Monday, September 21, 2009

நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறது.


நண்பன் மருதமூரான் பள்ளிப் பயின்றதொரு காலம் தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பையேற்பதனால் எனக்கும் என்னுடைய பள்ளிக்காலத்தை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி மருதமூரான்.

நான் எனது ஆரம்பக்கல்வியை என்னுடைய ஊரின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் புற்றளை மகா வித்தியாலயத்தில் கற்றேன். தென்புலோலியூரில் பிறந்து பல்வேறு துறைகளில் சிறந்து விழங்குபவர்கள் பலரை உருவாக்கி விட்டு ஆரவாரமின்றி தன் சேவையை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடசாலை. சின்ன வயசு... வாழ்க்கையின் பாரங்களை உணராத, கவலையை அறியாத வயசில் துள்ளித் திரிந்தோம்.அவ்வப்போது வானத்தைப் பார்த்து விட்டு மேசைக்குக் கீழ் பதுங்கியதும் அந்நேரங்களில் எல்லோருமே வீறிட்டுக் கத்தி அம்மாவையோ அப்பாவையோ இல்லை ஆண்டவனையோ துணைக்கு அழைத்ததும் நினைவிலிருக்கு.

ஆசிரியர்கள் பற்றி எழுதுவதாயின் எத்தனை பேரை எழுதுவதென்று ஒரு சிக்கல். எனக்கு கல்வி கற்பித்தவர்கள் ஒருபுறம் அதே நேரம் நான் கல்வி கற்காவிட்டாலும் நெருங்கிப் பழகியவர்கள் பலர்.  என்னுடைய முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் சொல்லி என்னை நெறிப்படுத்தியவர்களும், வாழ்ந்து காட்டி எனக்கு முன்னுதாரணமாக இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். (நான் படித்த காலத்துக்குப் பின்னர் புற்றளையில் கற்பித்த பலரும் இதற்குள் அடக்கம்) அதை விட எனக்கு கற்பித்தவர்கள் எனும்போது தனியார் கலாசாலைகளில் கற்பித்தவர்களும் அடங்குகிறார்கள். இவர்களை எல்லோரையும் எழுதுவதென்றால் பதிவு
நீளமாகுவது மட்டுமில்லை. நேரமும் போதாது. எனவே பாடசாலைகளில் எனக்கு கற்பித்தவர்களில் சிலரை மட்டும் நினைவு கூருகிறேன்.


புற்றளையில் கற்பித்த இராஜேஷ்வரி, சதாசிவம், ஈஷ்வரி, திலகவதி, கெளரி, கமலாம்பாள், ரஞ்சினி, சகுந்தலா என்ற ஆசிரியைகளும் சம்பந்தர், சண்முகநாதன் என்ற ஆசிரியர்களும் நினைவிலிருக்கிறார்கள். என்னடா இவன் எல்லாரையும் ஞாபகம் வச்சிருக்கிறானே எண்டு யோசிக்க வேண்டாம். இவர்களில் பெரும்பாலானோர் என்னூரவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் என்னுறவினர்கள். அஞ்சாம் ஆண்டு முடிந்ததும் எல்லாரும் ஹாட்லிக் கல்லூரிக்குப் போறாங்களே நானும் போனால் என்ன (அந்த நேரம் இதைத்தவிர வேறெந்தக் காரணமும் என்னிடம் இருக்கவில்லை : அம்மா அப்பாவின் ஆசை என்றும் சொல்லலாம்) என்ற நினைப்போடு ஹாட்லிக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.

