Saturday, April 25, 2009

பிறந்தது முதலாய்...(1)

தாயின் கருவறைக்குள் நான் கருக்கொண்ட நாள் முதலாய் உணர்ந்ததெல்லாம் குண்டுகளின் அதிர்வுகளும் கேட்டதெல்லாம் மரண வீட்டு அழுகுரல்களுமே. பிறக்கும்போது கூட நான் வெடியோசையின் அதிர்வினாலேயே வெளித் தள்ளப்பட்டேன். பிறந்தவுடன் என் தாயின் கதறல்கள் எனக்கு கேட்க முன்னரே வெடியோசைகள் என் காதை கனமாக்கின.

ஆசையாய் என்னை முதன்முதல் அணைத்து முத்தமிட்ட தாயின் இதழ்களில் ஈரமில்லை. பயத்தால் இதழ்களும் உதறுவதை உணர்ந்தேன். நான் என் கண்களால் முதன்முதலாய் கண்ட நிறம் சிவப்பு. வைத்திய சாலையில் இரத்தம் தோய்ந்த உடைகளுடன் நடமாடும் மனிதர்களையே என் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்திருக்கிறேன்.

வைத்தியசாலைக்குள்ளும் துப்பாக்கி சுடும் என்பதை தாய்ப்பால் குடிக்கும் போதே கண்டு கொண்டேன். தாலாட்டுப் பாட்டு என் காதுகளுக்கு இனிக்கவில்லை. அழுகுரல்களும் வேதனையில் துடிக்கும் எம்மவர்களின் முனகல்களுமே என் தேசிய கீதமானது.

பட்டாசு கொளுத்திப் பார்க்க ஆசைப்பட்டதேயில்லை. துப்பாக்கி வெடியோசையின் கனமே போதுமென்று நான் நினைத்து விட்டேன். அதன் கோர விளைவுகளையும் பார்த்துப் பழகி விட்டேன். இரவு நேரங்களில் ‘குறுக்காஸ்’ என்று சொல்லி, வேளைக்கு குப்பி விளக்கையணைத்து விட்டு குப்புறப் படுக்கவும் பழகிக் கொண்டேன். பேய் என்று பேய்க்காட்டினால் கூட பயப்படாத நான் ‘குறுக்காஸ்’ பெயரைக் கேட்டு அலறினேன்.

இரவில் நாய்கள் பலமாகக் குரைக்கும் வேளைகளில் உணர்வறியா வயதில் அழக்கூட என் தாய் என்னை அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தி ‘சத்தம் போடாதே பிடிச்சுக் கொண்டு போடுவாங்கள்’ என்றாள். அன்றே நான் அழுவதற்கான சுதந்திரத்தையும் இழந்து விட்டேன். அன்று நான் பலமாக அழுதிருந்தால் எனக்கும் குடும்பத்துக்கும் இன்று இருபதாம் நினைவஞ்சலி செய்திருக்கலாம்.

பின்பக்க வேலி பாய்ந்து பயத்துடன் உயிருக்காக ஓடுவதை என் அப்பாவின் கைகளில் கைக்குழந்தையாக இருக்கும்போதே கற்றுக் கொண்டேன். இந்த வேலியால் விழுந்து இந்த ஒழுங்கையைப் பிடித்து அந்த வீதியை இந்த இடத்தில ஊடறுத்தால் ‘அவங்களட்ட’ பிடிபடாமல் இந்த இடத்துக்கு செல்லாலாம் என்று சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டேன். அதனாலோ என்னவோ என்னுடைய பிரதேசத்தின் சந்து பொந்துகள் எல்லாம் மனப்பாடமாகி விட்டன.

ஏணையின் இதத்தை நான் உணர முன்னரே பதுங்கு குழியின் சூழல் பழகிக்கொண்டது. ஏணை கட்டி தாலாட்டுப் பாட ஆசைப்பட்ட தாத்தாக்களும் பாட்டிமாரும் பதுங்கு குழிக்குள் தம் காலிடுக்குகளில் வைத்து தாலாட்டினர். அண்ணாந்து நிலா காட்டி சோறூட்டிய என் உறவுகள் வானத்திலே குண்டு வீச்சு விமானங்களைக் காட்டவும் மறக்கவில்லை. சீ ப்ளேன், புக்காரா, சகடை என்ற பெயர்களையும் மறக்காமல் எனக்கு ஊட்டி விட்டார்கள். காலப்போக்கில் தொலைவில் வரும் சத்தத்தைக் கேட்டே இது இந்த விமானம் தான் என்று சொல்லுமளவுக்கு நான் பாண்டித்தியம் பெற்று விட்டேன்.

