Sunday, September 13, 2009

நீந்தப் பழக்கினாங்கள்

எங்களூரின்ர நடுவில இருக்கிற பிள்ளையார் கோவிலோடு இணைந்ததாக பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கேணி ஒண்டு இருக்குது. கோடை காலங்களில் தண்ணி வத்திப் போனாலும் மாரி காலத்தில தண்ணி நிறைஞ்சிடும். இதுதான் எங்கட பொடியளின்ர நீச்சல் குளம். மாரி காலத்தில மழை பெய்து நிலம் ஈரமாக கிடக்கிறதால மைதானங்களில விளையாட முடியாது. அந்தக் காலங்களில பள்ளிக்கூடமும் விடுமுறை விட்டுடுவாங்கள். வேற பொழுது போக்கும் இல்லை. அப்ப நீச்சலடிக்கிறதுதான் ஒரே பொழுது போக்கு. செயற்கை நீச்சல்தடாகங்கள் மாதிரி இல்லை. கேணிக்குள்ள தண்ணி மட்டம் ஒரே அளவாகத்தானிருக்கும். ஆளை விட ரெண்டு மூணு மடங்காகவும் இருக்கும். அதனால நீச்சலடிக்கப் பழகிறது ரொம்பக் கஸ்டம். இருந்தாலும் எங்கட ஊர்ப் பொடியளில பெரும்பாலானாக்களுக்கு நீந்தத் தெரியும். ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு வயசு வர வகுப்புப் பொடியளா சேர்ந்து போய் பழகுவோம். நீச்சலடிக்கத் தெரிந்த அண்ணாமார் பழக்கியும் விடுவினம்.

கேணி பிரதான வீதிக்குப் பக்கத்தில இருக்கிறதால அதால போய் வாற பொடியங்கள் எல்லாரும் பெரும்பாலும் அவிடத்தில நிண்டு ஒருக்கால் கேணிக்குள்ள என்ன நடக்குது எண்டு பாத்திட்டுத்தான் போவம். நல்லா நீந்தத் தெரிஞ்ச அண்ணாமார் பெல்டி அடிச்சு சாகசமெல்லாம் காட்டுவினம். பக்கத்தில இருக்கிற மகிழ மரத்தால ஏறிப் போய் ஓட்டுக்கு மேல இருந்து பெல்டி அடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள குதிக்கிறதைப் பார்த்தா எங்களைச் சுண்டியிழுக்கும். சின்ன அடையாளம் கட்டின கல்லொண்டை கேணக்குள்ள எறிஞ்சு போட்டு போட்டிக்கு சுழியோடிப்போய் எடுப்பினம். கேணிக்குள்ள கீஸ் பெட்டி (அடிச்சுப் பிடிச்சு) விளையாடுவினம். பாக்க ஆசையா இருக்கும். முழு நீச்சல் திறமையையும் காட்டி நீந்துவினம். அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்கு, பெரிதான வீதியால போய் வாற பொம்பிளைப் பிள்ளைகளின்ர கடைக்கண் பார்வையை திருப்பிறது. உந்த விஷயத்தில சிலபேர் சாகசம் காட்டியே ‘அருள்’ பெற்றிருக்கினம்.




அஞ்சாம் ஆண்டு புலமைப் பரிசில் சோதினை முடிஞ்ச கொஞ்ச நாளில என்ர நண்பன் ஒருத்தனுக்கு அவன்ர அண்ணன்மார்களில் இருவர் பழக்கிய நீச்சல்தான் இண்டைக்கும் என்ர கண்ணுக்குள்ள நிக்குது. தனியார் கலாசாலையில் படிச்சிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தன். வழக்கம்போல கேணியடிக்குக் கிட்ட வந்து பிரதான பாதையிலேந்து விலத்தி துவிச்சக்கர வண்டியை ஓட்டிக் கொண்டுவந்து அளவாக் கட்டப்பட்ட கேணி தூணில காலை வச்சுக் கொண்டு வேலியாகப் போடப்பட்ட இரும்பு வேல் கம்பிகளில கையைப் பிடிச்சுக் கொண்டு கேணிக்குள்ள எட்டிப் பாத்தன். ஏங்கிப் போனன்.