யாவருமே அறிந்திருக்கும் ஹாட்லிக் கல்லூரியைப் பற்றி நான் இங்கு விவரிக்கவில்லை. அரிவரியைப் புற்றளை மகா வித்தியாலயம் தொடக்கி விட உச்சத்தைத் தொடுமளவுக்கு மிச்சத்தைச் சொல்லித்தந்தது ஹாட்லிக் கல்லூரி. புதிய மாணவர்கள் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள், கல்லூரிக்கேயுரிய சில ஒழுக்கக் கட்டுப்பாடுகள் என என்னுடைய கல்வியுலகம் விரிந்தது. எப்பிடித் தான் கட்டுப்பாடு போட்டாலும் அதனை உடைத்தெறிந்து மதில் பாய்ந்து இடைநேரத்தில் ஓடும் திறமையும் எம்மவர்களிடம் காணப்பட்டது. நான் படித்த காலங்களில் கல்லூரியின் வாசலில் இருந்து இரு நூறு மீற்றர் தொலைவிலுள்ள விசேட நுழைவாயிலிருந்து கல்லூரியின் வாசலையடைய ஏறக்குறைய அரைமணித்தியாலம் எடுக்கும். பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு நாம் அனைவரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னால் பாணுக்கு வரிசையில் நிற்பது போல வரிசையில் நிற்போம் (அவ்வளவு ஆர்வக் கோளாறுகள் நாங்கள்). படிக்கிறதுக்குரிய பாடப்புத்தகங்கள் கொப்பிகள் எல்லாம் சரியாக கொண்டு வந்திருக்கிறோமோ எனப் பார்ப்பது மட்டுமில்லை  உடுப்புகள் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறமோ என உடம்பெல்லாம் தடவிப் பார்த்த பின்னர் தான் (தேவைப்பட்டால் கழற்றிகாட்டிய பின்னர்தான்) நாம் கல்லூரிக்குள் நுழையவே அனுமதிக்கப்படுவோம் (அவர்களுக்கு எம்மில் அவ்வளவு அக்கறை...). கல்லூரியின் மைதானத்துக்குள் நுழைவதற்கு விசேட அனுமதி வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேர காலத்துக்குள் சகல விளையாட்டு நிகழ்வையும் பயிற்சியையும் முடித்துக் கொள்ள வேண்டும். வெளி நபர்கள் - பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட எவருமே உள் நுழைய முடியாத கோட்டையாக எங்கள் கல்லூரி ஒரு காலத்தில் விளங்கியது.

கல்லூரியில் கற்ற காலங்களில் ஒரே வகுப்பு மாணவர்களிடையே நிறைந்த ஒற்றுமை காணப்பட்டது. ஊர்களுக்கிடையே துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடுவோம். சின்னச் சின்னச் சண்டைகளும் வருவதுண்டு. ஆனாலும் என்ன நடந்தாலும் அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும்போது எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாகப் பழகுவோம். ஊர்ப் பாகுபாடு பார்த்து சண்டை பிடித்ததோ அல்லது ஒரு ஊர்க்கரர் வீறாப்புக் கதைத்து மற்ற ஊர்க்காரரின் முனேற்றத்தைத் தடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதோ இல்லை. கல்லூரியின் பின்னரான என்னுடைய வாழ்வில் கண்டு வெறுப்படைந்த விடயங்களில் இதுவும் ஒன்று. எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களுடைய கல்லூரி அண்ணன்மார்களுக்கு கொடுத்த தலையிடிகளும் ஆசிரிய ஆசிரியைகளுக்குப் பட்டப் பெயர்கள் வைத்து மறைவில் நக்கலடித்ததும் நினைவிலிருக்கிறது. பொது வேலைகள் (மேடை ஆயத்தப்படுத்தல்...) என்ற சாக்கில் வகுப்பில் பாட நேரங்களுக்கு நிற்காமல் வகுப்பை விட்டு வெளியேறுவதும் ஞாபகமிருக்கு.

ஹாட்லியில் எனக்குக் கற்பித்தவர்கள் பலர். எட்டாம் தரத்தில் ஒரு தவணையில் நன்கு ஆசிரியர்கள் கணிதம் படிப்பித்தார்கள் என்றால் நம்பவா முடிகிறது. தவநேசன், துரைராசா, சத்தியசீலன் ஆகிய ஆசிரியர்கள் நீண்டகாலமாக எங்களுடைய வகுப்புக்கு வகுப்பாசிரியராக இருந்து வழி நடத்தினர். தமிழ் ஆசிரியர்கள் ஆறுமுகம், யாதவானந்தன் கணித ஆசிரியர்கள் பாலேந்திரா ஜெயகோபால், மரியதாஸ் விஞ்ஞான ஆசிரியர்கள் இரகுவரன் பரணிதரன் ஆகியோரும் நினைவு கூரப்பட வேண்டியவர். இவர்களில் மரியதாஸ் அடிக்கு மட்டுமில்லை கணிதக் ‘குறுக்குவழி’ செயன்முறைக்கும் பெயர் பெற்றவர். ஜெயகோபால் ஆசிரியரின் “x=y, y=z, எனவே x=z இதைச்சொல்லிப்போட்டு ஒரு மாணவனை எழுப்பி உனக்கு என்ன விளங்கினது எண்டு கேட்டா அவன் சொன்னான் ஆசிரியரே நான் உங்களை நேசிக்கிறேன் நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் எனவே...” என்ற மேடைப்பேச்சின் இடையில் சொன்ன நகைச்சுவை பிரபல்யமானது. (மு.கு. அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்). உயர்தரத்தில் வகுப்பாசிரியர் ரஜேஸ்கந்தன் மற்றும் செல்வமலர் ஆசிரியை (நான் கற்ற காலத்தில் கற்பித்த, தற்போதும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு ஆசிரியையாக விளங்குகிறார்) சிவகுமார் ஆசிரியர் ஆகியோரிடம் கல்வி கற்றேன். சீலன் ஆசிரியரிடமும் ரகுவரன் ஆசிரியரிடம் நாடகம் பழகியதும் அந்தச் சந்தர்ப்பங்களில் சமூகம் மீது பல கோணங்களிலிருந்தான பார்வையையும் நடைமுறை யதார்த்தம் மிக்க வாழ்க்கை என்னவென்பதையும் அறிந்து கொண்டேன்.

