Wednesday, April 08, 2009

மெல்லத் தமிழ்...

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதியார் எழுதிச் சென்றார். அவரின் இந்த வரிகளைப் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. ஒவ்வொருத்தரின் பார்வையில் ஒவ்வொரு விதமாக இந்த வரிகள் தென்பட்டன. தமிழின் அழகும் இதுதானே... இணைப்பதன் மூலமோ பிரிப்பதன் மூலமோ வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கும் திறன் வாய்ந்தது எம் தமிழ்.

முதலாவதாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்து, மெது மெதுவாக தமிழ் மொழியானது அழிந்து போகும் என்பதாகும். இங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் ‘அப்படியானால் தமிழர்களின் நிலை என்ன?’ என்பதாகும். தமிழர்களும் அழிந்து போவார்கள்தானே அதிலென்ன சந்தேகம்? என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் தமிழர்களாலேயே தமிழ் மொழி அழிக்கப் படலாம் என்பதை பாரதியார் முன்கூட்டியே உணர்ந்திருப்பாரோ? அதாவது தமிழர்கள் தாங்களாகவே அந்நிய நாகரிக மோகத்திற்கு ஆட்பட்டு அந்நிய மொழியை பேசி, தமிழனாலேயே தமிழ் மொழி அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சி பாரதியார் மேற்சொன்னவாறு பாடினாரோ என்று கூடச் சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் இன்றைய சமகால நிலை அதனைத்தான் எடுத்துக் கூறுகின்றது.

அடுத்ததாக பாரதியாரின் கூற்றுக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கருத்து மெதுவாக தமிழ் இனி அச்சாகும் என்பதை சேர்த்து சொன்னால் இனிச்சாகும் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். அதாவது இனி வரும் காலங்களில் தமிழ் மொழி ஆக்கங்கள் அதிகமாக உருவாக்கபட்டும் பழந்தமிழ் ஆக்கங்கள் தொகுக்கப்பட்டும் அச்சுக் கூடங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என்பதையே பாரதியார் தனது காலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். இன்று தமிழ் மொழி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளதைப் போல என்கிறார்கள்.

அதே கூற்றுக்கு இன்னுமொரு கருத்தும் கூறப்படுகிறது. மெல்ல - வாயால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கத் தமிழ் மொழியானது மிகவும் இனிமையானதாக மாறும் என்பதாகும். வெல்லங்களை வாயினில் போட்டு அரைக்கும்போது மென்மேலும் இனிமையாவதைப் போல. பாரதியாரின் கூற்றுக்கு என்னைக் கவர்ந்த கருத்தும் இதுவே. இப்பிடித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் இன்றைய யதார்த்தத்தை நோக்கும்போது உண்மை அதுவில்லையெனத் தோன்றுகிறது. கசப்பானதுதான் ஆனாலும் அதுதான் உண்மை.

அதாவது முதலாவதாக விவரிக்கப்பட்ட கருத்தே இன்றைய நிலைக்குப் பொருத்தமானதாகும் என்பது எனது கருத்து. தமிழருக்கு என்றொரு நாடு இல்லை என்பதை விட தமிழர்களைக் காப்பதற்கு உலகின் எந்த ஒரு இனமுமே முன்வரவில்லை என்ற இன்றைய நிலையை சிந்திக்கும்போது தமிழினம் அழிக்கப்படுவது எதிர்பார்க்கக்கூடியதொன்றாகிறது. ஈழத்திலே தமிழினப் படுகொலைகள் நடந்தேறுகின்றதைப் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடங்கள் எல்லாவற்றிலும் தெளிவாக எடுத்து இயம்பியும் உடனடியாக உதவி செய்ய, படுகொலையைத் தடுத்து நிறுத்த எவருமே முன்வரவில்லை. புலத்திலுள்ளவர்கள் தெருத்தெருவாக ஒவ்வொரு இடமும், தாம் யாரைத் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ யாருக்காக தம் உடலை வருத்தி உழைப்பை வழங்குகிறார்களோ அவர்களிடம் உதவி கேட்கிறார்கள். உடனடியாக எவரும் எமது கவலையைப் போக்க முன்வரவில்லை. அழிந்து போன பின் அழுது கண்ணீர் விட்டு என்ன பயன்? அதற்காக நாம் சோர்ந்து விடாது ஒன்று சேர்ந்து வென்றெடுப்பதுதான் வழி என்பது வேறு விடயம்.

