம் ஏத்தவெளிக்கிட்டபடியால தான் இண்டைக்கு பெரிய பட்டம் எல்லாம் ஏற்ற உங்களாலை முடிஞ்சிருக்குது. ம்ம்ம் நலதொரு அனுபவப் பகிர்வு..வாழ்த்துக்கள்
///திடீரெண்டு பாத்தா கையில நூலைக் காணேல்ல. காலுக்கு கீழ நூல்க் கட்டை மட்டும்தான் கிடந்தது. புது நூல் கட்டையின்ர அடியில நூல் முடிஞ்சிருக்கிறேல்ல/// எனக்கும் இந்த அனுபவம் இருக்கு
ReplyDelete///கையில நூலைப் பிடிச்சுக் கொண்டு வலிச்சு, இழக்கி, இழுத்துக் கொண்டோடி குத்த வச்சுப் பாத்து சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தன். தலைக்குமேல படார் எண்டொரு பெரிய வெடிச் சத்தம் கேட்டுது.///அதுவும் குத்தி தான் போடுமாம்
நல்லா பட்டம் விட்டிருக்கிறியள் ...இப்ப பட்டத்தை பத்திரமாக பதுக்கி வைச்சிருக்கிறதா கேள்வி ....வாழ்த்துகள் .....அனுபவ பகிர்வுகள் தொடரட்டும்
விஜய், வடலியூரான் மற்றும் கருணையூரான் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
ReplyDelete