நான் அடி வாங்கிய சந்தர்ப்பங்களுக்கும் குறைவில்லை. புற்றளை மகா வித்தியாலத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று தாமதித்து சென்றதனால் அதிபர் ஜோஷுவா அவர்களிடம் அடி வாங்கி அழுதது இன்றும் நினைவிலிருக்கு.அவ்வப்போது தேவாரம் பாடமாக்காவிடில் திருநீறு பூசி பொட்டு வைக்கவிடில் நவம் ஆசிரியரிடம் வாங்கிய அடி. எல்லாத்துக்கும் மேலாக ஆங்கில ஆசிரியர் சீலன் அவர்களிடம் வாங்கிய அடி. ஹாட்லி மைதானத்தில் எமது கல்லூரிக்கும் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு கல்லூரிக்குமிடையில் துடுப்பாட்டப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் எமது வகுப்பு மாணவர்களும் பங்கு பற்றியிருந்தனர். எனக்கு போட்டியைப் பார்க்கவேணும் என்ற எண்ணம். ஒரு ஆசிரியர் அனுமதித்தால் மட்டுமே மைதானத்துக்குள் நுழைய முடியும். கற்பிக்க வந்த சீலன் ஆசிரியரிடம் எம்முடைய வகுப்பை மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினேன். இரண்டு மூன்று முறை மறுத்தார். தொடர்ந்தும் தொல்லை கொடுத்தேன். முன்னுக்கு வந்து கைகளை உயர்த்தி கரும்பலகையில் வை என்றார். அவ்வளவுதான் நினைவிருக்கிறது. முழங்காலுக்கு கீழே விழுந்த அடியால் கால்கள் விறைத்து விட்டன. இந்த அதிரடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  உயர்தரப் பரீட்சையின் பின்னர் ஒருமுறை கல்லூரிக்கு சென்றபோது தான் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பு மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது என்னிடம் அடிவாங்கியவன் இன்று நல்லாயிருக்கிறான் என்றதும் நினைவிலிருக்கு.

பள்ளிக்காலங்கள் இனித் திரும்பி வரா எனத் தெரிந்த போதும் மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது மனசு.

இத்தொடர் விளையாட்டுக்கு தங்களுடைய இனிய நினைவுகளை மீட்கும்படி நான் அழைப்பது :


நிமல்
கிருத்திகன்
கார்த்தி
மதுவதனன்


6 comments :

  1. பால்குடி..
    எந்தளவு நினைவுகள் மிஞ்சி இருக்கோ தெரியேல்லை.. கன பதிவுகளில கனக்க எழுதீட்டன். எனக்குப் படிப்பிச்ச ஆசிரியர்கள் பற்றி எழுதின தொடர் ஒண்டு 1ம் வகுப்பு வாத்தியாரோட நிக்குது.. பாப்பம் நேரம் கிடைக்கேக்க எழுதிறன்

    ReplyDelete
  2. பால்குடி என்னையும் அழைத்தமைக்கு நன்றி!!
    நேரம் கிடைக்கையில் எழுதுறன்...

    ReplyDelete
  3. இத்தனை நினைவுகளா

    ReplyDelete
  4. கீத், கார்த்தி மற்றும் சந்ரு ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    கீத், என்னால் பலருடைய பெயர்களை உடனே நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. உம்மை அழைப்பதன் மூலம் அவர்களை நினைவு படுத்தலாம் என்றுதான்...
    கார்த்தி, அவசரமில்லை... ஆறுதலா எழுதலாம்.

    சந்ரு அண்ணா, இன்னும் இருக்கு... படிப்படியா வரும்...

    ReplyDelete
  5. நீங்களும் ஆர்கே சேரின் வாரிசா?

    நிறைய ஆசிரியர்கள் பற்றி எழுதியிருக்கிறியள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் எதற்கு என்றால் இவ்வளவு பேரையும் ஞாபகப்படுத்தி வைத்திருந்தமைக்கு.

    ReplyDelete
  6. நன்றி வந்தியண்ணா, நானும் ஆர். கே ஆசிரியரிடம் கற்றவர்களில் ஒருத்தன்தான். ஆசிரியர்கள் இன்னும் பலரின் பெயர்களை நினைவு படுத்த முடியாமல் போனது கவலையே...

    ReplyDelete