ஒரு பக்கம் தமிழர்களைக் காக்க மற்றவர்கள் முன்னிற்கவில்லை என்றால் மறுபக்கம் தமிழர்களாலேயே தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழிக்கு அழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழனுக்குத் தமிழனால்தான் அழிவென்பது எழுதி வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பாக இருப்பது எம்மினத்தின் இன்னுமொரு சாபக்கேடு. முன்னைய தமிழர் வரலாற்றை எடுத்து நோக்குவோமானால் கூட வீரம், செல்வம், காதல் என்றெல்லாம் பெருமையாகப் பேசுவோம். ஆனால் ஒற்றுமையாக சேர்ந்து சாதித்த விடயங்கள் என்பவை அரிதே. எல்லா வரலாற்றுக் கதைகளிலும் தமிழனுக்கு தமிழனே வில்லனாவான். இந்த மனப்போக்கை மாற்றவே முடியாதா? பொறாமையும், தான் மட்டுமே முன்னுக்கு வர வேண்டும், தானே தலைமை தாங்க வேண்டுமென்ற மனப்பாங்கும், தனக்கு மட்டுமே எல்லாம் உரித்துடையது என்ற எண்ணமும் இருக்கும் வரை இந்த மனப்போக்கு மாறாதது.

இன்றைய அந்நிய நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் தமிழ் மொழியை தமிழர்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்களுக்கிடையில் உரையாடுவதற்கே வெளிப் பகட்டுக்காக அந்நிய மொழிகளில் உரையாடுகிறார்கள். எங்களுக்கு அந்த மொழியும் தெரியும் என்று பந்தா வேறு. ஆங்கிலம் படிக்கத்தான் வேண்டும். ஆங்கிலேயனுடன் சவால் விடக்கூடிய நிலைக்கு கற்கத்தான் வேண்டும் நான் மறுக்கவில்லை. ஆங்கில மொழியில் ஆங்கிலேயனுடன் போட்டி போட்டு வெல்ல வேண்டும். அப்போதுதான் எங்களுடைய திறமைகள் வெளிக் கொணரப்படும். ஆனால் எம்மினத்துக்கிடையில் உரையாடுவதற்கு எதற்கு அந்நிய மொழி? இசைப்புயல் ரஹ்மான் உலக மேடையிலேயே தமிழில் பேசினார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் நமது வீட்டிலேயே தமிழில் கதைக்கிறோம் இல்லையே, பிறகு எப்படி தமிழ் மொழி அழியாது காக்கப்படும்? இன்று சின்னப் பிள்ளைகளுக்கு பெற்றோர் ‘இந்த மாமாவுக்கு “ருவிங்கிள் ருவிங்கிள்..” பாடிக் காட்டுங்கோ’ என்று சொல்கிறார்களே தவிர “நிலா நிலா ஓடி வா” பாடிக் காட்டுங்கோ என்று சொல்வதில்லை என்ற என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் தான் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறான சின்னச்சின்ன அன்றாட விடயங்களில் தமிழை மறந்து விட்டு மேடையில் அலங்காரத்துக்காக பேசினால் மட்டும் தமிழ் காக்கப்பட்டு விடாது. நாம் ஒவ்வொருவரும் தமிழில்தான் கதைப்போம் என்று நிச்சயமான முடிவெடுத்து செயற்படுத்துவோமானால் தமிழுக்கு தமிழர்களால் ஏற்படும் அழிவைத் தடுக்கலாம். இது பெரிய விடயமேயில்லை. ஆனால் ஏன் இதனை செயற்படுத்துகிறோம் இல்லை என்பது எனக்கு விளங்கவில்லை.

3 comments :

  1. //'மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று மகாகவி பாரதியார் எழுதிச் சென்றார்.

    இது தொடர்பான பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், பாரதியின் கவிதையில் குறிப்பிடப்பட்டிருப்பதை நோக்கின் அவர் சொல்லவந்தது இன்று திரிபடைந்து விட்டது போன்றுள்ளது. அவரின் அக்கவிதையை அப்படியே இங்கு தருகின்றேன்.


    கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
    காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
    என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
    யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

    தந்தை அருள் வலியாலும் - முன்பு
    சான்ற புலவர் தவ வலியாலும்
    இந்தக் கணமட்டும் காலன் - என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
    ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
    கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

    புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
    மெத்த வளருது மேற்கே - அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

    சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்


    என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
    இந்த வசை எனக்கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

    தந்தை அருள் வலியாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவ வலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

    ReplyDelete
  2. இதுபற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதெப்படி கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறோம்.

    http://kiruthikan.blogspot.com/2009/06/blog-post_5671.html

    ReplyDelete
  3. கீத், வேறு வழியின்றி, இருக்கும் இடங்களால் பிரிந்திருக்கலாம். ஆனால் சிந்தனைகளால் ஒன்று பட்டிருக்கிறோம். அதனை எவனாலும் எம்மிடமிருந்து பிரிக்க முடியாது.
    அன்புடன்,
    தனஞ்சி.

    ReplyDelete