Saturday, September 05, 2009

பட்டத சொல்லுறன்

பட்டத சொல்லுறன் பகுதியூடாக நான் வளர்ந்த சமுதாயத்தில் நிகழ்ந்தவற்றை, நிகழ்பவற்றை என்னுடைய பார்வையினூடாகச் சொல்லலாம் என முயற்சிக்கிறேன். இவற்றில் நான் அனுபவப் பட்டதும் மனதில் பட்டதும் அடங்கும்.

 ‘அறுப்பான் வந்திட்டான்.. குடிச்சிட்டு வந்து அந்த அப்பாவிப் பிள்ளையைப் போட்டுப் படுத்திற பாடு.... சனியன் அழிஞ்சு போகானாம்.. ஒரு உழைப்பில்ல..மச்சான்மாற்ற காசில குடிச்சுக் குடிச்சு அழிஞ்சு போகுது’

பாட்டித் திட்டித் தீர்க்கவும் பக்கத்து வீட்டுப் படலையோட துவிச்சக்கர வண்டி ஒண்டு மோதிச் சத்தம் கேக்கவும் சரியா இருந்திச்சு. தொடர்ந்து சில கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். கதவுகள் சாளரங்களுக்கு அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. சின்னப் பிள்ளைகள் பயத்தினால் சத்தம் போட்டுக் கத்தும் சத்தம் கேட்டது. மனிசருக்கு அடி விழும் சத்தம்.
‘விடுங்கோப்பா.. இஞ்ச... அடியாதேங்கோப்பா’ என பக்கத்து வீட்டு அக்கா கத்தும் சத்தம்.
 ‘அடிச்சுப் போட்டான் போல கிடக்கு... அக்காவையும் பொடியளையும் போட்டுப் படுத்திற பாடு’ என் பங்குக்கும் பாட்டியோடு சேர்ந்து ஆமாம் போட்டேன்.
 கொஞ்ச நேரத்தில் எல்லாமே அடங்கிப் போனது.

அடுத்த நாள் பின்னேரம் பக்கத்து வீட்டு அக்கா வீட்டுக்கு வந்திருந்தா. பாட்டி கதையைத் தொடக்கினா. நான் அறையொன்றுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
‘நேற்றுக் கடுமையான அடியோ’
‘இல்லை  ராசாத்தியக்கா... அது ஒண்டுமில்லை.. இஞ்சையும் கேட்டதே...’
 ‘என்ன சமாளிக்கப் பாக்கிறாய்.. நல்ல அடிபோல கிடக்கு’
‘சீ... அப்பிடி ஒண்டுமில்லை’ அக்கா கூனிக் குறுகி நெளிவதை அவவின் சொற்கள் எனக்கு உணர்த்தின.
‘இஞ்ச பிள்ள நான் ஒண்டு சொல்லட்டே உந்தக் குடிகாரனோட ஏன் நீ குடும்பம் நடத்துறாய். ஒரு உழைப்புமில்லை.கொண்ணன்மார் தானே காசு அனுப்பிறாங்கள். பேசாமல் அவனைத் துரத்திவிடு... அப்பத்தான் அவனும் திருந்துவான் பிள்ளைகளுக்கும் பிரச்சினை இல்லை. நீ இவனால படுற பாடு போதும்’

 ‘இல்லை ராசாத்தியக்கா... அவர் இரவில குடிச்சுட்டு வந்து சத்தம் போடுறது உண்மைதான். ஆனால் பகலில பொறுப்பா இருக்கிறார். வேலைக்குப் போகாட்டிலும் அவர் வீட்டு வேலை செய்யுறதில எனக்கு ஒத்தாசையா இருக்கிறார். பிள்ளையளை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக் கொண்டு போறது முதல் அவர்களின் உடுப்புத் தோய்க்கிறது வரை எல்லாத்தையும் இவர்தானே செய்யுறார். எங்கட சந்தோசத்துக்காகத்தான் பகல் முழுக்க கஷ்டப்படுறார். இரவில அவற்ற சந்தோசத்துக்காக கொஞ்சம் குடிச்சா என்ன? எங்களுக்காக இவ்வளவு செய்யுறவருக்காக இதைக் கூட எங்களால பொறுத்துக் கொள்ள முடியாதோ?’
எனக்கு கன்னத்தில அறைஞ்சதப் போல ஒரு உணர்வு. ஒரே ஒரு நிகழ்வை வைத்து அவன் நல்லவன் கெட்டவன் எனத் தீர்மானிக்க நான் யார்?

பி.கு. இந்நிகழ்வு குடிப்பதற்கு ஒரு அங்கீகாரமாக அமையாது.

2 comments :

  1. சொல்ல வந்தது சரி தான்.
    அந்தப் பெண்மணி சொல்வது சரி, ஆனால் அந்த ஆணைப் பொறுத்தவரையில் தான் செய்வது பிழை என்பது தெரிய வேண்டும்.
    குடிப்பது வேறு விடயம், ஆனால் அடிப்பது???

    ReplyDelete
  2. கனககோபியின் வருகைக்கும் பெறுமதியான கருத்துக்கும் நன்றி.
    // அந்தப் பெண்மணி சொல்வது சரி, ஆனால் அந்த ஆணைப் பொறுத்தவரையில் தான் செய்வது பிழை என்பது தெரிய வேண்டும்.
    குடிப்பது வேறு விடயம், ஆனால் அடிப்பது???

    தண்ணி உள்ளுக்குப் போனால் அடிப்பதும் உதைப்பதும் அவனுக்குத் தெரியப் போவதில்லை. உண்மையில் அவன் இதைப் பிழை என்று உணர்ந்திருப்பானாகில் தண்ணியடிப்பதை எப்போதோ நிறுத்தியிருப்பான்.

    ReplyDelete