கல்வி முறை என்னும் முன்னைய பதிவில் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை முன்வைத்தேன். அதாவது பள்ளிக்கூடத்தை மட்டுமே நம்பிப் படிக்கச் செல்லும் மாணவர்களை அவர்கள் பதினொரு வருடங்களோ பதின்மூன்று வருடங்களோ கற்ற பின்னர், அவர்களின் எதிர்காலம் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பங்களின்றி கைவிடப்படுகிறது என எழுதினேன். இந்தப் பதிவில் அத்தகைய கல்வி முறை எம்முடைய சமுதாயத்தில் என்னென்ன தாக்கங்களை உண்டு பண்ணுகிறது என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை பகிர நினைக்கிறேன்.
எங்களுடைய சமுதாய அமைப்புக் கூட்டுக் குடும்ப முறை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து ஒற்றுமையாக வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு முறை. ஒருவரால் நிறைவேற்றப்பட இயலாத காரியங்களை குடும்பத்திலுள்ள இன்னுமொருவர் நிறைவேற்றி உதவுவார். இதனால் ஒரு நாடு இன்னுமொரு நாட்டில் தங்கி வாழ்வதுபோல குடும்பத்துக்குள்ளும் ஒருத்தர் இன்னுமொருவரில் தங்கி வாழ்ந்து முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதற்காக உருவானது. ஆனால் இந்த முறை வாழ்க்கையே ஒருத்தரில் ஒருத்தர் பொறாமை கொள்ளவும் வைக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் தன்பிள்ளை சிறந்த திறமையுள்ளவனாக வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரினதும் எதிர்பார்ப்பு தன்னுடைய மகன் சிறந்த கல்வியைப் பெற்று நிறைந்த சம்பளம் எடுக்கக்கூடிய வேலையைப் பெற்று சந்தோசமாக வாழவேண்டும் என்பதே. தன்னுடன் கூட இருந்து தன்னுடைய பிற்காலத்தில் நடை தளர்ந்து மூப்பெய்திய காலங்களில் தனக்கு உதவி செய்வான் என்பதும் கூடவே இருக்கும். அவர்களுடைய இத்தகைய எதிர்பார்ப்புகளை நான் பிழை என்று கருதுவதேயில்லை. ஏனெனில் ஒவ்வொருவரினதும் எண்ணம் வாழ்க்கையை முடிந்தளவு சந்தோசமாக வாழ்வதே. தான் எந்தளவுக்குக் கடினப்பட்டு எத்தகைய சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறேனோ அத்தகைய சவால்களைப் பிள்ளைகள் எதிர்கொள்ளாது அவர்களுக்கு அதிகம் பாதிப்புகள் ஏற்படாது அதிக சுமைகளின்றி சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ முடிந்தால் அதனையே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள். கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது வழமையானதே.
இத்தகைய எதிர்பார்ப்புகளுக்காகவே ஒவ்வொருத்தரும் தன்னுடைய பிள்ளைகளை நெருக்குகிறார்கள். படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். நான் வாழ்ந்த சூழலில் பல்கலைக்கழகப் படிப்பைத் தவிர சிறந்த தொழிலைத் தரக்கூடிய கல்வியாக வேறெந்த தெரிவும் இருக்கவில்லை. சா/த பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய சந்தர்ப்பங்களிலோ உ/த பரீட்சையில் பல்கலைக்கழகத் தெரிவு கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களிலோ பெற்றோர்களின் முன் வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை. அதாவது போதுமானளவு சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஒரே தெரிவு பல்கலைக்கழகத்துக்குப் போய் அங்கே கிடைக்கும் சான்றிதழை வைத்து மட்டுமே, எதிர்பார்க்கக்கூடிய வேலையைப் பெறலாம் என்ற நிலை. அதனால் பெற்றோர்களுக்குள்ள ஒரே தெரிவு பிள்ளைகளை நெருக்கி எப்படியேனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய வைப்பது. சா/த உ/த ஆகிய கல்வியை வைத்துக் கொண்டு போதியளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்குமாயின் பெற்றோர்கள் இந்தளவுக்குத் தங்கள் பிள்ளைகளை நெருக்க மாட்டார்கள் என்பதே எனது எண்ணம். பக்கத்து வீட்டுப் பொடியனைப் பார்த்து அவனைப் போலப் படி என்று அழுத்தம் கொடுப்பதற்கும் இதுவே காரணமாகின்றது என நினைக்கிறேன். குறிப்பாக தரப்படுத்தலுக்குப் பின்னர் நெருக்குதல் இன்னும் அதிகமாகியது என்றே நம்புகிறேன்.
பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுத்து முடிந்தளவு முயன்றும் சா/த சித்தியெய்தத் தவறிய அல்லது உ/த தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்காக பெற்றோர் முன்னுள்ள அடுத்த தெரிவு வெளிநாடு. பலர் பிள்ளைகள் தம்மை விட்டுப் பிரிவதையோ தாம் தனித்து விடப் படுவதையோ விரும்பாவிட்டாலும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பிரதான காரணம் வெளிநாட்டில் வேலை செய்தால் கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது என்பதே.இன்று எம் சமுதாயத்தை ஆட்டி வைக்கும் வெளிநாட்டு மோகத்துக்கு வெளிநாட்டில் சொகுசாக வாழலாம் என்ற எண்ணமே காரணம். (பொடியன் நாயாய்ப் பேயாய்ப் பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணத்தை வைத்து தாங்கள் தான் சொகுசாக வாழ்கிறார்கள் என்பது வேறு கதை). அந்தளவு சம்பளம் ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் என்றால் வெளிநாட்டைப் பலர் நினைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். (காலத்தின் கொடூரத்தால் வெளிநாடு சென்றவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை).
இதே நிலை தொடருமாக இருந்தால் நாளை ஒரு பெற்றோராய் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை சிந்திக்க முடியவில்லை. என்னுடைய பிள்ளை ஒரு சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதிலோ அதற்கு போதியளவு சம்பளம் உழைக்கக்கூடிய வேலையைப் பெறுவதையோதான் நான் விரும்புவேன். பிள்ளைக்கென்றொரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தான் ஒரு பெற்றோனாய் நான் விரும்புவேன். பிள்ளை விரும்பிய வாழ்வைத் தெரிவு செய்ய பிள்ளைக்கு அனுமதியிருக்கிறது. ஆனால் அந்தத் தெரிவின் வழியில் பிள்ளை சந்தோசமாக வாழ முடியாது போனால் ஒரு பெற்றோராக தன் பிள்ளை சந்தோசமாக இல்லை என்பதைப் பார்க்க கவலையாகவே இருக்கும். தன்னுடைய பிள்ளைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்கவில்லையே என்ற உணர்வு உறுத்தலாக இருக்கும். அதனால் நான் என்னுடைய பிள்ளையை படிக்கச் சொல்லி அழுத்தம் (கொடுமைப் படுத்துவதல்ல) கொடுக்க மாட்டேன் என்றோ அவன் உலக நடப்புகளையும் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் நடைமுறையில் நடப்பவற்றையும் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை அவனுக்குச் சில கட்டுப்பாட்டுகள் விதிக்க மாட்டேன் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை.
// இன்றைக்கு பெற்றோர் செய்பவற்றைப் பிழை என்று சொல்லி விட்டு நாளைக்கு அதே பிழையை நான் செய்யத் தயாராக இல்லை. //
ReplyDeleteஅது உண்மை தான்....
ஒரு நகைச்சுவை சொல்வார்கள்,
சிறிய வயதில் தந்தை மகனுக்கு கதாநாயகனாக தெரிவாராம்,
கொஞ்சம் வளர தந்தை செய்வது கொஞ்சம் பிழை போல தெரியுமாம்,
இன்னும் சிறிது வளர தந்தை செய்வதெல்லாம் பிழையாகத் தெரியுமாம்...
தனக்கு தந்தை செய்ததெல்லாம் சரி என்ற எண்ணம் வரும்போது இவருக்கு மகனொருவன் பிறந்து அவன் இவர் செய்வதை பிழை என்று எண்ணத் தொடங்கியிருப்பானாம்....
அது கிட்டத்தட்ட உண்மையும் கூடத் தான்.
ஆனால் பல்கலைக்கழகப் படிப்புத் தான் வாழ்க்கை என்ற நிலையில் பெற்றோரின் திணிப்புகள் கொஞ்சம் அதிகம்.
உயர்தரத்தில் அப்படி என்றால் இப்போதைய பெற்றோரின் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தலைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...
நான் ஒரு 10 வருடங்களுக்கு முன்னர் தான் 5ம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை எடுத்தேன்.
அப்போது பரீட்சைக்கு முன்னைய நாள் கிறிக்கெற் விளையாடிவிட்டு பிந்தி வந்ததும், பரீட்சைக்கு கிறிக்கெற் மட்டையோடு போனதும் ஞாபகம் இருக்கிறது.
ஆனால் இப்போது 4ம் ஆண்டிலேயே அந்தக் குழந்தையின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு சிறைச்சாலை வாழ்க்கை போல ஆக்கப்படுகிறது....
கட்டுப்பாடுகள் தேவைதான், ஆனால் இடப்படும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பாடு வேண்டும்...
I dun know why parents push their kids so much. Our parents never did it. Its really sad to see the kids. They study more than UG students like us ya...
ReplyDeleteI agree vth kanagagoby and if v hv other higher studying opportunities other than state universities then pressure may get reduced as paal kudi said
ReplyDeleteகனககோபி, முகிலினி மற்றும் தம்பையூரன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteநானும் கனககோபியின் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.
அஞ்சாம் ஆண்டுச் சோதினையைப் பற்றி நான் முன்னரும் ஒரு பதிவிட்டேன். கீழுள்ள இணைப்புக்குச் சென்று பார்க்கலாம்.
http://thaaimadi.blogspot.com/2009/09/blog-post_10.html#comments
முகிலினி, உங்களைப் போன்ற திறமைசாலிகளுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லைத் தானே...