Saturday, April 25, 2009

பிறந்தது முதலாய்...(2)

நெருங்கிய உறவினர் ஒருவர் நாட்டை மீட்டெடுக்க புறப்பட்ட வேகத்திலேயே அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்க வேண்டிய நிலை. கணிதம் போதித்த என் இன்னுமொரு உறவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அறியாது வழமைபோல பாடசாலை சென்றார். செல்லும் வழியில் சன்னங்கள் அவரின் உடல் துளைக்க நடு வீதியில் துடி துடித்தார். யாருமே உதவவில்லை. வீட்டை விட்டு வெளி வரப் பயந்ததால் அனைவரும் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கொள்ள, அவரின் உயிர் பிரிந்தது. அந்தச் சின்ன வயசிலேயே எனக்கு ஆயுதங்களைக் காட்டித் தொட்டுப் பார்க்கத் தந்த பக்கத்து வீட்டு அண்ணா மூக்கில் பஞ்சடைந்து படுத்திருப்பதைப் பார்த்து அழுதேன். மரண வீடுகளில் ஓலமிட்டு அழும்குரல்களின் வேதனைகளை, உடலை உறைய வைக்கும், உயிரைப் பிழிந்தெடுக்கும், உணர்வை கொதிக்க வைக்கும் நிகழ்வுகளை அன்றே உணரத்தொடங்கினேன்.

ஊரவர், உறவுகள் கூடி ஒப்பாரி வைத்தாலும் மாண்டவர் மீளார் என விளங்கிக் கொண்டேன். உயிரின் மதிப்பை உணராத தேசத்தில், மனிதம் என்பதன் வாசனையே இல்லாத, மரணம் மலிந்த பூமியில் நான் பிறந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து பேய் பிசாசுகளின் மீதான பயத்தை தூக்கியெறிந்தேன்.

ஊர் விட்டு ஊர் தாண்டி என் உயிரை காக்க ஓடவும் பழகிக் கொண்டேன். கையில் ஒரு பொதியுடன் பெயர் அறியாத் தேசம் நோக்கி தொடுவானம் தொடும் வரை நடக்கவும் பழகிக்கொண்டேன். வெறுமையை தெரிந்து கொண்டேன்.

நள்ளிரவு வேளை எம் தாய்த் தேசம் உறக்கத்திலிருந்த வேளை இடம்பெயர்ந்தார்கள். ஒருவரா இருவரா பட்டணத்திலிருந்த அனைவருமே கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு எங்கோ கால் போன போக்கில் நடந்தார்கள். குடும்பத்து அங்கத்தவர்களை எண்ணிப்பார்த்துக் கொண்டுதான் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். போகப் போக எண்ணிக்கை குறையத்தொடங்கியது. குடும்பத்தினரை தவற விட்டுக் கொண்டே நடந்தார்கள். வழி நெடுகிலும் தவறவிட்ட தம் உறவுகளை பெயர் சொல்லிக் கூவும் குடும்பத் தலைவர்கள் தான் அதிகம். எம்மனைவரின் நெஞ்சங்களும் ஊமையாய் அழுது கொண்டு நடக்கும்போது, வானமும் தன் பங்குக்கு கொட்டித் தீர்த்தது. குறுகிய ஒற்றையடிப் பாலத்தைக் கடப்பதற்கு அத்தனை பேரும் பட்ட பாடு சொல்ல முடியாதது. குழந்தைகளின் அழுகுரல்களும் வயது முதிர்ந்தவர்களின் இயலாமையின் முனகல்களும் எதிரொலித்த வண்ணமே இருந்தது.

எம்மினத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமே(?) இடப்பெயர்வு. இன்று வரை இடப்பெயர்வு நிற்கவுமில்லை. படும் துயரங்களும் ஓயவில்லை. இத்தனை இடப்பெயர்வுகளை சந்தித்தவன் உலகிலேயே ஈழத்தமிழன் தான் என்றால் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.

படை எடுத்து வந்தவர்கள் சும்மாவா வந்தார்கள். அவர்கள் வந்துதான் என் வீட்டில் மின்சாரம் எரிந்தது. சந்தோசப்பட்டேன். கூடவே எமக்கென விஷேட ஒளிபரப்பும் நிகழ்ந்தது. அதில் நள்ளிரவை அண்மித்த நேரங்களில் ஆங்கிலப் படங்களுக்கும் குறைவேயில்லை. ‘சாமிப்பட’ இறுவட்டுக்களின் அறிமுகமும் கூடவே அவற்றை களவாக பார்வையிடும் இளசுகளுக்கும் குறைவேயில்லை. எங்களை அறியாமலே ஆசை காட்டி எங்களின் கல்வி மீதான நாட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை நாங்கள் உணர நீண்ட காலம் பிடித்தது. தற்போது இறுதிப் பதின்ம வயதுகளிலிருப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவா போகிறார்கள்? எல்லாமே சுடலை ஞானம்தான்.