அது மட்டுமா விமானங்கள் போடும் குண்டுகளின் எண்ணிக்கையை ஒன்று இரண்டு என்று சொல்லிச் சொல்லி எண்ணி எண்ணியே நான் ஆரம்பக் கணிதம் படித்துக் கொண்டேன். குண்டு வெடிக்கும் ஓசையைக் கொண்டே குண்டு விழுந்த இடத்தையும் தூரத்தையும் அனுமானிக்கும் திறமையையும் பெற்றுக் கொண்டேன். ஆசையாய்ப் பட்டம் பறக்க விடும்போது கூட வானில் மழை வருமோ எனப் பார்ப்பதில்லை. குண்டு போட வருகிறதா எனத்தான் பார்ப்பதுண்டு.

எங்கோ வெடியோசை கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படுக்கவும் ஓடிப்போய் பதுங்கு குழிக்குள் தஞ்சமடையவும் பழகிக் கொண்டேன். ‘ஆமி பொடியள்’ விளையாட்டு ஓடி விளையாட இனிமையாய்த் தெரிந்தது. விளையாடும் போது கூட இடை நடுவில் கைவிட்டு பதுங்கு குழிகளை நாடியோடுவதால் அந்த விளையாட்டுகளில் கூட முடிவு இல்லாமல் போய் விட்டது.

மண்வெட்டியையும் கோடரியையும் பாவிக்கும் விதத்தை பதுங்குகுழிகள் அமைப்பதற்கு பயன்படுத்துவதைப் பார்த்தே பழகிக்கொண்டேன். மனிதர்களுக்குப் பயந்து ஒழித்து வாழும் விலங்குகளுக்குப் போட்டியாக அவற்றைப் போலவே பதுங்கி வாழப் பழகிக்கொண்டோம். நாம் பதுங்கிய இடத்திலிருக்கும் பாம்பு பூரான் பூச்சிகளுடன் சில வேளைகளில் சண்டை போடுவதும் உண்டு. அவற்றிடம் கடி வாங்கி வைத்தியம் பெற்றதுமுண்டு. பதுங்கு குழிக்குள்ளே சிறு மாடம் அமைத்து நெருப்புப் பெட்டியையும் கடவுள் படங்களையும் வைத்து கடவுளிடம் என் உயிரை காக்கும் படி மன்றாடப் பழகிக்கொண்டேன்.

பழுதடைந்த துவிச்சக்கர வண்டியை ஓடவும் பழகிக்கொண்டேன். கற்களினாலும் மணலினாலும் அமையப் பெற்ற வீதிகளில் பாதையமைத்து ஓடும் வழியைக் கற்றேன். கிடைத்ததை உச்சப்பயன்பாட்டில் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டேன். மழைகாலங்களில் நிரம்பியிருக்கும் வெள்ளத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என்ற என்னுடைய கணிப்புத்திறன் துவிச்சக்கர வண்டிப் பயணங்களில் பிழையாகிப் போனதும் உண்டு. வாகனங்களில் சீரான பராமரிப்பின்மையால் எழும் உராய்வு ஒலியின் வித்தியாசத்தை வைத்துக் கொண்டே இன்னார் எங்கட வீட்டு ஒழுங்கையால் செல்கிறார் என சரியாகச் சொல்லவும் தெரிந்து கொண்டேன்.

மண்ணெண்ணைக் குப்பி விளக்கில் படிக்கவும் கண்ணயர்ந்து தூங்கும்போது அது என் மேல் விழுந்து தீப்பிடிக்காமல் இருப்பதற்காக உடலை வருத்தி ஆடாமல் அசையாமல் படுக்கவும் பழகிக் கொண்டேன். குப்பி விளக்கில் மண்ணெண்ணையை மிச்சம் பிடிக்கும் உத்திகளையும் அதனால் எம் பிரதேசங்களில் தோன்றிய ‘புதிய தொழில்நுட்பங்களையும்’ இலகுவாக தெரிந்து கொண்டேன். மண்ணெண்ணையில் ஓடும் மோட்டார் வாகனங்களையும், சிறு துளி பெற்றோல் விட்டு சிறு குழாய் ஒன்றினூடு ஊதி, மனிதர்களால் தள்ளி ஆரம்பிக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டேன். அவை அப்படித்தான் ஓடும் எனத் தவறாக எண்ணியும் கொண்டேன்.

அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழும்பி ஓடிச் சென்று அரை இறாத்தல் பாணுக்காக மணிக்கணக்கில் வரிசையில் தவம் கிடக்கவும் பழகிக்கொண்டேன். அதனாலோ என்னவோ இன்று எங்கும் வரிசை எதிலும் வரிசை.அனைத்திலும் வரிசையாய் நின்றாலும் வெற்றி கிடைப்பதென்பது மிகவும் அரிது. இன்று ஊருக்கு போவதற்கு விமானம் பதிவு செய்வதற்கு (நான் இலங்கையில்தான் இருக்கிறேன், இலங்கையில்தான் என் ஊரும் இருக்கிறது) பெரிய வரிசை. வாசலில் நிற்பவனிடம் வாங்கும் பேச்சுக்கள்... எத்தனையோ நாட்களில் ஏமாற்றம்... எல்லாமே பிறந்ததிலிருந்து பழகிப்போன விடயங்கள். இது எனக்கு மட்டுமே சபிக்கப்பட்டதொன்றல்ல. என் இனத்துக்கே சபிக்கப்பட்டது.

ஆரம்பப் பள்ளி சென்ற காலங்களில் பாடப்புத்தகத்தில் படிப்பித்தது நினைவில் இல்லை. ஆனால் வெடிச்சத்தம் எங்க கேட்டாலும் காதைப் பொத்திக் கொண்டு குப்புறப் படு என்று விளக்கத்துடன் சொல்லித்தந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. வானில் இரைச்சல் கேட்டால் போதும் பரீட்சை மண்டபமாக இருந்தாலும் எழுந்தோடிப் போய் பாடசாலைகளில் வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் தஞ்சமடைவோம். கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் அழுவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேடி பாடசாலைக்கு வருவார்கள். அதிபர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் இடை நடுவில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வீடு செல்வதைத் தடுப்பதில்லை, நாகர்கோவில் பாடசாலை அனுபவத்தினால் போலும்.

அறியும் பருவம் வந்ததும் எனக்கு பதுங்கு குழிக்குள் பதுங்குவதற்கு பயம். என்னுடைய கெட்ட காலத்துக்கெண்டு குண்டு அதிர்வில பதுங்கு குழியை மூடப் பயன்படுத்திய தென்னங்குத்தியோ பனங்குத்தியோ எனக்கு மேல் விழுந்து விட்டால் அல்லது மண் தூர்ந்து பதுங்கு குழிக்குள்ளேயே என் மூச்சு அடங்கி விட்டால்... அதனால் பதுங்கு குழிக்குள் எனக்கு இறங்குவதற்கு பயம்.

அந்த பயமும் எனக்கு கன காலம் நீடிக்கவில்லை. எனது வீட்டுக்கு மிக அருகில் நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதலில் பதுங்கு குழி மீதிருந்த எல்லாப் பயமும் போய்விட்டது. முதலாவதுடன் முடிந்து விட்டது இரண்டாவதுடன் முடிந்து விட்டது என்று எண்ணிய நான் மூன்றாவது குண்டு விழுந்ததுதான் தாமதம் குண்டு வீச்சின் அகோரம் தாங்காது பதுங்கு குழியில் தஞ்சமடைந்தேன். வான்தாக்குதல் முடிந்து நீண்ட நேரமாகியும் பதுங்கியேயிருந்தேன். அந்த வான் தாக்குதலை இன்னும் நினைவில் வைத்திருக்க இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அந்த ஏழு குண்டு வான் தாக்குதலுக்கு இலக்காகியதோ ஏதுமறியாமல் நின்று கொண்டிருந்த ஒரு புளிய மரம். பாவம் அதுவும் தமிழர் தேசத்தில் பிறந்ததால் வேதனைகளை அனுபத்தது. வட்டிழந்த பனைகளும் தலையிழந்த தென்னைகளும் அந்தக் கொடுமைகளின் சாட்சியாக இன்றும் நிற்கின்றன.

-----மிகுதி அடுத்த பதிவில் தொடரும்...

No comments :

Post a Comment