கேணியின்ர ரண்டு கரையிலயும் அவன்ர ரண்டு அண்ணன்மார்களும் நிக்கீனம். கேணியின்ர நடுவில இடுப்பில ஒல்லியைக் (பயன்தரத் தவறிய தேங்காய்)  கட்டிக் கொண்டு அவன் ‘காப்பாத்துங்கோ, காப்பாத்துங்கோ நான் சாகப் போறன், காப்பாத்துங்கோ’ எண்டு கத்திக் கொண்டிருந்தான். கைகால்களை அடிச்சு நீந்தின படி கத்திக் கொண்டிருந்தான். வேறை ஆக்களும் கேணுக்குள்ள நீந்திக் கொண்டிருந்தவை. ஆனா ஒருத்தரும் இவனைக் காப்பாத்த வரேல்ல. தட்டுத் தடுமாறி நீந்தி ஒரு கரைக்கு இவன் போனால் அந்தக் கரையில நிக்கிற அண்ணா குழறக் குழற இவனைப் பிடிச்சு தண்ணிக்குள்ள தள்ளி விடுவார். மீண்டும் கத்திக் கத்தியே மற்றக் கரையை நோக்கி நீந்துவான். சத்தத்தைக் கேட்ட பாதையால போன அவன்ர அம்மப்பா எட்டிப்பாத்தார். அவனோ ‘அம்மப்பா காப்பாத்துங்கோ, உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறன்.’ எண்டு கத்திக் கொண்டு கைகால்களால் நீச்சலடிச்சுக் கொண்டிருந்தான். ஆனா அண்ணன்மார்களோ விடுவதா இல்லை. அவன் கத்துறதப் பாத்தா உண்மையிலேயே ஆள் முடிஞ்சிடுமோ எண்டு எனக்குள்ள ஒரு பயம். அண்ணன்மாரும் மனிசரோ எண்டு திட்டிக் கொண்டன்.

ஆனா அவர்களுக்கிருந்த துணிவு என்னண்டா அவன்ர இடுப்பில ஒல்லி கட்டியிருக்கிறதால லேசில தாழ மாட்டான். அடுத்தது அவர்கள் ரண்டு பேரும் நீச்சல்ல புலி. அதை விட பக்கத்தில நீந்திக் கொண்டிருக்கிற மற்றப் பொடியளும் இவன் தாழுறான் எண்டா காப்பாத்தத் தயார் நிலையிலேயே எப்பவும் இருப்பாங்கள். அதனால இவன் தாழுறதைப் பத்தி யோசிக்கவே தேவையில்லை. ஆனா இவன் நல்லாத் தண்ணி குடிச்சிட்டான். நீந்தப் பழகிற எல்லாருக்குமே வாற அடிப்படைப் பிரச்சினையே இதுதான். இருந்தாலும் அந்த ஒரே நாள் கத்தலோடையே அவன் நீந்தப் பழகீட்டான். எங்கட வகுப்பிலேயே முதன் முதல் நீந்தப் பழகி எங்களுக்கு சாகசம் காட்டினவன் அவனேதான்.

அண்மையில கொழும்பில ஒரு நீச்சல் குளத்தில எங்கட ஊருக்குப் பக்கத்தூரில இருக்கிற என்னை விட வயசு கூடின அண்ணாவைச் சந்திக்கேக்க சொன்னார், ‘என்னதான் இருந்தாலும் உங்கட ஊர்க் கேணிக்குள்ள குளிக்கிற மாரி வருமேடா.’ அந்தளவுக்கு எங்கட ஊர்க் கேணி சுத்து வட்டாரத்தில பிரபலமானது. பலருக்கு நீச்சல் பழக்கினதும் எங்கட ஊர்க் கேணிதான்.