சமாதனம் என்று சொல்லி என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு வன்னி மயிலின் அழகு பார்க்கப் புறப்பட்டேன். இயற்கையின் எழில் நிறைந்த வேளாண்மை விளைவிக்கும் வயல் வெளியினூடு பயணிப்பதில் ஒரு சந்தோசம். முடிவில்லா வெளியில் தனிமையில் நின்று இயற்கையை வியப்பதில் கிடைப்பது இன்னுமொரு சந்தோசம். அப்பாவியான கள்ளங்கபடமில்லா, தலைவனைத் தெய்வமாகக் கொண்ட குடும்பங்களுடன் அளவளாவுவதில் இன்னுமொரு சந்தோசம். இப்படியும் என் தேசத்தில் இருக்கிறது என எனக்குக் காட்டியது சமாதான காலம். எம்மவர்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என்பதைக் கட்டியம் கூறியது அழிவடைந்து விட்டதாக அனைவராலும் ஏளனம் செய்யப்பட்ட கிளிநொச்சி. அது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்த வேகம், அனைத்து கட்டுமானங்களுடனும் எந்த ஒரு நாட்டு அரசாங்கமும் வெட்கித்தலை குனியுமளவிற்கு கட்டியெழுப்பபட்ட ஒரு தேசம் இன்று எங்கே போய் விட்டது? உலகமே கண்வைத்து பொறாமை கொண்டதனால்தானே இந்த நிலைமை. அவர்கள் நம்மை ஒரு போதும் முன்னேறவே விடமாட்டார்கள்.

இன்று வன்னிப் பகுதிகளில் நிகழும் மனிதப் பேரவலத்தை கேட்டபோதும் காணொளிகளில் பார்த்தபோதும் ஏதுமே செய்யமுடியா நிலையில் நடைப்பிணமாகவே இருக்கிறேன். ஆகக்குறைந்தது ஒரு எதிர்ப்பையோ எதிர்க்குரலையோ சாத்வீக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையோ வெளிப்படுத்த முடியாத நிலை. காரணம் காணாமல் போதல்களும் கடத்தல்களும் கொலைகளுமே. என்னிடம் போதியளவு என்னை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இருந்த போதும் ஒவ்வொரு சந்தியிலும் நிற்பவர்களைக் கடக்கும்போதும் கடவுளை மன்றாட வேண்டிய நிலை. ‘இன்றைக்கு பிடிக்க வேண்டிய எண்ணிக்கைக்கு ஒரு ஆள் குறையுது நீதான் அகப்பட்டாய். வா வந்து ஒரு நாள் உள்ளுக்குள் இருந்திட்டுப் போ’ என்று எனக்கும் சொல்லும் நிலை எனக்கு வரக்கூடாதுதானே.

உலகமே கை விட்டு நாங்களும் மனிதர்கள்தான் புவி வாழ் உயிரினம்தான் எனக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற இந்த நிலையில் புலம்பெயர் எம்மவர்களின் செயற்பாடுகளும் தமிழக மக்களின் ஆதரவுக் குரல்களுமே சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. சேவல் கூவிப் பொழுது விடியாது என்ற இருந்த நிலை இப்போது சற்று மாறத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. எல்லாமே நம்பிக்கைதானே...

‘தக்கன பிழைக்கும்’ என்ற கருத்து இன்று எனக்கு கசக்கிறது. ஏனெனில் தக்கன என்ற வரையறைக்குள் என் இனம் இல்லையென்பதை தற்கால நிகழ்வுகளை வைத்து என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அதைவிட, என் தாய் மொழியில் அதிகம் பாவிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு விளங்காமல் இருக்கும் பதங்கள் என்றால் சுதந்திரம், பயங்கரவாதம், மனிதாபிமான யுத்தம். இச்சொற்கள் உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லையோ அல்லது அவை தற்காலத்தில் பாவிக்கப்படும் சந்தர்ப்பங்களோடு அச்சொற்கள் பற்றி நான் விளங்கிக் கொண்ட கருத்து ஒத்துப்போகவில்லையோ எனக்குத் தெரியவில்லை...

No comments :

Post a Comment