11 comments :

  1. எனக்கு நீச்சல் பழக்கியதும் உங்க ஊர்க்கேணிதான். மருதமரம் பக்கத்தில் என்னுடைய நண்பன் லிங்கத்தின் கடை, அங்கே ஐஸ் யூஸ் எல்லாம் எங்கடை வாழ்க்கையில் ஒரு காலத்தில் இருந்தவை. இரண்டு வருடங்கள் ஹாட்லி அந்தக் கேணிக்குப் பக்கதில் நடந்தபடியால் பாடசாலை முடிய எங்கள் கூட்டம் அங்கேதான் தங்குவது.பெரும்பாலும் மூன்றாம் தவணை தான் கேணியில் அட்டகாசம். நான் நீச்சலடித்த கதை எழுதியிருக்கின்றேன்.

    http://enularalkal.blogspot.com/2006/10/blog-post.html

    ReplyDelete
  2. வந்தியத்தேவர் ஊரில படையெடுத்துப் போகாத இடமே இல்லைப் போல இருக்கு :)

    பால்குடி...நீங்கள் சொல்ல அந்த எங்கட வகுப்புச் சாகசக்காரன் ஆர்?? பனியோ??

    ReplyDelete
  3. பால்குடிக்கு நீந்த தெரியுமா?? தெரிஞ்சா எத்தினை வயசில பழகினிங்க?

    ReplyDelete
  4. வந்தியண்ணா, கீத், கார்த்தி ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. வந்தியண்ணா, நீங்கள் ஹாட்லி எங்களூர்ப் பாடசாலையில் இயங்கிய காலத்தில் படித்தவரோ? அப்படியெண்டா எங்கட ஊர் அத்துப்படியாயிருக்குமே...
    லிங்கம் (மார்க்கண்டு) கடை இப்போதும் இருக்கு,ஆனால் உரிமையாளர் மாறி விட்டார்.

    கீத், நீர் சொன்ன அதே ஆள்தான் (எப்பிடித்தான் அவனை அப்பிடியே அச்சொட்டாக் கண்டு பிடிக்கிறாங்களோ?)

    கார்த்தி, பத்து வயசளவில் குளம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று அப்பா நீந்தப் பழக்கினார். ஆனால் அப்போது நான் பழகவில்லை. சா/த எடுத்த பின்னரே எங்கட ஊர்க் கேணியில இறங்கி கொஞ்சம் நீந்தப் பழகினேன்.

    ReplyDelete
  6. //Kiruthikan Kumarasamy said...
    வந்தியத்தேவர் ஊரில படையெடுத்துப் போகாத இடமே இல்லைப் போல இருக்கு :)//

    தம்பி நாங்கள் வடமராட்சியில் படை எடுக்காத இடங்கள் இல்லை. வல்வெட்டித்துறை ஊறணிக் கடலில் இருந்து தும்பளை முனைக் கடல் வரை ஆதிக்கம் செலுத்தினோம். வியாபாரிமூலை, அத்துளு, வல்லிபுரக்கோவில், என சகல இடங்களில் கேணிகளும் எங்களுக்கு அத்துப்படி. ஊரில் உள்ள சகல மைதானங்களிலும் கிரிக்கெட், புட்போல் விளையாடியிருக்கின்றோம், பார்த்திருக்கின்றோம்.

    ReplyDelete
  7. அருமையான நினைவுப்ப பதிவு பால்குடி..

    ReplyDelete
  8. புல்லட் அண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வந்தியண்ணே, வடமராட்சியின்ர குளிக்கிற இடம் முழுக்க அத்துப்படி எண்டு சொல்லுங்கோ...

    ReplyDelete
  9. அருமையான அனுபவப் பதிவு. ரசித்துப் படித்தேன்.

    என்னைத் தள்ளிவிடுவதற்கு அண்ணாமார் இல்லாததாலோ என்னவோ இற்றை வரை நீச்சல் தெரியாது.
    இனிப் பழகத் தோதுப்படாது

    ReplyDelete
  10. உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. முருகானந்தன் அவர்களினதும் சதீஷினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    //இனிப் பழகத் தோதுப்படாது
    நீச்சல் பழகுவதற்கு வயதெல்லை தேவையில்லையென நினைக்கிறான்

    சதீஷின் அன்புப் பரிசுக்கு நன்றிகள்.

    ReplyDelete